நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாவமன்றோ!

 
எல்லாம் சரியிருந்தும்
இருதயம் மட்டும் இறுக்கிப்போன
இரக்கமற்ற ஈனப் பிறவிகளாய்!
நலமிருந்தும்
மனமற்றுப் பேசித்திரியும்
மனசாட்சியற்ற மாக்களாய்!
மண்ணில் உலவும் மனிதசாதிகள்

வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்து!
வெடுக்குச் சிரிப்பு சிரித்து
வேசமிடத்தெரியா வெகுளிகளாய்!

கந்தலான ஒட்டுதுணியில்
கருவிழிகள் கலங்கியபடி! 
குழந்தைபோன்றே உணவை
குதறிப்போட்டு சேட்டை செய்து!
தனக்குத்தானே பேசியழும்
தன்னுணர்வற்ற செய்கைகளால்!

பணமில்லா சிரிப்பு சிரிப்பதால்
தான் பைத்தியமென்றும்
தனக்கொரு அந்தஸ்தில்லா நிலை
அதனால் அரைலூசு என்றும்
மனமிருந்தும் அது சற்று
நலமில்லாததால்
மனநலவாதியென்றும்!

குற்றமற்றிருந்தும்
குற்றவாளியைப்போல்பிறரின்
கேலிப் பார்வைகளால்
குன்றிபோவது கொடுமையன்றோ!

தன்னையறியாமல்
தன்னுணர்வு புரியாமல்
அடுத்தவர்களால் அவமதிக்கப்படும்
இந்நிலையிலுள்ளவர்களை
இழிவு செய்வது பாவமன்றோ!

எந்நிலையிலும் தனக்கும் வரும்
என்று உணர்வோராய்
மன ஊனமுற்றோரை
மனம் நோகும்படி செய்யாதிருப்பது
மனித தர்மமன்றோ!

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது