நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

 
வேண்டிய வடிகால்கள்
வீட்டிலேயே இருக்க
வேலிதாண்டிபோகும்
உத்தமிகளும்!

வகைவகையாய் பரிமாறியும்
பசியடங்காமல்
பலவீட்டில் பசியாரும்
உத்தமர்களும்.

உருப்படியான 
உடல்களைக் கொண்டும்
ஊழைக் கொழுப்பெடுத்து
உழன்று புரழுது சாக்கடையில்!

ஒவ்வாத மனங்களுக் கிடையில்
ஓடவழியின்றி
ஊறி நாறுது தெருவரையில்!

அச்சானியில்லாமல் ஓடும்-இவர்களின்
அந்தரங்க வாழ்க்கை
அசிங்கத்தையே தேடியோடி
அடையும் வேட்கை!

வடிகாலின்றி ஓட நினைக்கும்
வாழ்க்கைக் கழிவுகளை-எங்கே
வடிப்பதென தெரியாமல் விழிப்பதே
இவர்களின் இழிநிலைந்த 
அன்றாட வாழ்க்கை...


இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நினைவுகூறுவோமாக!


அடக்குமுறைசெய்த
அன்னிய ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்

அறவழியில் வெற்றிவாகை சூடி
உப்புசத்தியாகிரங்களால் தன்
உடல்களை வருத்தி

தன் குருதிகளையும் தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்க்காக அர்ப்பனம் செய்து
தாயகத்திற்க்கு பெருமைத்தேடித் தந்து

தன் வம்சா வழியினர்கள் வசந்தமாய் வாழ
தன் வாழ்நாட்க்களைக்கூட வலியுடன் கழித்து
தன்நாட்டுக்காகவே பாடுபட்டு

சுதந்திரக்காற்றை நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம் தூக்கியெறிந்த
தியாகச் செம்மல்களின்
தியாகங்களுக்கு பலன்கிடைத்த தினம்

நம்தாய்நாட்டினை அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாட்டுபட்டவர்களை இன்றுமட்டும்
நினைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை

எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தந்தர்களோ
அதை கண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது நம்கடமை

சுதந்திரகாற்றை சுகமாய் அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித் தந்த
சுதந்திரத்தை பத்திரப்படுத்தி வாழ்வோமாக

நாட்டை நினைக்கும்போதெல்லாம்
நாட்டுக்காக போராடிய
நல்லவர்களையும்
நினையுகூறுவோமாக.

என் தாய்திருநாட்டில் வாழும் கோடானகோடி
மக்களுக்கும் உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும் “என் அன்பான குடியரசு தின வாழ்த்துக்கள்”


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஆத்மார்த்தமான நன்றிகள்.

என் உணர்வுகள் துடித்து எழுத்துகளாய் வெளியேறியது
அது ஓசையாகி உலகெங்கும்  ஒலித்து
இன்று சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசை பெற்றுள்ளதை நினைத்து
என் மனத்துக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஆனந்த சிறகடித்துப்பறக்கவைக்கிறது.
என் ஆன்மாவுக்குள் இறைநம்பிக்கையின் விசுவாசத்தை வலுப்பெறசெய்கிறது

கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை”யை 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாய் தேர்ந்தெடுத்து மூன்றாம் பரிசை அறிவித்துள்ளது. அதனை மணிமேகலை பிரசுரத்தார்கள் எனக்கு மெயில் வழிசெய்தியாக வாழ்த்துகளையும் அவர்கள் அனுப்பிய கடித்தினையும் இணைத்து அனுப்பினார்கள். அதனைக்கண்டதும் இறைவா புகழனைத்தும் உனக்கே என உள்ளம் ஆனந்ததில் அழுது திழைத்தது.

இணைக்கப்பட கடித்தத்தின் அலைபேசி நம்பருக்கு போன் செய்து கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் தலைவர் மலர்மகன்அய்யா அவர்களிடமும் பேசிவிட்டு என நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்தேன்.
இதோ அவர்கள் அனுப்பிய கடித்தம் உங்கள் பார்வைக்கும் இணைத்துள்ளேன்.

எனது நூலையும் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்த  கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளைக்கும். எனது நூலை பல பரிசுப்போட்டிகளுக்கு அனுப்பிவரும் மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.
எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.எந்நாளும்..

எனது ஒவ்வொரு எழுத்துகளுக்கும் நீரோடையின் வாசகர்கள் மற்றும் அன்பர்கள். நல்லுள்ளம் கொண்ட அனைவர்களின் ஊக்கம்தான் இதை உங்களோடு பகிர்வத்தில் எனக்கு ஆனந்த மகிழ்ச்சி. இதைத்தொடர்ந்து  உலகெங்கிலும் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாய் இன்னுபல நூல்கள் எழுதவேண்டுமென எண்ணம் தூண்டிவிடப்பட்டுள்ளது. இறைவனின் துணைக்கொண்டு அதனை செயல்படுத்த முயச்சிக்கிறேன்.அதற்க்கு தங்கள் அனைவரின் அன்பென்ற ஒத்துழைப்பும். இறைபிராத்தனைகளும் என்றென்றும் எனக்கும் என் எழுத்துகளுக்கும் வேண்டும்  என வேண்டும்

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வீசுதடா விஷக்காற்றுவீசுதடா விஷக்காற்று
வீதியெங்கும் வேகமாக!
பரவுதடா வீதியெங்கும்
பூகம்பமாக பூலோகமெங்கும்!
சாந்தமான கடல் தாயோ
சுருட்டுதடா சுனாமியாக!
அழியுதடா விதவிதமாக
அறியாத நோய்களாலே!

வாசத்தோடு பூக்கும் மலர்கள் -நொடியில்
வாடி வீழ்ந்து போகுதடா!
வாஞ்சையாக வீசும் தென்றல்
வாசலெங்கும் வக்கிரத்தோடு ஆடுதடா!

அழகாக காட்சி தரும்
அடர்ந்தகாடும் அழியுதடா!
எழில் மிகுந்த மலைகளுமே
எரிகுளம்பாகி உருகுதடா!

அன்னம் தரும் அருள் மழையோ
அடை மழையாய் பொழியுதடா!
பயிர்களெல்லாம் மூழ்குவதால்
பசிக் கொடுமை கூடுதடா!

உக்கிரங்கள் மனதில் குடியேற
அக்கிரமங்கள் உலகில் அரங்கேறுதடா!
அதை பொறுக்க முடியாமல்
இயற்கையும் எகுறுதடா
இடைவிடாமல் ஏறுக்குமாறா! 

 இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்ணே எழு நீ இடியாக!

மனவுணர்வுகளை
மிதித்தே பலக்கப்பட்டு -பிற
மனங்கள் வலிப்பதைப் பற்றி
சிறுதளவேனும்  
சிந்திக்காதோர் மத்தியில்

மர்மங்கள் புதைப்பதைப்போல்
மன ரணங்களை மறைத்து வைத்து
னதை ஊமையாக்கிவிடாமல்
மல்லுக்கு நின்று முன்னேறு!

பெட்டைக்கூவி பொழுது விடியாதென
புலம்புவோர் மத்தியில்
புதைந்துவிடாதே பெண்ணே!
இவர்களெல்லாம் பெண்ணை
பேதையென்றே பேசிப்பேசி
போதை கண்டுவிட்டார்கள்

முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்படக் கூடாதென்பார்கள்
முடவனாக இருந்தாலும்
முயற்சித்தால் முடியாமல் போகுமோ!
ஒரு சொட்டேனும்
தேன் கிட்டாமல் போகுமோ!

அடிமை நெருப்புக் கங்குகளாய்
ஆழ்மன உணர்வைகூட கருக்கசெய்யும்
அகந்தைகளிடம் அகப்பட்டு
அடைபட்டேக் கிடக்காதே!

அந்தியில் சாயும் வெயில்
அதிகாலையில் சுள்ளென்று எழுவதுபோல்
அதிகாரவர்கங்களின் பிடியில்
அகப்பட்டுகிடக்காமல்
அமைதியாய் வீறு கொண்டெழும்பு

அடுத்தவர் மனவோட்டம் புரிந்தாலும்
அறியாமையாலல்ல
ஆற்றாமையால்
அறியமறுக்கும்  அறிவிலிகள் மத்தியில்

அகம்பாவம் அறுத்தெறிந்து
அன்பெனும் ஆயுதம் அணிந்து
இறைக்கு மட்டுமே அடிபணிந்து
இருளிலும் அச்சம் தவிர்த்து
அவசரமில்லாமல் ஆய்ந்து ஆராய்ந்து
அடியெடுத்து வைத்து நடைபோடு
அஞ்ஞானத்தோடு மெஞ்ஞானமும் சேர்த்து

முன்னேறுவதையே
முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
பின்சென்ற அனைத்தும்
முன்னுக்கு வரும்
முந்தானைப் பெண்ணுக்கும்!
முயற்சி வெற்றியையே தரும் .........

இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஈழமா இருளும்!..

 
ஈழத்தில்
ஈரக்குலைகளெல்லாம்
இரத்தமற்று இறுகிக்கிடக்க
இரக்கமற்ற அரக்கர்களெல்லாம்
இறந்தவர்களின்மேல் ஆட்டம்போட!

இப்படியான கொடுமைகள்
எப்போதுதான் தீருமென
எங்கோயிருக்கும் 
ஈரல்களில்
ஈரம் ஊற்றெடுக்க!

அரசியலாகும் ஈழம்
அரசியலாக்கும் ஈனம்
அழுகுரல்களின் ஆலோழம்
அந்தி சாய்ந்தாலும் தீராதாம்

விடியலை  எதிர்பார்த்து
விடிய விடிய
விழித்திருக்கும் விழிகளுக்கும்
விழித்திரையிடும் கண்ணீர்களுக்கும்
விடிந்திடும் ஒரு நாள் கிழக்கு
முடிந்திடும் அன்றே 
கொடுமையின் வழக்கு

ஈசப்படைகள் நாசமித்துபோகும்
ஈழக்குழந்தைகள் 
தன் தேசமெங்கும் வாழும்
எப்போர் நடத்தினாலும்
அப்போரையும் வெல்லும்
ஏவுகனைகொண்டு 
காரிருளை வீசினாலும்
 ஈழமா இருளும்?

இருளையகற்றி தீப ஒளியேற்றத் தெரியும்
இயன்றளவு ஈழம் காக்க முடியும்
ஈழத்தில் இனி எந்நேரமும்
இருளுக்கில்லை வேலை
இரவு நேரத்தில் மட்டும் வந்து
ஈழக்குழந்தைகளை உறங்கவைத்து
இனிமையாக்கிடுமே நாளை!...
---------------------------------------------------------------------------------------------------------------
இக்கவிதை ஈகரையின் கவிதைப்போட்டிக்காக எழுதியது.கவிதைப் போட்டியில் வெல்லமுடியாவிட்டாலும் கலந்துகொண்டமைக்கான மகிழ்ச்சியடைகிறேன். வித்தியாசமான 8 +8 தலைப்புகள் தந்தார்கள். அதில் 8 தலைப்புகள் நாமாக தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். அப்படி நான் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் ஒன்றுதான் இது.[மற்றவைகள் தொடரும்] 
போட்டியில் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்..
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

தமிழரின் பெருமை தழைத்து ஓங்கட்டும்.உழைப்பு
உயர்வைத் தரும்
உழைக்காதோருக்கு
உடலும்
உள்ளமும் சோர்வைத் தரும்

ஒருவர் உண்டு மகிழ
இன்னொருவருரின்
வேர்வைகளை
விதையாக்கி உழுதிட

அது நெல்லாகி
அறுவடையாகி
அரை சாண் வயிற்றை
ஆனந்தப்படுத்த
சோறாகி சுகம்தரும்...

 இது சென்ற வருடம் எழுதியது..

தை திங்கள் வந்தது
தமிழருக்கு மகிழ்வைத் தந்தது

ஏர்பிடித்து உழுதிடும்
உழவரின் உழைப்பின்
ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட
 ”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

உழைப்பவரின் மனதினை
உற்சாகப்படுத்தி
ஊக்கமும் உறுதியும் தந்திட
”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

கலப்பையின் உழைப்பே
அகப்பையில் சோறு
காட்டையும் பொன்னாய்
ஆக்கிடும் பாரென்று சொல்ல
”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

விஞ்ஞானங்கள் பல வந்தாலும் -இந்த
விவசாயின் வேர்வைக்குத் தனி
விலைமதிப்புள்ளதென்பதைச் சொல்ல
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

ஐந்தறிவு ஜீவன்களுக்கும் அலங்காரம்
அது விளங்கா போதிலும்
அதற்கும் மதிப்பளிக்க
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

கரும்பும் மஞ்சளும் மங்களமாய் இனித்திட
கன்னிகள் சத்தம் களைக்கட்டிட
கூட்டமாக கூட்டமாய் கூட்டாஞ்சோறு
கூடிப் பொங்கி உண்டிட
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

தமிழரின் பெருமை தளைத்து ஓங்கிட
தன்னிறைவுபெற்று செழித்து வாழ்ந்திட
ஏழைகளற்று ஏற்றம் பெருகிட

ஏழ்மையை அடித்து தூரத்தி விரட்டிட
எல்லாம் வல்ல இறைவனை தொழுது
என்றும் கேட்போமே இனியபொழுது....

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும். 
தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
உளமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய

மெளனத்தின் வெளிப்பாடு..


உள்ளத்தின் ஆழத்தில்
ஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது

அர்த்த ஜாமத்தில்
அனைத்துமே
அடங்கிக் கிடக்கும்போது
அலறத்துடிக்கிறது மெளனம்
ஆனபோதும்
அர்த்தங்களற்ற செயல்களாகி
அமைதி காத்துகிடக்கிறது
ஆழ்மனதின் அர்த்தமறிந்து

பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பூட்டிவிட்டேன் உனை வைத்து.அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடப்போடா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!

இது நான் 2009 நவம்பர் மாதம் 3 ந்தேதி எழுதியது. அதிலிருந்து இதில் சின்ன மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன். அது என்னான்னு கண்டுபிடிங்க..
 கண்டுபிடி கண்டுபிடி அட சும்மாதான். கண்டு பிடிங்களேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பழுக்காத இலையொன்று!தேடியெடுத்த வாழ்க்கை
தோற்றுவிட்டதாய் எண்ணி
வழக்கில் விட்டபோது
வாழ்ந்த வாழ்க்கையின்
வகைகளை சொல்ல வழியின்றி
வார்த்தைகள் சிறைப்பட்டுக்கிடந்தன

வாய்தாக்கள் வாங்காமல்
வழக்கு முடிவடைந்ததும்
வழக்கத்திற்க்கு மாறாக
வாக்குவாதமேயில்லாமல் நான்கு
விழிகளும் விசாரித்துக்கொண்டன

பிரியாவிடைபெறும் சமயம்
பொசுக்கென வந்தபோது -இதுவரை
சிறையிருந்ததாய் சிணுங்கிய இதயம் -ஏனோ
சிணுங்கியழத் தொடங்கின
சிதறிய வாழ்வையெண்ணி

பழுக்காத இலையொன்று
பட்டென எழுந்த காற்றில்
படபடத்து கீழே விழுந்து
பரிதவித்து போய்
பட்டமரநிழலில் ஒதுங்கியதுபோல்

பிரியம் அவநம்பிக்கையானபோது
பாசம் பொய்த்தபோது
நேசம் வேசம் கலைத்தபோது
நிம்மதி நெடுந்தூரம் போனபோது
நிறைவு நெஞ்சைவிட்டு அகன்றபோது

அவமானங்களை சுமந்தபடி
அடிநெஞ்சு கனத்தபடி
அச்சத்தோடு வாழ்வது சரியல்லவென்று
அச்சடித்த காகிதத்தின் அடியில்
அச்சுப் பிசகாமல் அப்படியே

விவாகத்தின்போது
அன்பினாலிட்ட  கையெழுத்தை
விவாகரத்தின்போதும்
அன்பைவெருதிட்டது
விரல்கள் விரும்பாமலே
விரக்தியான மனதோடு...

இக்கவிதை எழுத்து.காமில் வெளியாகியுள்ளது
 எழுத்து.காமிற்க்கு எனது நன்றிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

புதையவா! பூக்கவா!

 
காதலென்னும் கீதை அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..

இக்கவிதை எழுத்து.காமில் எனது முதல் கவிதை.  அன்பான வரவேற்போடு என்னை வரேற்று.ஊக்கமென்னும் கருத்துக்களால் நெகிழச்செய்த எழுத்து.காமிற்க்கும் அங்குள்ள உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது