நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிரி வேறெங்குமில்லை!உறங்கப்போகும்முன் இவ்வுலகைக்கண்டு  பயப்பட்டு
உறங்கியெழும்போது உதறிவிட்டு விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

கெட்டவர்களைக் கூட
நல்லவர்களென நம்பிக்கை கொள்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தைரியமாக முடிவெடுத்தபின்பும்-சிலசமயம்
தடுமாறி தவறாகி விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

துரோகங்களை கண்டு துவண்டுபோய்
சுதாரிக்கத் தோன்றாமல் கிடக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தெளிவுகள் கண்ணெதிரே தெரிந்தபின்பும்
மறைவானவற்றையே தேடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

மதிசொல்லும் அறிவுரையை ஏற்கமறுத்து-பலசமயம்
சதிகளை விதிகளென நம்பிவிடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பாசாங்குகளை பாசமென நம்பி
பாதாளத்தில்கூட விழத்துடிகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு மத்தியில்
பால்மனம் மாறா பச்சிளமாகவே இருக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பொய்யான உலகில் மெய்யாக வாழ
வெள்ளாந்தியான உள்ளம் அடம்பிடிக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

இப்படி

எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று! 
எண்ணும்போதே எழுந்தது எதிரி 
எனக்குள்ளிருந்து....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது