நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”கல்”லாப்பெட்டி


நான்தான் கல்லாப் பெட்டி
நானில்லாமல் இதோ இந்த
எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி
எல்லாருக்கும் என் தயவுவேண்டும்
இன்னும் சொல்லபோனால்
என் தயவில்லாத 

வியாபாரமேயில்லை நாளும்

கோடிகள்முதல் தெருக்கோடிகள்வரை 
சுருக்குப்பை தொடங்கி 

இரும்புப் பெட்டிவரை
விதவித கோணங்களில் 

பலபல வகைகளில்
வசதிக்கேற்ப வீற்றிருப்பேன் 

என்னை உருவாக்கியவன் மனிதன்தான்
அவன் மனதிற்கேற்ப 

நான் திறந்து மூடப்படுவேன்
என்மேல் வந்துவிழும் சில்லரையும்
அதன்மேல்வந்துவிழும் 

காகிதங்களில் மட்டும்தான்
என் காதலும் என் கவனிப்பும்

ஏற்றமுள்ள மனதிடம் நானிருந்தால்
இயன்றளவு நிரம்பி வழிவேன்
மனிதனாயிருந்தும் 

மரத்துபோனவனிடம் நானிருந்தால்
என்னை நிரப்புவதே சிரமம் -அடிக்கடி
என்னை  திறக்கப்படாமல் 

திணறியும் போவேன்

கல்லாப் பெட்டி என்று சொல்லியே
”கல்”லாக்கி விட்டார்களோ என்னை
கல்லுக்கு ஏது உணர்வு
கல்லுக்கு ஏது கசிவு

உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே 

எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது
உழைத்து வருகிறதா? 
ஊரையடித்து வருகிறதா?
என்றெல்லாம் நான் உணர்வதில்லை
அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?
அதுவும் எனக்குத் தெரிவதில்லை!

நான் திறக்கப்படும்போதெல்லாம்
என்னுள் போடப்படும் 

சில்லரைகளின் சப்தத்தில்
சிலிர்த்து போவேனாயென்றால் 

அதுவுமில்லை
சிரித்து மகிழ்வேனென்றால் 

அதுவும்கூட இல்லை

என்னிடம் வரும் காதிதங்களில் பல
கசங்கியும், கசிந்தும் வந்துவிழும் -அது
கண்ணீரால் கசங்கியதா?

செந்நீரால் கசிந்ததாயென
ஏதும் அறியேன்   

ஏனெனில் ’கல்’ லா நான்

என்றாலும் நான்தான் 

முதலாளி வர்க்கம்
என்னோடு யாரும் 

செய்யமாட்டார்கள் தர்க்கம்

கல்லா[வா]க நானிருந்து
இருப்போரின் இரும்புப் பெட்டியாய்
இதயம் நொறுங்குகிறேன்
இல்லாதோரின் சுருக்குப் பையாய்
இன்பம் காண்கிறேன்

எப்படியாகிலும் ஏதோ ஒருவகையில்
எல்லோருக்கும் உதவிசெய்கிறேன்
’கல்’லாவாக இருந்து
கண்ணியமாய்
என்னை காத்துக்கொள்கிறேன்...
என்ன ”கல்”லாவாகிவிட்டேன் என பார்கிறீர்களா? இந்த கவிதை சங்கமம் டீவியில் கவிராத்திரிக்காக எழுதியது. நான்குபேர்கொண்ட குழுவாக எனக்கு தரப்பட்ட தலைப்பு கல்லாப்பெட்டி. தலைப்பு கொடுத்த மதியமே எழுதிய கவிதையிது. மற்றவர்களுக்கு கொடுத்த தலைப்புகள். அஞ்சரைப்பெட்டி. வாக்குப்பெட்டி. சவப்பெட்டி. இரு ஆண்கள் இருபெண்கள் என தேர்வுகள். கடைசியில் ஒரு பெண் வரயியலாச்சூழல், அதனால்ஆண்களுக்கு மத்தியில் நான் தனித்து  சென்று கவிபாட விருப்பமில்லாததால் போகவில்லை.சூழலை தெரிவித்துக்கொண்டேன்..  அக்கவிராத்திரி நிகழ்ச்சி  இரண்டு நாள்களுக்கு முன் துபை டைம் இரவு 10,மணிக்கு தமிழன் டீவியில் ஒளிப்பரப்பானதாம்.நான்கு ஆண்கவிகளோடு.[அதையும் பார்க்கமுடியவில்லை]  நிகழ்ச்சியில் சென்றுதான் கலந்துகொள்ளயியலவில்லை இதோ இங்க நீந்தவிடுவோமுன்னு ”கல்”லையே ஓடையில் நீந்தவிட்டாச்சி.. எப்புடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது