நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தனிமை! ஒரு தவம்!



தவிப்புகள் அடங்கிய தடாகம்  
இதில் பலவேளைகளில்
தவணை முறையில் நிகழும் மரணம்

சிலநேரம் சங்கடம்!
சிலநேரம் சந்தோஷம்!
சிலநேரம் அமைதி!
சிலநேரம் அலறல்!
சிலநேரம் வெறுமை!
சிலநேரம் கொடுமையென
சிக்கலாக்கி சிக்கெடுக்கும் மாயமந்திரம்!

சிந்தனையை தெளியவைத்து
சிந்தையை சிதறவைக்கும்
சிதம்பர ரகசியம்!
சிரித்து ரசிக்கவைக்கும்! -பலவேளை
சிந்தி அழவும் வைக்கும்!

ஆளில்லாமல் தவிக்கும் தனிமை
ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கும்!
ஆறுதலுக்காக தேடும் தனிமை
அழுகையில் கொட்டித்தீர்க்கும்!

அனைத்தும் அருகிலிருந்தும் தனிமை
ஆத்மார்த்த அன்பை தேடித்தவிக்கும்!
அன்பைச் சுமந்த தனிமை
அடிக்கடி தானே சிரிக்கும்!

முதுமை கொண்ட தனிமை -வெற்று
முற்றத்தையே வெறித்துப்பார்க்கும்!
இறுதியில்,,,,
முடிவு கொண்ட தனிமை - மீண்டும்
மூச்சை கேட்டுத் துடிக்கும்!

தனிமை ஒருவித தவம் -அது
கலைந்தாலும்  தவிப்பு!
தொடர்ந்தாலும் தவிப்பு!
இத் ”தனிமை”யில் இருக்கிறது
பல பல ரகசியம்
இதில் சிக்குவோரே
இவ்வுலகில் அதிகமதிகம்...

”இக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழின் ”தனிமை” என்ற தலைப்பிற்காக எழுதியது’

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது