நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இருளின் வெளிச்சத்தில்.

 

ஆழ்ந்த உறக்கத்தினூடே
இமைகள் இறுக்க
மூடியிருக்கும் வேளையில்
இரு இமைக்குமிடையே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
அர்த்த ஜாமத்தில்
அடர்ந்த காடுகளின் நடுவே
வான் நோக்கிய
கிளைகளை நீக்கிக்கொண்டு
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
இருள் சூழ்ந்த
பூட்டிய அறையினுள்
சாவித் துவாரத்தின் வழியே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
உள்ளக்கூட்டில் விஷமேற்றப்பட்டு
மனமுடைந்த நிலையில்
விம்மி விம்மி கரைந்து
இதயத்தில் இருள் கவ்விய வேளையில்
இருளைக்கிழித்து - எங்கிருந்தோ
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
இருளை இறுக்கியணைத்திருக்கும்
வெளிச்சம் இருளைவிட்டு அகழ்வதில்லை
வெளிச்சத்தின் வாசத்தை நுகராது
இருளுக்கு இருக்கவும்  விருப்பமில்லை!
 
இருளின் சாம்ராஜ்யதில்
வெளிச்சத்திற்கான அழைப்புகள்
எப்போதும் வரவேற்க்கும்
 
வெளிச்சத்தின் வெட்டவெளியில்
இருளுக்கான இருக்கைகள்
எப்போதும் போடப்பட்டிருக்கும்!
 
ஆகமொத்ததில்”
 
வெளிச்சம் இருள்
இருள் வெளிச்சம்
வெளிச்சத்தை தொடரும் இருள்
இருளில் அடங்கும் வெளிச்சம் ..

 

 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது