நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அரசியான கதை [பெயர் காரணம்]

 
 ஓலைக் குடிசை அதனை சுற்றி காவலிருந்த தென்னைவேலி. வேலியை தாங்கியபடி முருங்கைமரங்கள். அதிலிருந்து புறப்படும்குருவிகளின் கொஞ்சும் கானம்.கானத்தை காதில் கொண்டுவந்து சேர்த்தபடி  குளுகுளு தென்றல் அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கிச்சுகிச்சுமூட்ட, இரவுநேர இருளை கிழித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி வெளிச்சத்தை தானம் தந்துகொண்டிருந்தது நிலா.

நான்கைந்து குழந்தைகள் தரையில் அமர்ந்து கைகளை நீட்டியபடியிருக்க அதனை கிள்ளி கிள்ளி.
கிள்ளிப் பிராந்து கியப்பிராந்து கொப்பந்தலையில என்னாப் பூ முருங்கப் பூ முள்ளரிப்பழம் திண்ணட்டப் பூ பாடாகை சூடாகை பத்துமா நாச்சியார் பள்ளாக்கு. ந்னு சொல்லிக்கொண்டே முடித்து கையை திருப்பியபோது.

கள்ளாட்டம் இது கள்ளாட்டம் என் கையை திருப்பனும் அவ கையை திருப்பிட்டா. போடி மல்லி நெல்லி கொத்தமல்லின்னு ஒருத்தி சொல்ல.

ஹூம் ஹூம் அழுதுகொண்டே போய் எறிய மறுத்த அடுப்பை ஊதி எறிய வைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ”யாரும்மா எனக்கு இந்தபெயர் வச்சது.எல்லாரும் மல்லிக்கா நெல்லிக்கான்னும். மல்லி கொத்தமல்லின்னும் சொல்லுறாங்க. எனக்கு இந்த பெயரே பிடிக்கலை பணக்கார வீட்டுல பிறந்திருந்தா இதெல்லாம் சொல்லுவாங்களான்னு” சொல்லி அழுதப்ப.

அம்மா சமாதானம் சொல்லி இந்தபெயர் உங்க அப்பா[தந்தையின் தந்தை] வச்சது. அவங்க பொண்ணு ஒண்ணு மலிக்கான்னு இருந்ததாம் ரொம்ப சிகப்பா.ஆறடி கூந்தலோடு. மிகவும் அழகாக.[அழகா அப்படின்னாயின்னா நாமெல்லாம் அதில்கொஞ்சங்கூட இல்லைங்கப்பு..] சிறுவயதிலேயே எல்லாரையும் அனுசரித்து நடக்கக்கூடியதாகவும். ஒழுக்கமாகவும் எல்லாருக்கும் ரொம்ப செல்லபிள்ளையாகவும் இருந்ததாம். ஆனா கொஞ்ச வருசத்துல இறந்துவிட்டதாம்.அந்த பொண்ணுக்கு எல்லாரையும் பிடிக்குமாம். அதேபோல் அந்த பொண்ணுமேல் எல்லாருக்குமே பாசம் அதிகமாம்.அந்த பாசம்தானே பெண்ணுக்கு  வேணும்.

அதற்கு பின் நம்ம குடும்பத்தில் சில பெண்குழந்தைகள் பிறந்தும் அவங்களுக்கெல்லாம் இப்பெயர் வைக்கலையாம். நீ பிறந்ததும் இந்த பெயர்தான் வைக்கனுமுன்னு அப்பா கண்டிப்பா சொல்லிட்டாங்க.
இது ரொம்ப நல்லபெயர்டி செல்லக்குட்டி.பணக்காரவங்கண்ணா என்ன வானத்துலேர்ந்த வந்தாங்க. இந்த உலகத்துல பணம் காசெல்லாம் வரும் போகும். வரவேண்டிய நேரதில் எது வருனுமோ அதுதான் நமக்கு வரும் இறைவன் தரநினைச்சா சில நிமிடம்.

மலிக்கா ன்னா அர்த்தம் என்னா தெரியுமா அரசி.என்று நீ அரசியாட்டம் வாழவேண்டும். வாழ்வாய் பாரேன்.அதே சமயம் இறைவனுக்கு உகந்தவளாக இருக்கவேண்டும்.மற்றவங்க மனமறிந்து அவங்க மனம் கோணாம நடக்கவேண்டும். எப்போதும், போதும் என்ற குணம் இருக்கவேண்டும்.என்ன நான் சொன்னது புரிந்ததா. அதனால் இந்தபெயரில் ஒன்றும் குறையில்லை அதை நீ புரிஞ்சிக்கிடனும்

பசங்கண்டா அப்படியும் இப்படியுந்தான் எல்லாத்துக்கும் கேலிசெய்வாங்க அதுக்கெல்லாமா அழுவாங்க போய் விளையாடுமா என்று சொல்ல. அழுத கண்ணை துடைத்தபடி ஹை அப்ப நான் அரசியா! என்று அம்மாவிற்கு முத்தம் தந்துவிட்டு. நீங்க சொன்னமாதரியே இருப்பேன் சரியாம்மான்னு கேள்வியும்கேட்டு தானே பதிலும் சொல்லிவிட்டு. அரசியென்ற மிடுக்கோடு மீண்டும் விளையாடத் தொடங்கிச்சாம் அந்த குழந்தை.அதாவது இந்தக் குழந்தை.

பெயர்காரணம் சொல்லச்சொல்லி கோபியண்ணா கேட்டு 1 மாதம் ஆகியிருக்குமுன்னு நெனக்கிறேன். என்ன செய்ய கவிதையின்னா கிடுகிடுன்னு வந்திடுது. சொந்தகதையின்னா ம்ஹூம் வரவேமாட்டேங்கிறது எப்படியோ எழுதிட்டேன். அம்மா சொன்ன என்பெயர் காரணம் பிடிச்சிருந்தது.
மதபடி பெருசா காரணம் ஒன்றுமில்லை.

அரசவையில் அரசியாக மணிமகுடம் சூட்டி வாழ்ந்தால்தான் அரசியென்றில்லை. பெற்றவர்களின் மனமறிந்து. கணவரின் உள்ளத்தில் அன்பால்ஆட்சி செய்தாலே அனைத்தும் கிடைத்துபோல்தானே. அன்று ஓலைக்குடிசையில் ஓராயிரம் கனவுகளோடு, மனம்நிறைந்த பாசத்தோடு என் அம்மா சொன்ன வார்த்தைகளும். அவரின் கனவுகள் இதோ இன்று நிஜமாய் அனைத்தும் கிடைத்துவிட்டதுபோன்ற திருப்தி.

இது போதுமென்ற மனமும். இறைவனை நேசிப்பதால் இன்பமும். அரசன்[மச்சான்] நெஞ்சில் அரியணையென்ற அன்பும். குழந்தைகள் நெஞ்சில் கிரீடமென்ற பாசமும் திழைக்க வாழ்வது பெருமையாக உள்ளது.

இதற்கு இறைவனுக்கே நன்றி சொல்லவேண்டும்.நிம்மதியும் மனதிருப்தியும் பணத்திலோ! செல்வத்திலோ! இல்லை. அது அவரவர் மனங்களை பொருத்தது என்பதை உணர்ந்துகொண்டு வாழ்வதால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள்கூட வெற்றிக்கான அறிகுறியாகவே தெரிகிறது. இறுதிவரை இதேபோன்ற மனநிலையையே தரும்படியே எந்நேரமும் என் வேண்டுதலும் இருக்கிறது.

மற்றவர் மனதில்நான் எப்படின்னு இருக்கேன்னு தெரியவில்லை.ஆனா அம்மா சொன்னதுபோல் பெத்தவங்கபோல மத்தவங்களுக்கும் என்மேலே பாசமாயிருக்கனும் அது இறைவன்தான் அருளனும். என்னால் பிறர் மனது சிறிதளவேனும்  சிரமப்பட்டுவிடாதபடி நடந்துகொள்ளவே விரும்புகிறேன். நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் என் பெயரையும் நினைச்சிக்கோங்க . உங்கள் பாசத்திலும் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் ..

என் செல்லக்குட்டி இன்று தன் வலையில் என்ன பதிவிட்டிருக்குன்னு பார்த்துவிட்டுபோங்களேன்..

அன்புடன் அரசி.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது