நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொண்டவனல்ல கொடும்பாவி..


கட்டிய மனைவி
கண்மணிக் குழந்தைகள்
கதறும்படி செய்துவிட்டு
காணாதூரம் போன உன்னை

காவல் காக்கவேண்டியவன்
காக்கும் கவலையை மறந்து
கஷ்டப்பட வைத்துவிட்டு
காணாமல் போன உன்னை

ஊரார் பேசும்படி
உடம்பெல்லாம் கூசும்படி
ஒற்றையாய் தவிக்கவிட்டு
ஓடிப்போன உன்னை

ஏனென்று கேட்க
ஏறெடுத்தும் பார்க்க
நாதியற்றுப்போய்
நடுத்தெருவில் விட்ட உன்னை

என்ன சொல்வேன்
நான் உன்னை
என்ன செய்வேன்

மனமில்லா உன்கூட
மணமுடித்துக் கொடுத்ததினால்
மற்றவர் சொல்கேட்டு
மணந்தவளை பிரிந்தாயே

ஆயிரம்பேர் சொன்னாலும் -உன்
அறிவெங்கே போனதடா
அன்பு வச்சேன் உன்மேல
அத்தனையும் கானலடா

பரிதவிக்கவிட்டு போய்விட்ட-நான்
படும்பாடு பார்க்காம
பிள்ளைகளும் என்கூட
படுகிறதே பலவேதனைகள்

கொண்டவனே உன்னை நம்பி
கைப்பிடித்து வந்ததற்கு
கொடுத்துவிட்டாய் கைமேல்கூலி
கழுத்தை நெறித்துவிட்டு

பந்த பாசங்கள் மறந்துவிட்டு
பாதியில போனவனே
சீர்கெட்டு போவேன்னு
சிறிதளவும் நினைக்காதே!

தன்னந் தனியாக நின்று
தங்கங்களை வளர்த்திடுவேன்
தரம்கெட்டுப் போகாம
தன்மானம் உள்ளவளாய்
தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது