நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதையவா! பூக்கவா!

 
காதலென்னும் கீதை அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..

இக்கவிதை எழுத்து.காமில் எனது முதல் கவிதை.  அன்பான வரவேற்போடு என்னை வரேற்று.ஊக்கமென்னும் கருத்துக்களால் நெகிழச்செய்த எழுத்து.காமிற்க்கும் அங்குள்ள உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது