நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிர்களின் ஓலம்!ஆலோலம் பாடவேண்டிய
பச்சிளங்களைக் கொன்று         
உயிர்களின் ஓலம்
உலகெங்கும் கேட்கும்படி
பாதகச்செயல் புரிந்து
வாரிசுகளைக்கூட
வேரறுக்கப் பார்க்கும்
வல்லூறுகளே!

குற்றுயிரும்
குலையுயிருமாய்
துடிக்கிறது குழந்தை
கொடும்பாவிகளே உங்கள்
கோரச் செயல்களால்!
இதைப்பார்க்கும் கண்களெல்லாம்
தாரை தாரையாய் கண்ணீர் வடித்து
வெடித்துச் சிதறுகிறதே உள்ளம்
உணர்வுகள் கொதிப்பதால்!
மனிதப் போர்வையில்
மனமில்லாமல் திரியும்
மடமைவாதிகளே!
விதைகளை அழித்துவிட்டால்
விரிச்சம்பெறா தென்றா
வீராப்போடு அலைகிறீர்கள்!
குழந்தைகளின்
குருதி குடித்து 
வெறிப் பிடித்தலையும்
வேததாரிகளே!
 இதோ!!!
இதே நிலையில்
உங்கள் குழந்தைகளை
நீங்கள் காண நேர்ந்தால்!
இப்படியான சூழ்நிலை
உங்களுக்கு வந்தால்!
ஆடாதா தசை!
அலறாத உயிர்!
துடிக்காத உணர்வு!
சிலிர்க்காத தேகம்!
தவிக்காதா மனது!
சிதறித் தெறிக்காதா சிந்தை!
இரக்கமில்லா
இழிச்செயல்களை செய்யும்
ஈனப்பிறவிகளே
ஈரமில்லா இச்செயல்களால்
உங்கள் செல்வாக்கு நிலைத்திடுமா!
 
உணர்வில்லா ஜடமாய்
உயிர்கொன்று விளையாடுகிறீர்களே
எதனை சாதிக்க! எதனை வெல்ல!
உயிர்களை சாகடித்து  வெல்லும்
உங்கள் இந்த சாதனை
உங்களுக்கு மரணமில்லா
வாழ்வைத் தந்திடுமா?
அநீதி இழைக்கும்
அகம்பாவக்காரர்களே!
ஆட்டமெல்லாம் இவ்வுலகில்மட்டும்தான்
அகில உலக ரட்சகனிடம்
அத்தனைக்கும் சொல்லவேண்டும் பதில்!
நிழலேயில்லாத அந்நாளில்
நிர்கதியாக்கப்படும் வேளையில்
கிடைக்காதே ஒருபோதும்
இதுபோன்ற பாதகக்காரர்களுக்கு
அர்ஷின் நிழல்!
 அக்கிரமங்களை செய்வோருக்காக
அகோரத்தோடு காத்திருக்கிறது
அடித்தட்டு நரக நெருப்பு
அஞ்சிக் கொள்ளுங்கள்
அகிலத்து இரட்சகனை
இல்லையெனில்
அலைக்கழிக்கப்பட்டு நஷ்டமடைவீர்கள்..
------------------------------------------------------------------------
யா அல்லாஹ்.
காப்பாற்றுவாயாக! உன்னால் மட்டுமே முடியுமென்று                             உன்னிடமே சமர்ப்பிக்கிறோம் எங்கள் பிராத்தனைகளை! வழிதவறி நடபோருக்கு நேர்வழியை காட்டுவாயாக! வலியோடு தவிப்பவர்களுக்கு வசந்தத்தை தந்தருள்வாயாக..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது