நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கையருகே "நிலா"க்கள்


கடந்த மார்ச் 8 இரவு 9 30 முத்துப்பேடையிலிருந்து புறப்பட்ட சொகுசு பஸ்ஸில்  சென்னைக்கு புறப்பட்டது ஒரு ஜோடி. மார்ச் 9 வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் தியாகராயர் நகரில் ஒரு சொகுசுவிடுதியில் அறையெடுத்து தங்கியது.  ஏன் ? எதற்காக ? இதோ அதன் விபரமறிய உள்நுழைவோம். 
 அந்த ஜோடியை அழைத்துச்செல்ல தங்கியிந்த விடுதிக்கு காலை 8 30.க்கு வாகனம் வந்தது  வாகனத்தின் ஏறிய அவர்களை ஒரு அழகிய மாளிகையின்முன் இறக்கிவிட்டது அந்த மாளிகையில் உள் நுழைந்தபோது சிறு தூறலோடு வரவேற்றது இயற்கை செழிப்போடு வளர்ந்திருந்த பச்சை பசேல், அதனோடு உள்ளே வாருங்கள் என்றழைத்ததுடன் வரவேற்ப்பு அறையில் அமரசெய்து அழகிய முறையில் உபசரிக்கவும்பட்டது. அமர்ந்திருந்த சற்றுநேரதிற்கெல்லாம் புன்னகை பதிந்த முகத்தோடு அன்பான வரவேற்போடு அந்த அறைக்குள் நுழைந்தார்கள் ரஹ்மத் அறக்கட்டளை, ரஹ்மத் பெண்கள் மேல்நிலைபள்ளி, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மற்றும் கலாம் பதிப்பகத்தின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள். உபசரிப்புகள் முடிந்து வந்தநோக்கத்திற்கான விபரங்கள் பரிமாறிக்கொள்ளபட்டது

சென்னைவந்தற்கான காரணம். ”கையருகே நிலா ” கேட்கவே அருமையாக இருக்கிறதல்லவா! அதை அனுபவித்து, ரசித்து, ருசித்து, வாழ்க்கையோடு ஒப்பிட்டு தனது வாழ்க்கை வரலாறாய் தொகுத்துள்ளார் அறிவியல் விஞ்ஞானி திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.”கையருகே நிலா ” தொகுப்பினை நூலாக அச்சடித்து வெளியிடும் திரு முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் கலாம் பதிப்பகம் அதன் நிகழ்வைக் காணத்தான் இந்த ஜோடியையும் அழைத்திருந்தார்கள். அது சரி யார் அந்த ஜோடி ? அட வேறுயார்  ? நானும் மச்சானும்தான். ஆனால் அந்நிகழ்வில் எனக்கும்  உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது அதை நான் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.

நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரலை செய்வதற்காக [மன்னை]திரு தியாகராஜன் அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் மற்றும் திரு முஸ்தபா அவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கலாம் பதிப்பத்திற்கான நோக்கத்தை விவரித்தார்கள் அதனை நான் குறிப்பெடுத்துக்கொடுத்தேன் அதனை நீங்களே நிகழ்ச்சியில் வாசித்துவிடுங்கள் என்றார்கள் எனக்கு ஒரே பயம் பின்ன இருக்காதா நிகழ்ச்சிக்கு வருவோரெல்லாம் கவிஜாம்பவான்களும். அறிவுஜீவிகளும். அவர்கள் மத்தியில் நான் வாசித்தால் சரிவருமா என்றபோது எல்லாம் சரிவரும் தைரியமாக உரையாற்றுங்கள் என்றார்கள் திரு முஸ்தபா அவர்கள்..


மார்ச் 9 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி சென்னை இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புரவுக் கழகம் அதுதான் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம், மனம் ஒருபக்கம் படபடவென அடித்துக்கொண்டிருக்க, அரங்கம் பெரியோர்களாலும் இலக்கியவாதிகளாலும் நிரம்பிக்கொண்டிருந்தது. சரியாக 6 30க்கு  தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தியதும் .

கவிஞர் சிற்பி திரு பாலசுப்ரமணியன் தலைமையேற்றுப்பேசினார்கள். கையருகே நிலாவைப்பற்றியும்.அதன் ஆசிரியர் பற்றியும். இந்நூல் வெளிவர காரணமாக இருந்த திரு முஸ்தபா அவர்களைப்பற்றியும் மிக அருமையாக எடுத்துரைத்தார்கள்.
அடுத்து 

அண்ணா பல்கலைகழகத் துணைவேந்தர் டாக்டர் திரு மன்னர் ஜவஹர் அவர்கள். நகைச்சுவை உணர்வோடு கையருகே நிலாவைப்பற்றியும் அதன் ஆசிரியர்பற்றியும் தான்பேச வந்ததில் பாதியை கவிஞர் பாலசுப்ரமணியன் அவர்கள் பேசிவிட்டார்களென சொல்லியும் அழகாக பேசினார்கள். அவர்கள் உரையாற்றி முடித்து  நூல் வெளியிட தயாரன நிலையில், 

இதோ இந்த மலிக்கா கலாம் பதிப்பகத்தைப் பற்றியும்.கையருகே நிலாபோல் பிற எழுத்தாளர்களின் சிறந்த நூல்களையும் கலாம் பதிப்பகம் வரவேற்பதைப்பற்றியும் சிறு உரையை வாசிக்கத்தொடங்கினேன். என் எதிரே இரு கவிஜாம்பவான்கள். கவிஞர் சிற்பி திரு பாலசுப்ரமணியன் அவர்கள். கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள். இரு அறிவுஜீவிகள். அண்ணா பல்கலைகழகத் துணைவேந்தர் டாக்டர் திரு மன்னர் ஜவஹர் அவர்கள் அறிவியல் விஞ்ஞானி டாக்டர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களென  நான்கு அறிவு பெட்டகங்களுக்கும். கூடியிருந்தவர்களுக்கும். மத்தியில் உள்ளுக்குள் சற்று நடுக்கமிருந்தாலும் வாசித்து முடித்தேன். முடித்ததும் எனதருகில் எங்கள் ஊரைச்சேர்ந்த சகோதரிதான் [சென்னையிலேயே குடியேறிவிட்டார்கள்] அவர்கள் எனது கைகளைப்பிடித்தபோது எனது கை ஐஸில் வைத்துபோல் சில்லிட்டு நடுக்கியதை உணர்ந்தவர் ஏன்மா இப்படி சில்லுன்னு இருக்கு. பயமா என சொல்லிச் சிரித்தவர் மிக அழகாக நன்றாக பேசினாய் என கைகுலுக்கிக்கொண்டே இலக்கியத்தில் இன்னும், இதேபோன்றும் நிறைய தொடருங்கள் என்று வாழ்த்தி பாராட்டினார்கள்.

அடுத்து 

அண்ணா பல்கலைகழகத் துணைவேந்தர் டாக்டர் திரு மன்னர் ஜவஹர் அவர்கள் கையருகே நிலா என்ற நூலை வெளியிட கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள் நூலைபெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் கவிப்பேரரசுக்கு பேசுவதற்க்கு சொல்லித்தரவாவேண்டும் கவிநயம் கரைபுரண்டோட, வான்நிலாவைப்பற்றி பலவித கவிஞர்கள் பலவிதகோணங்களில் பாடியிப்பதைபற்றியும், அதே நிலாவை இன்று கையருகே கொண்டுவந்து வேறுகோணத்தில் காட்டிருப்பத்தைபற்றியும், மிக அழகாக எடுத்துரைத்தார்கள். அதோடு தான் திரையிசை பாடல்கள்பக்கம் போய்விடாமல் இலக்கியம் சார்ந்தே இருக்கவேண்டுமென திரு முஸ்தபா அவர்கள் தன்னை கேட்டுக்கொண்டதாகவும், அதற்க்கு இலக்கியம் சிறுகுடலை மட்டுமே நிறைக்கும், மற்றவையே பெருங்குடலையும் சேர்த்து நிறைக்கும் என்று தான் கூறியபோது, அக்குடலையும் நிறைப்பதற்க்கு தானே 2 கோடி தருவதாகவும், தாங்கள் இலக்கியத்திலே இருங்கள் என தன்னைச் சொல்லியதாகவும் அதற்கான காரணங்களை விளக்கி வியந்தார்.

அடுத்து

அறிவியல் விஞ்ஞானி டாக்டர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஏற்புரையாற்றினார்கள். தான் வந்தவழி, தன்னுடைய ஊர், எப்படி படித்தார்,எப்படி அறிவியல் விஞ்ஞானியாகி சந்திராயனை நிலவுக்குள் செலுத்தினார். நிலவில் தண்ணீர் இருப்பதை எப்படி அறிந்தார் என தன்னைப்பற்றி சொல்லி அனவைரையும் மலைக்கவைத்தார். அதோடு தான் இலக்கியம் செய்யவேண்டுமெனவும், தான் இந்நூலை கவிதையாக்க நினைத்தாகவும் அதனை உரைநடையாக்கும் சந்தர்ப்பமாக்கிவிட்டதெனவும் சிறிது வருத்தப்பட்டார். எழுத்துக்கள்மூலம் பிறரை நல்வழிப்படுத்தவும். அந்த எழுத்துக்களை வாசித்தே பெரிய சாதனைகள் புரியவும் முடியுமென்றார். தன்னுடைய வெற்றிக்கு காரணம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடாது பயன்படுத்திக்கொண்டதில்தான் என்று திட்டவட்டமாக கூறினார். அதேபோல் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது கொஞ்சம் இன்னும் கொஞ்சமென முன்னேறிசாதியுங்கள் என்றார். சற்றே பதட்டமாக பேசினாலும் மிகவும் சாந்தமாக அருமையாக பேசினார்கள். கையருகே நிலாவையே கொண்டு வந்தவராயிற்றே! இன்னுமுள்ள கிரகங்களை விரல் நுனியில் கொண்டுவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வளரட்டும் அவர்களின் அறிவு. கிடைக்கட்டும் இந்திய மக்களுக்கு இன்னும் பல கண்டுபிடிப்பு.


அவர் உரையாற்றி முடிந்ததும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டது கவிப்பேரரசு மேடையைவிட்டு இறங்கிவந்தபோது நான் எழுந்து அவரருகே சென்றேன். அருமையான குரல் மிக அழகான முறையில் வாசித்தீர்கள் வாழ்த்துகள் என்று பேசிக்கொண்டிருந்த நொடிகளில். பேச எழுந்த என் வார்த்தைகள் உள்ளுக்கு துடிக்க, உதடுகள் புன்னகையை மட்டுமே உதிர்த்தது. கவிதைக்குவியலின் எதிரே கத்துக்குட்டியாய் நின்றிருந்த நான் சிலநொடிகள் நிமிர்ந்துபார்த்தேன், உடை நடை பாவனை அனைத்தும் கவிதை சொன்னது, கருவளையமிட்ட கண்ணுக்குள் கவிதையின் ஊற்று கொப்பளித்துக்கொண்டிருந்தது. கையருகே நிலாவை காணவந்த நான் கண்ணெதிரே கவி உலா வந்ததை கண்டு வியந்தேன் அதுவும் என்னருகே  நின்று பேசியதை உணர்ந்து மகிழ்ந்தேன். மகிழ்ந்தபடியே எனது கவிதை நூலான “உணர்வுகளின் ஓசை” அவர்களிடம் கொடுத்தேன். ”ஓ இது உங்கள் நூலா” ஆமாம் ”இதற்க்கு” நான் சொல்லி முடிப்பதற்க்குள் நிச்சயம் இதைப்படித்து கருத்துக்கள் தருவேன் என சொல்லியபடி போய்வருகிறேன் என விடைபெற்று மின்னல் வேகத்தில் அரங்க வாசலை அடைந்தார்.

 இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு (1872 to 2010) என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், முன்னாள் டி.ஐ.ஜி. தேவாரம்,  இளையான்குடி முனைவர் முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) முன்னாள் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் M.A ஜெகபர் அலி, சென்னை M.N.J Group ஹாஜி ஜக்கரியா,  மற்றும் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி மிக சிறப்பாக நிறைவடைந்தது அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு நிற்கையில், திரு முஸ்தபா அவர்களும், சில பெரியோர்களும், எம் ஏ க்களும் எங்கள் அருகில் வந்தார்கள் மிக நன்றாக பேசினீர்களம்மா வாழ்த்துக்கள் என அனைவரும் பாராட்ட திரு முஸ்தபா அவர்கள் என்னைப்பற்றி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார்கள். ரொம்ப சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நன்றாக தொகுத்து வழங்கியமைக்காக திரு தியாகராஜன் அவர்களையும் பாராட்டினார்கள்.
இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்து எனது எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் மதிப்பளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும். திரு முஸ்தபா அவர்களுக்கும். இந்நிகழ்வைக்காண என்னை அன்போடு அழைத்துசென்ற மச்சானுக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்.. 
ஒரு சிலரே மற்றவர்களின் திறன்கண்டு மதிப்பளித்து அவர்களை அதற்குண்டானவைகளிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கென ஒரு அடையாளத்தையும் கொடுத்து தங்களின் நற்குணத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படியான ஒருவரில் திரு முஸ்தபாவும் அடங்குவார்கள் என்றால் அது மிகையில்லை.. கலாம் பதிப்பகம் எதிர்கால தலைமுறையை சிந்திக்க தூண்டும் வகையிலும். இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தி திறம்பட செயல்படவைக்கும் திறனாளிகளை உருவாக்கிடவும் திறனுள்ள படைப்புகளை வெளியிடவும் காத்திருக்கிறது. உணர்வுகளை உள்ளடக்கி எழுத்துக்களின் எழுச்சியை உண்டாக்கி பிறரையும் சாதிக்கத்தூண்டும்   தங்களின் எண்ணங்கள் எழுத்துக்களாகவும், அது பிறரை சென்றைடையவும் கலாம் பதிப்பகத்தை நாடுங்கள்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது