நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரு சொட்டேனும் சேமியுங்கள்!


நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது

பிறப்புமுதல் இறப்புவரை
தொடர்ந்துவரும் நீரும் இது
இவ்வுலத்தையே சுற்றிவளைத்து
ஆட்சிசெய்யும் தண்ணீர் இது!

ஒருதுளி நீருக்குள்ளே
உருவாகும் உயிர்களிது
பத்துமாதம் பத்திரமாய்
பனிக்குடமென்னும் தண்ணீருக்குள்
உயிர்வாழுமது!

அழுதுகொண்டே பிறக்கும்போது
தண்ணீர் வரும் கண்ணீராக
அள்ளியணைத்து அன்னைதருவாள்
தன் நீரைக்கலந்த அமுதமாக!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

தேகம் கழுவ வேண்டும்தண்ணீர்
தேனீர் அருந்த வேண்டும்தண்ணீர்
பயிர்வளர்க்க வேண்டும்தண்ணீர
பசுமைக்கொஞ்ச வேண்டும்தண்ணீர்!

கொடும் பசியைக்கூட அடக்கிவிடும்
கொஞ்சம் தண்ணீர்
கொடும் பாவியையும் தவிக்கவிடும்
கொஞ்சம் தண்ணீர்!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

கடலோடு உறவாடி
தண்ணீரை
களவாடும் கருமேகங்கள்
பஞ்சம் விரித்தாடும் நேரத்தில்
கண்ணீரை துடைத்து
பசிபோக்கும் சிறுதூறல்கள்!

வான்மழை தண்ணீரை
தானம் தரும் நேரத்தில்
வரவேற்று வீட்டில் வைக்க
தொட்டிகட்டு
சொட்டு சொட்டாய் சேகரித்து
நிலத்தடியை குளிரூட்டு!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

உயிருக்கு உயிர்கொடுக்கும்
உன்னத தண்ணீரை
ஒருபோதும்
உயிர் நோகச்செய்யாதே
ஒவ்வாத மாசுகளை
நன்நீருக்குள் கலக்காதே!

ஐம்பூதங்களில் ஒன்றான தண்ணீரை
அளவுக்குமீறி அவதிகள் செய்யாதே
அவசியமில்லாமல் அத்துமீறி புழங்காதே
பத்திரமாய் பாதுகாத்து பதப்படுத்து
ஒரு சொட்டு
தண்ணீரேனும் சேகரித்து.....

[இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது