நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒளிவீசும் வெப்பத்தட்டு..
இறையளித்த திருவிளக்கு
வெப்பம் சுமந்துலவும் விசைவிளக்கு
துயிலெழுப்பும் தூண்டாமணிவிளக்கு
தன்  ஒளிக்கதிரால் புவியீர்த்து
இவ்வுலகின் இருளகற்றி
வெளிச்சம் தரவந்த ஒளிவிளக்கு!

உலகில் வாழும் உயிர்களுக்கு
ஊட்டம்கொடுத்து
வாட்டாம்போக்கும் வள்ளலாரே!
உன் வரவில்லையெனில்
வாடிப்போகும் நாரிப்போகும்
உயிர் வாழும் யாவும் சூரியரே!

உன்னொளியில் கடன்வாங்கி
இருள் நீக்கும் வெண்ணிலவும்!
உன் கதிர்வீச்சில்
உடல் பிணிதீர்க்கும் மானிடமும்!
உன் வரவுக்காக
இயற்கைமொத்தம் காத்திருக்கும்!
உன் கதகதப்பில் இவ்வுலகே
குளிர்காயும்!

அதிகாலை உன்வரவு
அமைதி காக்கும் - வானின்
உச்சிமீது நீ அமர்கையில்
உஷ்ண வெப்பம் கூடும்!
அந்தி நீ சாய்கையில்
அழகொளிகூட்டி
அடிவானும் நாணம்கொள்ளும்!

உன் வரவில் மந்தமெனில்
மழைமின்னலிடிக்கு கொண்டாட்டம்!
உன் வரவேயில்லையெனில்
மண்மீதிருக்கும் உயிர்களோ திண்டாட்டம்!

என்வீட்டு முற்றத்தில்
உனது ஒளிக்கீற்று - கண்டதுமெழும்
என்மனக் கூட்டுக்குள்ளே
எண்ணிலடங்கா கவிப்பாட்டு!
உனதொளிக்குள் ஒய்யார  வண்ணமிட்டு!
உலகைச் சுற்றும் நீயொரு வெப்பத்தட்டு!

மறையோனளித்த
இவ்வுலகின் மகத்துவமே
இச்சுடர்விளக்கு!
இச்சூரியரின் கடுஞ்சூட்டில்
இளகி கருக வேண்டாம்
மறுவுலகினில் மானுடமே யென
மன்றாடித் தொழுதிடுதே தினம் என்மனமே...


சூரியன் என்ற தலைப்பிற்கு கவிதை வயல் 202காக எழுதியது...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது