நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்.

அன்னைமொழி தமிழை
அமுதமாய் அருந்தி
அனுதினமும் வளர்ந்து

அயல்தேச மண்ணில் வந்து
அயராது உழைக்கும் போதும்

அலுப்புகள் இல்லாது
அடிமனதில்
அப்பப்ப தோன்றும் ஆசைகளெல்லாம்

அழகிய தமிழ் தனிலே
அடுக்கடுக்காய் எழுதி வைத்து

அடிநெஞ்சில் அச்சிட்டு
அழியாமல் காத்து

சேத்து வைத்த காத்ததெல்லாம்-இப்போ
செந்தமிழில் பாடிட வா

தேசம்தாண்டி வந்தபோதும்
நேசக்கரம் நீட்டிட வா

தாய்தமிழைத் தாலாட்டி
தாளம் ஒன்று போட்டிட வா

முத்தமிழாம் மும்மொழியை
மூச் சுள்ளவரை மொழிந்திட வா

பைந்தமிழாம் பசும்பொழியை
பாரெங்கும் போற்றி பரப்பிட வா

செம்மொழியாம் தமிழ்மொழியை
சிறப்பாய் சிகரத்தில் ஏற்றிட வா

என்னுதிரத்தில் கலந்திட்ட
தமிழ்தனையே
வேராக பயிரிடுவேன்

இந்த உலகெங்கும்
விழுதாக்க
இயன்றவரை உழைத்திடுவேன்

தமிழ்நாட்டில் பிறந்ததற்கு –என்
தாய் தந்தைக்கு
நன்றி சொல்லிடுவேன்

உடல்தந்து உயிர்தந்து
தமிழ்தந்த என் இறைவனுக்கு
தலை வணங்கிடுவேன்..


அமெரிக்கத் தலைநகரில் செர்மன் டவுன் நகர உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜூலை 10, 2010 சனி மாலை.தோழி விஜி சத்தியா அவர்களால் வாசிக்கப்பட்ட என் கவிதை
தோழி விஜி அவர்கள் எனக்கு தமிழ்குடும்பத்தில் அறிமுகம்.[நேர்முகம் இல்லை ]
விஜி கிச்சன் என்று வலைப்பூவும் நடத்துறாங்க.
ஜூலை 10, 2010 விழா இருப்பதாவும் அதில் கவிதை வாசிக்கவேண்டும் எனக்கு ஒரு கவிதை எழுதிதாருங்கள் தலைப்பு இதுதான் //வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்/. 5. நிமிடத்திற்க்குள் கவிதையிருக்கனுமாம் என்றார்கள். எழுதியனுப்பினேன்.//உங்க கவிதை ரொம்ப நல்லாயிருக்கு என்று பாராடுக்கள் கிடைத்திருக்கு, நான் தான் ஐந்து நிமிடம் என்று சொன்னதினால் நீங்க தந்திங்க. இப்ப சொல்கிறார்கள், இன்னும் கொஞ்சம் கூட சேருங்க என்று, முடிந்தால் கொஞ்சம் கூட சேர்த்து தர இயலுமா?
இது சின்னதாக இருக்கு என்றும் சொன்னாங்க///என்று
மீண்டும் மெயில்.மீண்டும் பத்துவரிகள் இணைத்து அனுப்பினேன்.

அந்த கவிதைதான் நீங்க மேலே படிப்பது. [அவங்க இணைத்த வரிகள் இதில் இல்லை]
விஜிஅவர்கள் மேடையில் வசித்து கவிஞர்.தாமரை கைகளால் சர்டிப்பிக்கேட்டும் வாங்கியுள்ளார்கள்.


 இன்று அவர்களின் மெயில்கண்டதும்.மனதில் சந்தோஷம் அளவிடமுடியாமல் நானே வாங்கிய மகிழ்ச்சியை உணர்ந்தேன்.[அதை உங்களோடு சேர்ந்து மகிழ்ந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று நினைத்து இதில் வெளியிடுகிறேன்] என்தோழி வாங்கினால் என்ன நான் வாங்கினால் என்ன! எல்லாம் ஒன்றுதான்.என் எழுத்துக்கள் பிறருக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையுமே தரவேண்டுமென்ற எண்ணம் அப்ப அப்ப நிஜமாகி என்னை உற்சாகப்படுத்துகிறது.
கடல்கடந்து கடல்கடந்தும் காற்றோடு கலந்து என்சிந்தனைகள் கவிவழியே இந்த பிரபஞ்சம் முழுவதும் வலம்வர வேண்டும்[இதுகொஞ்சம் ஓவருதான்] இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்தது ஊக்கம்தரும் உங்களுக்கும் நன்றிகள்.

இக்கவிதையை வாசித்து வந்தபின் சொல்லுங்கள் என் தளத்தில் வெளியிடுகிறேன் என அவர்களிடம் சொல்லியிருந்தேன். இதோ செய்துவிட்டேன் மனநிறைந்த சந்தோஷத்துடன்.
தமிழை உலகெங்கும் பரப்பிட முயற்சிக்கும் வண்ணமாக....

அன்புத்தோழி விஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
விஜி அவர்கள் எனக்கு அனுப்பிய நன்றிக்கடிதம்.
//நன்றி. நன்றி நன்றி....
விழா நன்றாக நடந்தது. எல்லாரும் என் கவிதையை கேட்டு ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். மீண்டும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் அதில் 7 வரிகள் இணத்து படித்தேன்.
கவிஞர் தாமரை அவர்கள் முன்னிலையில் நடந்தது எங்க கவியரங்கம்.
மிக்க நன்றாகவே இருந்தது. தாமரை அவர்கள் எங்களுக்கு சர்டிப்பிக்கேட் தந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
அன்புடன் தோழிவிஜி..//

கவிதையின் விதிமுறை நோட்டிஸ் விஜிசத்தியா அவர்கள் அனுப்பியது
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, கவியரங்க நெறிமுறைகள்
நோக்கமும் குறிக்கோளும்:
தமிழ் இன, மொழி, பண்பாடு காத்தலும் போற்றுதலுமே கவியரங்கத்தின் தலையாய நோக்கமாகும். அதைக் கருத்திற் கொண்டு, தலைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக இலக்கியச் சுவையோடும் சொல் வளத்தோடும் கவிதை நயம் வெளிப்படுதலே இந்நிகழ்ச்சியின் சீரிய குறிக்கோள்.

நெறிமுறைகள்:

.கவிதையின் பாடுபொருள் தலைப்பை ஒட்டியே இருக்க வேண்டும்.

· கவிதையானது நான்கு மணித் துளிகளுக்குள் முடிவுறும்படியாக, இருபத்து ஐந்து வரிகளுக்கு மிகாது இருத்தல் வேண்டும்.

· தனிமனிதத் தாக்குதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி, சாதி, மதம் மற்றும் இன்னபிற ஒவ்வாதன இல்லாதிருந்து, பேரவையின் மாண்பு காக்கும்படியாக இருத்தல் மிக அவசியம்.

· கவிதைகள் வேறெங்கும் வெளிப்படாதனவாக இருத்தல் வேண்டும்.

· இன எழுச்சி கொள்ளும்படியான மேன்மைக் கருத்துகளை, நறுக்கெனத் தைக்கும்படியாக வெளிப்படுத்துதல் சிறப்பைக் கூட்டும்.

· விமர்சனத்திற்கான களம் என்பதைவிட, உணர்வை ஊட்டுவதற்கான மேடை இது என்பதைக் கருத்தில் கொண்டு கவிதை வடித்தல் நிகழ்ச்சிக்கு மெருகூட்டும்.
· ஜூன் 19, 26 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் பல்வழி அழைப்பில் தவறாது கலந்து கொளல் வேண்டும்.
· ஜூன் பதினொன்பதாம் தேதிக்கு முன்னரே, உங்கள் கவிதையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு செய்வது கவிதைக்கு நயம் கூட்டவும், ஒரே கருத்து மற்றவர்களிடத்தும் வெளிப்படுவதைத் தவிர்க்க வழி வகுக்கும்.
· விழா அரங்கிற்கு வருமுன்னர், தாம் வாசிக்க இருக்கும் கவிதையை ஏற்ற இறக்கத்துடன் வாசித்து ஒத்திகை பார்த்திருத்தல் அவசியம். விரைவாகத் தங்கு தடையின்றி இயம்புதல் என்பது வெளிப்படுதிறனைச் செம்மைப்படுத்தும்.
· கிடைக்கும் நான்கு மணித்துளியில் நிறைவான கருத்தைச் சொல்லிக் கரவொலி பெறுவதே எளிதானது. நீண்ட நேரம் வாசிக்க வாசிக்க, கவிநயத்தின் வீரியம் தளர்ந்து நலிந்து போக வழி வகுக்கும். எனவே, நயமுடன் சுருங்கச் சொல்லி நிறைவை எட்டுதலே கவிஞருக்கு அழகு!
நிகழ்ச்சி பற்றிய மேலதிகத் தகவலுக்கு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரை எவ்விதத் தயக்கமுமின்றி நாடவும். ///

என்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது