நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏழெட்டு கேள்விக்கு எனது பதில்!கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள் முகநூலில் ஒரு சகோ என்னிடம் கேட்டார்கள், அவைகளுக்கான பதில்கள்தான்,கேள்விக்கு கீழே கூறியுள்ளவைகள்.
----------------------------------

 உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”

யாரும் உதவின்னு கேட்டால், முடியாத சூழ்நிலை என்றபோதும்
என்னாலானவைகளை செய்வதும், செய்ய நினைப்பதும்.
செய்ய முடியாதுபோனால் அதற்காக பெரிதும் வருத்தப்படுவதும்.


“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”

 என்னை வேண்டாமென ஒதுக்குவோரையும் சேர்த்து!
யாரையும் ஒதுக்காமல் எல்லோரிடமும் அன்புகொள்ளவேண்டும் என எண்ணுவது.


“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
உயிரை உருக்குலைத்து வதை செய்யும் வக்ரம்
உயிரோடிருக்கும்போதே நடைபிணமாக்கும் கொடூரம்
இது யாருக்கும் வரக்கூடாதென்பதே எனது எண்ணம்.

“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”

இறைவனுக்கு மட்டுமே அடிமையான மனிதரை,
இன்னொரு மனிதர் அடிமையாக்குவதும்,
இன்னொரு மனிதரிடம் அடிமையாய் கிடப்பதும். மடமைத்தனம்.


“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”

தவறெனத் தெரிந்தும், தொடர்ந்து தவறின் பக்கம்போகும் எண்ணங்களை!
பிறரை எரித்து அதில் குளிர்காய நினைக்கும் உள்ளங்களை!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித்திரியும் பொய்முகங்களை..


“உங்களுக்கு விருப்பமான தொழில்?”

பிறரை ஏமாற்றாமல் தா[நா]னும் ஏமாறாமல்
ஆகுமாக்கப்பட்டவைகளாய் செய்யும் எத்தொழிலும்.

“உங்களுக்கு விருப்பமான நிறம்?”

கிரீம்.வித் பீக்காக் புளு.அதாவது, வெண்மை கூடிய சந்தன நிறமும்.
[மயில் கழுத்திலிருக்கும்] ஊதா கலந்த பச்சை நிறமும்.

-------------------------------------------------------
இத்துடன் இன்னொரு சகோ மெசேஜ் மூலம் கேட்ட கேள்வி?

உங்கள் வாழ்க்கை நிறைவாக உள்ளதா?

நிறைவு என்பது எதிலிருக்கிறது மனதில்தானே! அது நிறைவாகவேயிருக்கிறது , குறைகளென்பது அப்பப்ப கூடிக்கலையும் மேகம்போல, நிறைகளென்பது கூடிகலைவதை வேடிக்கைப்பார்க்கும் வானம்போல, 
நிறை குறையும் சமயங்களிளெல்லாம் 
நிவர்த்திசெய்து நிறைவாக்கிகொள்கிறேன்.
நிறைவடைந்து 
நிறைவடையச் செய்கிறேன்..
 

என்னிடம் கேள்விகள் தொடுத்து, என்னக்குளிருப்பவைகளை எனக்கும் தெரியவைத்த,  இரு சகோக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

செல்லச் சீமாட்டி.

எட்டடுக்கு மாளிகையில்
பத்தடுக்கு செல்வமிருந்தாலும்
ஈடாகுமா ஈன்றெடுக்கும்
மழலைக்கு ஒப்பாக!

ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை
எளிதில் ஏக்கம் தீர்த்து
எல்லையில்லா மகிழ்வழிக்கும்
எதுவாகினும் ஒரு குழந்தை!

மூவேளை உண்டுகளிக்க
முடியாமலிந்தாலும்
ஒற்றைப் பிள்ளையிருந்தால்
ஒருபிடி உண்டாலும் போதும்!

கோடிகள் கொட்டிக் கிடந்தும்
கொஞ்சி விளையாட
குழந்தையில்லையெனில்
கூனிக்குறுகிடந்திடும் குடும்பம் முழுவதும்!

கூழைக் குடித்தாலும்
கொஞ்சிக் கொஞ்சி கூத்தாடி
குடிசைக்குள் கொட்டிக்கிடக்கும்
கோலாகலங்கள் ஆயிரமாயிரம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இறவாமல்!என்றோ
நடந்து முடிந்தவைகள்
இறந்த காலம் என்றபோதும் 
என்றும் இறவா காலமாய்,
இதயத்தினுள் -சில
நினைவுப் பத்திரங்கள் மட்டும்
என்றென்றும் பத்திரமாய்
இதயங்கள் இருக்கும்வரை
 


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாடமானவன்!


படைத்தவனை பழித்துவிட்டு
தான்தான் படைத்தவனென்று
பறையடித்து திரிந்தவன்!

தன்னைவிட
பலசாலியே இல்லையென்று
தான்தோன்றியாய் நடந்தவன்!

அறிவற்ற எச்சமிவன்
ஆணவத்தின் உச்சமிவன்!

பேரழிவுகளை உண்டாக்கி
பேரானந்தம் கொண்டவன்!

மரணமே வராதென்று
மார்தட்டி அலைந்தவன்!

கொடுங்கோலின் மன்னனிவன்
கொடூரனின் பெயரோ ஃப்ரவுன்!

இவனின் கொட்டமடக்க எண்ணியே
இருகடலுக்கிடையில் - கோடு
உண்டாக்கினான் இறைவன்!

இவ்வுல மனிதர்களுக்கு
எச்சரிக்கை செய்யவே
இவனையே  பதப்படுத்தி பாடமாக்கினான்!

இவனின்  அட்டூளியங்கள் இவ்வுலமறியவே
இறந்தபின்பும்
இவனுடலழியாது பாதுகாக்கிறான்…அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காதலின் கதறல்!

 

கண்டபடி அலைவதெல்லாம்
என் பேரச் சொல்லி அலையுது
கழிசடைங்க கூட்டமெல்லாம்
என்பேரச் சொல்லி திரியுது

காமபோர்வை போத்திக்கிட்டு
கண்ணியமுன்னு பேசுது
காமமோகம் தீர்ந்த பின்னே
கலட்டிவிட்டு போகுது

நேற்றுப் பார்த்த பார்வையில
இன்று காதல் தொடங்குது
நெற்றி வியர்வை அடங்கியதும்
இனி அடுத்ததுன்னு நகருது

காதல் காதல் என்றுசொல்லி
களியாட்டம் புரியுது
அமுதமான எனது பெயரில்
அமில வீச்சும் நடக்குது

காதலுன்னு பெயர வச்சி
கள்ளக்காதலும் தொடருது
காதலோட சிறப்பையெல்லாம்
காலில்போட்டு மிதிக்குது

காலந்தொட்டு காலமாக
கடந்துவரும் என்னிடம்
கனிவு கொண்டு வாழ்ந்துவரும்
காதலரும் உண்டுங்கோ

காதல்கொண்டு கூடிவிட்டு
காசுயில்லையென்றது
கண்ணெதிரே தெரியும்
கானலாவதும் உண்டுங்கோ

மொத்ததில என்னை வைத்து
மோசடிகளே நிறைய நடக்குது
மொத்து மட்டும்
மொத்தமாக எனக்கு மட்டுமே கிடைக்குது

அன்பான காதலான என் பேரச் சொல்லியே
ஆகாதா செயல்புரியும் கேடுகெட்ட ஆட்களால்!
ஆதங்கம்கொண்டு ஆத்திரங்கொண்டு
ஆன்மாவுக்குள்ளே அழுகிறேன்


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இவைகளின் காரணகர்த்தா எது!‏
தரணியில் பலயிடங்களில்
தலைவிரித்தாடுகிறது காமக்களியாட்டம்
களியாட்டத்திற்க்கு பலியாகிறது
தளிர்களின் உடல்களும் உயிர்களும்
பெண்மைகளின் மானங்களும் மென்மைகளும்

இளம் பிஞ்சுகள்
இளமை மொட்டுகள்
கன்னியர்கள்
கண்ணகிகள்
வயது வித்தியாசமில்லாமல்
வல்லூருகளின்  விளையாட்டில்
மானமும் உயிரும் மல்லுக்கு நிற்கிறது

நித்தம் நித்தம்
மோகத்தீயிற்க்கு இரையாகி
காமக்கொடுர கண்களில் சிக்கி
சிக்கிமுக்கி கல்லாய் கைகளின் மாட்டி
சின்னாப்பின்னாமாகி சிதைகிறார்கள்
சிலபல வேளை சின்னா பிணமாகிறார்கள்

கண்டனங்களும் போராட்டங்களும் 
நடந்துகொண்டேதானிருக்கிறது
ஆனால்
பெண்கள் காமத்தால் சுட்டெரிக்கபடுவதும்
பெண்மைகள் சூரையாடப்படுவதும் 
நாள்தோறும் நடந்தேறிக்கொண்டேதானிருக்கிறது

போர்களத்தில்கூட பூக்கள் அழிந்துவிடுகிறது
போரின் முடிவில் சில புதைந்துவிடுகிறது 
ஆனாலிந்த காமக்களத்தில் பெண்பூக்கள் 
பூக்கவும் முடியாமல் புதையும் முடியாமல்
புழுவாய் துடிக்கிறது,
துடிப்பது பொருக்காமல் சில துடிப்பும் அடக்குகிறது

இவைகளின் காரணகர்த்தா எது?
அதனை கண்டெறிந்து அறுத்தெறி!
அதனினும் மேலாக
இக்காரியம் செய்வோரின் உயிரை பறித்தெறி!
இனியும் இதுபோல் நடவாதிருக்க 
இதுவே சிறந்தவழி...அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

காணாமல் போனதே கார்மேகம்!
கார்மேகங்களென
கருத்த நீண்ட
கருங் கூந்தலெல்லாம்
கணுக்கால்களை தொட்டது அன்று!

கழுத்துக் கீழ்  காற்றில் ஆடியபடி
கத்தரிக்கோலுக்கு இரையாகி
கருங்கூந்தலே
காணாமல் போனது  இன்று!

பளபளக்கும் பட்டும்
தளைத் தளையப் பின்னலும்தான்
தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப் கட்டும் பேண்ட் சர்ட்டும்
வெளிநாட்டவரின் மறுஉருவம்

மேலைநாட்டின் மோகம்
மேம்பட்டுப் போகப் போக
மேகக் கூந்தலும்
மேலோட்டமாய் ஆனது

ஆடைகள் குறைவதுபோல
அழகிய கூந்தலும்
அளவுகோலில்லாமல்
அடியோடும் குறைகிறது!

நாகரீகம்  மேலோங்கி
கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும்
வெவ்வேறு நிறங்களாகியது!

அந்திவானம்
சிவந்தால் அழகு
அடிபெண்ணே!உன் கூந்தல்
கறுத்தால்தான் அழகே!

அழகு மேனிக்கு
அங்க அலங்காரமும்
சிகை அலங்காரமும்
செய்வதில் தவறில்லையே!

அதற்காக!
சிகையையே அலங்கோலம் செய்து
அங்கத்தின் தரத்தை
குறைக்கலாமோ பெண்ணே!....


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

ஓ இதுதான் சமூகமா?தன் தலைவனின்
சுவரொட்டிகள் ஒட்டபட
சூடுபரக்க காய்ச்சப்படுகிறது பசை
கிழிந்துகிடக்கும்
தன் வாழ்க்கை ஓட்டையை
அடைக்க வழியின்றி..

கூடிஉதவும் கூட்டுக் குடித்தனத்தில்
உடன்படாத உள்ளங்கள்
கூக்குரலெழுப்பினாலும் ஓடிவராத
அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆசைப்படுகிறது
விட்டுக்கொடுக்கும் மனமின்றி..

நியாயமான முறையில்
நேர்வழியில் செல்லக்கூட
குறுக்குவழியை கற்றுகொடுக்கும்
நேர்மையற்றோரின் நெஞ்சங்களால்
நிர்ணயிக்கப்படுகிறது
லஞ்சமென்ற மொய்கள்
அன்பளிப்பென்ற பெயரால்..

வாடும் வறுமையை போக்கிட
வாங்கிடும் பணம்
பெருக்கல் இல்லாமலே
பெருகிப்போய்
வாட்டி வதைக்கும் ஏழை மனங்களை
வட்டியென்ற கொடுமையால்..

அக்கரைகொண்ட அறிவிப்புகள்
குடி குடியை கெடுக்குமென்று
அது அடுத்தவனின்
குடியைதானே கெடுக்கும்
அறிவிக்கும் குடும்பத்தையல்ல
என்பதைபோல்..

பூவுலகில் வாழ
புண்ணிய வழிகள் பலயிருந்தும்
பூவுடலை புலக்கடையில் விற்று
புண்ணாகி பிறரையும் புண்ணாக்கி
பால்பட்டுப் பட்டமரமாகிய
விபச்சார வர்கம்
வெந்து சாகிறது வேதனை தாங்காமல்..

வீட்டுக் கதவு திறந்தே கிடந்தும்
சுகந்தமான காற்றை சுவாசிக்க
வெளிக்காற்று உள்ளே வருவதில்லை
வாசலில் வளர்ந்த மரங்களையெல்லாம்
குப்பைகளாக்குகிறதென சொல்லி
கொன்றுபோடுவதால்..

தன்வீட்டில் நடக்கும் அசிங்கங்களை
மறைக்க நினைக்கும் மனங்கள்
அடுத்தவீட்டு விவகாரத்தை
கண் வைத்து கைகால் வைத்து
கட்டுக்கதையாகி பற்றி எரியவைக்கும்
காட்டுத் தீயைப்போல்..

இப்படியான  சமூக நிகழ்வுகள்
இனிமேலாவது உருவாகாமலிருக்க
இனிய எண்ணம் கொள் நல்மனமே
இனி என்றும் மகிழ்வாகும்
இந்த சமூகமே!...

டிஸ்கி// அன்று எழுதியகவிதை முன்பு போட்டேனான்னு நியாபமில்லை. இருந்தாலும் மீண்டும். யோசிக்க நேரமில்லீங்கோ அதேன் இப்படியெல்லாம் ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது