நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரே ஒரு நொடி
ஆங்காங்கே குவிந்துக் கிடக்கிறது
அக்குவேராய் ஆணிவேராய்
சடலங்கள்!
முழுமையற்ற நிலையில் 
முண்டங்களாகவும்!
கைகால்களற்ற நிலையில் 
அரைகுறையாகவும்! 

திரும்பும் திசையெல்லாம் 
குருதியோடும் வாசனை
குற்றுயிரும் குலையுறுமாய் 
இதுயென்ன சோதனை!

பால்சுரக்கும் மார்புகள் 
பதபதைக்கிறது
பச்சிளங்களின் குரவலைகள் 
அறுத்து கிடப்பதுகண்டு!

பெற்றவரோடு மற்றவரின் 
நெஞ்சும் பதறித்துடிக்கிறது 
பால்யங்களின் பிறப்புறுப்புகள் 
சிதைந்திருப்பதுகண்டு!

பாவிகளின் செய்கைகள் கண்டு 
கடுங்கோபம் எழுகிறது
எழும்கோபமெல்லாம்
உருக்கியநெய் 
கொதித்தடங்குவதுபோல்
உள்மனச்சட்டிக்குள்ளேயே 
உறைந்துகொள்கிறது 

துடிக்கத் துடிக்க உயிரைக்கொன்று
துச்சமென துகிலுரித்து
எம்மினம் வேரறுக்கபட்டு 
வீதியில் வீசப்படுவதை
விதியென சொல்வதா?
இல்லையிது
மனிதருக்கு மனிதருக்குச் செய்யும்
சதியென சொல்வதா?

மனிதரே!
மனிதக் குருதியருந்த கண்டீரோ!
மனித மாமிசம் உண்ணக் கண்டீரோ!

அறிவில்லா காலத்தில்கூட
அறிவோட நடந்த மானிடமினங்கே?
ஆறறிவையும் தாண்டி 
அனைத்தையும் அறிந்த நிலையில் 
அறிவைத்தின்று 
அகம்பாவத்தோடு அலைவதோ
ஆங்காங்கே?

எதற்காக? 
தம்மினமே தம்மினத்தின் 
உயிர் குடிக்க 
குருதி தாகமெடுத்து
குரூர புத்திகொண்டலைகிறது

சாகவரம் பெற்றா? பூமியின் 
சன்னதிக்கு வந்துள்ளோம்!

மதவெறி! இனவெறி!
நிலவெறி! நிறவெறியென!
கொடுங்கோல் மனங்கொண்டு
கொட்டமிட்டாடி 
சாதிக்கபோவதுதானென்ன?

மண்ணுக்கும் பொன்னுக்கும் 
ஆசைக்கொண்டு!
அன்பும் இரக்கமும் மறந்து
ஆணவ ஆயுதமணிந்து
மனிதகுருதி அருந்த 
ஆர்ப்பரித்துவரும் கூட்டமே!

ஆறடி மண்ணுக்குள்ளே
அடங்கப்போவது உறுதியென்பதை
உணரவில்லையோ உங்கள் மனது!

ஒரே ஒருநொடி சிந்தியுங்கள்
நீங்கள் சிந்திக்கும் அந்நொடியே! 
உங்களை சொர்க்கம் சேர்க்கலாம்
இப்பூமியை போர்களமில்லா 
பூலோகமாகவும் மாற்றலாம்..
------------------------------------------------

இலண்டன் வானொலியில் வாசிக்கப்பட எனது கவிதை
நன்றி சகோதரி ஷைஃபா மாலிக்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது