நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொட்டச்சி.பெண்சிசுகள் கருக்கலைப்பு 
பெண்குழந்தைகள் கற்பழிப்பு 
பெண்மானம் அவமதிப்பு 
பெண்மன எண்ணம் நிராகரிப்பு
பெண் ஆணுக்கொரு பொழுதுபோக்கென
         
கண்ணெதிரே அநியாயங்கள் 
கண்ணிமைக்கும் கொடுஞ்செயல்கள்
கண்டும் காணாததுபோல்
என்னுடலைமட்டும் நகர்த்துகிறேனே  
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

உண்மைகளை ஊமையாக்கி       
பொய்மைகளை புண்ணியமாக்கி
அரங்கேற்றுவதைக்கண்டும் பொம்மையாய் 
தலையாட்டித் தவிக்கிறேனே  
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

பொல்லாப்புகளும் பொல்லாங்குகளும்
போட்டிப்போட்டுக்கொண்டு
நியாயத் தராசின் முள்ளுடைப்பதைக்கண்டும்
மூக்குநுணிவரை வந்த கோபத்தை
மூக்கைச்சிந்தி போட்டு முனங்குகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!   

எழுந்தால் குற்றம் எழுதினால் குற்றம்  
பழகினால் குற்றம் பதறினால் குற்றமென 
எதற்கெடுத்தாலும் இச்சைகற்பிக்கும்
இழிந்தோர்களை 
இழிக்கமுடியாமல் புலம்புகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!    

விடிய விடிய காத்திருந்து
விடியும்தருணம் கூவிவிட்டு 
விடிந்தபின்னே அடங்கிடக்கும் 
பெட்டையாகுதே பெண்பொலப்பு
பொல்லாரின் வாயடைக்க வழியற்று
வசவேற்று நிற்குதே நாதியற்று.

திடமிருந்தும் திராணியற்று
துணிவிருந்தும் செயலற்று
மதியிருந்தும் சதிகெடுக்க
வெட்டித் தீர்ப்பதுபோல் எழும் 
வீரதீர எண்ணங்களை 
எழுத்துக்களுக்குள் மட்டும்
வெற்று வசனங்களாய் கொட்டித்தீர்த்துவிட்டு

சட்டிக்குள் கொதித்தடங்கும் நீராய்
சப்பென்று ஆகிறேனே எதற்கும் 
சக்தியற்றவளாக போகிறேனே !
என்னதான் செய்ய முடியும்
நானே ஒரு பெண்பாவ பொட்டச்சி...
                 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது