நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னடி உலகமிது!

வஞ்சிக்கப்பட்ட
தன் கற்புக்காக
வழக்கு தொடர்ந்தாள்
பேதை பெண்ணொருத்தி
வழக்கும் தொடர்ந்தது
வாழ்வும் தொலைந்தது

குறுக்கு விசாரனையில்
குன்றிபோனது மனம்
மீண்டும்
களங்கப்படுத்தபட்டது மானம்
குமுறியழுதது மனம்

தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டதென
தெரிவிக்கப்பட்டதும்
வெளியில் வந்த வேளையில்
பளிச் பளிச்—என
பத்திரிக்கைக்காரர்களின்
கேமராக்களும் கேள்விகளும்
காதையும் கண்ணையும் கூச

மேலும்
காற்றில்விடப்பட்டது மானம்
கலங்கியது மனம்

குமுறிய மனதோடும்
கொட்டுகின்ற கண்ணீரோடும்
இருதலைக் ”கொள்ளியாய்”
இரவு விடிய
இருட்டு முடியும்முன்னே
வெட்டவெளிச்சமானது
இருட்டில்
இவளுக்கு நடந்தகொடுமை
முதன்மைச் செய்தியாய்!

மீண்டும்
களங்கப்படுத்தப்பட்டது மானம்
கதறியழுதது மனம்

தவறாதபோதும்
தனக்கிந்த நிலையா?
பொன்மானும் துடித்தாள்
கண்ணீரும் வடித்தாள்
தன்மானம் காக்க
தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே
தன்தேகம் முழுதும்
தீ யிற்கு இரையாக்கி
தனக்குத் தானே
தீர்ப்பெழுதிக்கொண்டாள்

மதியிருந்தும் கெட்ட
மாந்தரை நினைக்கையில்
மதியில்லா மிருகம் தேவலை
இவள் செய்துகொண்ட தற்கொலை
அதுவும்
இவளுக்கு இழிநிலை

இதுவா மனிதயினம்
இதுவா மனித குணமென்று
எங்கிருந்தோ ஒரு
ஓநாயின் ஊளை கேட்டது
அது
மனச்சாட்சியுள்ள மனித
மனச்செவியை மட்டும்
சுட்டது...

// தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை//

[இன்றையகாலத்தில் பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், அதிகமதிகம் பேசப்பபடுபவை இவைகளே! யாரைச்சொல்லி நோவது!
மனிதன் மனசாட்சியை மறந்ததாலா?
இல்லை தான் மனிதன் என்பதையே மறந்ததாலா?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது