நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கனவிலாவது!!!


இருள் மெல்ல இரவைத் தழுவ
இமைகள் இரண்டும் விழியைத் தழுவ
மூடிய கண்களுக்குள்
அறிப்படாதவைகள் அனைத்தும்
உணர்வென்னும் கனவில்
உதிக்கத் தொடங்கியது

அழகிய விடியல்
விடியலை உணர்த்தும் வகையில்
காகத்தின் கரையும் குரல்
கண் திறந்ததும் எதிரில்
அன்னையின் அன்பான முகம்
கண்டிப்பு கலந்த பாசத்தோடு
தந்தையின் தலைகோதல்

வீட்டு முற்றத்தில்
வீசிய இளங்காற்றில் ஆடிய
வாசனை மலர்கள்
அடுக்களையில் எறிந்த
அணையா நெருப்பின் சுவாலை
அதில் போட்டுத் தந்த
அன்புகலந்த தேநீர் 
அதிலெழுந்த ஆவியெனும் புகை

வெளியில் எட்டிபார்த்தபோது
நீல ஆகாயம் அதில்
நீந்தும் கருப்பு வெள்ளை மேகம்
நடக்க இறங்கியபோது
சட சடவென வந்து விழுந்த மழையில்
தேகம் தொட்ட சிறு துளிகள்
நேசத்தோடு உள்ளங்காலின்
நரம்புகளை ஈர்த்த ஈரமண்

பச்சை மரம் அதில் பழுத்தயிலை
பாடுங்குருவியின்  படபடக்கும் சிறகு
சுற்றும் முற்றும்
சூழ்ந்த இயற்கை -இதுவரை
விழிகள் கண்டிராத
விசித்திர நிறங்களெல்லாம்
விழிகளுக்குள்  தெரிய!

பொழுது விடிந்துவிட்டது
பார்த்து பத்திரமாக எழுந்திரியென்று
செவிகளுக்குள் நுழைந்தது
செவிலித்தாயின் குரல்
பார்வையற்றோர் இல்லத்தில்
படுத்திருந்த எனது காதில்

இறுக்கி மூடியிருந்த விழிகள் உருள
இமைகள் வேகமாக திறக்க
வெளிச்சம் அங்கே மெல்ல விலக
வெளிறிப்போன மனதுக்குள்
வேதனைகள் நிரம்ப

உணரமட்டுமே தெரிந்த அத்தனையும்
உண்மையில் உலாவியது
உறக்கக் கனவில்
நிஜங்களையும் நிறங்களையும்
பார்க்கயிலாவிடிலும்
நினைவுகளாய்
கனவுகளிலாவது வந்ததேயென

உற்று நோக்கிய என்
குருட்டுப் பார்வைகளின் வழியே-இந்த
உலகம் எப்போதும்போல் தெரிந்தது
கறுப்பாய் காரிருள் சூழ்ந்தபடி!..

கனவு என்ற தலைப்பிற்க்கு தமிழ்த்தேர் இம்மாத இதழில் வெளியான கவிதை. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மனமயக்கும் விடியல்


இளங் காற்று இசை மீட்ட
ஈரப் பதத்தோடு
கரும்புகையும் கார்மேகமும்
கலந்து கலையும் தருணம்

பச்சைமேல் இச்சை கொண்ட
பனித் துளிகள்
புல்வெளியெங்கும் தன்னைப்
போர்த்தியிருக்க

கதகதவென சூடு கொடுத்து
குளு குளுவென்ற குளிரை நீக்க
தகதகவென்று எழுந்தது
செவ்வகச் சூரியன் - தன்

செந்நிற வண்ணத்தை
சிவக்க விட்டபடி
சுற்றி வளைத்தது
சேவலை கூவச்சொல்லி!

அதிகாலை விடியல் பொழுதை
அழகு நிறைந்த அம்சமாய்
அடிமைப் படாத பறவையொலிகளையும்
அலராம் வைத்து எழுப்பத்தொடங்கியது

”இப்படி”

அதிகாலையிலேயே வந்து 
அனுதினமும் தன்னை
அழகுப்படுத்தி  –பிறரை
அணு அணுவாய் ரசிக்கவைத்து
அதிசயவைக்கும் விடியலே!

உன்னைக் கொண்டு நேரம் நகர
உனைத் தொடர்ந்தே பொழுதும் கரைய
மறைந்து மறைந்து மீண்டும்  தொடர்கிறதே!
மயக்கும் விந்தையாய் மங்களம் பூசிய 
அந்திமாலையும்
மகிழ்ச்சி பூக்கவைக்கும் 
அதிகாலையும்.. 

விடியலென்ற தலைப்பிற்க்கு வானலை வளர்தமிழ் ”தமிழ்தேர் மாத இதழுக்காக’” 
எழுதிய கவிதை

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இந்தக் காதல் எது வரை?
காதலின் கரையைத்தேடி
காலங் காலமாய் ஓடும்
காதலர்களின் வரிசையில்
காதலை சுமந்தபடி
கடைக் கோடியில்  நான்

நினைக்க நினைக்க சுகம்
நினைவைத் தீண்ட தீண்ட சுவை
நீர்குமிழியாய் எழுந்தடங்கும்
நீர்மூழ்கியாய் உள்ளடங்கும்
நிசர்சனத்தின் விந்தை!

உரசும் உணர்வுகளில்
உயிருக்கு உரம் சேர்க்கும்
கடக்கும் சமயங்களில்
கடைகண் பார்வைகளில்
கனவுகளுக்கு விருந்தளிக்கும் மாயை!

இணைந்திருக்கும் தருணைத்தைவிட
இல்லாதிருக்கும் தருணமெல்லாம்
இனம் புரியாத இம்சைகளை
இதயத்தில் ஏற்றிவைத்து
இருதலைக்கொள்ளியாக்கும் அவஸ்தை!

காதல் காதலென்று
கனல்கொண்ட நெருப்பாக
அலைகொண்ட கடலாக
வாசம்கொண்ட மலராக
நீலம் கொண்ட வானமாக
நித்தம் வீசும் காற்றாக

நெடுங்காலம் காதல்கொள்ள
நெஞ்சம் முழுவதும் ஏங்கும்
ஏட்டில் நிலைத்த எழுத்தைபோல்
எந்நேரமும் 
நினைவுகளை சுமந்தபடியே
நித்தமும் வாழும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இந்த வாழ்க்கைக்குத்தான்.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
இருக்கும் இடைவெளிக்குள்
வாழ்க்கையென்னும் மர்மமுடிச்சிகளில் சிக்கி
அவிழ்க்கவும் தெரியாமல்
அப்படியே விடவும் முடியாமல்

தினம் தினம் நடக்கும்
போராட்டங்கள்
திணறுவது சகிக்காத சில
திண்டாட்டங்கள்

சதைபோர்த்திய எலும்புப் பிண்டங்கள்
சர்வ சதா எதன் பின்னாலயோ நகர்ந்தபடி
கூச்சலும் குழப்பமும், கோபமும் மோகமுமென
மூழ்கி பாழ்படுவதே முப்பாட்டன் தொட்டு
தலைமுறை தோஷங்களாய் தானியங்கியபடி
தலைகால் புரியாத தவிப்புகள் நிறைந்தபடி

இடைப்பட்ட வாழ்க்கைக்குள்
இன்பங்கள் சூழ்ந்திருந்தபோதும்
இன்னல்களே அதிகம்!
இருந்தாலும் இல்லையென்றாலும்
இதில் ஏக்கங்களே நிறையும்!

இது ஒருவித வினோத  
விளையாட்டு அரங்கம்
இதில்  விதிகளே  
விளையாட்டை அரங்கேற்றும்

மறைபொருள்களின் ரகசியங்கள்
மறைக்கப்பட்டுள்ளதால்
மனிதர்களால் மர்ம முடிச்சிகளின்
முடிச்சவிழ்க்க முடியவில்லை
முடிச்சவிழ்க்க முற்ப்படும்போது
முடிச்சவிழாமலே!
முடிவுபெறமுடியாமலே!

முற்றுப்புள்ளியென்னும் மரணத்தால்
முடிவெழுதப்படுகிறது
இவ்வுல ஆசைக்கும்
இடைவெளியான வாழ்க்கைக்கும்

அட
இப்படியான வாழ்க்கைக்குத்தான்
 எவ்வளவு போராட்டங்கள்
எவ்வளவு எதிர்பார்ப்புகள்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வேரை மறந்த விழுதுகள்.விதையாகி, மண்ணில் புதைந்து
வளர்ந்து மரமாகி, பூத்துக் குலுங்கி
காய்த்து கனிந்து
காற்றிலும் மழையிலும், காவல் காத்து
விழுதுகளைத் தாங்கிய வேர்கள்

 தன்னையே தேய்த்து
தளர்ந்து முதிர்ந்து, தள்ளாடி தடுமாறி
தன்னையே நிலைப்படுத்த நினையாது
விழுதுகள் மறந்த வேராய்
வேதனைப்படவும் முடியாது
வெளியில் சொல்லவும் இயலாது

வெதும்பும் மனங்களாய்
உலவும் உள்ளங்கள்
உலகில் ஏராளம்-இப்படி
முடங்கிய முதுமையின் 
நிலைகளோ பரிதாபம்!

முதுமையின் நலம்பேண முடியாத
வேரை மறந்த விழுதுகளுக்கு
அனிச்ச மலராய் -வேர்
வாடுவதெங்கே தெரியப்போகிறது

இரும்பாகிபோன
இதயங்களை ஈன்றெடுத்ததால்
முதியோர் இல்லத்தில்
முடங்கிடக்கிறது வேர்கள்
விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,,

 முதியோர் நலம்

இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது