நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆதலால் காதலிக்காதே!


காதலிக்காதே!

கனவுகள் மெய்படட்டும்
கண்ணீர் பாதுகாக்கப்படட்டும்
கற்பனைகள் பொய்யாக்கபடட்டும்
கள்ளத்தனம் குடியேராதிருக்கட்டும்

காதலிக்காதே!

கிறுக்கல்கள் கவிதையாகதிருகட்டும்
காகம் குயிலாகாதிருக்கட்டும்
கனவுகளுக்கும் ஓய்வு கிடைக்கடும்
கடலலைகள் கலங்கப்படுத்தாதிருகட்டும்!

காதலிக்காதே!

தொண்டைக்கும் வயிற்றுக்குமிடையில்
துன்பங்கள் சேராதிருக்கடும்
இமைகளுக்கும் விழிகளுக்குமிடையில்
இன்னல்கள் கூடாதிருக்கட்டும்
தனிமைக்கும் கூட்டத்திற்கும் நடுவில்
தவிப்புகள் நிகழாதிருக்கடும்
இரவுக்கும் பகலுக்குமிடையில்
ஏக்கங்கள் தொடராதிருக்கட்டும்!

காதலிக்காதே!

நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்
நிகழ்காலம் நின்றுவிடாமலிருக்கட்டும்
நிம்மதி பறிபோகாமலிருக்கடும்!

காதலிக்காதே!

கம்பனுக்கும் கவிக் கிறுக்கனுக்கும்
வித்தியாசம் தெரியட்டும்
உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்
வித்தியாசம் விளங்கட்டும்
வறுமைக்கும் வசதிக்கும்
வம்புகள் வராமலிருக்கட்டும்.!

பாவற்காய் கரும்பாகி!
பாம்பு கயிறாகி!
பச்சைத்தண்ணீர் பாலாகி!
பார்ப்பத்தெல்லாம் பரவசமாகி!
கிறுக்குப்பிடித்து! தனியே சிரித்து!
உருக்குழைந்து! ஒளிந்து அழுது!

இப்படி! - - இப்படியெல்லாம்
நிகழாதிருக்க வேண்டுமெனில்
காதலிக்காதே!
காதலை அலைக்கழிக்காதே!

இலண்டன் வானொலியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்படும்
எனது கவிதை.

ப்ரியத்தின் வெளிப்பாடு!இருபது வருட ஆவல்
இனம்புரியா இதயத்தின் தேடல்
அன்புகொண்டவர்களை இணைத்தது
இணையத்தின் சாதனை
இணைந்த மனங்களுக்கு கிடைத்தது
ஆத்மார்த்த நட்பின் ஆராதணை
 
நட்பு என்னும் பந்தமொன்று
நெடுநாளானபின்னும் படர்ந்து வந்து
நெஞ்சத்துக்குள் நுழைந்துகொண்டு
நேசப்பூக்களை பூத்துச் சொரிகிறது
 
கொடுக்கல் வாங்கலில்
அன்பு அதிகரிக்கும்
அன்பை கொடுக்க கொடுக்க
ஆத்மா மகிழ்வடைந்தும்
அன்பு கிடைக்க கிடைக்க
ஆத்மா நிறைவடைந்தும்
 
இயற்க்கைமீது இச்சைகொண்ட பச்சை
இதோ என்மீதும் கொண்டதுபோல்
எங்கிருந்தோ எனை நினைத்து
எனக்காக தேடியெடுத்து
இதயக்கண்ணால் எனக்கு போட்டு அழகுபார்த்து
ஹாஜியிடம் அனுப்பிவைத்த
இளம் பச்சைநிறத்து கழுத்தணியும் காதணியும்
அணிகலன்களாய் என்னிடம் வந்து சேர்ந்தது
 
எல்லையில்லா அன்புகோர்
எடுத்துக்காட்டு இதையென்பேன்
பாசம் தந்த பரிசுயிதை
பலங்காலந்தொட்டு வைத்திருப்பேன்
அன்பென்னும் அகராதிக்கு
அஸ்மா என்னும் நட்பை மொழிபெயர்ப்பேன்..
=============================================

நாம் எதிர்பார்க்காமல் நமக்கு பிடித்தது நடந்தால் எப்படியிருக்கும,அதைவிட மேலாக இருந்தது இந்நிகழ்வின் சந்தோஷம். என்மீது அஸ்மா அக்காவிற்க்கு எத்தனை ப்ரியம் அதனை வெளிப்படுத்தியது இந்தச்செயல்.

இவ்வருடம் ஹஜ்ஜிக்குசென்றிருந்த எனது நாத்தனார் அவர்களை, நேரில் சென்று பார்த்ததோடு, எனக்காக இந்த நெக்லஸ் செட்டையும், அனுப்பியிருந்தார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்தாலென்ன! கண்டங்கள்தாண்டி இருந்தாலென்ன! உண்மை நட்பு என்றேனும் ஒருநாள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் என்பதை சாத்தியமாக்கியது எங்களின் குரல்வழியே இதயங்களின் சந்திப்பு. இறைவன் நாடினால் வெகுவிரைவில் நேரிலும் சந்திப்போம்.

அக்கா நீங்கள் அனுப்பிய
நட்பின் அடையாளத்திற்க்கு நன்றிசொல்லபோவதில்லை 
அன்பாய்  அதீதப்ரியமாய்  
ஆத்மார்த்தமாய் எனக்குள் நீங்கள் குடியேறிக்கொண்டதால்..

இப்படியும் நடக்குமா?
இதையும் கிளிக் செய்து பார்க்கவும்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தூர்வாரச்சொல்லி.விழிகள் துயில்கொள்ளும்நேரம்
வான்[நிலா]விளக்கு துயிலெழும்பி
இருளுறக்கத்தைக்  களைத்து
விளையாட அழைக்க

ஆர்ப்பரிக்கும் அலைகடல்
அலைகளற்று அமைதியாயிருந்தபடி
ஆசுவாசப்படுத்திக்கொண்டே
நுரைத்து நுரைத்து கரையைத் தடவ

நிலவும்  இருளும்
கலந்தன
கடலும்  நிலவும்
மிதந்தன

தூங்காமல் தவிக்கும் உணர்வுகளோ 
தூந்துக் கிடக்கும் மனக்கிடங்கை
தூர்வாரியிறைக்கச்சொல்லி
தவித்தன

 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் .

!உற்பத்தியாகிறது!

 
 
மெழுகை உருக்கும்
 "தீ"
என் மனதை உருக்கும்
 "நீ"
 
உருகி வழியுது
"மெழுகு"
வலித்து வடியுது
"உணர்வு"
 
உருகும் மெழுகு
"மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
 
ஆனால்!
"உன்"
நினைவு
 
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும்
கண்ணீராய்,,,
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உயிர்களின் ஓலம்!ஆலோலம் பாடவேண்டிய
பச்சிளங்களைக் கொன்று         
உயிர்களின் ஓலம்
உலகெங்கும் கேட்கும்படி
பாதகச்செயல் புரிந்து
வாரிசுகளைக்கூட
வேரறுக்கப் பார்க்கும்
வல்லூறுகளே!

குற்றுயிரும்
குலையுயிருமாய்
துடிக்கிறது குழந்தை
கொடும்பாவிகளே உங்கள்
கோரச் செயல்களால்!
இதைப்பார்க்கும் கண்களெல்லாம்
தாரை தாரையாய் கண்ணீர் வடித்து
வெடித்துச் சிதறுகிறதே உள்ளம்
உணர்வுகள் கொதிப்பதால்!
மனிதப் போர்வையில்
மனமில்லாமல் திரியும்
மடமைவாதிகளே!
விதைகளை அழித்துவிட்டால்
விரிச்சம்பெறா தென்றா
வீராப்போடு அலைகிறீர்கள்!
குழந்தைகளின்
குருதி குடித்து 
வெறிப் பிடித்தலையும்
வேததாரிகளே!
 இதோ!!!
இதே நிலையில்
உங்கள் குழந்தைகளை
நீங்கள் காண நேர்ந்தால்!
இப்படியான சூழ்நிலை
உங்களுக்கு வந்தால்!
ஆடாதா தசை!
அலறாத உயிர்!
துடிக்காத உணர்வு!
சிலிர்க்காத தேகம்!
தவிக்காதா மனது!
சிதறித் தெறிக்காதா சிந்தை!
இரக்கமில்லா
இழிச்செயல்களை செய்யும்
ஈனப்பிறவிகளே
ஈரமில்லா இச்செயல்களால்
உங்கள் செல்வாக்கு நிலைத்திடுமா!
 
உணர்வில்லா ஜடமாய்
உயிர்கொன்று விளையாடுகிறீர்களே
எதனை சாதிக்க! எதனை வெல்ல!
உயிர்களை சாகடித்து  வெல்லும்
உங்கள் இந்த சாதனை
உங்களுக்கு மரணமில்லா
வாழ்வைத் தந்திடுமா?
அநீதி இழைக்கும்
அகம்பாவக்காரர்களே!
ஆட்டமெல்லாம் இவ்வுலகில்மட்டும்தான்
அகில உலக ரட்சகனிடம்
அத்தனைக்கும் சொல்லவேண்டும் பதில்!
நிழலேயில்லாத அந்நாளில்
நிர்கதியாக்கப்படும் வேளையில்
கிடைக்காதே ஒருபோதும்
இதுபோன்ற பாதகக்காரர்களுக்கு
அர்ஷின் நிழல்!
 அக்கிரமங்களை செய்வோருக்காக
அகோரத்தோடு காத்திருக்கிறது
அடித்தட்டு நரக நெருப்பு
அஞ்சிக் கொள்ளுங்கள்
அகிலத்து இரட்சகனை
இல்லையெனில்
அலைக்கழிக்கப்பட்டு நஷ்டமடைவீர்கள்..
------------------------------------------------------------------------
யா அல்லாஹ்.
காப்பாற்றுவாயாக! உன்னால் மட்டுமே முடியுமென்று                             உன்னிடமே சமர்ப்பிக்கிறோம் எங்கள் பிராத்தனைகளை! வழிதவறி நடபோருக்கு நேர்வழியை காட்டுவாயாக! வலியோடு தவிப்பவர்களுக்கு வசந்தத்தை தந்தருள்வாயாக..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

மை மை மை.

 
உயிர் தருதல்
உருக் குலைதல்
உள்ளம் கொடுத்தல்
பெண்”மை”

 ஆர்ப்பரித்தல்
ஆழ்ந்துரைத்தல்
அரவணைத்தல்
ஆண்”மை”
 
உயிர் வதைத்தல்
உணர்வுடைத்தல்
நிலைகுலைத்தல்
பொய்”மை

உயிர் கசிதல்
உள்ளம் உடைதல்
நிலை குலைதல்
ஏழ்”மை”
 
இதயம் தொலைத்தல்
ஈர்த்து எடுத்தல்
இன்பம் நிறைத்தல்
இள”மை”
 
மதி மயக்கல்
மனம் கெடுத்தல் 
பேருண்மையும் மறை[த்]தல்
கண்”மை”
 
நிலைநிறுத்தல்
நிமிர்ந்து நடத்தல்
நீதி தழைத்தல்
நேர்”மை”
 
சுயம் காத்தல்
செயல் படுத்தல்
சுமை குறைத்தல்
திற”மை”
 
மனம் சிறத்தல்
நிலம் சிறத்தல்
செழி செழித்தல்
தூய்”மை”
துன்பம் சகித்தல்
தூசென நினைத்தல்
துவழாது இருத்தல்
பொறு”மை”

 
இவையணைத்தையும்
எனக்குணர்த்தி
எம்”மை”யும் எழுத வைத்த[ல்]து
மை மை மை உண்மை...
 
மை. தலைப்பிற்காக எழுதியது. அமீரக தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளது..
நன்றி வானலை வளர்தமிழ்..
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாசிக்கிறேன் இறைவா!


பசித்திருக்கிறேன்
தனித்திருக்கிறேன்
விழித்திருந்து நான்
விம்மிக்கரைகிறேன்
இறைவா உனக்காவே!

அழுது துடிக்கிறேன்
தொழுது நிறைக்கிறேன்
ஆன்மதிருப்தியை
அடைய நினைக்கிறேன்
இறைவா எனக்காவே!

எங்கிருக்கிறாய் எங்கிருக்கிறாய்
என்று நானும் தேடியதில்லையே
இறைவா உனை ஒருபோதுமே!
இங்கிருக்கிறாய் எங்குமிருக்கிறாய் என்று
எந்நாளும் சாந்திக்கொள்ளுமே
எந்தன் நெஞ்சமே!

பாவி நானுமே பாவி நானுமே
பதறித்துடிக்கிறேன் -
நீ என்
பாவங்களைப் போக்கிட

பாவை நாளுமே பாவை நாளுமே
கதறியழுகிறேன் -
நீ என் குற்றங்
குறைகளை நீக்கிட

இருக்கும் வரையிலே இருக்கும் வரையிலே
இவ்வுலகில் நானுமே!
இறையைமட்டுமே ஓர் இறையமட்டுமே
வணங்க வேண்டுமே!

பாழும் உலகிலே பாழும் உலகிலே எனைப்
படைத்த இறைவனே!
பயபக்தியை பயபக்தியை
எனக்குள் ஊறச்செய்திடேன்

காலை மாலையில் இரவுவேளையில்
உன்னை வணங்கவே!
காத்துகிடக்கிறேன் காத்துகிடக்கிறேன்
இறைவா
உன்மீது கொண்ட அன்பிலே!

உள்ளக்கிடங்கிலே! உள்ளக்கிடங்கிலே
உன்னைக் காணவேண்டியே
ஊறும் ஆவலோ ஊறும் ஆவலோ
ஊற்றெடுக்குதே!

உதிரமுழுவதும் உதிரமுழுவதும்
உன்னை நேசித்தே
உணர்வுமுழுவதும் உணர்வுமுழுவதும்
உன்னிடமே யாசித்து நிற்க்குதே!

மரணித்த பின்பிலே மரணித்த பின்பிலே
மண்ணறை வாழ்கையிலே
இறைவா!
சொர்க்க வாசலை சொர்க்க வாசலை
திறந்து வைத்திடேன்

மறுமை நாளிலே மறுமை நாளிலே
நிழலில்லாத அந்நாளிலே
உனது
அர்சின் நிழலிலே அர்சின் நிழலிலே
எனக்கும் ஒரிடத்தை கொடுத்திடேன்.

கேள்விக்கணகின்றியே கேள்விக்கணகின்றியே
சொர்க்கம் செல்லவே
எந்தன் இறைவனே ஏக இறைவனே
எனக்கும் ஒரு வாய்ப்பை தந்திடேன்
என் குடும்பத்திற்க்கும் சேர்த்து தந்திடேன்....
----------+---------------------+------------------------+-----------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இவைகளின் காரணகர்த்தா!
உணர்ச்சிக் கேணிக்குள்
ஊறிக்கொண்டேயிருக்கும் கழிவுகள்
உடற்கேணியின் வழியே
கொப்பளித்து ஒழுகும் சீழ்களாய்!

விரசங்களோடு
சரசங்கள் செய்ய துடிக்கும்
விசித்திர உடலுக்குள்
வித வித மாற்றங்கள்!

காரணங்கள் புரியாத
செயல்களுக்கு
காரணங்களை தேடியலைந்து கலைக்கும்
தெருநாய் செய்கைகள்!

உடலுண்ண
உள்ளம் கொல்லும்
மாயைகளாய் மாறிபோகும் மனதுக்கு
பரிந்துரைக்கும் உள்மன விகாரங்கள்!

பாவசெய்கைகள்கூட
புண்ணியமாய் கருதும்
காலத்தோடு
ஒத்துப்போக நினைக்கும் நியாயங்கள்!

கூவமாகிக் கிடக்கும்
சாக்கடைக்குள் குளித்தெழுந்து
சந்தனமாய்
உணர்த்தித்திரியும் உடற்கட்டுகள்

வேலிதாண்டநினைக்கும்                                                                             தாலிகளுக்கு
உடந்தையாகித் திரியும்
தயாள குணங்கள்!

"இவைகளின் காரண கர்த்தா"
எங்கு நோக்கினும்
மோக யாகம்!
எதை நோக்கினும்காம ருத்ரம்!

மோகத்தீயில்

வேக நினைக்குது பல தேகம்
காம ருத்ரதில்
காணாது போகும் கலாச்சாரம்..


-----------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மூன்றுக்குமிடையில்,,,


தவறு என்கிறது
மனசாட்சி
சரி என்கிறது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.

வேண்டாம் என்கிறது
மனசாட்சி
வேண்டும் என்கிறது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் ஒன்றுதான் என்கிறது
குறுக்குபுத்தி,.

நிறைவு என்கிறது
மனசாட்சி
நிறைவில்லை என்கிறது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது

குறுக்குபுத்தி,.

நிம்மதி தேடுது
மனசாட்சி
நிம்மதியை தொலைக்குது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.

உண்மையை விரும்புது
மனசாட்சி
பொய்மையை விரும்புது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் ஒன்றுதான் என்கிறது
குறுக்குபுத்தி,.


நிலைக்கத் துடிக்குது
மனசாட்சி
நிலைகுலையத் துடிக்குது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழிக்கத்தெரியாமல்
கவுந்து கிடக்குது
குறுக்குபுத்தி

எதுவும் புரியாமல் தவிப்பதே
எனது நிலையாச்சி,..
---------------------------------அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது