நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரண தண்ட[வேத]னை...
தூக்குகயிறறியாது
தொங்குபவரின் துக்கமும், தொண்டைக்குழியின் சத்தமும்
வன்மம்கொண்ட மனமறியாது-பிறர்
வாழ்க்கையின் மகத்துவமும் உயிரின் மேன்மையும்...

மரணவலி மனிதர்களுக்கு ஒன்றுதானே
துடிக்கும் உயிரை
துடிக்க துடிக்க கொல்லுகையிலும்
தூக்குக்கயிற்றில் தொங்கவிடுகையிலும்....

இருள்
நீங்கா பொழுதொன்றில்
நீதி அநீயிழைத்ததா?
இல்லை
நீதிக்கே அநீதம் இழைக்கப்பட்டதா?
என்றறிந்துமறியா நிலையில்-
நிசப்தங்களாய் சில நிழல்கள்...

முற்றும் துறந்த நிலையில்
மூச்சடக்கப்போகும்-தன்
முன்தொங்கும் கயிற்றின் வழியே-இறுதி
மூச்சுக் காற்றினை உள்ளிழுத்த
நெஞ்சுக்குள் நிலைகுலைக்கும் பேரிடிகள்...

தீவிரங்களாய் சில தீர்ப்புகள்
தீவிரவாதிகளின் உயிரெடுப்பதற்க்கு
தீட்டுவது சரிதான்--ஆனால்
தீவிரவாதிகளென அப்பாவிகளின் உயிர்கள்
தீர்க்கப்படாமல் காக்கவேண்டுமே நீதிதான்...

தீவிரவாதம்
ஒருபோதும் ஏற்க்கபடவேண்டிய ஒன்றல்ல
ஒழித்தழிக்கப்படவேண்டிய ஒன்று
ஒழிப்பதாய் எண்ணி ஒடுக்கப்பட்டோர்கள்
அழிக்கப்படுவதும் நன்றல்ல..

நீதி தேவதையே!
உன் கண்ணைக் கட்டியது எதற்க்கு?
அநீதங்கள் அரங்கேறுகையில்
நீ கதறியழுவது கசிந்திடக்கூடாதென்பற்கா?

நீதி தராசே!
உன் முட்கள்
சத்தியங்களால் மட்டுமே சமமாகட்டும்!
தீர்ப்பெழுதும் எழுதுகோளே!
உன் எழுத்தாணி
உண்மைக்கு மட்டுமே தலைசாய்க்கட்டும்...

----------------------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது