நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆணே அஸ்திவாரம்..


ஆண்....
அவனைக்கண்டு அச்சமேற்படின்
பெண்ணுக்கு அவன்
ஆடையல்ல
ஆகாத வாடை...

ஆணே! நீ....

மெழுகு
உருகி
ஒளிதருவதில்,,,

உளி
குடும்பச் சிற்பம்
செதுக்குவதில்....

உருகும் மெழுகுக்கு....
தேயும் நிலவுக்கு....
தாங்கும் தூணுக்கு....
குடும்பம் காக்கும் அரணுக்கு...
அஸ்திவாரமாகும் அன்புக்கு...
அரவணைக்கும் ஆணுக்கு,,,
ஆத்மார்த்த வாழ்த்துகள்...

"அன்புடன் மலிக்கா"
இறைவனை நேசி
இன்பம் பெறுவாய்.

விடலை...


முளைத்து மூனுயிலை விடுவதற்குள்
முக்கால் வாழ்க்கையை
வாழ்ந்து முடித்திட எண்ணும்..
மூத்தோர் முன்னோர்பற்றிய எண்ணமற்று
மனம்போனபோக்கில்
மனதி(மடியி)லடம் கேட்கும்...
காமக்கோயிலின் சாத்தனை வழிபட
கண்ணியம் கட்டுப்பாடற்று
கண்மூடித்தன பூஜைகளுக்கு தூபம்போடும்...
சொல்பேச்சுக் கேளாமை
அல்பத்தன வீராண்மை
அவிழ்த்துவிடும் பொய்யாமை
அத்துமீறும் விடலாமை
பதிமூன்றில் தொடங்கி
பதினெட்டில் தொடரும்
பருவத்தை பக்குவமிடத்தெரியா
பெற்றோர்களின் இயலாமை
விடலை வீணானால்
வாலிபம் கோணலாகும்
வாலிபம் தவறானால்
வாழ்வே பாழாகும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உயிருக்கும் மனதுக்கும்..


இருக்கும்வரை இரக்கமுடன்
இருங்கள்
இறக்கும்போது ஏற்றம்பெறுவீர்கள்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

உயிரோடிருக்கும்வரை
உதவுவதில் முந்துங்கள்
உயிர்களின் மூச்சில் கலந்திருப்பீர்கள்
@@@@@@@@@@@@@@@@@@

வாழும்வரை அன்போடு
வாழுங்கள்
வாழ்வு முடிகையிலும் வசந்தமடைவீர்கள்
#############################

மரணிக்கும்வரை
மனிதாபிமானமணியுங்கள்
மரணித்தபின்பும் மண்ணில் வாழ்வீர்கள் 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மானமீனம் உணருங்கள்
மதிப்புமிகுந்து உயர்வீர்கள்..
கஞ்சம் நயவஞ்சகம் தவிருங்கள்
கண்ணியம் கிடைக்கப்பெருவீர்கள்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுயம் நலன் [சுயநலம்]




ஓடுடைந்து கவிச்சடிக்கும் முட்டையாய்
ஒட்டி உறிஞ்சும் அட்டையாய்
சுயமிழக்க முடியுமோ
சுயநலமது சுயத்தினை போக்குமோ..

சுயமிழக்க
நெருங்கும் தருணம்
சுயம் காக்க முனையுமெந்தன்
சுயநலம்...

சுயம் பேணத்தவறும் -பிறர்
சுயத்திலென்
சுயமிழக்க விரும்பா
சுயநலம்..

தன்நலம் காத்து
பொதுநலம் சிறக்க
என்நலன் தேக்குமென்
சுயநலம்..

சூடு சொரணையற்று
சுடுசொற்கள் பட்டு
மண்புழுவாய் சுருழ
மதிமறுக்குமென் சுயநலம்..

குட்டக் குட்டகுனிந்து- இனியும்
குனிய முடியா நிலையில்
கட்டவிழ்த்து
குட்டுமென் சுயநலம்..

இல்லாமை நெறுக்கி
இன்னலிடும் போது
பொல்லாமை நீக்க
பொசுக்கென பாயுமென் சுயநலம்..

சுயநலக்காரியென
சுட்டிக்காட்டுவதை
சுண்டித்தள்ளுகிறேன்

சுயம் தேடும் பறவையாகாது
சொறியக்கொடுக்கும் மாடாய்
செல்லவிரும்பாததால்...

=============================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எங்கே சென்றன?...



பனிப்படர்ந்த முன்னிரவில்
நிலவுக்குளியலில் உடல்நனைத்து
இதய முந்தானையில் தலைத்துவட்டியபோது
தீண்டிய விரலின் ஸ்பரிசம்
இருளண்டிய இரவிற்கு
தீபஉணவளித்து நெகிழ்ந்தவை...

காலின் கட்டைவிரலில் நெட்டியிழுத்து
காற்றசைவில்
காதறுகே நெளிந்த கார்குழல் நீவி,,
தாடை நிமிர்த்தி வெட்கத்தாட்பாழ் நீக்கி
அன்பின் ஒளியை அமாவசையில் கண்டவை..

கண்ணாடிப் பேழைக்குமுன் நின்று
கண்முன் தோன்றியதெல்லாம்
கர்ப்பகிரகதிற்க்குள் நுழைத்து திழைத்து
கண்குளிர்யோடு
மனக்குளிர்ச்சியடந்து குழைந்தவை..

உணர்சிகளால் உடன்படா
உணர்வுகளால் உடன்பட்டு
இரண்டோடொன்று கலந்து கரைந்து
இங்கிருந்தும் அங்கிருந்தும்
இரவும் பகலுமாய் களித்தவை...

எங்கே சென்றன?

கடந்த காலத்திற்காக
கடல்கடந்த கானகத்திற்கா?
கவனக்குறைவால்
காதலற்ற திக்கிற்கா?

காற்றசைகிறது, கானம் கேட்கிறது,
நிலவு ஒளிர்கிறது, இரவு தேய்கிறது
விரல்களோடு மனதும் விம்மியபடி
ரசம்கொட்டிய கண்ணாடி முன்
ரகசியமாய் குமைகிறது,,,

அர்த்தமுள்ளவையாய் தோன்றிய
அந்த நாட்களின்
அழுத்தங்களையெண்ணி....
.....................

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எரியும் மனசு...




எரியும் மனசு...
-------------------------

அணைந்துபோன பெருங் கங்குகளில் 
புகைந்து கொண்டிருக்கும் சிறு நெருப்பாய்
எரியும் மனசோடு சிறு விவாதம்..

பெண்மைகளின் கூடாரம்
போராட்டக் களத்தால் நிரப்பட்டவை!
போராட்டக் காரர்களால் சூழப்பட்டவை!
போராளிகளை உருவாக்குபவை!

பெண் கருவென தெரிந்ததும்
கருவில் கொலை, கள்ளிப்பால் கொலை
கழுத்து நெறித்துக் கொலை செய்வ[த]தும் கூட  
கருணைக்கொலையில் சேர்க்கப்பட்டதோ!

கருவைவிட்டு வெளியேறிய நொடிமுதல்
காணும் கேட்குமிடமெங்கிலும், காட்டுப்பூவென
கசக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும்
காவுகொள்ள[ல்ல]ப்படுவதும் கவனமற்றுக் கிடக்கிறதே?

அக்கினிப் பரிட்சைகளாம்  ஆங்காங்கே
அ யோக்கியர்களால்!
சீதையாயிவளென 
சிதை மூட்டி வதைகூட்டும் சித்ரவதையால்
தினம் எரியும் உணர்வோடும்...

பாசம் வைத்த பாவத்திற்கு பரிசாய்
பத்தினியற்றவளென்ற சாபமும்,,,
பாஞ்சாலியென நினைத்து படையெடுக்கும்
பாவக்காரர்களின் கோரமும் அன்றாடம் பார்த்து
தினம் எரியும் மனசோடும்...

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந் நிலைதொடரும் அவலங்கள் நடந்தேறுகையில்
அணையாது எரிகிறதே- எரிமலை கு[பி]ளம்பாய் 
அகம்புறமெங்கும் ப[சு]ற்றியே!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பொட்டச்சி.



பெண்சிசுகள் கருக்கலைப்பு 
பெண்குழந்தைகள் கற்பழிப்பு 
பெண்மானம் அவமதிப்பு 
பெண்மன எண்ணம் நிராகரிப்பு
பெண் ஆணுக்கொரு பொழுதுபோக்கென
         
கண்ணெதிரே அநியாயங்கள் 
கண்ணிமைக்கும் கொடுஞ்செயல்கள்
கண்டும் காணாததுபோல்
என்னுடலைமட்டும் நகர்த்துகிறேனே  
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

உண்மைகளை ஊமையாக்கி       
பொய்மைகளை புண்ணியமாக்கி
அரங்கேற்றுவதைக்கண்டும் பொம்மையாய் 
தலையாட்டித் தவிக்கிறேனே  
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

பொல்லாப்புகளும் பொல்லாங்குகளும்
போட்டிப்போட்டுக்கொண்டு
நியாயத் தராசின் முள்ளுடைப்பதைக்கண்டும்
மூக்குநுணிவரை வந்த கோபத்தை
மூக்கைச்சிந்தி போட்டு முனங்குகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!   

எழுந்தால் குற்றம் எழுதினால் குற்றம்  
பழகினால் குற்றம் பதறினால் குற்றமென 
எதற்கெடுத்தாலும் இச்சைகற்பிக்கும்
இழிந்தோர்களை 
இழிக்கமுடியாமல் புலம்புகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!    

விடிய விடிய காத்திருந்து
விடியும்தருணம் கூவிவிட்டு 
விடிந்தபின்னே அடங்கிடக்கும் 
பெட்டையாகுதே பெண்பொலப்பு
பொல்லாரின் வாயடைக்க வழியற்று
வசவேற்று நிற்குதே நாதியற்று.

திடமிருந்தும் திராணியற்று
துணிவிருந்தும் செயலற்று
மதியிருந்தும் சதிகெடுக்க
வெட்டித் தீர்ப்பதுபோல் எழும் 
வீரதீர எண்ணங்களை 
எழுத்துக்களுக்குள் மட்டும்
வெற்று வசனங்களாய் கொட்டித்தீர்த்துவிட்டு

சட்டிக்குள் கொதித்தடங்கும் நீராய்
சப்பென்று ஆகிறேனே எதற்கும் 
சக்தியற்றவளாக போகிறேனே !
என்னதான் செய்ய முடியும்
நானே ஒரு பெண்பாவ பொட்டச்சி...
                 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்ணைப் பெண்ணாக!




உலக மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி 
மகிழும்  அதேநொடி,,,
ஓயாப்போராட்டத்தில்உலன்றபோதும் 
உயரத்துடிக்கும் மகளிருக்கு
ஒற்றை தினமாவது ஒதுக்கியவர்களுக்கு 
உளமார்ந்த நன்றிகள்
உன்னத பெண்மைக்கு செல்லுமிடமெல்லாம் 
சிறப்பாயென்றால் ?

சாதிக்கும் ஒவ்வொரு 
பெண்மணிக்கு பின்னால் மட்டுமல்ல
சாதரண 
பெண்மணிகளுக்கு பின்னாலும் முன்னாலும்
இழிந்தவைக்கொண்டு 
ஈட்டிப்பேச்சால்  பெண்ணைச் சாய்க்க
ஈனமுற்ற 
ஊனமனம் கொண்டோர்களால் கொடுக்கபட்டு
ஆரா ரணத் தழும்புகளாய் 
ஆணியடிக்காது மாட்டியிருக்கும்
பத்தினியற்றவளென்ற பட்டங்களும்
நடத்தைகெட்டவளென்ற பதக்கங்களும்...

மாட்டிவிடப்பட்டவைகள் 
மாறுசெய்யப்பட்டவையென  
அச்சம்தவிர்த்து மேலேறும் பெண்மைகள்
மேதாவிகளாய் 
நற்பண்புகள் கொண்ட சாதனையாளராய்.
இழிச்சொற்கிலியில் சிக்கி 
சுமைச் சோர்வுக்குள் மக்கி
அச்சப்பிடியில் மாட்டியவர்களெல்லாம்
இருளறைக்குள் தன்னைத்திணித்து மூலையில்
முடக்கப்பட்டோர்களாய்....

பெண்ணே
உண்மை, உன்னதம் ,நேர்மை
உனக்காய் நீ உடுத்திகொள்ளும் ஆடைகள்
இறைநம்பிக்கை தன்னம்பிக்கை
உலகவாழ்வில் 
உனக்காய் கைகொடுக்கும் உரிமை[கை]கள்..
மீண்டுமெனது,,,
உலக மகளீர் தின வாழ்த்துகள்

உயர்வாய் பேணவேண்டும் பெண்மானங்கள்...
================
சாதனைப்பெண்கள் பட்டியலில்.. இஸ்லாமியப்பெண்மணியில்..
நன்றிகள் பல..
http://www.islamiyapenmani.com/2016/03/blog-post_8.html


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சகாயம் சாதனை ஆகாயம்




லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து
லட்சியம் எடுத்து நடக்கும் சிறப்பு,,,
ஊழலுக்கு உலைவைக்கும் துடிப்பு,,
முறைகேடுகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பு,,
தான்மட்டும் நேர்மை காணுவதை தவிர்த்து,,
தன்னைச் சுற்றியும் நேர்மை பயிரிடும் விதைப்பு,,
மாற்றி மாற்றி பணி
மாற்றங்களின் போதும்-தன்கொள்கையை
மாற்றிடாது முன்னேறிடும் வீராப்பு,,
சொத்துக்களை சுரண்டியொளி[ழி]க்கும்
சபையோர் மத்தியில்,,
சொந்தக்கணக்கையே பட்டியலிட்ட
மறைவில்லா ஒளிர்வு,,,
நேர்மையும் வாய்மையும்
நேர்க்கோட்டில் வைத்து,,
நெஞ்சை நிமிர்த்தி வாழும் நிதானிப்பு,,,
பெருங் காயங்களுண்டாக்கும்
புலிதோல்களுக்கு மத்தியில்,,
பிறருக்கும்
காயமேற்படாவாறு பொறுப்பேற்று -மன
பலத்துடன் வழிநடத்தி நடக்கும்,,,
சகாய சாதனையின் அணிவகுப்பு,,
சத்தியமேற்ற தன் ஒழுக்கவுயர்வு நடத்தையால்
கிடைக்கபெற்றது,
சாதனை ஆகாயமாய் சகாயத்தின் பிறப்பு....

”சகாயம் சார் தங்களின் சிறந்த பணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..
 துணிந்து தொடர்ந்திடுங்கள் துணையாய் இறைவனிருப்பான் அதனுடன் நல்லுள்ளங்களின் பிராத்தனைகளுமிருக்கும்...


====================================================
பின்குறிப்பு:

படைத்தவனைத்தவிர 
படைப்பினங்கள் அதீத புகழுக்குறியதல்ல என்பது 
எனக்குள் ஓடும் கருத்து ஆக நான் படைப்புகளை முகஸ்துதியாய் புகழ்வதேயில்லை.
இது புகழ்ச்சியல்ல மனம்நிறைந்த மகிழ்ச்சி...
நாம் நினைப்பதை நம்மால் செய்யமுடியாததை பிறர் செய்யும்போது ஏற்படும் மனநிறைவு அதுபோல்தான் இதுவும்

இன்று நான் கூகிளில் ஒன்றைத்தேடிப்போக அது ஒன்றை எனக்கு காட்டியது. முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் இன்று இவரைப்பற்றி எழுத்தூண்டியது, நல்லதை உடனுக்குடன் செய்யனுமென்ற கோட்பாட்டில்
எனக்குள் ஓடிய எண்ணத்தை எழுத்தில் விதைத்துவிட்டேன் பிறமனங்களுக்கும் பயிராகவேண்டி.. நல்லவற்றை விதைத்தால் நல்லதை தவிர வேறெதும் விளைவதில்லை, இடையே முளைக்கும் காளான்கள் பயிராகுவதில்லை...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உலகத்தமிழ் பல்கலைகழக விருது.



எழுத்தறிவித்தவனுக்கே புகழனைத்தும்.

20 -2-2016 நேற்று காலை 11 மணிக்கு
 மதுரை பாப்பீஸ் ஹோட்டலில் அமெரிக்க வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழக விருதுவழங்கும்விழாவில்

அரங்கத்தில்
அறிவாற்றல்மிக்க அறிஞர்களுக்கும் முனைவர்களுக்கும் மத்தியில்,
தரப்பட்ட இருக்கையில், முக்காடிட்டிட்ட உடலுக்குள் அறிவுசெல்களை திறந்து, மனதுக்குள் எதையோ சாதித்த உணர்வோடு நான், உள்ளம் முழுவதும் படபடப்போடும் இனம்புரியா இருதயத்துடிப்போடும்
பூக்கவா புதையவா என்ற நிலையில் எனது இருக்கையில் அமர்ந்திருக்கையில்

அழைப்பொலியின் வழியே தமிழ்குயிலொன்று எனது நூலின் தலைப்பைக்கூறி அழைத்தது செவிக்குள் ஊடுருவ என்ன நடக்கிறதென அறியாது மிதப்பதுபோல் எழுந்து நடந்த கால்கள் மேடையேறி மேன்மைமிகு நீதிபதி, வழக்கரிஞர். ஐஏஸ் அதிகாரி,அரசியல்வாதி, முனைவர், இவர்கள் மற்றும் விழா நாயகர் அமெரிக்க வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழககத்தின் நிறுவனர் திரு செல்வன் குமார்,அவர்கள் முன்னிலையில் எனக்கான விருது வழங்கப்பட, அறிஞர்கள் வருகையாளர்களின் கைத்தட்டல்களுக்கிடையில் ஏக இறைவனை மனதுக்குள் சஜதாசெய்தபடி[சாஷ்டாங்கம்] தரப்பட்ட விருதை பெற்றுக்கொண்டு வந்தேன்..

எனது இரண்டாம் நூலான பூக்கவா புதையவா விருதுக்கு தேர்வாக காரணமாயிருந்த மணிமேகலை பிரசுர நிறுவனர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொண்டேன். பல பல தொழில்துறை சார்ந்தவர்கள் சமூக நலப்பணித் தொண்டர்கள்,கவிஞர்கள், எழுத்தாளர்களென பலரை சந்திக்கும் அரியவாய்ப்பு, அனைவருக்கும் எனக்கு ஊக்கம்தரும் வகையில் என்னுடன் உரையாடியது இன்னுமின்னும் எழுத்தவேண்டுமென ஒரு மிகதெளிவான உந்துதலை தந்தது.

மேலும்

விழா நாயகரிடம் உரையாடியபோது மிகவும் சந்தமாய் பேசினார், நீங்களெல்லாம் விடாது தொடர்ந்து எழுதனும்மா, உன் எழுத்தில் ஓர் அழுத்தமும் தெளிவும் உள்ளது  உனது அடுத்த நூலுக்கு நானே முன்னுரை தருவேன், என தனது விசிட்டிங்கார்டை தந்து ஊக்கப்படுத்தியது எழுத்தின் மேல் இன்னும் ஒரு வலுவான நம்பிக்கையும் ஏக இறைவன் எனக்களித்திருக்கும் இவ்வாய்ப்பினை நல்வழியில் பயன்படுத்தி இன்னும் சிறப்பாக எழுதவேண்டுமென உறுதிகொண்டேன் மனதில்..

சிறுவருத்தம் என்னுடன் இவ்விருதுக்கு எனது மச்சான் அருகில் இல்லாததுதான்..

நீரோடை வழியே எனது எண்ணங்கள் வெளியுலகத்திற்க்கும் ஓடின நல்லுணர்வோடு, என்னெழுத்துக்களை ஊக்கமூட்டியே இந்நிலையை அடையவைத்திருக்கும் தங்கள் அனைவருக்குமே என் வாழ்நாள் நன்றிகள் உயிர்மூச்சு உள்ளவரை என் எழுத்தின் எழுச்சி எழுந்துகொண்டேயிருக்கும் இறைநாடின்..

இவ்விருதை எனக்களித்து என்னை இலக்கியபாத்தைக்குள் இன்னும் முன்னேறிச்செல்ல ஊக்குவித்த அமெர்க்க உலகதமிழ் பல்கலை கழகத்திற்க்கு எனது உளமார்ந்த நன்றிகள்..

 இவ்விருதை வாங்குகையில், இஸ்லாம்  பெண்ணை அடிமைப்படுத்துவதாக கூறப்படுவதை எண்ணி வருந்தினேன், என் மார்க்கம் எனக்கு மிகுந்த பாதுகாப்போடு எல்லாவிதமான சுதந்திரமும் அளித்திருந்தும் அதனைபற்றி தவறான கண்ணோட்டம் உருவாவதற்கு  யார் காரணம் என ஆதங்கத்தோடு..

மீண்டும் எனக்கொரு அங்கீகாரம்..

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!
கல்வி கற்றறிதலில் நான் மிக குறைவென்றபோதும்
கற்கவேண்டுமென்ற ஆவல் கடலைவிடினும் பெரிதாய் என் மனதில்..

பூக்கவா! புதையவா! 
மணிமேகலை பிரசுரத்தாரால் வெளியிட்டப்பட்ட எனது இரண்டாம் நூல்
முதல் நூல் உணர்வுகளில் ஓசை[துபையில் வெளியீடு]
முதல் நூல் தாராபாரதி அறக்கட்டளையால் மூன்றம் பரிசுக்கு தேர்வானது.குறிப்பிடத்தக்கது..

தற்போது எனது இரண்டாம் நூல் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைகழகத்தால் பரிசுவழங்க ஒப்புதல் அளித்து வரும் 20 ந்தேதி மதுரை பப்பாயா ஹோட்டலில்
நடக்கும் நிகழ்ச்சியில் சான்றிதலும் பதக்கமும் தரப்போவதாக 
சகோதரர், திரு ரவி தமிழ்வாணன்  அவர்கள் எனக்கு அலைபேசிவழி மற்றும் மெயில்வழி செய்தியை அனுப்பியபோது  மடைந்திறந்த வெள்ளமாய் மனம் கொப்பளிக்க கண்கள் வழி கரைந்தோடியது ஆனந்தமும் அழுகையும், இறைவா உனக்கே வான்புகழும் மண்புகழும் என்புகழும் ..

எழுத்தென்பது வரமென்கிறார்கள் அந்தவரத்தினை எனக்களித்து, எண்ணுவதையெல்லாம்  எழுத்தாக்கும் ஆற்றலை தந்தஇறைவனுக்கும், என் உணர்வுக்கும் மதிப்பளித்து என்னை எழுத்தவைத்து அழகுபார்க்கும் என்னவருக்கும்.என்னெழுத்தையும் ஏற்று ஊக்கம்கொடுத்து இன்னும் எழுதத்தூண்டும் என் அன்புள்ள தாங்கள் அனைவருக்கும்.
மேலும்

என்னெழுத்தை அச்சிட்டுக் கொடுப்பதோடு நின்றுவிடாது மென்மேலும் என்னை வலுப்படுத்துவதுபோல் என்னை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துசெல்லும் மணிமேகலை பிரசுரமும் அதன் நிர்வாகியுமான 
சகோதரர். திரு ரவி தமிழ்வாணன்  அவர்களுக்கும். என்னெழுத்தை அங்கீகரிக்கும்வகையில் என்நூல் தேர்வுக்கான ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழகத்திற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை ஆத்மங்களோடிணைத்து அன்போடு கூறிக்கொள்கிறேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

விவசாயம்...


பூமித்தாயின் மடியில் தவழும் "செல்லக்குழந்தை"
இயற்கையெழிலை எடுத்தியம்பும் ஆதா(கா)ரத்தின் "தந்தை"
வாழும் நிலத்தை வாரி அரவணைத்து 
அமுதூட்டும் அன்பின் "அன்னை"...

ஒரு பிடி உணவு கிடைக்காதவரின் பாடு
சொல்லில் வடிக்கமுடியாது கேளு..
நெல் முளைத்த வயலெல்லாம் கல்முளைக்கசெய்து 
வருத்தக்கிடங்கில் வீழ்த்தியது எது?

அயல்நாட்டு ஆட்களெல்லாம் கண்டு அசந்துபோன நம்நாடு
அழிகிறதே விவசாயங்களற்று வந்ததென்ன கேடு..
கானியெல்லாம் காய்ந்துபோக கருவேலம் ஓலமிட
கவலைகிடங்கில் அடைத்திங்கே யாரு?

தாய்நாட்டின் தாலாட்டுகளின் பிறப்பிடம் 
தலைமறவானதே ஏனென்று கூறு?
விவசாயத்தின் உரங்களையும் விசமாக்கியது யாரு?
வினை விதைத்தால் வினையறுபோம் என்பதையும் 
நினைவிலேற்றி எடுத்துக்கூறு...

முதுகெலும்பு விவசாயத்தை 
முறித்துவிட்டால் ஏது?
தழைத்தோங்கும் 
தலைநிமிரும் பாரத்தின் பேரு..

உடற்கூறு உறுதியுற்றால்தானே
மூளைக்கூற்றின் மூலக்கூறும்தேறி 
தொழில்வளமும் பல துறைவளமும் 
வெற்றியாகும் சொல்லு.

இயற்கையோடு விவசாயத்தை 
செழிக்கவிட்டுப்பாரு, பின்பு
இலகுவாய் எடுக்கும் இந்தியா 
வலிமைகொண்ட வல்லரசென்ற பெயரு..
===================================================

நிலாமுற்றம் கவியரங்கில் இந்தியா வல்லரசாக்குவோம்... 
கருப்பொருளான விவசாயம் பற்றிய
 என் தலைப்பிற்கான கவி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உன்னால் என்னில் மாற்றம்...


மனமுடுக்கெங்கும்
புல்லாங்குழலில் புஷ்பராகம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

உணர்வுகளுக்குளெங்கும்
ஊதக்காற்றினை மீறிய உஷ்ணம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

உயிருக்குள் அடிக்கடி
ஊடுருவி அசைத்தாட்டும் பூகம்பம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

நேர்நோக்கு பார்வையெல்லாம்
கீழ்நோக்கி கோலம்போடும்
ஏன் ஏனிந்த மாற்றம்...

எங்கெதில் நோக்கினும்
என்னெதிரில் தெரிவதெல்லம்
உன்னுருவத் தோற்றம்
ஏன் ஏனிந்த மாற்றம்...

உலவும் என்னுடல் கூடு மட்டும்
உயிரெங்கோ உனை நாடியே சுற்றும்.

ஓஓஒ
உன்னால்தான் என்னில் மாற்றம்
காதல் தந்த மன மாற்றம்
கனவெல்லாம் நினைவுகளின் பூந்தோட்டம்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இனி ஒரு விதிசெய்வோம்...




விழுந்தாயோ மதியே எழுந்து வா !வா!
வீழ்ந்தே கிடக்காது
வீருகொண்டெழுந்தே வா! வா!
வீணேபொழுதை கடத்தியதுபோதும்
வேர்விட்ட சதியை வேரறுத்திட வா வா

விட்டத்து நிலவை வெறித்ததுபோதும்,,,
வெட்டிப்பேச்சு கொட்டியதுபோதும்,,
தட்டிக் கழித்த தடைகளையெல்லாம்
தட்டி முட்டிட வா வா  வா வா  !!

எட்டிமிதித்த பந்தைபோல்
எங்குநோக்கினும் மிதிகள்வாங்கி
குட்டுப்பட்டே கூனியது போதும்,,
சுவற்றிலடித்த பந்தாய் எம்பி 
சட்டென தாக்கிட வா வா வா வா

பொட்டைகூவி பொழுதெப்போ விடியும்
பாலியலியலுக்கு மோட்சம் கிடைக்குமாயெனவும்
பேசிப்பேசி கழித்ததுபோதும்
செவிடங்காது திறக்காது நாளும்
செயல்முறைபடுத்தி சீராக்கிக் காத்திட
செங்கோலெடுத்து சீறி[வி]ட வா வா

விதியென்ற பேரில் போர்வையை போட்டு
சதிகளின் போரில் மாய்திடுவோரை
சாமர்த்தியங்கொண்டு சாய்த்திட வா வா
மாற்றம்காண மாற்றம்கொண்டு
மமதை போதையில் திரிந்திடுவோரை    
மடமை மாற்றி மனிதம் போற்றிட வா வா வா வா!

  
இனியொரு பிறவி இப்புவியினிலில்லை      
இறை எழுதிய விதியோ அழிவதற்கில்லை!
தலைவிதியிதுவென தட்டுக்கெடுவதை நிறுத்தி
தனக்குளிருக்கும் திடத்தை முறுக்கி
சதியின் விதியை சரித்துப்போட்டு-புது
சரித்திரம் படைத்திட வா வா வா வா விரைவா...


அன்புடன் மலிக்கா
இறைய நேசி இன்பம் பெறுவாய்..

புதுவருட முதல்பரிசும் பட்டமும்.

அன்பும் அறனும் நம் வாழ்வின் நற்பண்புகளாகும்.

கவிக்குள் வாழ்வதும் கவியாய் வாழுவதும் கருத்தரிக்கும் தாய்மைக்கு நெருக்கம் கல்புக்குள் {நெஞ்சுக்குள்} களிப்பினை புகுத்தும்... நீண்ட நாட்களாகிறது நீரோடையில் நீராடி, முகநூல் மக்களை ஆட்கொள்வதால் வலைதளங்கள் சற்றே முடக்கங்கள்தானென சொல்லவேண்டும் அதனுள் நானும் மூழ்கிவிட்டேனவும் சொல்லலாம். என்ன இருந்தாலும் நம் குழந்தை நம் வலைதளம் அதனை பராமரிக்காது விட்டுவிட்டால் செழுமையற்று போகுமல்லவா இனி தொடர்வருகைதந்து நீரோடையில் நீர்வரத்தை அதிகரித்து கவிமீன்களை நீந்தும்படி செய்ய வேண்டுமென எண்ணியுள்ளேன். இறைநாடின்.. இதோ இந்த இனிய ஆண்டின் முதல் பரிசாய் கவிபரிசலும் ”கவிநிலா” பட்டமும்,முகநூலில் கவியருவி குழுமத்தால் நடத்தப்பட்ட கவிப்போட்டியில் என கவிதைகான பட்டமும் பரிசலும் பெற்றுதந்தது மனத்தை நெகிழச்செய்தது எழுத்தறிவித்த இறைவனுக்கே புகழைனைத்தும்.. கவியருவி நிர்வாக குழுவிற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... முடிவுகள் இதோ: கவியருவி மலிக்காஃபாரூக், வழக்குரைஞர் கவிஞர் ஷாந்தி மீனாக்‌ஷி இருவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு மிகச் சிறந்த கவிதைகளாகத் தெரிவு செய்யப்பட்டுளவைகளாகும். இருவர்க்கும் தலா உருபா 500/= வீதம் எம்குழுவின் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் அவர்கள் அனுப்பி வைப்பார்கள். பரிசுக்குரியோர் இருவரும் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் Sara Bass அவர்களைத் தொடர்பு கொண்டு இருவரின் வங்கி விவரம் அளிக்க வேண்டுகிறேன் வெற்றி பெற்றோர்க்கும், பங்குபற்றியோர்க்கும் உளம்நிறைவான வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது