நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கடலும் படகும்

கடற்கரை யோரம்
காலை நேரம்
அலை கடல் என்னை
அன்பாய் அழைக்க
ஆசையாய் ஓடினேன்
ஓரமாய் ஒரு படகு
ஒய்யாரமாய் ஆடிநிற்க

அதிலேர ஆசையாயென
கடல் கேட்க
ஆமாமென்று நானும்
தலையசைக்க
அலைகள் தள்ளிவிட
படகும் எனதருகே வர

அதிலேறி அமர்ந்தும்
அலைகள் அசைந்தாட
என்மனமும் சேர்ந்தாட
படகும் இசைந்தாட
ஆழ்கடலை நோக்கி
அதிவேகமாய்ச் செல்ல

சற்று நேரத்தில்
சடசடவென
படகைச் சுற்றி
சுரா மீன்கள்
சூழ்ந்துகொள்ள

அடியிலிருந்து ஏதோ எழ
எனதருகில் வந்துவிழ
அதிர்ந்தெழுந்த வேளையில்
அழகிய ஆன்மா ஒன்று
என்னிடம்
அன்பாய் பேசியது

வா என்றழைத்ததும்
வந்துவிட்டாய்
வந்ததில் தவறில்லை
உனக்கு வாழ்க்கையின்
விபரம் விளங்கவில்லை

ஆழ்கடல் போன்றதுதான்
இவ்வுலகம்
அதில்அசையும்
இப் படகு போன்றதுதான்
உன் வாழ்வும்

கடலலைகளில் ஏற்படும்
ஏற்ற இரக்கங்கள்
உன் வாழ்வின்
இன்ப துன்பங்கள்

உலகக் கடலில்
நீராடிப் போராட
உனக்கு வேண்டும்
இரு துடுப்பு

இதோ
தன்னம்பிக்கையென்னும்
தைரியத்துடுப்பை தந்துவிட்டேன்
இறைநம்பிக்கையென்னும்
இன்னொரு துடுப்பை
உனக்குளே உருவாக்கு

என்று சொல்லி
இருந்த இடத்திலிருந்து
இனிமையாய்
மறைந்த சிலநொடியில்
மாபெரும் அலையொன்று
எனைநோக்கி
மார்த்தட்டி எழுந்துவர

தன்னம்பிக்கை ஒருகையில்
இறைநம்பிக்கை மறுகையில்
இரு துடுப்புகளாய்
நான் மாற்றி
இழுத்துச் செலுத்தினேன்
வேகமாய் என்படகை

அலையடித்து அதன் ஈரம்
என்கால்களைத் தழுவிய
அந் நேரம்
அதிர்ந்து கண்விழித்தால்

நான் கடற்கரையிலும்
என்மனம் படகிலும்..

இந்த கவிதை இம்மாத கடலும் படகும் என்ற தலைப்பிற்கு
தமிழ்தேர் இதழுக்காக நான்எழுதி வெளியான கவிதை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

உதவும் உள்ளங்கள்




வெள்ளிக்கிழமை. அழகிய மாலைப்பொழுதில் [துபை]கராமா சென்டரில்
15-1-2010 .அன்று சுடர்வம்சம் தொண்டு நிறுவனத்தின்
5.ஆம் ஆண்டுவிழாவும். திருச்சி சையது அண்ணனின் அன்பைத்தேடி சிறுகதை புத்தக வெளியீட்டுவிழாவும் நடந்தது.


சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது அண்ணன் எழுதிய அன்பைத் தேடி என்கிற சிறுகதைகளின் தொகுப்பினை இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வெளியிட முத‌ல் பிர‌தியினை தமிழக அரசின் ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது  அவர்கள் பெற்றுக் கொண்டார். அத‌னைத் தொட‌ர்ந்து ப‌ல்வேறு அமைப்புக‌ள், வானலை வளர்தமிழ் தமிழ்தேர்  நிர்வாகிகள். மற்றும் அமீரக தமிழ்கவிஞர் பேரவைத்தலைவர் திரு அப்துல் கதீம் அவர்களும்  பெற்றுக் கொண்ட‌ன‌ர்.


சிறுகுழந்தைகளின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சியும்.நகைச்சுவை நிகழ்ச்சியும் மற்றும் ப‌ல்வேறு துறைக‌ளில் சிற‌ப்புப் பெற்றோருக்கு விருதுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌.


இளம் வயதில் அறிவியல் துறையில் சாதனை மற்றும் ஆங்கில நாவல் எழுதும் ஆர்வத்தைப் பாராட்டி கே. சாய் கோகுலுக்கு இளம் சுடர் விருதும், பன்முகத் திறனுக்காக நிவேதிதாவுக்கு கலைச் சுடர் விருதும், தமிழ் இலக்கியத்துறை சேவைக்காக ஆசிஃப் மீரானுக்கு இலக்கியச் சுடர் விருதும், கல்வி மற்றும் சமூக சேவைக்காக சிவஸ்டார் கோவிந்தராஜுக்கு சமுதாயத் சுடர் விருதும், தமிழ் சேவைக்காக காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தினுக்கு சுடர் ஒலி விருதும்  புத்தகவெளியீடும் நடைப்பெற்றது. அப்புத்தக வெளியீட்டில் நானும் அவர்களை வாழ்த்தும்விதமாக இருகவிதைகளை வாசித்தேன்





சுடர்வம்சத்தின் தலைவர் திரு ரகுராஜ் அவர்கள் போனில் அழைப்புவிடுத்து நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளும்படியும் பேசும்படியும் கேட்டுகொண்டார்கள்.
நமக்கு என்ன பேசவரும் இருந்தாலும்
பேசனும் எனநினைத்தபோது
பேசுவதை அப்படியே கவிதைவரிகளாக மாற்றி
வாசித்துவிடலாமே என இருகவிதைகளை எழுதிச்சென்றேன்.


சுடர்வம்சத்தை பற்றி சொல்லவேண்டும்.
சுடர்வம்சமென்பது ஒரு தொண்டுநிறுவனம்.
அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் எதிர்காலத்திற்க்கு
இவர்கள் விதைபோட்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
ஒருமாணவனை உயர்தினால் ஒருகுடும்பமே உயரும்.என்ற நற்பணியில் செயல்படுகிறார்கள்.


இதுமற்றுமின்றி எதிர்வரும்காலத்தில் இன்னும் பல
நல்லதிட்டங்களை வழிவகுத்துவருகிறார்கள்.


சுடர்வம்சம்
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி,
எதிகாலத்தில் மாணவர்கள் நாட்டுப்பற்று,
மொழிப்பற்றுடன் மனிதநேயம்
உள்ளவர்களாக உருவாக்குவோம்
என்பதே இவர்களின் செயல்வழி.
மொத்தத்தில் உதவிகள் செய்வதின்மூலம் உயர்ந்து நிற்கிறார்கள்.


அப்புறம்
அன்பைத்தேடி சிறுகதையை வெளியிட்ட திருச்சி சையது அண்ணனைப்பற்றியும் சொல்லனும்
அவர்கள் ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர்
நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள்
குமுதம் பாக்யா. விகடன். தேவி போன்ற பத்திரிக்கைகளிலும் இவர்களின் சிறுகதைகள் வெளிவந்துள்ளது.


இப்போதுதான் முதல்முதலில் தன்னுடைய சொந்தசிலவில்
இந்த அன்பைத்தேடி என்ற சிறுகதையை அச்சிட்டு வெளியிட்டு,
அதில்வரும்  விற்பனையின் மூலம் வரும் தொகையைஅப்படியே சுடர்வம்சம் நிறுவனத்திற்கே வழங்கிவிட்டார்கள்.


எத்தனைபேருக்கு இந்தமனம் இருக்கும்.இவர்களைப்போன்றவர்களும் சுடர்வம்சம்போன்றவர்களும்
இன்னும் இவ்வுலகில் இதேபோன்று இன்னும் பலபேர் வாழ்பவர்களும் இருப்பதால்தான்
இன்னும் இப்பிரபஞ்சம் ஈரபத்தத்துடனே இருக்கிறது.


அவர்களுக்காக நான்கவிதையெழுதியதில் வாசித்ததில் பெருமைப்படுகிறேன்.


இதோ நான் எழுதிவாசித்த கவிதை
இது சுடர்வம்சத்திற்காக




புனிதப்பணி


ஈகை குணமும்
ஈர்த்த அன்பும்
இருப்பதினால்
இன்னும்
இப்பிரபஞ்சம்
ஈரப்பதத்துடன்
இனிமையாய்


அதை
உணர்த்தும் விதமாய்
ஆங்காங்கே
உன்னதமாய்


உதவும் கரங்களும்
உள்ளன்புகளும்
பல கொண்ட
சுடர்வம்சமென்னும்
தொண்டு நிறுவனம்


வாழ்க்கைக்கு
உதவுவதைவிட
வாழ
வழிகாட்டித் தருதலே
உயர்விலும் உயர்வு


தம் வம்சங்கள்
நிறைவடையக்காணும்
இவ்வுலகில்
பிறரின் வம்சங்களும்
நிறைவடைய


சுடர்விட்டு
சூரிய வெளிச்சமாய்
சுற்றிப் பரவும்
அறிவொளியை
அள்ளிவழங்கும்
ஆன்மாக்கள்
சுடர்வம்சத்தின்
நல்உள்ளங்கள்


கல்விக்
கதவுதிறந்தால்
கஷ்டதின் வழியை
சிறைப்படுத்தும்
அறிவுக்
கதவுதிறந்தால்
அறியாமையின்
இருளை
அகற்றிவிடுமென்ற


உன்னத பணியை
உயர்வாய் செய்யும்
சுடர்வம்சம்-நல்
பணிகளுக்கு - ஓர்
உயரிய உதாரணம்


சுற்றும் பூமியெங்கும்
சூரிய ஓளி
பரவுவதைப்போல்
சுடர்வம்சத்தின்
உதவித் தொண்டொளி
சுதந்திரக் காற்றைப்போல்
சுற்றிப்பரவட்டும்


மென்மேலும்
மேன்மைப்பெற்று
சிறப்பாய்
செயல்பட
அந்த இறைவனின்
அருளும் நிறைவும்
என்றென்றும்
அதனருகிலேயே
இருக்கட்டும்..


இது திருச்சி சையது அண்ணனுக்காக
எழுதி வாசித்தது.


வெற்றிமேல் வெற்றி பெறு
என் உடன் பிறவா
சகோதரா!
உமை வாழ்த்தி
ஒரு கவி
பலர் முன்னிலையில்
வாசிக்கும்
உம் சகோதரி


பொன்தேடி புகழ்தேடி
அருள்தேடி பொருள்தேடி
வசதிதேடி வாய்ப்புத்தேடி
அலையும் காலத்திலும்


அதையெல்லாம் தாண்டி
அன்பைத்தேடியும்
ஆன்மாக்கள் அலைவதும்
மறுக்கமுடியா தென்ற
உண்மையை


அழகாய் தேர்ந்தெடுத்து
அற்புத வரிகள் கொடுத்து
அதையின்று
வெளியிடுகிறாய்


அன்பைத்தேடி
என்ற தலைப்பு
அது
ஆன்மாக்களை
கவரும் சிறப்பு


பதிமூன்று
கதை கருக்கள்
அதில்
பதிந்துநிற்கும் உம்
முத்திரைகள்


அன்பைத்தேடி
படிப்பவர்களுக்கு
அகம் மகிழ்வைத் தரும்
இச்சிறுகதைகள்


சின்னஞ் சிறிய
சிறுகதைகள்
அதில்
சிந்தனைகள் பல
வகைகள்
புரிந்துகொள்ளும்
பலருக்கிது
அழகிய
படிப்பினைகள்


பல
சிறப்புக்குரியவர்களின்
பாராட்டுகள்
இப்புத்தகத்தின்
இன்றியமையா
பெரும்
பாக்கியங்கள்


கதைக் களத்தின்
கற்பனைகள்
கதாசிரியனே
உனக்கு என்
கைத்தட்டல்கள்!


இன்னும் இன்னும்
இலக்கியத்தில்
சிகரத்தின் எல்லை தொடு
சிறந்த படைப்பாளனாய்
வெற்றிமேல் வெற்றி பெறு


இவ்வுலகத்திலும்
சிறப்பு பெற்று
ஈருகலத்திலும்
வெற்றி பெற
இருகரம்யேந்தி
இறைவனிடம்
வேண்டுபவள்


என்றென்றும்
உம்
சகோதரியானவள்...


இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மனம்நிறைவடைகிறது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதால் மனிதயினம் மகத்துவம் பெரும். நாமும் நம்மாளான உதவிகளை செய்து ஈருலகத்திகற்கும் நன்மைகளைதேடிக் குவிப்போமாக!!


அன்புடன் மலிக்கா

தமிழ்குடும்பம் தந்த பொக்கிஷம்




என்னுடைய படைப்புகள் முதலில் http://www.tamilkudumbam.com/தமிழ்குடும்பம்.காம் அதிலிருந்துதான் வெளியானது எனக்கு ஊக்கமும். ஆதரவும்.
தோழிகளும் தோழமைகளும் அங்கு நிறைய நிறைய.
அவர்களின் ஊக்கம்தான் இந்தளவு என்னை கவியெழுத தூண்டியதே!
என் கவிப்பயணைத்தையும் கலைபயணத்தையும் தொடரவைத்த தமிழ்குடும்பத்திற்க்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.


என் படைப்புகளை ஊக்கவிக்கும் பொருட்டாக எனக்கு.ரூ 500 மத்திப்பிளான புத்தங்களை பரிசாக வழங்கியுள்ளார்கள். அதுவும் நாமாக தேர்ந்தெடுத்துகொள்ளும்விதமாக http://www.udumalai.com//உடுமலை. காம்மில் லிங்க் தந்தார்கள் அதில் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்


இதோ எனது புத்தகத்தேர்வுகள்.


மூ மேதாவின் - நாயகம் ஒரு காவியம்
கனிமொழியின் - கருவரை வாசனை
வைரமுத்துவின் - கள்ளிக்காட்டு இதிகாசம்
பிரபஞ்சனின் - முதல் மழைத்துளி
அகிலனின் - சிநேகிதி
தன்னம்பிக்கை - வெற்றியின் சிறகுகள் விறியட்டும்
கவிதைகள் - என் ஜன்னலின் வழியே .


இத்தனைஅற்புத பொக்கிஷமான புத்தங்களைத்தந்து என்னை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தரும் தமிழ்குடும்பத்திற்கும் அதன் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..


இது நான் முதன்முதலில் தமிழ்குடும்பத்தில்
தமிழ்குடும்பத்தைபற்றி எழுதிய கவிதை
முகப்பிற்கு
உள்ளே சென்ற
அக்குடும்பத்தில்
உள்ளவர்களை பார்வையால்
பதிவுசெய்துகொன்டேன்


ஆண்கள் ஸ்பெசல்
பெண்கள் ஸ்பெசல்-என்ற
பகுதியில்
அழகுக்கு அழகுசேர்த்து
நொடியில் ரெடியாகிய
டிப்ஸ்களை எடுத்துக்கொண்டு


சிந்தனைசெய்த மனமாய்
மற்றவைக்குள் புகுந்து
மகளீர் மன்றத்திற்கு
பழகலாமென்று வந்தேன்
வந்தயிடத்தில்


நகைச்சுவையாய்
வாசகர் டைரியைப்படித்து
கண்டதும் கேட்டதுமாய்
செய்திகள் தெரிந்துகொண்டேன்


அறுசுவையாய் பல்சுவையும்
கைவினைப்பொருள்களையும்
வர்ணவேலைப்பாடோடு
தையற்கலையும்
கற்றுக்கொண்டு
மழழையர் பக்கம்வந்து
மகிழ்சியோடு
போட்டோக்கள் கண்டு


குறிப்புகள் தெரிவிக்கலாமென்று
தமிழில் எழுதவந்துள்ளேன்


தமிழ்குலம் செழிக்க
தமிழ்குடும்பம்
தந்துள்ள
அத்தனையும் அருமை
இது அறிவியலின் புதுமை


பாலைவனத்தில்
நாங்களிருந்தாலும்
பசுமை கொஞ்சும் தமிழை
கண்களால் கண்பது குளுமை
அதை தனித்தமிழில்
எழுதுவது
இனிமையிலும் இனிமை


இவை அத்தனைதிற்கும்
துணையிருக்கும்
தமிழ்குடும்பத்திற்கே சாரும்
கோடானகோடி
பெருமை பெருமை பெருமை


தாய் மொழியை வளர்க்க
ஒன்றிணைவோம்
தமிழர்களாய் வானுயர்வோம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஏன் விடிந்தாய்!


அறியாத வயது
ஆசைகள்
நிறைம்பிய மனது


சிறகுகளில்லாமல்
இறக்கைகட்டிப்
பறந்தது
இரவில்


எப்போது விடியும்
எப்போது
விடியுமென


விடிய விடிய
விழித்திருந்தன
விழிகள்
தந்தையின்
வரவுக்காக


பொழுதும் புலர்ந்தது
விழியும் ஒளிர்ந்தது
வந்தது தந்தையல்ல


தந்தை
தவறிவிட்டாரென்று
துயரத் தந்தி


கதறிக் கதறி
அழுதது கண்கள்
கருமணிகள்
கழண்டு
விழுமளவிற்க்கு


பதறித் துடியாய்
துடித்தது மனது
பொழுது
ஏன் விடிந்ததென்று........




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வீரம் வென்றது

ஐந்தறிவு ஜீவன்
அரண்டு துடிக்க

ஆறறிவு ஜீவன்
அடக்க நினைக்க

கையிரண்டைக் கொண்டு
கொம்பிரண்டைப் பிடிக்க

கோபம்கொண்டு
கொதித்தெழுந்து
குடல்தனை சரிக்க


குற்றுயிராய் குனங்கி
உயிர்தனை வதைக்க
வீரம் வென்றது
ஐந்தறிவைக் கொண்டு.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நினைவெல்லாம் நீயே


மெளனமாய்
முகம்பார்த்தேன்

முயல்விழியால்
பதிலளித்தாய்

முத்து முத்தாய்
வேர்த்துவிட்டேன்

முடிவென்ன
கேட்டுவிட்டாய்

முழந்தாளிட்டமர்ந்தேன்
அதில்
முகம்புதைத்து
நிமிர்ந்தேன்

என்னெதிரில்
நீயில்லை

எல்லாமே
என்
நினைவுக்குள்


மீண்டும்
மெளவுனச்
சிறைக்குள்

என்னை
முழுவதுமாய்
மூழ்கடித்தேன்..






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வாழ்க்கைப்பயணம்




உணவு உடை அன்பு
இவர்களுக்குள்
விடிய விடிய போராட்டம்
இறுதி வெற்றி ?


கதைகள் பேசிய
கண்களின் வழியே
வழிந்தது கண்ணீர்


அதை
கண்டும் காணாததுபோல்
கட்டிய பெட்டிகளை
சரிசெய்தபடி
தன் கண்ணங்களிலில்
வழிந்தோடும் கண்ணீரைக்
கட்டுப்படுத்தினான்


கதவோரம் 
காதல்மனைவி
கனத்த மனதுடன்
கலங்கி நிற்ப்பதை
பார்க்கயிலாமல்
அங்குமிங்கும் 
நடந்தான்


காரின் ஹாரன்ஒலி
வெளியில் கேட்க
கட கடவென
ஆடிய கால்களை
அழுத்தி நிறுத்தினாள்
கதவோரம் நின்ற
காதல்கிளி


தொட்டுபேசும்
தூரத்தில் இருந்தும்
சுற்றி நின்ற
சொந்தங்களின் மத்தியில்
முடியாமல்போகவே
 சொந்தங்கள்
கைகளை அசைக்க
இவனும்
கைகள் அசைத்தபடி
கண்களால் பேசினான்


அனைவரிடமும்
போய்விட்டு வருகிறேன்
என்று சொல்லும்போது
போய்விட்டு
என்பது தொண்டைக்குள்
புதைய
வருகிறேன்
என்பது மட்டும்
வேகமாய் வந்தது
விறு விறுவென
நடந்து காரில் ஏறி
கண்களை மூடினான்


மனதிற்குள்
மீண்டும் போராட்டம்
வெற்றி பெற்றதாய்
உணவும் உடையும்
சொல்ல
இல்லவே இல்லை
உங்களிருவருக்கும்
விட்டுக்கொடுத்து
அன்புதான் ஜெயித்ததென
அவன் மனஞ்சொல்ல


ஏனென்றால்


ஒரு நாளில்
மூன்றுமுறையே
உனை உண்பேன்
ஒருநாளில்
ஓரிருமுறையே
உனை உடுத்துவேன்
ஆனால்
அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்


எனச்
சொல்லிதன்னையே
சமாதானப்படுத்திக்கொண்டபடி
மனம் கனக்க
வாழ்க்கைபயணத்தைத்
தொடர 
வானத்தில் பறந்தான்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வெற்றிமாலை



தோல்விகள்கண்டு
கிடைக்கும் வெற்றி
சந்தனமாலை போன்றது
அதுகாயக் காய
சாந்தமான வாசம்
வீசிடும்


தோல்விகளின்
வடுக்களை
தொட்டு பார்த்தால்
மீண்டும் மீண்டும்
வெற்றிமாலை
தோளில்
வாங்கத்தூண்டும்


குறுக்கு வழியில்
சட்டெனக்
கிட்டும் வெற்றி
ரோஜா மாலைப்
போன்றது


அது
வாடிப் போனால்
வாசம்போய்
வனப்பும் உதிர்ந்து
எஞ்சி மிஞ்சுவது
நார் மட்டுமே


திறமை முழுவதும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
வெளியுலகைக் காண
துணிவற்றிருந்தால்
திறமை தேடிவருமா


வெற்றிக்கு வித்திடாமல்
தொட்டாச்
சுறுங்கியைப்போலே
தோல்விகளைக்கண்டு
துவண்டு கிடந்தால்
வெல்லமுடியுமா


தன்னம்பிக்கையென்னும்
துணிவைக்கொண்டு
தோல்விகளை
எதிர்த்துப்பார்


எதிரியாய் வந்த
தோல்விகள்கூட
உன் துணிவு கண்டு
துவண்டுபோய்
தூர ஓடிவிடும்


உன்வாசல்தேடி
வெற்றிமாலை
வந்து சேர்ந்திடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பெண்ணே நீயும்





அடி ஞானப்பெண்ணே!

பெண்ணுக்கு
பெண்ணே எதிரி
இதைப் பார்க்கும்போது
கதறுது மனம்
பதறி

வயிற்றில்
சுமையில்லையென
வஞ்சிமனதில் வருத்தத்தை
சுமத்துவதா

வம்சம்
விருத்தியாகவில்லையென
வாழவந்தவளை
வதை செய்வதா

பெண்ணுக்கு
குழந்தையில்லையெனில்
 மலடி என்றபெயர்
ஆணுக்கு
குழந்தையில்லையெனில்
??????? பெயர்

மருமகளுக்கு
குழந்தையில்லையெனில்
மகனுக்கு மறுமணம்

மகனுக்கு
குழந்தையில்லையெனில்
அது அவள்
வாங்கிவந்த வரமா

பெண்ணுக்கு
பெண்ணே சமமாகாமல்
ஆணுக்கு பெண்
ஆகுமா சரி சமம்

கூடிக்கூடி
குடும்பம் நடத்தியும்
குதூகலமாய்
தாம்பத்தியம் நடத்தியும்
இறைவன்
கொடுக்க நினைத்தால்தான்
குழந்தை

எல்லாம்
புரிந்திருந்தும் புரியாமல்
நடப்பவர்களைக்கண்டு
புண்படுகிறது
மனது

பெண்களே பெண்களுக்கு
ஆதரவாய் இருந்தால்
பெண்ணுலகமே
பொன்னாய் மின்னிடும்

அதனோடு ஆணினமும்
சேர்ந்திணைந்தால்
இப்பூலோகமே
பூத்துக்குலுங்கிடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இசையும் பாடலும்


அணைத்துக் கொள்ளும் ஓசை
அந்தப் புறத்தின் பாஷை
அன்பான இசை

அன்னைத் திட்டும் திட்டு
அப் பப்ப விழும் குட்டு
அன்பான் பாடல்

மழைத்துளியின் சத்தம்
மன்னவனின் முத்தம்
மயக்கும் இசை

மழழையின் சிரிப்பு
மரிக்கொழுந்தின் பூரிப்பு
மயக்கும் பாடல்

குழந்தையின் அழும்பல்
குமரியின் சிணுங்கல்
கொஞ்சும் இசை

குற்றால குளியல்
குலைநடுங்கும் குளிரல்
கொஞ்சும் பாடல்

உயிர்நாடி துடிக்கும் ஓசை
உள்ளம் சொல்லும் ஆசை
உணர்வின் இசை

உலை கொதிக்கும் சத்தம்
உள் குடல் பசித்து கத்தும்
உணர்வின் பாடல்

கண்கள் பேசும் மொழி
காதல் தீர்ந்தால் வலி
கனமான இசை

அறிவை தின்ற காதல்
அழிவில் முடியும் சாதல்
கனமான  பாடல்

சுற்றி இயங்கும் உலகம்
சுழல மறுத்தால் சுருங்கும்
இயற்கையின் இசை

நம்மைச்சுற்றி நடக்கும்
நாளும் பொழுதும் கடக்கும்
இயற்க்கையின் பாடல்

மொத்த பூமி மொத்தம்   -2
இசையோடு பாடலாய் சுத்தும்..



[இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக எழுதினேன். இதை வாசிக்க சென்றபோது எனக்கு கிடைத்ததுதான்  காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் கைகளால் கிடைத்த விருது.

மறக்க முடியா கவிதை மறக்கமுடியா நாள்.
அழுதது, ஆனந்தம் அடைந்தது, என எல்லாமாக்கி
பலரின் பெருந்தன்மைகளையும். நிறைய மனங்களிலுள்ளவைகளையும் புரிந்துகொள்ளவைத்த கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

என்னவனே!


கனகாமரச் செடியோரம்
கைகோத்து நடக்கையில
கரிச்சாங்குருவி ஒன்னு
கான பாடிச்சி -குருவி
கான பாடிச்சி

கானவ கேட்டுகிட்டே
கதபேசிப் போகையில
கருவேல முல்லு ஒன்னு
நறுக்குன்னு குத்திச்சி -என்காலில்
நறுக்குன்னு குத்திச்சி அத

கண்ட கண்ல கண்ணீர் -என்
கண்ணன் கண்ல வழிய -உன்
கையில எங்கால எடுத்து
வழிஞ்ச ரத்தம் துடைக்க

மனசெல்லாம் மனசெல்லாம்
காத்துல பறந்துச்சி -பஞ்சாகி
காத்துல பறந்துச்சி
குத்தினமுல் வலியெல்லம்
காணாம போயிடுச்சி -காத்துல
காணாம போயிடுச்சி

                      [கருவேலங்காட்டுக்குள்ள]

நெஞ்சுக்குள் வலியெடுத்து
நொடிகூட ஆகவில்ல
துடியா துடிச்சிபோயி
நெஞ்சில சாச்சிக்கிட்ட -உன்
நெஞ்சில சாச்சிக்கிட்ட

விடிய விடிய முழிச்சிருந்து
விழி மூடாம காத்திருந்து
விரலாலே என்ன நீயும்
நீவிகொண்டிருந்த நெஞ்ச
நீவி கொண்டிருந்த -அத

பாத்த என்னோட மனசு
பச்சபுள்ளையா மாறிப்போக -ஒங்கைய
புடிச்சிக்கிட்டே
புலம்பிகொண்டு நானுங்கரைய

மனசெல்லாம் மனசெல்லாம்
பனியா உருகிடிச்சி -வெயில்பட்ட
பனியா உருகிடிச்சி
பட்டாம் பூச்சிபோல
சிறக விறிச்சிச்சி -மனசு
சிறக விறிச்சிச்சி

                       [கருவேலங்காட்டுக்குள்ள]

என்னவனே என்ன வனே
என்னையாளும் மன்னவனே
என் னுயிருக்கு ஏதுமுன்ன
உள்ளம் துடிக்குது ஓங்
உள்ளம் துடிக்குது -அத

நானும் காணும் போது
நெஞ்சம் நெகிழுது என்
நெஞ்சம் நெகிழுது
உங்கூட காலமெல்லாம்

ஒன்னா இருக்கோனும் -சேந்து
ஒன்னாயிருக்கோனும்
உயிருக்குள் ஊடுருவி
உதிரமா ஓடனும் உனக்குள்
உயிரா ஆகனும்..

                         [கருவேலங்காட்டுக்குள்ள]


[டிஸ்கி:: நமக்கும் நாட்டுபுற பாட்டு வருதான்னு ஒரு டெஸ்டுதான்.
 புதுவருசத்துல இதெல்லாம் தேவையான்னு  யாரோ!!!!!!!!! முனங்குவது என்காதில் கேட்கிறது சரி சரி ]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது