நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கடலும் படகும்

கடற்கரை யோரம்
காலை நேரம்
அலை கடல் என்னை
அன்பாய் அழைக்க
ஆசையாய் ஓடினேன்
ஓரமாய் ஒரு படகு
ஒய்யாரமாய் ஆடிநிற்க

அதிலேர ஆசையாயென
கடல் கேட்க
ஆமாமென்று நானும்
தலையசைக்க
அலைகள் தள்ளிவிட
படகும் எனதருகே வர

அதிலேறி அமர்ந்தும்
அலைகள் அசைந்தாட
என்மனமும் சேர்ந்தாட
படகும் இசைந்தாட
ஆழ்கடலை நோக்கி
அதிவேகமாய்ச் செல்ல

சற்று நேரத்தில்
சடசடவென
படகைச் சுற்றி
சுரா மீன்கள்
சூழ்ந்துகொள்ள

அடியிலிருந்து ஏதோ எழ
எனதருகில் வந்துவிழ
அதிர்ந்தெழுந்த வேளையில்
அழகிய ஆன்மா ஒன்று
என்னிடம்
அன்பாய் பேசியது

வா என்றழைத்ததும்
வந்துவிட்டாய்
வந்ததில் தவறில்லை
உனக்கு வாழ்க்கையின்
விபரம் விளங்கவில்லை

ஆழ்கடல் போன்றதுதான்
இவ்வுலகம்
அதில்அசையும்
இப் படகு போன்றதுதான்
உன் வாழ்வும்

கடலலைகளில் ஏற்படும்
ஏற்ற இரக்கங்கள்
உன் வாழ்வின்
இன்ப துன்பங்கள்

உலகக் கடலில்
நீராடிப் போராட
உனக்கு வேண்டும்
இரு துடுப்பு

இதோ
தன்னம்பிக்கையென்னும்
தைரியத்துடுப்பை தந்துவிட்டேன்
இறைநம்பிக்கையென்னும்
இன்னொரு துடுப்பை
உனக்குளே உருவாக்கு

என்று சொல்லி
இருந்த இடத்திலிருந்து
இனிமையாய்
மறைந்த சிலநொடியில்
மாபெரும் அலையொன்று
எனைநோக்கி
மார்த்தட்டி எழுந்துவர

தன்னம்பிக்கை ஒருகையில்
இறைநம்பிக்கை மறுகையில்
இரு துடுப்புகளாய்
நான் மாற்றி
இழுத்துச் செலுத்தினேன்
வேகமாய் என்படகை

அலையடித்து அதன் ஈரம்
என்கால்களைத் தழுவிய
அந் நேரம்
அதிர்ந்து கண்விழித்தால்

நான் கடற்கரையிலும்
என்மனம் படகிலும்..

இந்த கவிதை இம்மாத கடலும் படகும் என்ற தலைப்பிற்கு
தமிழ்தேர் இதழுக்காக நான்எழுதி வெளியான கவிதை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது