நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
என் பார்வையில் சமூகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் பார்வையில் சமூகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓ இதுதான் சமூகமா?



தன் தலைவனின்
சுவரொட்டிகள் ஒட்டபட
சூடுபரக்க காய்ச்சப்படுகிறது பசை
கிழிந்துகிடக்கும்
தன் வாழ்க்கை ஓட்டையை
அடைக்க வழியின்றி..

கூடிஉதவும் கூட்டுக் குடித்தனத்தில்
உடன்படாத உள்ளங்கள்
கூக்குரலெழுப்பினாலும் ஓடிவராத
அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆசைப்படுகிறது
விட்டுக்கொடுக்கும் மனமின்றி..

நியாயமான முறையில்
நேர்வழியில் செல்லக்கூட
குறுக்குவழியை கற்றுகொடுக்கும்
நேர்மையற்றோரின் நெஞ்சங்களால்
நிர்ணயிக்கப்படுகிறது
லஞ்சமென்ற மொய்கள்
அன்பளிப்பென்ற பெயரால்..

வாடும் வறுமையை போக்கிட
வாங்கிடும் பணம்
பெருக்கல் இல்லாமலே
பெருகிப்போய்
வாட்டி வதைக்கும் ஏழை மனங்களை
வட்டியென்ற கொடுமையால்..

அக்கரைகொண்ட அறிவிப்புகள்
குடி குடியை கெடுக்குமென்று
அது அடுத்தவனின்
குடியைதானே கெடுக்கும்
அறிவிக்கும் குடும்பத்தையல்ல
என்பதைபோல்..

பூவுலகில் வாழ
புண்ணிய வழிகள் பலயிருந்தும்
பூவுடலை புலக்கடையில் விற்று
புண்ணாகி பிறரையும் புண்ணாக்கி
பால்பட்டுப் பட்டமரமாகிய
விபச்சார வர்கம்
வெந்து சாகிறது வேதனை தாங்காமல்..

வீட்டுக் கதவு திறந்தே கிடந்தும்
சுகந்தமான காற்றை சுவாசிக்க
வெளிக்காற்று உள்ளே வருவதில்லை
வாசலில் வளர்ந்த மரங்களையெல்லாம்
குப்பைகளாக்குகிறதென சொல்லி
கொன்றுபோடுவதால்..

தன்வீட்டில் நடக்கும் அசிங்கங்களை
மறைக்க நினைக்கும் மனங்கள்
அடுத்தவீட்டு விவகாரத்தை
கண் வைத்து கைகால் வைத்து
கட்டுக்கதையாகி பற்றி எரியவைக்கும்
காட்டுத் தீயைப்போல்..

இப்படியான  சமூக நிகழ்வுகள்
இனிமேலாவது உருவாகாமலிருக்க
இனிய எண்ணம் கொள் நல்மனமே
இனி என்றும் மகிழ்வாகும்
இந்த சமூகமே!...

டிஸ்கி// அன்று எழுதியகவிதை முன்பு போட்டேனான்னு நியாபமில்லை. இருந்தாலும் மீண்டும். யோசிக்க நேரமில்லீங்கோ அதேன் இப்படியெல்லாம் ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வீட்டுக்கு தூரம்

கோவை: கின்னஸ் சாதனைக்காக, 1001 கவிஞர்கள் பங்கேற்கும், 72 மணி நேர தொடர் கவியரங்கம். கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம்,கோவை அரிமா சங்கம் ஆகியவை தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்தியதல்லவா அதற்காக இரு கவிதைகள் அனுப்பிருந்தேன், [என்கவிதை ”தமிழ்குடில்” குரூப்பால வாசிக்கபட்டதாம்] அதில் ஒன்றுதான் இக்கவிதை.

 வீட்டுக்கு தூரம்


கழிவறைக்கும் கையில் இரும்பு
கால்மாட்டில் துடைப்பம்
தலைமாட்டில் உலக்கை
தனி பாத்திரம், தனித்த படுக்கை
தனிமைச்சிறை.

இன்னும்
எதைத் செய்தாலும் குற்றம்- மாதத்தில்
ஏழு [மூன்று] நாள் மட்டும்!

தண்ணீர் ஊற்றாதே!
பூக்கள் கருகிவிடும்.
ஊறுகாயை தொடாதே!
ஊசிப்போய்விடும்.
தீபம் ஏற்றாத்தே!
தெய்வ குற்றம் ஆகிவிடும்.
தனியே செல்லாதே
பேய்கள் பிடித்துவிடும்!

இதென்ன கொடுமை
இயற்கை உபாதைக்கு
இவளுக்கு எதுக்கு தண்டனை ?
மாத விலக்கால்
மடி தரும் வலி -அதோடிந்த
மனித விலக்கால்
மனம்  நிறைந்த வலி
 
தீண்டாமை தொடங்குமிடம் எதுவோ?
தீட்டென்னெச் சொல்லி
தள்ளி வைக்கப்படும்
தன் வீட்டில்தானோ!..
----------------------------------------
 400 த்தாண்டி 402 வது எனது பதிவில் சந்தோஷப்படவேண்டிய இருவிசயங்கள்.
 ஒன்று சகோ செய்தலி கொடுத்த அன்பு விருதும். மற்றொன்று. கணேஷாண்ணா. மற்றும் செய்தலி  தொடர்ந்து என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான். இரு சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஊடகம்..



நல்லதை நாடறிச்செய்யும்
நற்போக்குவாதி!
தீயதை சுட்டிக்காட்டியெரிக்கும்
நெற்றிகண்யோகி!

நலவையும் எழவாய்க் காட்டி
எழவையும் நலவாய்க் காட்டும்
எந்திரப்பேனா!
நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி
நடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்
மாய மை!

ஊடலென்ன கூடலென்ன
ஊர்வம்பை விலைக்கு வாங்கி
உண்மையென்றும் பொய்மையென்றும்
ஊதலில்லாமலே
ஊதிப் பெரிதாக்கிடும் ஊதல்!

காதலென்றும் காமமென்றும்
கதைகள்பல திரித்து
கருவிலிருக்கும் சதை பிண்டத்திற்க்கும்
கண்வைத்து கைகால் வைத்து
களியையும் கல்லாய் செதுக்கும் சிற்பி!

விற்பனைக்காக வில்லங்கத்தையும்
வீணாப்போனவைகளையும்
விலையில்லாமலே வாங்கும் அதிபுத்திசாலி
காசுக்காக கழிசடைகளையும்
காட்சிப்பொருளாக்கும் விலையுள்ள கண்காட்சி!

உள்ளதை உள்ளபடி
உலகுக்கு எடுத்துரைத்து
உண்மைகளை மறைத்திடாத
நியாயத் தராசு!

நல்லவைகளை நாகரீகமாய்
வெளிச்சம் போட்டுக்காட்டி
நியாயமாக அலசி ஆராய்ந்து
வெளியிட்டுத் திறமையைக்காட்டும்
நேர்மையான நீதி!

இவையெல்லாம் அடங்கிய
உலகெங்குமுள்ள ஊடகங்களின்
உன்னத போக்கு
உண்மையின் உறைவிடமாக
ஏற்றத் தாழ்வுகளில்லாமல்
எல்லோருக்கும் சரிசமமாக
ஊர்வலம் வந்தால்
இவ்வுலகமே அறியும்
உண்மையின் நாக்கை!....

காயல்பட்டினத்தில் 15 வது இஸ்லாமிய இலக்கிய மாநாடு.
40  வரிகளில் ஊடகம் எனும் தலைப்பில் கவிதை எழுதச்சொல்லி காக்கா அனுப்பிய மெயிலுக்கு நான் அனுப்பிய கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது