நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கல்லறையைத்தேடி!

உடலை விட்டு
உயிர் பிரிந்த நொடியில்
உலகில் நடந்தவைகளை
 நினைத்துப் பார்க்கும் ஒரு பின்னோட்டம்!

மூடிக்கிடக்கும் உடலினுள்ளே
 விழித்துக் கிடக்கும் உயிருக்குள்
ஓடியாடும் உலக நினைவுகள் ஓராயிரம்

விழி திறந்தால் வினோதமாவும்
விழி மூடியிருந்தால் வித்தியாசமாகவும்
வேடிக்கைக் காட்டிய உலக வாழ்க்கை

காதலென்ற கனி எவ்வித சுவையென
அறியத் தெரியாமலே! அதனை உண்டுகளித்தும்,
வெறுத்து ஒதுக்கியும் வாழும் மனங்கள் கண்டு
நெஞ்சம் சஞ்சலத்தோடு சங்கடப்பட்டது!

அன்னையின் அன்புக்கு
அகிலத்தில் ஈடேதென்ற
அகராதியை மாற்றியமைக்கும்
அன்னையர்களை கண்டு உணர்வு ஆத்திரப்பட்டது!

ஒழுக்கம் சார்ந்தவர்களென போற்றிப்
புகழப்பட்டவர்கள் கூட
ஒழுக்கக் கேடானவைகளின் பின்னே
ஓடியது கண்டு மனம் அதிர்வைக் கண்டது!

முகத்துக்கு முன்னே அழகாய் பேசி உறவாடும்
அன்பின் உறவுகள்கூட முதுகுக்கு பின்னே
முகம் சுழிக்கும் பாவனைகள் கண்டு மிரளவைத்தது!

தான் படைத்த காகித பணத்திற்கு
மதிப்பு கொடுத்து கைகட்டி நிற்கும் மனிதன்
தன்னைப் படைத்தவனுக்கு
மதிப்பு கொடுக்காது கண்டு ரத்தம் கொதிதெழுந்தது!

”இப்படி”

இரணத்திற்க்கும் மரணத்திற்க்கும்
இடைவெளியான பயணத்தில்தான்
எத்தனையெத்தனை இன்ப துன்பங்கள்
எத்தனையோ விதமான ஏற்ற இறக்கங்கள்

இவையெல்லாம் திறக்கவே முடியாத
இறுதிக் கண்மூடலின் பின்னே
கானல் நீராகும் காட்சி பிம்பங்களாய்
காட்சியளித்தது கண்டு 

பின்னோட்டம் பார்த்த மனதும்
திறந்து பார்க்கமுடியா விழியும்
உடலை விட்டுப் பிரிந்த உயிரும்

இமைகளை திறந்து பார்க்கவும்
இவ்வுலகை திரும்பிப் பார்க்கவும்
மனமேயில்லாது ஓடியது
கல்லறைத் தேடி..


டிஸ்கி// எதை எதையோ பின்னோக்கிப் பார்க்கிறோம் இதையும் பார்ப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கையருகே "நிலா"க்கள்


கடந்த மார்ச் 8 இரவு 9 30 முத்துப்பேடையிலிருந்து புறப்பட்ட சொகுசு பஸ்ஸில்  சென்னைக்கு புறப்பட்டது ஒரு ஜோடி. மார்ச் 9 வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் தியாகராயர் நகரில் ஒரு சொகுசுவிடுதியில் அறையெடுத்து தங்கியது.  ஏன் ? எதற்காக ? இதோ அதன் விபரமறிய உள்நுழைவோம். 
 அந்த ஜோடியை அழைத்துச்செல்ல தங்கியிந்த விடுதிக்கு காலை 8 30.க்கு வாகனம் வந்தது  வாகனத்தின் ஏறிய அவர்களை ஒரு அழகிய மாளிகையின்முன் இறக்கிவிட்டது அந்த மாளிகையில் உள் நுழைந்தபோது சிறு தூறலோடு வரவேற்றது இயற்கை செழிப்போடு வளர்ந்திருந்த பச்சை பசேல், அதனோடு உள்ளே வாருங்கள் என்றழைத்ததுடன் வரவேற்ப்பு அறையில் அமரசெய்து அழகிய முறையில் உபசரிக்கவும்பட்டது. அமர்ந்திருந்த சற்றுநேரதிற்கெல்லாம் புன்னகை பதிந்த முகத்தோடு அன்பான வரவேற்போடு அந்த அறைக்குள் நுழைந்தார்கள் ரஹ்மத் அறக்கட்டளை, ரஹ்மத் பெண்கள் மேல்நிலைபள்ளி, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மற்றும் கலாம் பதிப்பகத்தின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள். உபசரிப்புகள் முடிந்து வந்தநோக்கத்திற்கான விபரங்கள் பரிமாறிக்கொள்ளபட்டது

சென்னைவந்தற்கான காரணம். ”கையருகே நிலா ” கேட்கவே அருமையாக இருக்கிறதல்லவா! அதை அனுபவித்து, ரசித்து, ருசித்து, வாழ்க்கையோடு ஒப்பிட்டு தனது வாழ்க்கை வரலாறாய் தொகுத்துள்ளார் அறிவியல் விஞ்ஞானி திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.”கையருகே நிலா ” தொகுப்பினை நூலாக அச்சடித்து வெளியிடும் திரு முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் கலாம் பதிப்பகம் அதன் நிகழ்வைக் காணத்தான் இந்த ஜோடியையும் அழைத்திருந்தார்கள். அது சரி யார் அந்த ஜோடி ? அட வேறுயார்  ? நானும் மச்சானும்தான். ஆனால் அந்நிகழ்வில் எனக்கும்  உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது அதை நான் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.

நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரலை செய்வதற்காக [மன்னை]திரு தியாகராஜன் அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் மற்றும் திரு முஸ்தபா அவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கலாம் பதிப்பத்திற்கான நோக்கத்தை விவரித்தார்கள் அதனை நான் குறிப்பெடுத்துக்கொடுத்தேன் அதனை நீங்களே நிகழ்ச்சியில் வாசித்துவிடுங்கள் என்றார்கள் எனக்கு ஒரே பயம் பின்ன இருக்காதா நிகழ்ச்சிக்கு வருவோரெல்லாம் கவிஜாம்பவான்களும். அறிவுஜீவிகளும். அவர்கள் மத்தியில் நான் வாசித்தால் சரிவருமா என்றபோது எல்லாம் சரிவரும் தைரியமாக உரையாற்றுங்கள் என்றார்கள் திரு முஸ்தபா அவர்கள்..


மார்ச் 9 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி சென்னை இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புரவுக் கழகம் அதுதான் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம், மனம் ஒருபக்கம் படபடவென அடித்துக்கொண்டிருக்க, அரங்கம் பெரியோர்களாலும் இலக்கியவாதிகளாலும் நிரம்பிக்கொண்டிருந்தது. சரியாக 6 30க்கு  தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தியதும் .

கவிஞர் சிற்பி திரு பாலசுப்ரமணியன் தலைமையேற்றுப்பேசினார்கள். கையருகே நிலாவைப்பற்றியும்.அதன் ஆசிரியர் பற்றியும். இந்நூல் வெளிவர காரணமாக இருந்த திரு முஸ்தபா அவர்களைப்பற்றியும் மிக அருமையாக எடுத்துரைத்தார்கள்.
அடுத்து 

அண்ணா பல்கலைகழகத் துணைவேந்தர் டாக்டர் திரு மன்னர் ஜவஹர் அவர்கள். நகைச்சுவை உணர்வோடு கையருகே நிலாவைப்பற்றியும் அதன் ஆசிரியர்பற்றியும் தான்பேச வந்ததில் பாதியை கவிஞர் பாலசுப்ரமணியன் அவர்கள் பேசிவிட்டார்களென சொல்லியும் அழகாக பேசினார்கள். அவர்கள் உரையாற்றி முடித்து  நூல் வெளியிட தயாரன நிலையில், 

இதோ இந்த மலிக்கா கலாம் பதிப்பகத்தைப் பற்றியும்.கையருகே நிலாபோல் பிற எழுத்தாளர்களின் சிறந்த நூல்களையும் கலாம் பதிப்பகம் வரவேற்பதைப்பற்றியும் சிறு உரையை வாசிக்கத்தொடங்கினேன். என் எதிரே இரு கவிஜாம்பவான்கள். கவிஞர் சிற்பி திரு பாலசுப்ரமணியன் அவர்கள். கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள். இரு அறிவுஜீவிகள். அண்ணா பல்கலைகழகத் துணைவேந்தர் டாக்டர் திரு மன்னர் ஜவஹர் அவர்கள் அறிவியல் விஞ்ஞானி டாக்டர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களென  நான்கு அறிவு பெட்டகங்களுக்கும். கூடியிருந்தவர்களுக்கும். மத்தியில் உள்ளுக்குள் சற்று நடுக்கமிருந்தாலும் வாசித்து முடித்தேன். முடித்ததும் எனதருகில் எங்கள் ஊரைச்சேர்ந்த சகோதரிதான் [சென்னையிலேயே குடியேறிவிட்டார்கள்] அவர்கள் எனது கைகளைப்பிடித்தபோது எனது கை ஐஸில் வைத்துபோல் சில்லிட்டு நடுக்கியதை உணர்ந்தவர் ஏன்மா இப்படி சில்லுன்னு இருக்கு. பயமா என சொல்லிச் சிரித்தவர் மிக அழகாக நன்றாக பேசினாய் என கைகுலுக்கிக்கொண்டே இலக்கியத்தில் இன்னும், இதேபோன்றும் நிறைய தொடருங்கள் என்று வாழ்த்தி பாராட்டினார்கள்.

அடுத்து 

அண்ணா பல்கலைகழகத் துணைவேந்தர் டாக்டர் திரு மன்னர் ஜவஹர் அவர்கள் கையருகே நிலா என்ற நூலை வெளியிட கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள் நூலைபெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் கவிப்பேரரசுக்கு பேசுவதற்க்கு சொல்லித்தரவாவேண்டும் கவிநயம் கரைபுரண்டோட, வான்நிலாவைப்பற்றி பலவித கவிஞர்கள் பலவிதகோணங்களில் பாடியிப்பதைபற்றியும், அதே நிலாவை இன்று கையருகே கொண்டுவந்து வேறுகோணத்தில் காட்டிருப்பத்தைபற்றியும், மிக அழகாக எடுத்துரைத்தார்கள். அதோடு தான் திரையிசை பாடல்கள்பக்கம் போய்விடாமல் இலக்கியம் சார்ந்தே இருக்கவேண்டுமென திரு முஸ்தபா அவர்கள் தன்னை கேட்டுக்கொண்டதாகவும், அதற்க்கு இலக்கியம் சிறுகுடலை மட்டுமே நிறைக்கும், மற்றவையே பெருங்குடலையும் சேர்த்து நிறைக்கும் என்று தான் கூறியபோது, அக்குடலையும் நிறைப்பதற்க்கு தானே 2 கோடி தருவதாகவும், தாங்கள் இலக்கியத்திலே இருங்கள் என தன்னைச் சொல்லியதாகவும் அதற்கான காரணங்களை விளக்கி வியந்தார்.

அடுத்து

அறிவியல் விஞ்ஞானி டாக்டர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஏற்புரையாற்றினார்கள். தான் வந்தவழி, தன்னுடைய ஊர், எப்படி படித்தார்,எப்படி அறிவியல் விஞ்ஞானியாகி சந்திராயனை நிலவுக்குள் செலுத்தினார். நிலவில் தண்ணீர் இருப்பதை எப்படி அறிந்தார் என தன்னைப்பற்றி சொல்லி அனவைரையும் மலைக்கவைத்தார். அதோடு தான் இலக்கியம் செய்யவேண்டுமெனவும், தான் இந்நூலை கவிதையாக்க நினைத்தாகவும் அதனை உரைநடையாக்கும் சந்தர்ப்பமாக்கிவிட்டதெனவும் சிறிது வருத்தப்பட்டார். எழுத்துக்கள்மூலம் பிறரை நல்வழிப்படுத்தவும். அந்த எழுத்துக்களை வாசித்தே பெரிய சாதனைகள் புரியவும் முடியுமென்றார். தன்னுடைய வெற்றிக்கு காரணம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடாது பயன்படுத்திக்கொண்டதில்தான் என்று திட்டவட்டமாக கூறினார். அதேபோல் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது கொஞ்சம் இன்னும் கொஞ்சமென முன்னேறிசாதியுங்கள் என்றார். சற்றே பதட்டமாக பேசினாலும் மிகவும் சாந்தமாக அருமையாக பேசினார்கள். கையருகே நிலாவையே கொண்டு வந்தவராயிற்றே! இன்னுமுள்ள கிரகங்களை விரல் நுனியில் கொண்டுவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வளரட்டும் அவர்களின் அறிவு. கிடைக்கட்டும் இந்திய மக்களுக்கு இன்னும் பல கண்டுபிடிப்பு.


அவர் உரையாற்றி முடிந்ததும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டது கவிப்பேரரசு மேடையைவிட்டு இறங்கிவந்தபோது நான் எழுந்து அவரருகே சென்றேன். அருமையான குரல் மிக அழகான முறையில் வாசித்தீர்கள் வாழ்த்துகள் என்று பேசிக்கொண்டிருந்த நொடிகளில். பேச எழுந்த என் வார்த்தைகள் உள்ளுக்கு துடிக்க, உதடுகள் புன்னகையை மட்டுமே உதிர்த்தது. கவிதைக்குவியலின் எதிரே கத்துக்குட்டியாய் நின்றிருந்த நான் சிலநொடிகள் நிமிர்ந்துபார்த்தேன், உடை நடை பாவனை அனைத்தும் கவிதை சொன்னது, கருவளையமிட்ட கண்ணுக்குள் கவிதையின் ஊற்று கொப்பளித்துக்கொண்டிருந்தது. கையருகே நிலாவை காணவந்த நான் கண்ணெதிரே கவி உலா வந்ததை கண்டு வியந்தேன் அதுவும் என்னருகே  நின்று பேசியதை உணர்ந்து மகிழ்ந்தேன். மகிழ்ந்தபடியே எனது கவிதை நூலான “உணர்வுகளின் ஓசை” அவர்களிடம் கொடுத்தேன். ”ஓ இது உங்கள் நூலா” ஆமாம் ”இதற்க்கு” நான் சொல்லி முடிப்பதற்க்குள் நிச்சயம் இதைப்படித்து கருத்துக்கள் தருவேன் என சொல்லியபடி போய்வருகிறேன் என விடைபெற்று மின்னல் வேகத்தில் அரங்க வாசலை அடைந்தார்.

 இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு (1872 to 2010) என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், முன்னாள் டி.ஐ.ஜி. தேவாரம்,  இளையான்குடி முனைவர் முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) முன்னாள் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் M.A ஜெகபர் அலி, சென்னை M.N.J Group ஹாஜி ஜக்கரியா,  மற்றும் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி மிக சிறப்பாக நிறைவடைந்தது அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு நிற்கையில், திரு முஸ்தபா அவர்களும், சில பெரியோர்களும், எம் ஏ க்களும் எங்கள் அருகில் வந்தார்கள் மிக நன்றாக பேசினீர்களம்மா வாழ்த்துக்கள் என அனைவரும் பாராட்ட திரு முஸ்தபா அவர்கள் என்னைப்பற்றி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார்கள். ரொம்ப சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நன்றாக தொகுத்து வழங்கியமைக்காக திரு தியாகராஜன் அவர்களையும் பாராட்டினார்கள்.
இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்து எனது எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் மதிப்பளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும். திரு முஸ்தபா அவர்களுக்கும். இந்நிகழ்வைக்காண என்னை அன்போடு அழைத்துசென்ற மச்சானுக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்.. 
ஒரு சிலரே மற்றவர்களின் திறன்கண்டு மதிப்பளித்து அவர்களை அதற்குண்டானவைகளிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கென ஒரு அடையாளத்தையும் கொடுத்து தங்களின் நற்குணத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படியான ஒருவரில் திரு முஸ்தபாவும் அடங்குவார்கள் என்றால் அது மிகையில்லை.. கலாம் பதிப்பகம் எதிர்கால தலைமுறையை சிந்திக்க தூண்டும் வகையிலும். இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தி திறம்பட செயல்படவைக்கும் திறனாளிகளை உருவாக்கிடவும் திறனுள்ள படைப்புகளை வெளியிடவும் காத்திருக்கிறது. உணர்வுகளை உள்ளடக்கி எழுத்துக்களின் எழுச்சியை உண்டாக்கி பிறரையும் சாதிக்கத்தூண்டும்   தங்களின் எண்ணங்கள் எழுத்துக்களாகவும், அது பிறரை சென்றைடையவும் கலாம் பதிப்பகத்தை நாடுங்கள்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சொல்லத் துடிக்கும் மனசு

svr.pamini
மனசென்பது ஓர் மர்மக்கோட்டை
மந்திரமின்றி செய்திடும் பலபல சேட்டை
மதில்மேல் பூனையாகி- பிற
மனிதர்களையும் ஆடிடும் வேட்டை!

ஓரா யிரமென்ன ஓர் லட்சமென்ன
ஓடும் எண்ணங்களையெல்லாம்
ஒரு நிலைபடுத்திக்கொள்ளயியன்ற
ஓர் உன்னத மனப்பை-அது

வண்ண வண்ண கனவுகளில் மிதக்கும்
வரையரையற்று எல்லை மீறியும் நடக்கும்
வறுமைக்கும் பொறாமைக்கும் அஞ்சும்
வலிகளையும் வேதனைகளையும் தாங்கும்!

வஞ்சங்களையும் வாஞ்சைகளையும் தேக்கும்
வகுத்த பாதையிலும் வழிதவறாது பயணம் செய்யும்
சந்தேகங்களையும் சந்தோஷங்களையும் சுமக்கும்
சாதனைகளையும் சோதனைகளையும் வெல்ல நினைக்கும்!

சொல்லத் துடிக்கும் மனசு-அதனை
சொல்லத் தெரியாமல் துடிக்கும்
சொல்லில்லாது பேசிச் சிரிக்கும்-பலநேரம்
சொக்கவைத்து சிக்கலாக்கும்

பாதையில்லாது வெகுதூரம் நடக்கும்
சிறகில்லாது வானிலும் பறக்கும்
உருவமேயில்லாது வெகுலாவகமாய் நடிக்கும்-மனசு
உணர்வுகளால் மட்டுமே துடிக்கும்

மனசென்ற மாய மந்திரம்
மர்மங்களை உள்ளடக்கிய அபூர்வம்
மனமுடுக்கெங்கும் மகாசமுத்திரம்-அது
மனிதயினத்துக்கு கிடைத்ததோ
மாபெரும் வரம்...........

இக்கவிதை அமீரகத்தில் வலம் வரும் தமிழ்தேர் மாதஇதழில் வெளியான கவிதை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பள்ளிக்கூடம் போறேனுங்க!


 ரொம்ப நாளாச்சி உங்கக்கூட மனம்விட்டு பேசி. இடைப்பட இந்த ஒரு மாதகாலத்தில் என்னுடைய எந்த பதிவுக்கும் நான் உங்களுக்கு பதிலலிக்கவேயில்லை அது மன உறுத்தலாகவே இருந்தது அதற்க்காக அன்பு உள்ளங்கள் முதலில் மன்னிக்கவும்.


இந்த இடைவெளியெல்லாம் நான் பள்ளிக்கூடம் போவதால்தான் படிப்புக்கு வயதேது என்பதின்பேரில் தற்போது நான் பள்ளிக்கூடம் போகிறேன் . [என்னது பள்ளிக்கு படிக்கப்போகிறாயா என்ன கொடுமடி மலிக்கா இது அப்படிங்கிரீங்களா] அதே தான் படிக்கும் வயதில் படிக்கத் தவறியதை மீட்டெடுக்க ஒரு சந்தர்ப்பமாய். அமைந்த சந்தர்ப்பத்தை நல்லவிதத்தில் பயன்படுத்திக்கொண்டேன்.
இறைவன் சிலருக்கு நினைத்ததை உடனே கொடுப்பான் சிலருக்கு கொஞ்சம் லேட்டாய் கொடுப்பான் அதுபோல்தான் இதுவும். [இது ரொம்பவுல்ல லேட்டாவுலத் தெரியுது அப்படின்னு முணுமுணுப்பது கேட்கிறது ஹா ஹா] சரி விசயத்து வான்னு சொல்வதும் கேட்கிறது .


கடந்தமாதம்: ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் ரஹ்மத் மெட்ரிக்குலேஷசன் பள்ளியின் நிறுவனருமான முத்துப்பேட்டை திரு முஸ்தபா அவர்கள், நான் எழுதிய உணர்வுகளின் ஓசை கவிதை நூல். மற்றும் இணையத்தில் வலம்வருவதை அறிந்து என்னை அவர்களின் ரஹ்மத் பள்ளிக்கு அழைத்திருந்தார்கள். [ ஒண்ணுகூடிட்டாங்கன்னுப்பா ஒண்ணுகூடிட்டாங்க முத்துப்பேட்டை காராங்களெல்லாம் ஒண்ணுகூடிட்டாங்கன்னுப்பான்னு சொல்ல இப்ப ஓடிவருங்களே நம்ம சகோக்கள்] நானும் மச்சானும் சென்றிருந்தோம். ஒரே ஊருன்னாலும் அப்போதுதான் நேரில் இருவருமே பார்க்கிறோம். வசதி படைத்தவர் என்ற எண்ணமில்லாமல் மிக தன்மையாகவும் கண்ணியமாகவும் பேசினார்கள்.எழுத்துப்பணிக்கள் மற்றும் இலக்கியத்தை பற்றி பேசினார்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலமிருக்கும்மா, நம்ம ஊரு பெண்ணுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க என்னாலான உதவிகள் நிச்சயம் செய்வேன் என்றார்கள்.


எனக்குள் இருக்கும் எழுத்தார்வம்கண்டு . உன்னைப்போல் இங்கும் நிறைய மாணவிகள் கவிதை எழுதுகிறார்கள் அவர்களை இனம் கண்டுபிடித்து அவர்களுக்குள் இருக்கும் திறமைகளையும் வெளிக்கொண்டுவரமுடியுமா? என்றார்கள் நிச்சயம் முடியுமென்றேன். அதேபோல் வரும் மார்ச் 3ந் தேதி இப்பள்ளியில் நடக்கவிருக்கும் இலக்கியமன்றத்திற்கு உனக்கான வாய்ப்பைத் தருகிறேன், அதற்காக பள்ளிக்குழந்தைகளை தயார் செய்யமுடியுமான்னு கேட்டார்கள். மறுப்பின்றி வேகமாக தலையசைத்தேன். [எந்த ஒரு வாய்ப்பையும் வரும்போது தட்டிக்கழித்துவிட்டால் திரும்பவருமுன்னு சொல்ல முடியாதல்லவா?] நிச்சயமாக என்னால் முடிந்தளவு செய்கிறேன் என்றேன். நாளையிலிருந்து பள்ளிக்குவாருங்கள் எப்படி செய்யனுமோ அதன்படி திட்டமிட்டு செயல்படுங்கள். நிகழ்ச்சி அற்புதமாக இருக்கனுமென்றார்கள். உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சரி என தலையாட்டினேன்.உடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை அழைத்து விசயத்தை சொன்னார்கள். நாளையிலிருந்து மலிக்கா பள்ளிக்கு வருவார்கள் என்று அவர்களிடம் தகவலைச்சொல்லிவிட்டு. பொருப்பை என்னிடம் தந்துவிட்டு அன்றே அவர்கள் சிங்கை சென்றுவிட்டார்கள்.

அடுத்த நாள் காலை பள்ளிக்கு சென்றேன்.ஆசிரியையாக. [கடந்தகாலத்தில் மாணவியாக முதல் நாள் பள்ளிக்கு சென்ற நியாபகம் நினைவில் நிழலாடியது. ] முதலில் ஆசிரியர்கள் அறிமுகம். அப்புறம் 5 வகுப்பிற்கு விஜயம். எல்லாக் குழந்தைகளும் குட்மார்னிங் மிஸ் என்றதும் அப்பப்பா எனக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சி சிறகடித்துப்பறக்க இதெல்லாம் நிஜமாயென என்ற பிரம்மையிலேயே நின்றேன், பின் சுதாரித்து குழந்தைகளிடம் பேசினேன். நான் எதற்க்கு வந்துள்ளேன் என்று கொஞ்சம் பேசிவிட்டு கவிதை எழுதத்தெரியுமா என்றேன். சிலர் ”ம்” என்றார்கள் சிலர் அப்படின்னா என்றார்கள். உடனே கரும்பலகையில் இருவரி எழுதிக்காட்டினேன். இதேபோல் 2. வரி 4. வரி 6. வரி என எழுதலாம். நான் தரும் தலைப்பில் என்றேன் ஆர்வத்தோடு சரி என்றார்கள். என் தமிழ் என்ற தலைப்புக்கொடுத்து மாலைக்குள் எழுதி தாருங்கள் என்றேன், அனைவரும் தலையாட்டினார்கள். அடுத்தடுத்து மற்ற இரு வகுப்பறைக்கு போனேன். இதேபோல் வரவேற்ப்பு. நீங்களே தலைப்புவைத்து எழுதலாம் என்றும் சொல்லிவந்தேன்.

மாலைக்குள் அப்பப்பா என்னாலே நம்பமுடியவில்லை கவிதை மழை பொழிந்துவிட்டது காகிதங்கள் வழியாக.[3 வகுப்புகுழந்தை ஒன்று அம்மா என்ற தலைப்பில். அம்மா என்னை அடிக்கிறது எப்போதும் திட்டுகிறது அப்பா சம்பாரித்து தருகிறார் என்று சற்று எழுதுப்பிழைகளோடு எழுதிருந்தது.
பலவித தலைப்புகளில் சிலது படிக்கும்போது ஒரே சிரிப்பு, சிலது ஆச்சர்யம், சிலது புரிந்தும் புரியாமலுமென்று எனக்கு ரொம்ப சந்தோஷம்.அதேபோல் அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யம். இவர்களுக்கு இப்படியிருந்திருக்கு மிஸ். அப்பப்ப எழுதுவார்கள் ஆனால் இப்படியில்லபா என்றதும், எனக்குள் மகிழ்ச்சி. இனி இவர்களுக்கு இலகுவாக அருமையாக கவிஎழுத கற்றுக்கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது. என்னை நம்பி கொடுக்கப்பட்ட பொருப்பிற்க்கு சிறுவெற்றி கண்டாச்சி,

இனி அடுத்து இலக்கியமன்ற நிகழ்விற்கான தயாரிப்புக்கு இறங்கவேண்டும் என்று தமிழாசிரியை திருமதி செல்விமேரியை எனக்கு துணையாக வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். 6 மாணவிகள் பட்டிமன்றத்திற்க்கு.[பட்டிமன்றத் தலைப்பு கணிணி சமூகத்தை சீர்படுதுகிறதா?சீரழிக்கிறதா?]

 1 மாணவி பெண்ணிய கவித்தை பெண்ணே எழு!

4 மாணவிகள் நாட்டுப்புறபாடலிற்க்கு. [சோறு போடும் சேறு நாட்டுப்புறப்பாடல் ]

5 மாணவிகள் கவிதை அந்தாதியிற்க்கு [கல்வியின் அவசியம். கவிதை அந்தாதி.] என 16 மாணவிகள் தேர்வு செய்துகொண்டு கலத்தில் இறங்கியாச்சி.

எல்லாம் தயார் செய்து நாளை இலக்கியவிழா என்றிருக்க. முதல்நாளே சிறப்பு விருந்தினரின் [யார் அந்த சிறப்பு விருந்தினர் அது சஸ்பென்ஸ்]கட்டவுட் பள்ளியின் வாசலில் பிரமாண்டமாய் நிற்க. வந்துவிட்டார்கள் பள்ளியின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள் என்னை அழைத்து என்னமா எப்படியிருக்கு என்ன செய்யபோகிறாய் என நிகழ்வுகள் பற்றி கேட்டுவிட்டு கடைசியாக ஒரு குண்டை தூக்கிபோட்டார்கள். என்னாது அதுவா நிகழ்ச்சியை நீதான் தொகுப்பாளினி என்றார்களே பார்க்கனும் அச்சோ நானா சரியாக வருமா என்றேன். எல்லாம் வரும் நீயேதான் செய்கிறாய் என்றார்கள்.

எப்படி தொகுப்பது என்ன தொகுப்பது என எண்ணியபடியே பயம்பாதி அச்சம் பாதி இரவெல்லாம் தூக்கமில்லை. ஒருவழியாக விடிந்துவிட்டது மார்ச்-3 ந்தேதி மாலை 6 மணி.தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் ஸ்ரீ மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் [உ வே சா] அவர்களின் 8. ஆம் ஆண்டு இலக்கியமன்ற நிறைவு விழா சிறப்பு விருந்தினராக காந்திய இயக்கத்தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள்.வருகைதர நடுக்கமிருந்தாலும் தொடங்கிவிட்டேன் எனது தொகுப்பாளினியின் பணியை.இடையிடையே நம்மால் முடிந்த கவிதை வர்ணணைகளோடு தொடர்ந்தது தொகுப்புப்பணி.


எப்படி இதோ இப்படி.

[இது செய்திதாள்களுக்காக தரப்பட்ட செய்தி தொகுப்பு]

இம்மாதம் 3 -3 - 2012 அன்று முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் நடைபெற்ற தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் ஸ்ரீ மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் [உ வே சா] அவர்களின் 8. ஆம் ஆண்டு இலக்கியமன்ற நிறைவு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக காந்திய இயக்கத்தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களும்.மற்றும் இலக்கிய மன்றர் திரு ராஜ்மோகன் அவர்களும் மற்றும் பெரியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

திருமதி மலிக்கா ஃபாரூக் தொகுத்து வழங்க, இறைவணக்கத்தோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் இனிதே விழா துவங்க, போட்டியில் வென்ற மாணவிகளுக்கு திரு தமிழருவி மணியன் அவர்கள் கைகளால் பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்து பெண்ணியகவிதை, கவிதை அந்தாதி மற்றும் நாட்டுப்புறப்பாடலென கவிஞர் மலிக்கா ஃபாரூக் அவர்கள் எழுதிய, அனைத்தையும் மிகச்சிறப்பாக வாசித்தும், கிராமியமணத்தோடு பாடியும் மாணவிகள் அசத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து திரு ராஜ்மோகன் சிறப்புரை ஆற்ற, திரு தமிழருவிமணியன் அவர்களை மேடையேற்றி ரஹ்மத் அறக்கட்டள்ளை மற்றும் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிறுவனருமான திரு முஸ்தபா அவர்கள் பொன்னாடை போர்த்தியும். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சகுந்தலா அவர்கள் கேடயம் வழங்கியும் கெளரவித்தார்கள். அதன்பின்பு ”கணிணி சமுதாயத்தை சீர்படுத்துகிறதா! சீரழிக்கிறதா!” என்ற தலைப்பிற்கு பட்டிமன்றம் தொடங்க அதற்கு நடுவராக திரு தமிழருவி மணியன் அவர்கள் இருக்க, சூடாகவும் அதேசமயம் சுவையாகவும் தொடங்கிய பட்டிமன்றம் வெகு சிறப்பாக மாணவிகள் பேசி அனைவரையும் அசரவைத்துவிட்டார்கள்.

இறுதியாக திரு தமிழருவிமணியன் அவர்கள். குற்றால அருவியாய் தன் தமிழின உணர்வை குளு குளுவென்று உரை நிகழ்த்திய அதேசமயம் மாணவிகளை ஊக்குவிக்கும் வன்னமாக தமிழ்சார்ந்த கேள்விகளும் கதைகளும் சொல்லி 1.மணிநேரம் போனதே தெரியாமல் மெய்மறக்கச்செய்துவிட்டார்கள். திரு மணியன் அவர்களின் பேச்சில் ஒரு சாந்தம் அதே சமயம் ஒரு தமிழிய கம்பீரம் இருந்தது. அனைவருக்கும் அவர்களின் பேச்சை இன்னுமின்னும் கேட்க்கும் ஆவலைத்தூண்டியது. தமிழருவியென்ற பட்டம் அவர்களுக்கு மிக மிக பொருத்தமானது.

மேலும் தானே புயலுக்கான நிதி உதவி திரட்டுவதற்க்காக தான் துண்டேந்தி மாணவர்கள் முன்பு வருவதாக திரு தமிழருவி மணியன் அவர்கள் மேடையில் அறிவித்தபோது அதற்காக ரஹ்மத் பள்ளியின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள் 1 லட்சம் ரூபாய் உடனே கொடுப்பதாக அறிவித்தார்கள். துண்டேந்தாத அளவிற்க்கு நிதியை தந்து என்னை கெளரவப்படுத்திவிட்டார்களென்று திரு முஸ்தபா அவர்களைப்பற்றி திரு மணியன் அவர்கள் நெகிழ்ந்தும், அதனோடு தானே புயலுக்கு பள்ளிமாணவிகளும் நிதி திரட்டி தருவதாக அறிவிப்பு செய்ததும் அனைத்து நிகழ்ச்சிக்கும் மகுடம் வைத்ததுபோல் அமைந்தது.
இதனைத்தொடர்ந்து நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.
[இதோ இரு ஜீவன்கள் மூலையில் நிற்பது தெரிகிறதா. கருப்பும். ஊதாவுமாக. அது நானும் செல்விமேரியும்தான். ஹி ஹி]


இலக்கிய விழாவை மிக சிறப்பாக நடத்திக்கொடுத்தமைக்காக மலிக்காவுக்கு பாராட்டுகள் கிடைத்தது. திரு தமிழருவி மணியன் அவர்களிடம் உரையாடிவிட்டு எனது கவிதை நூலை கொடுத்தேன் படித்துவிட்டு நிச்சயம் இதற்கான கருத்துகள் தருவேன் என்றார்கள்.

அதிகம் படிக்காத நான் இப்படியான ஒரு நிகழ்வை செய்துமுடித்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இறைவனால் தரப்பட்ட இந்த எழுத்துக்களால் மனம் நிறைந்த மகிழ்ச்சியே! இன்னுமின்னும் நிறைய தமிழுக்காக செய்யனும். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

இந்த வாய்ப்பை தந்த பள்ளீயின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இலக்கிய நிகழ்ச்சிக்காக ஒத்துழைப்பு செய்த தலைமை ஆசிரியர் திருமதி சகுந்தலாஅவர்களுக்கும். மற்றும் என்னோடு  அனைத்திற்க்கும் துணையாக இருந்த திருமதி செல்விமேரி.திரு தியாகராஜன் அவர்களுக்கும். மற்றும் அனைத்து ஆசிரியைகள். மாணவிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்..
இந்த எழுத்துகள் அடுத்த ஒரு காரியத்தினையும் செய்ய வைத்தது இன்சா அல்லாஹ் அதனைப்பற்றிய அடுத்த பதிவில் எழுதுகிறேன்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இம்மாத லேடீஸ் ஸ்பெசல் இதழில் நான்.


என்னுடைய சிறு கட்டுரையான வாழ்ந்துபாரடி பெண்ணே! இம்மாத லேடிஸ்பெசல் மாத இதழில் வெளியாகியுள்ளது. எனக்கு கட்டுரை.மற்றும் கதை எழுதுவதைவிட கவிதைகளே அதிகம் எழுதவருவதால் இக்கட்டுரையிலும் அதன் சாரமே மிஞ்சி நிற்கும் பொருத்துக்கொள்ளுங்கள்..


அன்பு தேனக்கா [சும்மா] அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள்.
வலைப்பூக்கள் மாத இதழில் [லேடீஸ்பெசலில்] வலம்வருவதைகண்டு இணையதளம் எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். ஒருமுறை முகநூலில் தேனக்காவின்பேசிக்கொண்டிருந்தபோது இதுகுறித்து விபரம்கேட்டேன் அவர்களும் அதன் விபரம் சொன்னார்கள் அதன்பேரில் போனமாத இதழுக்கு அனுப்பச்சொன்னார்கள் என்னுடைய வேலைப்பளுயின் காரணமாக சென்றமாத இதழுக்கு அனுப்பயியலவில்லை. கொஞ்சம் லேட்டாக அனுப்பியதால் மார்ச்மாத இதழுக்கு எடுத்துக்கொண்டதாக கிரிஜாமேடம் சொன்னதாக தேனக்கா சொன்னார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக இப்படியொரு மாத இதழ் வருவது மிகவும் சந்தோஷப்படக்கூடிய ஒன்று. வீட்டுக்குள்ளே இருந்துக்கொண்டு எழுதும் பெண்களைக்கூட உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெசல் மாதஇதழக்கும் அதன் ஆசிரியை திருமதி கிரிஜா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெண்களின்  சின்னஞ்சிறு விசயமாகட்டும் சாதனைகளாகட்டும் அதனை வெளிக்கொண்டுவரும்போது எல்லையில்லா மகிழ்ச்சியடைவார்கள் அதனை செவ்வன செய்துவரும் லேடீஸ் ஸ்பெசலுக்கு மீண்டும் எனது உளமார்ந்த நன்றிகள்.

இதோ இணையத்தின் வாயிலாக 64 ம் பக்கம் படிக்க வாழ்ந்து பாரடி பெண்ணே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது