நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலையும்! கவிதையும்! நேர்காணல்.
 • நேர் காணல் = கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 
  அமைப்பாளர் 
  தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு..
  சகோதரி மலிக்கா அவர்களை தடாகம் இலக்கிய கல்வி, கலை, கலாசார, சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மூலமாக சந்திப்பதில் நான் பெருமை அடைகின்றேன். 
  சகோதரி கலைமகள் ”ஹிதாயா ரிஸ்வி” அவர்கள் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கு எனது பதில்கள்.
  01)உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
  தாய்நாடு, இந்தியா.தாய் தந்தை, தமிழ்நாடு.தாய்மொழி, தமிழ்மொழி. 
  1979 அன்று தஞ்சை மாவட்ட,அதிராம்பட்டின[ம்] தந்தைக்கும், திருவாரூர் மாவட்ட, முத்துப்பேட்டை 
  தாயிற்கும்,மகளாய் பிறந்து எனக்கு,உடன்பிறந்த ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை.சின்னஞ்சிறுவயதிலியே தந்தை விட்டுசென்றார் 
  பள்ளிப்படிப்பை முடிப்பது என்பதே பகல் கனவாகிப்போனது, தன் தங்கைக்கு பெண்பிள்ளை பிறக்க வேண்டும் தன்மகனுக்கு அதனை திருமணம் முடிக்கவேண்டுமென விரும்பிகேட்ட தன் சகோதரரான என் தாய்மாமனின் வேண்டுதலை நிறைவேற்ற,சிறுவயதிலேயே
  மச்சானிடம் மனைவியாய் ஒப்படைக்கபட்டேன்,ஒப்படைத்தநாள்முதல் என்னை தனதுயிராய் நினைத்து,எனதுணர்வுகளுக்கு மதிப்பளித்து, 
  எனதெண்ணங்களை நிறைவேற்ற,துணையாய்,இணையாய்இருந்துவரும் எனது மச்சான்.எங்கள் வாழ்க்கைக்கு வசந்தமளிக்கும் விதமாய்
  பாசத்தைப் பொழியும் பெண், அன்பைப் பொழியும் ஆண் என்று இருமகவுகள்.மருமகன்[மகளின் கணவர்]
  பிறந்து 2 மாதமேயான பட்டுப்பூ போன்ற குட்டிப்பேத்தி,எங்களுக்காகவே வாழும் அம்மாயென எங்களின் குடும்பம் இறைவன் அருளால்,
  வேர்களால் சுவாசிக்கும் அலையாத்தி காடுகளுக்குள் அலையடித்து குதூகளிக்கும் கடல்போன்றும்,அதனுள் குளுக்குளுக்கும் காற்றுபோன்றும்,
  நினைத்தவைகள் நினைத்துபோல் நடந்தபடி,நல்லெண்ணங்கள் ஈடேறியபடி,சிறு சிறு ஊடல்களோடு சேர்ந்த கூடல்களென எனது வாழ்க்கை என்னையும் எனதெண்ணங்களையும், வழிநடத்திச்செல்கிறது மிக ரம்யமாய்,அழகாய்,இறைவன் நாட்டப்படியே!
  02]வினா? எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது?

  விடை!

  சிறுவயதில் திருமணமென்பதால் பள்ளிபடிப்பையே தொடரவில்லை,திருமணமானபின் படிப்பின்மீதுள்ள ஆர்வத்தால் அஞ்சல்வழி கல்வி பயின்றேன் ஐந்தாவதே படிக்காமல் தொடரமுடியாதென்று அதுவும் இடையிலேயே நின்றுவிட்டது, திருமறை ஓதும்போது எழும் ஆத்மார்த்தமான ராகம்.பாலைவனத்திலிருந்த கணவர் [மச்சான்] எழுதும் கடிதங்களில்,
  ஓரிருவரிக் கவிதைகளோடு ஆரம்பிக்கப்படும்,அல்லது முடிக்கப்படும்,அவ்வரிகள் வாசிக்க வாசிக்கவே உணர்வுக்குள் ஏதோ மின்னலடிக்கும்.
  அதனோடு,அதிரை அருட்கவி தாஹா[உறவினர்]அவர்களின் புத்தகங்களை வாசித்ததில் கிடைத்த ஈர்ப்பு,டி ராஜேந்தர் அவர்களின் அடுக்குமொழி வசனங்கள் ஏற்படுத்திய தாக்கம்,இவைகளோடு என்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்கள்,சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகள்,ஆதங்கம்,இயலாமை,என என்னுள்ளத்தை அழுத்தும் விசயங்கள் யாவற்றையும்,
  எப்படியேனும் வெளிப்படுத்தவேண்டும் அது எப்படி? என்று எண்ணியபோதுதான்,என்னையும் தாண்டி ஏதாவது செய்யவேண்டுமென ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உணர்வுகள்,
  எழுத்துகளின் வாயிலாக வரவேண்டுமென்று எண்ணிய நான், எனது 15 வது வயதில், முதன் முதலில் ராணி வார இதழுக்கு 8 வரியில் எழுதி அனுப்பிய கவிதை வெளிவரவில்லை,
  ஆனபோதும் விடாது ஓரிருமுறை என் பெயர்மாற்றி மீண்டும் ராணி,குமுதம், எனது அனுப்பினேன்.அதில் மரியா என்ற பெயரில் மழைக்கவிதை ஒன்று வெளிவந்தது.மிகுந்த சந்தோஷப்பட்டேன் யாரிடமும் சொல்ல பயம்,நானே அதனை வாசித்து வாசித்து மகிழ்ச்சியடைந்தேன்.பின்பு லட்டர்பேட் என்னும் கடிதநோட்டு மற்றும் 
  டைரிகளில் கிறுக்கிவைக்க ஆரம்பித்தவைகள்தான் இடையில் பல வருட இடைவெளிகள்விட்டு மீண்டும் இதோ இன்றுவரை தொடர்கிறது..
  03)வினா? தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான (ஒரு ஆசிரியர்) உங்கள் நெருக்கம் பற்றி சொல்லுங்கள்?
  விடை 

  சிறுவயதுமுதலே தமிழார்வமதிகம், தமிழ்மீது காதல்,எம்மொழி வழியில் ஏதேனும் செய்யவேண்டுமென உள்ளுக்குள் ஒருவித சிறுபொரியாய் கனத்துக்கொண்டிருந்தது,
  அதிகம் படிக்காத காரணத்தால் தயக்கமே மேலிட்டிட்டிருந்தது,11 வருட துபை வாழ்வில் கடைசி மூன்றாவது வருடம், எனது எண்ணப்பொரிகளுக்கு 
  எண்ணையூற்றி தீபமாக்கியது தமிழ்குடும்பம்.காம்தான், அதன்வழியே வானலை வளர்தமிழ் தமிழ்தேர் இதழுக்கு எழுத அழைத்தது சிம்மபாரதி என்ற சகோதர நட்பால் மேடையேறியது எனது கவிதைகள்,அதில் நின்றும் உடன் பிறவா அன்பு சகோதராய் கிடைத்தவர்பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையத்,அவர்கள் மூலம் கிடைக்கபெற்ற தமிழாசிரியத் தந்தைதான் இலங்கையின் மரபுகவி நாயகர், காப்பியக்கோ திரு ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள்,அவர்களிடம் அறிமுகபடுத்திக்கொண்டபோது ஏற்படா நெருக்கம், 
  அடுத்த நாளே அவர்கள் என்னை அலைபேசியின் வழியாக அழைத்து வீட்டுக்கு வாம்மா பேசனும் என்றதும்,மாணவியாக உள் நுழைந்து, மகளாகவே ஆகிவிட்டேன்.இப்படி ஒரு ஆசிரியத்தந்தை எனக்கு கிடைத்ததில்தான் எனது எழுத்துக் கிறுக்கல்கள் கவிதைகளாய் பேசப்பட்டன,அவர்கள் கைகளேலே முதல் விருதாய் கேடயமும் கிடைக்கபெற்றேன்.
  ஆசிரியத்தந்தை,குருவென,இன்றுவரை அவர்களின் குடும்ப பாச பிணைப்பில் நானும் அன்பு மகளாய்..
  04.[வினா? புதுக்கவிதையும் எழுதி வருகின்றீர்கள்(மரபுக் கவிதை எழுதுவதில்லை என்று நினைக்கின்றேன்) இதில் எதில் மன திருப்தி பெறுகின்றீர்கள் ?
  விடை 

  இதுவரை மரபுக்கவிதை எழுதவில்லை, காப்பியக்கோ ஜின்னாஹ் அவர்கள் எழுதும் மரபுக்கவிதைகளை கண்டபின் மரபில் எழுதவேண்டுமென ஆவல்கொண்டுள்ளேன், 
  முகநூல் வழியாக சகோதரர்கவிஞர் திரு தியாகராஜன் அவர்களும், சகோதரி 
  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி( நீங்கள் )
  நன்றாக எழுதுகிறீர்கள் மரபிலும் முயற்சியுங்களேன் என்றார்கள்,கற்றுதாருங்கள் என்றேன்,தாரளமாக என்றார்கள் இடையில் வெளிநாட்டுக்கு சென்றுவந்துகொண்டிருந்ததால்தொடர்ந்து கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் குறைந்துபோனது இன்ஷா அல்லாஹ்,கற்றுக்கொண்டு விரைவில் எழுதுவேன்.
  எக்கவிதை எழுதியபோதும் அக்கவிதையாகவே வாழும்போது உணர்வுகளை வெளிப்படுத்தும் மனம் அகம் புறம் இருவழியிலும் திருப்தியடையும்.
  ஆத்மார்த்தமாய் உணர்ந்து எழுதும் எழுத்துக்களிலேயே திருப்தியடைகிறேன்.
  05[வினா?மூத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டகிறார்களா?
  விடை!

  வாசிப்புகள் அதிகமதிகம். பிறர் எழுதிய படைப்புகளை வாசித்து நேசிப்பதில் அலாதி இன்பம்தான், எழுத்தாளர் வாழ்வியலுக்கு வழிகாட்டியாய் அப்துல் றஹீம் அவர்கள் எழுத்துகள் மிகவும் பிடிக்கும்,கவிஞர்கள், ஜின்னாஹ் வாப்பாவின் மரபுக்கவிதைகள். கவிஞர் இராஜ, தியாகராஜன் மற்றும் ,கலாம் காக்கவின் மரபுக்கவிதைகள். கவிஞர் கண்ணதாசன்,கவிஞர்மு மேத்தா,மற்றும் அப்துல் ரஹ்மான், கவிஞர் வைரமுத்து,கவிஞர் கனடா புகாரி,சகோதரி கவிதாயினி கலைமகள் ஹிதயா ரிஸ்வி,இன்னும் நிறைய பேர்களின்,கவிதைகள், புதுகவிதைகளென வாசித்துகொண்டிருக்கிறேன். துபையில் இருந்தவரை ஜின்னாஹ் வாப்பாவின் நேரடி வழிகாட்டிலிருந்தேன்.தற்போது வலைதளம் வழியாகவும் முகநூல் வழியாகவும் எனது எழுத்துகளை ஆசிரியர் பார்வையில் உற்றுநோக்கி,அதலிருக்கும் பிழைகள் சகோதர பார்வையில் சுட்டிக்காடித் திருத்தி, ஊக்கம் கொடுத்து எழுதத்தூண்டும் அன்பு சகோதரர் காஞ்சி ”முரளி”தரன்,மற்றும் கருத்துகள் மூலமாக இன்னும் பல நல்லுள்ளங்கள் வழிகாட்டியாக இருந்துவருகிறார்கள்.
  [பட்டியல் நீழுமென்பதால் பெயர்கள் குறிப்பிடவில்லை].

  06]வினா? எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?
  எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

  விடை 

  ஒருபோதும் இல்லை,மனமொப்பி செய்யும் எக்காரியமும் எந்தசூழ்நிலையிலும் நமக்கு சிரமங்களை ஏற்ப்படுத்துவதேயில்லை. அதுபோல்தான் எழுதுவதின் மீதுள்ள ஆர்வமும்,ஆவலும்,இன்னுமின்னும் எழுததூண்டுகிறதே தவிர, எழுதுவதில் ஒரு சிரமமும் என்றும் ஏற்பட்டதில்லை.சூழ்நிலை சிலநேரம் எழுதமுடியாமல்போவதையும் சிந்தையில் சேர்த்துவைத்து,சிரமமேற்ப்படுத்திய சூழலையும் ரசித்து, சிலாகித்து எழுதிடவே முனைவேன்,தேவையில்லா வேலை உனக்கெதற்கென திறமைகளை முடக்குவோருக்கு மத்தியில்,2 நாளாகிவிட்டதே இன்று ஏதும் எழுதவில்லையா, ஏதாவது பிட்டு போடேன் என்று என்னை எழுததூண்டும் என்னவரான என் மச்சானின் ஊக்கமிருக்கும்போது சிரமெல்லாம் சிகரத்தை நோக்கிய பயணமாய்,சிலநேர சிரமங்கள்கூட சிரமமாக தெரியாது..

  07 வினா 
  சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன

  விடை! 

  இணைய வாயிலாக, மற்றும் தொகுப்புகளின் பார்வையிலாக பலரின் கவிதைகளை உள்வாங்கி தேக்குகிறேன் உணர்களுக்குள்.அதில் நின்றும் என்னையும் தெளிவாக்கிகொள்ளவும் முயற்சிக்கிறேன்,
  உணர்களைகொண்டு உயிர்தெழச்செய்து, உண்மைகளை உள்ளடக்கி எழுதும் கவிதைகளை அதிகமதிகம் நேசிக்கிறேன்.
  மேலும்,சமாகால கவிதைகளில் இது கவிதயல்ல, அது நல்ல கவிதையல்ல என நான் எக்கவிதைகளையும் பிரித்துபார்ப்பதேயில்லை, கவிதைகளென எழுதும் அனைவரின் உணர்வுகளுக்கு மட்டுமே எனது மனம் மதிப்பளிக்கும், எல்லோருக்கும் ஓடும் எண்ணங்கள் ஒன்றல்ல, ஆக அவரவர் அவரவரின் எண்ணங்களுக்கு ஏற்ப எழுத்துகளின் மூலம் வடிவம் கொடுத்து வண்ணம் தீட்டுகிறார்கள்,மற்றவர்களின் கவிதைகளை மதிப்பிடும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை, அப்படியே வளர்ந்திருந்தாலும்,பிறரின்எண்ணங்களைக்கொண்டு எழுதுகளாக்கியதை, ஒப்பீடுகள் செய்து ஒப்பற்றதாகயில்லையென கூற எனக்கு விருப்பமில்லை.நிறைய நிறைய கவிஞர்கள் உருவாகி வருகிறார்கள்,அவர்கள் எழுதும் கவிதைகள் மிகவும் அழகுறவும் இருக்கிறது
  வளர நினைத்தும் எழுதும் கவிஞர்களை எழும்போதே குட்டிவிட்டால் குறுகிவிடுவார்கள், வளரட்டும் வாழையடி வாழையாக இல்லாவிட்டாலும், வசந்தவாசம் வீசி செல்லட்டும், 
  அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தபடி அவ்வாசத்தினை நாமும் நுகர்ந்து ஊக்கப்படுதுவோம்..

  08]கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில் உதவுகின்றன.
  நான் எழுத்தாணியால் எழுதிய கவிதைகள் மிக மிக குறைவு. இணையங்களின் வாயிலாக எழுதிய கவிதைகளே அதிகமதிகம்.எனது அடித்தளமே இணையதளம்தான்,
  என்னை உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காரணகர்தா. தமிழ்குடும் என்ற ஒரு சமூக வலைதளம்தான்,அதில் எனக்குதரப்பட்டமரியாதை, எனக்கென தனிப்பகுதியேதந்து என்னை சுதந்திரமாய் எழுத அனுமதிததுதான், அதின் நின்றும் வானலை வளர்தமிழ் தமிழ்தேர் மாத இதழ்,தமிழ்குறிஞ்சி மின் இதழ். தமிழ்த்தோட்டம்.காம்
  தமிழ்இஸ்லாம் .காம்.முத்துப்பேட்டை .காம் திண்ணை.காம்,எழுத்து.காம் யூத்ஃபுல் விகடன்.காம்,ஈகரை.காம் முத்துப்பேட்டை ஓஆர்ஜி,நீடூர் சன்ஸ்.முதுகுளத்தூர்.காம் அதிரை நிரூபர்.இலங்கை ஃபஸ்ட் தமிழ் வானொலி. இலண்டன் தமிழ் ”பா முகம்”வானொலி,இஸ்லாமிய பெண்மணி.மற்றும் எனது வலைதளங்களான நீரோடை.காம் கலைச்சாரல்.காம் இனியபாதையில்.காம் கவிக்கூடு .காம்.[வெளி தளங்களில் எழுதிவந்த எனக்கு தனியாக ஒரு வலைதளம் உருவாக்கி அதன்மூலம் உனதாற்றலை மென்மேலும் வளர்த்துக்கொள் என்று வலைதளம் தொடங்கிதந்தது, எனது அண்ணன் [பெரியம்மா மகன்]முகமது ஆரீப் அவர்கள்.இதனோடு முகநூல்,அதில் நின்றும் தற்போது தாங்களின் “தடாகம் கலை இலக்கிய வட்டம்” சர்வதேச அளவில் நடத்திய முதல் கவிதை போட்டியில் என் கவிதைக்கு முதலிடம் கிடைத்ததும், 
  அதனைக்கொண்டு தினகரன் மற்றும் மாலை மலர் பத்திரிக்கைளிலும் இச்செய்தி வந்ததும் மென,இறைவன் கொடுத்த ஆற்றலை இணையம்மூலம்தான் எனது எண்ணங்களும்,எழுத்துகளும் எல்லோருக்கும் சென்றடைய மிகவும் உதவுகிறது..
  9]வினா?உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அது எப்போது ?
  விடை!
  முன்பே சொன்னதுபோல்,சிறுவயதுமுதலே கவிதைமீதான ஆர்வம் ஆழ்மனதில் அடிதளமிட்டதால் அதனை செப்பனிடவே இன்றுவரை முயன்றுகொண்டிருக்கிறேன் 
  இனியும் முயற்சிப்பேன் இறைவன் உதவியோடும் அவனின் அருளோடும்.
  10]வினா?புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி கூறமுடியுமா ?கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?
  புதுக்கவிதை.உணர்களை உள்ளடக்கிய உடன் வெளியிடு, நவீகக்கவிதை.உள்ளடக்கிய உணர்வுகளின் ஒருமித்த வெளியீடு, சில கவிதைகள் சிலாகிக்க வைக்கின்றன.சில கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. சில கவிதைகள் சில்லென இருகின்றது. சிலகவிதைகள் சிடு சிடுக்க வைக்கிறது,மொத்ததில் புதுமையும், நவீனமும்,மலரும் வாசமுமாய்.கத்துக்குட்டியான நான் கவிதைகளைப்பற்றி இன்னும் முழுமையாக அறியவில்லையென்றபோதும், உணர்வுகளைக்கொண்டு உள்ளடக்கி உண்மைகளை உரக்க எடுத்துறைக்கும் கவிதைகளை நேசித்து எழுதுகிறேன்.அப்படியான கவிதைகளையும் தேடிப்பிடித்து [சு]வாசிக்கிறேன்.
  11வினா? கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?
  விடை 

  நான் எழுதத்துவங்கிய கொஞ்ச காலத்திலேயே,என் எழுத்துகள் வழியாக சில நல்லவைகள் நடந்தேறின,அதில் குறிப்பாக”யுனிகோட் தமிழ் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு
  செம்மொழி மாநாட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்க என்னாலான பணிகள் செய்ததும்.[அதற்க்கு மிக உதவியது சகோ காஞ்சி முரளி]சிலரின் திசைமாறயிருந்த வாழ்க்கையில் 
  எனது எழுத்துகளால் நன்மையேற்பட்டதாகவும்.சிலருக்கு என் எழுத்துகளால் ஓர் உத்வேகம் கிடைப்பதாகவும்,என்னை அலைபேசி வழியாக அழைத்தும், மின்மடல் வழியாக எழுதியும் 
  நன்றி தெரிவித்ததும்,அதிகம் படிக்காத எனக்கு இப்படியான எழுத்தாற்றலை கற்பித்த இறைவனுக்கு நன்றி சொல்லி சஜ்தாவில் விழுந்து அழுதிருக்கிறேன்.
  மேலும், கடல்தாண்டி தேசம்தாண்டி,பலவிதமான மக்களின் நட்புகளையும், உறவுகளையும் பெற்றுள்ளதோடு, அவர்களின் உள்ளதில் அன்பானவளாய் நுழைந்திருக்கிறேன்.
  அதுமட்டுமல்லாது முத்துப்பேட்டைலிருந்து நான்தான் முதல் பெண் எழுத்துப்பணிக்கு வந்துள்ளதாய் எண்ணுகிறேன். எனக்கு முன் யாரும் இருந்தார்களா? 
  அல்லது இன்றும் மறைமுகமாக இருக்கிறார்கள் என்பது தெரியாது ஆக இதுவே தற்போதை சாதனையாக எண்ணும் நான்.வருங்கலாதில் எனது எழுத்துகளால் 
  ஒரு சிலராவது பயனடையவேண்டுமென்றும்.இறைவனுக்கு எவ்விததிலும் இணைவைக்காத,அவன் கற்றுதந்த மார்க்கதிற்க்கு எதிராக செயல்புரியாத,
  உண்மையக்கொண்டு உள்ளது உள்ளது உள்ளபடி எழுதி ”கவிதைக்கு மெய்யழகு” என்பதினை எம்மொழி தமிழ்மொழியினையும் இன்னும் சிறந்தோக்கச் செய்திடவேண்டும்.
  நற்சிந்தனை,நற்போதனை,நல்லறிவுரை,இவைகளோடு கலந்த என்னெழுதுகள் எனதிறப்புக்கு பின்பும் பேசப்படவேண்டும்.
  12[வினா? கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?
  கவிதைகளைத்தாண்டி, கட்டுரைகள் சிறுகதைகள், எழுத ஆர்வமிருக்கிறது.எழுதியும் இருக்கிறேன்.சார்ஜா சீமான் ஆண்டு மலரில் ஒரு சிறுகதை.
  திருச்சி சையத் அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பில் ஒன்று, எனது வலைதளதில் ஒன்று, நர்கீஸ் இதழுக்கு[வெளிவரவில்லை] ஒன்று என 3,4.சிறுகதைகள் எழுதியுள்ளேன்.
  லேடீஸ் பெண்மணி இதழில் ”வாழ்ந்துபாரடி பெண்ணே” இவள் புதியவள் இதழில் அவரைக்காய் வைத்தியமென கட்டுரைகள்.மேலும் எனது வலைதளமான இனியப பாதையில்
  பல கட்டுரைகள் எழுதியுள்ளேன்.எழுதியும் வருகிறேன்.
  13]வினா?உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?
  விடை 
  இருந்தது.சந்தர்பங்களாலல்ல,சந்தர்பவாதிகளால்,ஆனாலதனை பொதுவில் சொல்லி யார் மனதையும் புண்பட செய்ய விருப்பமில்லை,
  இறைவனைத்தவிர மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கூடியவர்கள் சுயநலவாதிகள்தான். ஆனால் அவ்வப்போது,ஆசிரியத்தந்தை காப்பியக்கோ ஜின்னாஹ் அவர்கள் சொல்வார்கள்.
  காய்த்த மரம் கல்லடி படும், ஆக நீ காய்க்கத் தொடங்கிவிட்டாயென இதிலிருந்தே தெரிகிறது ,தடைகள் இனி தொடரும் அதனால் கவனத்தோடு சிந்தனை சிதறாது,உன் வழி தவறாது 
  முன்னேறு என்று.வாழ்க்கையென்றால் பல பல பிரச்சனைகளும் தடைகளும் இருக்கத்தான் செய்யும்.எனக்கு எழுதுவதும் வாழ்க்கையில் ஓர் அங்கம்தான். 
  அந்த அங்கத்திற்க்கு துணையாக என்னவரும்,எல்லாம் வல்ல இறைவனும் துணையிருப்பதால்,தடைகளாக அமையும் சந்தர்பங்களையும்,சந்தர்பவாதிகளையும், 
  முயற்சிக்கு துணையாக்கிக்கொண்டு முன்னேறுவதில் முனைப்பாயிருப்பேன்.
  14]வினா? -இறுதியாய் என்ன சொல்ல போகிறீர்கள்.
  விடை 

  தங்களைபோன்ற அமைப்புகள் எங்களைபோன்றவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் எழுத்துகளாக்க,ஊக்கம்கொடுக்க முன்வருவதால் இன்னுமின்னும் பல நல்லுள்ளங்கள்
  நற்சிந்தனைகளோடு,நல்ல படைப்பாளிகளாகவும் உருவாகுவார்கள் என்பதை நன்றியோடு தெரிவித்துகொள்கிறேன்.மேலும
  எழுத்து என்பது இறைவன் அருளிய வரம்.எழுத்துரிமை இருக்கிறது என்பதற்காக! இழிவானவற்றை,தரைக்குறைவானவற்றை, தான்தோன்றிதனமானதை, 
  இப்படி எதை வேண்டுமென்றாலும்,எழுதித்தள்ளலாமென்ற எண்ணைத்தை களைந்தெறிந்துவிட்டு,எழுத்தறிவிதவனுக்கு என்றும் மாறுசெய்யாத மனிதனாய்,
  பெற்ற அறிவை கற்றுக்கொடுக்கும் ஆசானாய்,கற்ற அறிவை போற்றி நடக்கும் மாணவனாக வளர்வதையே விரும்பவேண்டும்.நல்லெண்ணங்களை எழுத்தில் விதைத்து, 
  பண்பானவர்களாக பிறமனங்களிலும் நிலைக்கவேண்டுமென்று மனதில்கொண்டு,நமது நல்லெழுதினால் இந்த தேசமும் நன்மைபெற வேண்டும் என்ற ஆவலுடன்,முற்றுபுள்ளி வைக்காமல் முற்றும் போட்டு தொடர்கிறேன் ....
  என்னுள்மூடிக்கிடந்த உள்ளுணர்வுகளை 
  வெளிக்கொண்டுவரும் விதமாக,
  ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” எழுப்பிய கேள்விகளுக்கு,
  சிறுபிள்ளையின் உள்ளத்தனமாக பதில்கள் சொல்லியிருக்கிறேன், சொற்பிழைகள் மற்றும் வேறு ஏதேனும் பிழைகள் இருந்தால் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளவும்.

  தடாகம் கலை இலக்கிய வட்டதிற்கும், எனதன்பு உடன்பிறவா சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கும் மீண்டுமெனது மனப்பூர்வமான நன்றிகள்..

  என்றும் 
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது