நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அமைதி பூப்பதெங்கே!ஏற்ற இறக்க வாழ்வு தனிலே
ஏற்றமொன்றையே ஏக்க உள்ளம்
கேட்டுத் தவித்திடுதே
இறக்கமொன்று வந்த போதினிலே
இன்னல்கள் கொண்டு
துடித்தே துவழ்கிறதே!

நிரந்தரமில்லா இவ்வுலக மண்ணினில்
நிரந்தர வாழ்வு தேடும் நெஞ்சங்களாகிடுதே!
எதையோ தேடித் தேடி
எங்கும் அலையாய் அலைகிறதே!
அதில் தன்னையே தொலைத்திடுதே!

இருப்பதைக் கொண்டு இன்பம் பெற்றால்
இல்லம் செழித்திடுமே!
உள்ளதைக் கொண்டு நல்லது செய்தால்
உள்ளம் குளிர்ந்திடுமே!
அற்ப வாழ்வும்  அற்புதமாகிடுமே!
அங்கே அமைதி பூத்துக் குலுங்கிடுமே!

அருளாளான் அள்ளித் தந்த
அற்புத வாழ்வினிலே
ஆயிரமாயிர அர்த்தங்கள்  பொதிந்து
மொட்டுக்களாகிறதே!
மொட்டு வெடித்து மெல்ல மலர்ந்து
அழகாய் பூத்திடுமே!
அன்புக்கொடி வழிதனில் அமைதி  படர்ந்திடுமே!
அதில் ஆன்மாக்களும் சுகம் பெறுமே!..

வியாழன் நேரக்கவிதையில் இலண்டன் வானொலியில் வலம் வந்த கவிதை, எனது வரிகளை உள்வாங்கி வாசித்தவிதம் அருமை. சகோதரி ஷைஃபா மாலிக் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

கருமுட்டைகள்
வேலியிலேறி ஓடி ஒளியும் 
ஓணானில் வேகத்திலோ!

வெள்ளைத்தோல்மீது 
கரும்புள்ளி படிந்த கவலையிலோ!

காற்றைக்கிழிக்கொண்டு கொண்டு செல்லும்
காரில் கிலிபிடித்து அமர்ந்திருக்கையிலோ!

நடுஜாம இரவில் கொல்லைப்புரத்து 
கருஇருட்டில் கண்ணடிக்கும் நிலவிலோ!

உலைகொத்தித்து ஒருதுளி தெரித்து
மேனி சுடும் சூட்டிலோ!

மூன்றாம்விதியை முழுமூச்சோடு
கையாண்டு பறக்கும் விமானத்திலோ!

பூவில் வண்டமர்ந்து தேன்குடித்து
ரிங்காரமிட்டு பூரித்துச் செல்லும் அழகிலோ

மழையை புணர்ந்து 
வயலிடுக்கில் வளரும் புற்க்களின் வேரிலோ!

அப்பாவிகள் பாவிகளால்
சீரழிக்கப்படும் சிதைவிலோ!

முன்பின் அறியாத மனம் 
முகவரி தொலைத்தழும் அழுகையிலோ!

ஒளிந்துகிடக்கும் எனது 
எண்ணக்கரு முட்டைகள்

முண்டியடித்துக்கொண்டு
உடைந்து வெளியேறத் துடிக்கிறது

நான் முன்னே நீ முன்னே என்று
கவிகொஞ்சு பொரிக்க...அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

வாழ்க்கைத் துணையின் புலம்பல்!
தாய்மடிதேடும் சேயைபோல்
உன்மடியில் என் தலைசாய்க்க
ஏங்கும் நெஞ்சதிற்கு
இதம் தந்து மகிழ்விப்பாயா?

விரலால் தலைகோதி
முன் நெற்றி முகம் நீவி
பேச்சால் பசியாற்றி
பெருமகிழ்வு தருவாயா?

நிலவுக்கு துணையாக
ஒரு விடிவெள்ளி  வருவதுபோல்
எனக்கு  துணையாக
எப்போதும் வருவாயா?

நீரோடை மீதினிலே
நிலவு  ததும்புவதுபோல்
என்மனக் குளத்தினிலே
நீச்சலடித்து கிடப்பாயா?

உனக்காக என்னிதயம்
விடாமல் துடிக்கிறது
விட்டுவிடாது எனதன்பை
உனதுயிரில் இணைப்பாயா?

என்னில் குறைகளேதும் உண்டெனினில்
குறைகள் களைய முனைவாயா?
என்னில் இல்லாத எதுவும்
பிறரிடத்தில் கண்டாயா?

நம் வாழ்வை காக்க நினைகிறேன்
உன் தோளில் சாய துடிக்கிறேன்
என் துடிப்பை அறிவாயா?
நம் வாழ்வை காப்பாயா?

வினாக்கள் விளைகிறது
விடைகளேதும் தருவாயா?
இல்லை
விதிவிட்ட வழியென்று
விட்டு விலக்கிப் போவாயா?

டிஸ்கி// மணமுடிக்கப்பட்டும் மனமிணையாமல் தவிக்கும் தம்பதியரின்  ஒருதலை அன்பின் புலம்பல்.
இலண்டன் வானொலியிl கடந்த வியாழன் வலம் வந்த கவிதை, வாசித்த சகோதரி ஷைஃபா மாலிக் அவர்களுக்கும். இதற்கான விமசர்னத்தை பகிர்ந்தளித்தமற்றுமொரு அன்புச் சகோதரி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பிரிவின் துயர் [2]


விரல்கள் பிரித்து
விடைபெறும் பொழுது
விழிகள் நான்கும்
விபத்துக்குள்ளாகியது!

நெற்றி முகர்ந்து
உனக்குள் வலிப்பதை
எனது உதடும்!

எனக்குள் வலிப்பதை
உனது உயிரும் 
உணர்ந்து துடித்தது!

நீ அழுதிடக்கூடாதென நானும்
நான் அழுதிடக்கூடாதென நீயும்
நமது மனதுக்குள் பிரத்தானை!

கண்ணீர்களை மறைக்க - நமது
கன்னங்கள் அணிந்தது
பொய் புன்னகைகளை!

தொலைதூரம் போனபின்பும்
திரும்பி பார்த்தலை
எதிர்நோக்கிய - நமது
நிலைகொள்ளாப் பார்வைகள்!

பிரிவின் துயர்களை
தாங்கிக்கொள்ள முடியாமல்
பரிதவிக்கும் உனது முகம்!

தாங்கிக் கொண்டதாய்
பாசாங்குகாட்டி
பதபதைக்கும் எனது மனம்!

பிரிவுகள் நமதுறவை
பலப்படுத்தும் என்ற நம்பிக்கையில்
பிரியாவிடைகள்
பிரிவின் துயர்தாங்கி!...

பிரிவின் துயர் 1

 

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இரகசிய காப்பீடு!

வனத்தில் தனித்து நிற்கும்
ஒற்றை மரத்தோடு  உரசி
தென்றல் செய்யும் சரசம்!
 
 
வானுச்சியில் மிதக்கும்
நிலவரசியை  நோக்கிப்போகும்
ராஜமேகத்தின் தந்திரம்! 
 
 
பச்சைப் புல்வெளியெங்கும்
பனித்துளிகள் நடத்தும்
இச்சைப் புரட்சி  ராஜ்ஜியம்!
 
இவையனைத்தும்
இருள் போர்வைக்குள்
இரவுப் போருக்குள் நிகழும்
இரகசிய காப்பீடுகள்.
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சந்திப்பின் நிகழ்வில்.


பனிக்கொட்டும் இரவில்
படர்ந்திருந்த மெளனங்கள்
மெல்ல கலைகிறது
மேகத்தோடு சேர்ந்து கொ[கெ]ஞ்சலோடு

ஆழ்மனக்கிடங்கில் அமுங்கிடமுடியாமல்
ஆழிப்பேரலைபோல்
அடித்துக்கொண்டு கிடக்கும் அந்நிகழ்வுகள்
அதரங்களில் ஓரத்தில்
வழிந்தோட துடித்த நிலையில்

அந்நேரத்தில் அதிசயமாய்
அசைந்தாடிய அனிச்சமலரோடு
அசையமறுத்த இமைகளுக்குள்ளிருந்து
அசைந்தாடியது கருவிழிகள் அச்சத்தால்

விரசப் பார்வை உரசி உரசி
உயிரை உருக்கத் தொடங்க
ஒளியோடு நிலா உலாவரும் நேரத்தில்
ஒளிந்துக்கொள்ள இடம்தேடியது வெட்கம்

தன்னையறியாது தலையசைக்கும்
தவிப்புகளை தவிடுபொடியாக்கி
தனிமைக்கு விடைக்கொடுக்க
எண்ணிய வேளையில்

தட்டுத் தடுமாறி இமைகளைப்பிரித்து
நினைவுகளை மீட்டெடுத்து
சுதாரித்து கொண்டு விடைக்கொடுக்கிறது
விரக்தியோடு விழியைசைத்து
விசும்பல்களை சுமந்துகொண்டு..
----------------------------------------------------------------------
தமிழ்குறிஞ்சியில் வெளியான கவிதை
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது