நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிக்கித் தவிக்கும் சனநாயகம்


சனநாயக நாட்டில்
சனங்களுக்கேது மதிப்பு!            
பணநாயகப் பிடியில்
சிக்குண்டல்லவா கிடக்கு!              
ஆள்வோரின் கையில்
அதிகாரம் ஏந்தி! 
அடைத்து வைக்கப்பட்டுள்ளதோ                    
சனநாயக சாந்தி!

அரசைக்கூட தேர்ந்தெடுக்கும் அதிகாரம்                       அத்தனைபேருக்குமுண்டு-ஆனால்                          
தேர்ந்தெடுக்கபட்டவன் தினம் கோடியாள                  
தேர்ந்தெடுத்தவன் நிலையோ!                     
தெருக்கோடியில் வாட!

எவ்வளங்களில்லை என்றெண்ணுமளவிற்க்கு              
எல்லாமும் உண்டு சனநாயக நாட்டில்                      
என்ன இருந்தும் என்ன பயன்!                    
எத்தனையோ மக்கள் இன்னும் இருப்பதோ                  
எந்நாளும் வறுமைக்கோட்டின் கீழ்!

உண்மைகளை உறங்க வைத்து                             
பொய்மைகளை ஆட்டுவிக்கும் ராஜதந்திரம்                 
உரிமைகள் பலயிருந்தும்     
அதனை பறித்தும், பறிகொடுத்தும்                       
அடிமையாக்கப்படுதே தினம் தினம்!

சட்டப்படி எல்லோரும் சரிசமம்தான்                         
சாதிப்படி பார்த்தால் சரிந்த நிலைதான்!              
சத்தியவான்களென மார்த்தட்டிக்கொண்டும்                 
சண்டை பலமூட்டி வேடிக்கைகள் காணும்                   
இதனை புரிந்தும் புரியாத சனங்கள் -பாவம்                 
இவர்களுக்காக தீக்கூட குளிக்கும் !

மனசாட்சியற்றோர் அரசாட்சியாண்டால்                     
மாசற்ற பூமி அமையுமா சாமி!                    
மனசாட்சி விற்று மன்னராக ஆனால்                       
மக்கள் நிலையெல்லாம் என்னாகும் யோசி!           
சனநாயகம் சரியாக அமைய –முதலில்                     
சனங்களெல்லாம் தெளிவாக வேண்டும்!

மதியிருந்தும் மக்கள்
மதியிழப்பதை விடுத்து               
மதியுடையோராக இருந்தால்                               
மண்ணும்கூட பொன்னாக மாறும்                          
சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி                       
சனநாயகம் வீழாதே எந்நாளும்...

இக்கவிதை” சனநாயகம்” என்னும் தலைப்பிற்க்காக  அமீரக தமிழ்தேர்  இதழுக்காக எழுதியது. நன்றி தமிழ்தேர்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..             

உனக்கும் எனக்குமானது!..


இது நினைவிருக்கிறதா? என்ற பின்னோக்கும் நியாபகங்களுக்காக முகநூலில் எழுதியது.. 

அட கண்டங்கள் தாண்டியும் அடி எடுத்துவைத்துவிட்டோமா! நம்பவேமுடியவில்லை.. 
ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

//மலிக்கா, உங்களின் கவிதை ஒன்று கனடாவில் வெளிவரும் தங்கத்தீபம் வாரப் பத்திரிகையில் போட்டுள்ளேன். உங்களின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும். நன்றி. சிவா..//

இது சிவா அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலிருந்து .. 

முகமறியா மனிதர்களின் பாசங்கள் பிரம்மிக்கவைக்கிறது. இப்படி பல பாசங்கள் கிடைக்க எனக்கருளிய இறைவனுக்குதான் நன்றியை தெரிவிக்கவேண்டும். 
எனது கிறுக்களையும் கவிதையாய் ஏற்று அதை வெளியிட்ட தங்கதீபம் பத்திரிக்கைக்கும். அதை வெளியிடக்காரணமாக இருந்த சகோதரர் திரு சிவா அவர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றிகள்...

நன்றி நன்றி நன்றி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கவிதை எழுதுவது எப்படி?



இக்கவிதையில் எதுவும் குறையிருக்கா? ஏன் கேட்கிறேன் என்றால் அதுக்கும் காரணமிருக்கு.
கவிதைகள் கட்டுரைகள் வெளியிடும்  ஒருபிரபல .காமிற்கு எல்லாரும் அனுப்புகிறார்களே நாமும் அனுப்புவோம் என கவிதைகள் பல அனுப்பியுள்ளேன். அத்தளத்தில் சிலகவிதைகள் வெளியாகி உள்ளது.
அதில் 3.4 கவிதைகள் ”நாட் செலக்டட்” என திரும்பி வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை சரி ஏன் என தெரிந்துகொள்ளலாமா என மெயில் அனுப்பினேன். பதில் வந்தது மிகவும் ஒன்று பதில் வந்தது  ”பழைய நடைக் கவிதையிது” என
என்னடாயிது கவிதை நடையில் பழையது இல்லாமலா புதியது தோன்றின என நினைத்துக்கொண்டு. சில நாட்கள் கழித்து அந்த கவிதை வேறு தளங்களுக்கு அனுப்பினேன் அங்கே அவை வெளியானது.அந்த கவிதைகள் இவைகள்தான் அடக்கம்      அத்தனைக்கும் ஆமெனில். தற்போது இங்கே வெளியிடப்பட்டிருக்கும் காலம்யாவும்..கவிதையும் சேர்த்து.

முதல் தடவை ரிஜெக்ட் செய்ததும் சோர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் அதேயிடத்திற்கு அனுப்பினேன். ஏன் தெரியுமா? நமது எழுதுக்கள் சரியில்லையா?  அல்லது எண்ணங்களில் எழும் வரிகள் சரியில்லையா? அல்லது நம்முடையது கவிதையே இல்லையா? என்ற எண்ணம் எழுந்ததாலும். என்னமாதரியான கவிதைகளை செலக்ட் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ளவும்தான்..

இக்கவிதை அனுப்பியபோதும்  அதே பதில் வந்ததும் மீண்டும் மெயில் எழுதினேன்.
//sorry not selected//என்பது ஏனென தெரிந்துகொள்ளலாமா?
கவிதையை எப்படி எதிர்பார்கிறீர்கள். இங்கிலிஸ் கலந்து எழுதும் கவிதைகளையா? அல்லது வரிகளை உடைத்துபோட்டும் எழுதும் கவிதைகளையா? விபரம் தந்தால் அதற்கு தகுந்தார்போல் எழுதலாமில்லையா?
விபரம் தருவீர்களா?

எனக்கேட்டு எழுதினேன் இதுவரை பதில்லை.

நான் யாரையும் குறைசொல்லவில்லை. இங்கிலீஸை தமிழாக்கி கலந்த கவிதைகளுக்கு உள்ள மதிப்பு, தமிழைமட்டும் இழைத்து எழும் கவிதைகளுக்கு கிடைப்பதில்லையோ! என்ற எண்ணம் தோன்றுகிறது. [நான் எழுதுவதெல்லாம் கவிதையென சொல்லவில்லை இருந்தபோது கவிதையென நினைத்து எழுதுவதால் இப்படி தோன்றியிருக்கலாமோ] நிறையபேர்களின் ஆதங்கம் இதுதான். அதைதான் நானும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்தால் எப்படி எழுதினால் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது ஏற்றுக்கொள்வாகள் என தெரிந்துகொள்ளலாமில்லையா?
சொல்லுவீங்கதானே!

அப்படியே கவிதை எழுதுவது எப்படி?ன்னு யாராவது சொல்லிதந்தால் அந்த வகுப்பில் முதல் மாணவியாக நான் சேர்ந்துகொள்வேன்..
அட்ரஸ் ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கிலீஸில் கேட்டாதான் சொல்லுவீங்கன்னுதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எதிரி வேறெங்குமில்லை!



உறங்கப்போகும்முன் இவ்வுலகைக்கண்டு  பயப்பட்டு
உறங்கியெழும்போது உதறிவிட்டு விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

கெட்டவர்களைக் கூட
நல்லவர்களென நம்பிக்கை கொள்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தைரியமாக முடிவெடுத்தபின்பும்-சிலசமயம்
தடுமாறி தவறாகி விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

துரோகங்களை கண்டு துவண்டுபோய்
சுதாரிக்கத் தோன்றாமல் கிடக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தெளிவுகள் கண்ணெதிரே தெரிந்தபின்பும்
மறைவானவற்றையே தேடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

மதிசொல்லும் அறிவுரையை ஏற்கமறுத்து-பலசமயம்
சதிகளை விதிகளென நம்பிவிடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பாசாங்குகளை பாசமென நம்பி
பாதாளத்தில்கூட விழத்துடிகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு மத்தியில்
பால்மனம் மாறா பச்சிளமாகவே இருக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பொய்யான உலகில் மெய்யாக வாழ
வெள்ளாந்தியான உள்ளம் அடம்பிடிக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

இப்படி

எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று! 
எண்ணும்போதே எழுந்தது எதிரி 
எனக்குள்ளிருந்து....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அட எல்லாம் உங்களாலதான்..

 இது காவியத்திலகம் தந்தை. ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களின் தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியீட்டு விழாவில் என் எழுத்துக்கள் மூலம் என்னையும் கெளரவப்படுத்தும் விதமாக சகோதரர். சங்கமம் தொலைகாட்சி நிறுவனர். திரு கலையன் ரபீக் அழைத்தபோது அதை சற்றும் எதிர்பார்க்காத எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   சிறுகதை எழுத்தாளர் தந்தை சேக் சிந்தா மதார் அவர்கள் கையால் பரிசு வழங்கப்பட்டது. சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

பதிவுலகம் இப்படியெல்லாம் கூட செய்யுமா? என்ன செய்யுமா? இதோ செய்திருக்கே! கீழேயிருக்கும் விருதுகள் நம்ம நீரோடைக்காக வழங்கிய விருதுகள்..ஹா ஹா என்னமோ ஏதோன்னு நினைச்சீங்களா! என்னா ஒரு பில்டப்பு..

நம் எழுத்தை மேலும் மெருகேற்றிக்கொள்ளவும். நம்முள் எழும் எண்ணங்களுக்கு ஊக்கம் கொடுத்து இன்னும் பல நல்ல கருத்துகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கொடுக்கப்படும் இதுபோன்ற விருதுகள் வரவேற்கப்படவேண்டியவைகள்..
இது நம்ம அப்சரா இல்லம் அப்சரா அவர்கள் தந்த விருது


இது நம்ம இனிய இல்லம் ”சினேகிதி” ஃபாயிஜா வழங்கிய விருது.
 இது நம்ம சமையல் அட்டகாசம். ஜலீலாக்கா கொடுத்த விருது.

சரி சரி இதோட நிறுத்திக்கிவோம். அப்புறமால மத்தவைகளை பகிர்ந்துகலாம்.விருதுகளை வழங்கிய பேரன்பு நிறைந்த மனங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

அட  என் எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகட்டும் விருதுகளாகட்டும் பரிசுகளாகட்டும் அனைத்தும் உங்களால்தான்.அதனால் இங்கு வருகைதரும் அனைவருக்கும்.மற்றும் நெஞ்சார வாழ்த்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்ன இவ்வளவு பில்டப்பு கொடுத்துபுட்டு  நீ யாருக்கும் கொடுக்கலையான்னு கேட்கிறீங்களா ம்ஹூம் இதெல்லாம் எனக்கு மட்டும்தான்.ஒத்தவங்க தந்தத மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு எங்கவீட்டு எலி சொன்னுச்சி. அதனால நாங்களே தயார் செய்து புது விருது வழங்குவோம் கூடியவிரைவில்..




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

போங்கப்பா நீங்களும் உங்க ஓட்டும்.



என்ன இப்படி சொல்றேனு பார்க்கிறீங்களா! ஆமாப்பா பலயிடங்களில் பலரின் ஆதங்கப் பதிவைப் பார்த்தேன். சிறந்த எழுதுக்களுக்கு மதிப்பில்லாததுபோல் அங்கே கருத்துக்களோ ஓட்டுக்களோ பதிவாவதில்லை. ஆங்காங்கே ஓடி ஓடி பலருக்கு கருதிட்டால் சிலர் போய் கருத்திடுகிறார்கள் என்ற ஆதங்கமும். பதிவுலகில் தங்களுக்குள் தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்குள் மட்டுமே ஓட்டையும் கருத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மையாவும் இருக்கலாம்.

தன் உணர்வுகளையும். சோகம் சந்தோஷம் குடும்பம் நட்பு. என அனைத்தையும் பகிருமிடமாக பதிவுலகமிருப்பதால் இங்கும் ஓர் பலத்த எதிர்பார்ப்பு இருகிறது.நம் எண்ணங்களுக்கு கருத்துக்கள். மற்றும் ஓட்டுக்கள் மூலம் அங்கீகரிக்கபட்ட வேண்டுமென நினைக்கிறோம். அது தவறில்லை. ஆனால் ஓட்டும் கருத்தும் மட்டுமே அதை தீர்மானிப்பதில்லை என்பதையும் உணரவேண்டும்.அப்படிப்பார்தால் பலபலருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவேயில்லை.நேரம்கிடைதால் பட்டியலிடப்பார்கிறேன்.

கூகில் மூலம் நிறைய தளங்களுக்கு சென்றுள்ளேன். அப்பப்பா என்ன அருமையான கவிதைகள்.மற்றும் படைப்புகள் பலயிடங்களில் கொட்டிக்கிடக்கிறது தெரியுமா? ஆனால் அங்கே ஓட்டுபெட்டியும் கருத்துப்பெட்டியும் காலியாகவேயிருக்கின்றன. சிலதுகளில் ஒன்றிரண்டு கருத்தும் ஓட்டும் உள்ளன. அதற்காக அதெல்லாம் நன்றாகவேயில்லை அவைகளெல்லாம் படைப்புகளேயில்லையென ஆகுமா?

ஓட்டும் கருத்தும்   படைப்பவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்காகதானே. இவைகள் மட்டுமே படைப்பாளர்களை உருக்குவாக்குவதில்லை.
அதையுணர்ந்து படைப்பவர்கள் தங்கள் படைப்புகளை தொடருங்கள்.ஒரே ஒருவருடைய கருத்தும்கூட நம் படைப்பவைகளுக்கு பலத்தை தரலாம். அல்லது கருத்துக்களோ ஓட்டுக்களோ இல்லையென்றாலும் என்றாவது நம் எழுத்துகள் பிறரைச் சென்றடையும் என்று நம்பிக்கையோடு எழுதுங்கள்.

ஓட்டுகளும்.கருத்துகள் குவியும் அனைத்தும் நல்லபடைப்புகள்தான் என்பதல்ல. ஓட்டுகளும் கருத்துகளே இல்லாத படைப்புகளும் நன்றாக இல்லையென்றும் அர்த்தமல்ல.ஆகவே. படைப்புகள் நம் எண்ணத்தில் உருவாகி நம் எழுதுகளில் உயிர் பெறுகிறது.அதை இப்பூமியில் உலாவவிடுங்கள் நிச்சயம் அது வளர்ந்து ஆளாகி சிலரையாவது சென்றடைந்து நமக்கு சிறப்பைத் தேடித்தரும்..

முடிந்தவரை அனைவருக்கும் நமது ஊக்கனமென்னும் கருத்துக்களை தரமுயல்வோம்.

என்னங்கப்பு நான் சொல்வது சரிதானே?.......................

டிஸ்கி// அதிகபட்சம் எல்லார் பதிவிலும். வந்துபோகும் வாசிக்கும் பெருமக்களே வாசித்துவிட்டு மறக்கம ஓட்டையும் போட்டுவிட்டுபோங்கன்னு இங்கேயும் ஓட்டுகேட்கும் மக்கள். ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுயநலப் பார்வையில்..



ல்லவர்கள் போர்வையில்
தீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்

சுயநலத்தின் பார்வையில்
வசதியுள்ளோரின் நட்பு
தூய்மையின் சின்னம்
வசதியற்றோரின் நட்பு
அசிங்கத்தின் அங்கம்
தாயிமைக்கு ஈடாகும் நட்பையும்
தரம் பிரித்து தவறாக்கிப் பேசும்

துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியா]திகள்

கெட்டவர்களெல்லாம்
நல்லவர்களாகிறார்கள்
இது நாகரிக காலத்தின் சாபம்
நல்லவர்கள்கூட
கெட்டவர்களாக்கப் படுகிறார்கள்
இதுதான் நல்லவர்களுக்கு
கிடைக்கப்படும் லாபம்

டைத்தவனுக்கு பயந்தவர்
கைவிடப்படுவதில்லை
படைப்பினங்களுக்கு பயப்படவேண்டிய
கட்டாயமில்லை

தூற்றியவர்கள் ஒருநாள்
போற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காலச்சக்கரம்.



மலைகளெல்லாம்
மலர்களைப்போல் உதிர்ந்து
நீரெல்லாம் நெருப்பாக வழிந்தோட!
வீசும் காற்று விசமாக!
பூக்களெல்லாம் புல்லுருவியாக!
நெஞ்சமெங்கும் வஞ்கமாகி
புன்னகையெல்லாம் போர்க்களமாக!

இப்படியான காலம்
இதோ! இதோ! கண்ணேதிரே
கலக்கத்தை ஏற்படுத்தி
காலச்சக்கரத்தை
வேகமாய் சுழற்றியபடி
நம் கண்முன்னே!

அப்புறம் பார்ப்போமென்று சொல்லி
அந்நொடி மறையும் அழிவும்
எண்ணி முடிக்கும் நொடிக்குள்
எல்லாம் நடந்துமுடியும்.

வாழும்காலம் எங்கே!
வறழும் காலம் எங்கே!
விதிவிட்ட வழியென்று
விரக்திகொள்ளும்.

சக்கரம் சுழவதுபோல்
சுழண்டு ஓடும் காலம்
சல்லடையில் மாட்டிக்கொண்டு
சின்னாபின்னாமாகும்.

யாரும் எதிர்பாரா வேளையில்
யுகங்களெல்லாம் நிமிடங்களாகி
பூகம்பப்பிடியில் உயிர்கள் உறைந்து
பூமிக்கடியில் புதையும்.

சற்றும் நினைத்திறா பொழுதில்
சலாரென எழும் அலைகள்
சுனாமியென்ற பெயரில் உடல்களை
சுக்குநூறாக்கி கிடத்தும்.

வழியும் கண்ணீரைத் துடைக்க
விரல்கள் வருமென்றிருந்தால்
வெள்ளம் வற்றாது
விழியில் நீர் பெருக்கெடுக்கும்.

காலச்சக்கரம் சுழல்கிறது
காலங்கள் வேகமாய் கரைகிறது
அனாச்சாரங்கள் அத்துமீறி
ஆழ்கடலையும் அதிர வைக்கிறது

விரைந்தோடும் காலச்சக்கரத்தோடு
வாழ்க்கையை ஓட்டத் தெரியாமல்
மனிதயினம்!
திக்கற்று தவிக்கிறது
தஞ்சம்புக இடம் தேடித் துடிக்கிறது..

இக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழ் காலச்சக்கரம் எனும் தலைபிற்காக எழுதியது. இதை அனுப்பியதும் திரு காவிரிமைந்தன் அவர்கள். உடன் அனுப்பிய கருத்துக்கள் கீழே உள்ளவைகள்..

காலச்சக்கரத்தின் பதிவுகள் ... என்னவென்று
கவிதைச்சரம் தொடுத்து நீரும் தந்தீர்!
ஆழிப்பேரலையின் அட்டகாசத்தால்
அடங்கிப்போகுதே  மானுட இனமும்தான்!
நீரினில் இப்படி உலகின் பாகங்கள்...
மூழ்கிப் போவது  தொடர்கதையாவது மாறாதா?
நடப்பைக்கூட நம்கவிதையில் பதிவது
எழுத்துப்பணியை ஏற்றவர் செயலன்றோ?
அதையும் முறையாய் கவிதையில்தந்த
திறத்தையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்!
அன்புடன்,
காவிரிமைந்தன்.
மிக்க நன்றி சகோதரர் காவிரிமைந்தன் அவர்களே..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இன்றுமட்டுமல்ல என்றும்..

உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும். [அம்மாஸ்தானத்தை அடையச்செய்த அப்பாக்களுக்கும்]என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..

த்துமாதம் சுமந்து
பட்டபாடெல்லாம்
பசுமரத்து ஆணியாய் நெஞ்சில்
பதிந்திருந்தபோதிலும்

பெற்றதாயின் துன்பதை
பகிர்ந்துகொள்ள யியலாப் பிள்ளைகளாய்
தான் பெற்ற பிள்ளைக்காக
தேசம்கடந்து போகும் நிலை!

பெற்றதாயின் பாதத்தில்
சொர்க்கமுண்டு என்றபோதிலும்
பாழும் இனிப்பு நோயால்
பாதமிரண்டும் பற்றி எரிந்து
அவதிப்படும் வேளையில்
பக்கத்திலிருந்து
பார்க்க முடிவதில்லையே!
பாவிமக்களால்

லதுயரம் பலசிரமம்
பலதிசையில் கண்டு
பேணிவளர்த்தாள் அன்று
பிணிகொண்டு கிடக்கையிலே
பார்க்க கேட்க ஆளில்லாது
பரிதவிக்கும் நிலையானதே! இன்று

ன்னைமடியில்
ஆழ்ந்துறங்கிய அன்னங்கள்
அக்கரைக்குச் சென்று
அல்லல்பட்டு அவதிப்பட்டு
அயராது வேலைசெய்தபோதிலும்

ன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அல்லும் பகலும் அனுதினமும்
அன்னையவளை சேயினுள்ளம்
ஆத்மார்த்தமாக  நேசிக்குமென்பதையும்
அடி பிசகாமல் உணரும்
அன்னையவளின் நெஞ்சம்..

டிஸ்கி// புத்தக மதிப்புரையில் என் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை”  தினத்தந்தியில் வந்துள்ளது..மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.தினதந்திக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பிரிவின் துயர்!

  

டிவயிற்றில் 
அமிலம் சுரக்கும் உணர்வு!
நெஞ்சுப் பகுதிக்குள்
நிலநடுக்கம் வந்த அதிர்வு!
 தொண்டைகுழியில்
துளிநீரின்றி துவழும் தவிப்பு!

லைகள்     
கிளைகளைவிட்டு உதிர்வதுபோல்
இதயத்தை விட்டு 
ஏதோ நழுவதுபோன்றொரு துடிப்பு!

 டந்தவைகள் அனைத்தும்
 நினைவுகளாகி துயர் தருதே
 இதுதான் பிரிவின் வலியா!
 இதயமது 
இல்லாதது போலாகுதே!
இதுதான் பிரிவின் துயரா!
   
 பூக்களின் வாசத்தை 
நுகரும் நெஞ்சம்
 சிறு முள்குத்தலில் துடிப்பதுபோல்  
பாசத்தின் பிடிப்பை
 பற்றிக்கொள்ளும் மனம்
சிறு பிரிவில்கூட துடிக்கிறதே! 
     
வாழ்க்கையில் பல பிரிவு 
சில பிரிவு சிலாகிக்கிறது
சில பிரிவு சிக்கலாக்கிறது
சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
 சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது

பிரிவுகளின் பட்டில் 
பல வகையிருந்தாலும்                                       
அதன் வலிகளின் ரணங்கள்
ஆழ்மனதை
காயப்படுத்தாமல் இருப்பதேயில்லை!

தனால்தான் என்னவோ                                    
எந்நிலையிலும் எப்பிரிவையும்
எந்த உள்ளமும்                                       
ஏற்க விரும்புவதேயில்லை!...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது