நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சகாயம் சாதனை ஆகாயம்
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து
லட்சியம் எடுத்து நடக்கும் சிறப்பு,,,
ஊழலுக்கு உலைவைக்கும் துடிப்பு,,
முறைகேடுகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பு,,
தான்மட்டும் நேர்மை காணுவதை தவிர்த்து,,
தன்னைச் சுற்றியும் நேர்மை பயிரிடும் விதைப்பு,,
மாற்றி மாற்றி பணி
மாற்றங்களின் போதும்-தன்கொள்கையை
மாற்றிடாது முன்னேறிடும் வீராப்பு,,
சொத்துக்களை சுரண்டியொளி[ழி]க்கும்
சபையோர் மத்தியில்,,
சொந்தக்கணக்கையே பட்டியலிட்ட
மறைவில்லா ஒளிர்வு,,,
நேர்மையும் வாய்மையும்
நேர்க்கோட்டில் வைத்து,,
நெஞ்சை நிமிர்த்தி வாழும் நிதானிப்பு,,,
பெருங் காயங்களுண்டாக்கும்
புலிதோல்களுக்கு மத்தியில்,,
பிறருக்கும்
காயமேற்படாவாறு பொறுப்பேற்று -மன
பலத்துடன் வழிநடத்தி நடக்கும்,,,
சகாய சாதனையின் அணிவகுப்பு,,
சத்தியமேற்ற தன் ஒழுக்கவுயர்வு நடத்தையால்
கிடைக்கபெற்றது,
சாதனை ஆகாயமாய் சகாயத்தின் பிறப்பு....

”சகாயம் சார் தங்களின் சிறந்த பணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..
 துணிந்து தொடர்ந்திடுங்கள் துணையாய் இறைவனிருப்பான் அதனுடன் நல்லுள்ளங்களின் பிராத்தனைகளுமிருக்கும்...


====================================================
பின்குறிப்பு:

படைத்தவனைத்தவிர 
படைப்பினங்கள் அதீத புகழுக்குறியதல்ல என்பது 
எனக்குள் ஓடும் கருத்து ஆக நான் படைப்புகளை முகஸ்துதியாய் புகழ்வதேயில்லை.
இது புகழ்ச்சியல்ல மனம்நிறைந்த மகிழ்ச்சி...
நாம் நினைப்பதை நம்மால் செய்யமுடியாததை பிறர் செய்யும்போது ஏற்படும் மனநிறைவு அதுபோல்தான் இதுவும்

இன்று நான் கூகிளில் ஒன்றைத்தேடிப்போக அது ஒன்றை எனக்கு காட்டியது. முன்பே பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் இன்று இவரைப்பற்றி எழுத்தூண்டியது, நல்லதை உடனுக்குடன் செய்யனுமென்ற கோட்பாட்டில்
எனக்குள் ஓடிய எண்ணத்தை எழுத்தில் விதைத்துவிட்டேன் பிறமனங்களுக்கும் பயிராகவேண்டி.. நல்லவற்றை விதைத்தால் நல்லதை தவிர வேறெதும் விளைவதில்லை, இடையே முளைக்கும் காளான்கள் பயிராகுவதில்லை...அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உலகத்தமிழ் பல்கலைகழக விருது.எழுத்தறிவித்தவனுக்கே புகழனைத்தும்.

20 -2-2016 நேற்று காலை 11 மணிக்கு
 மதுரை பாப்பீஸ் ஹோட்டலில் அமெரிக்க வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழக விருதுவழங்கும்விழாவில்

அரங்கத்தில்
அறிவாற்றல்மிக்க அறிஞர்களுக்கும் முனைவர்களுக்கும் மத்தியில்,
தரப்பட்ட இருக்கையில், முக்காடிட்டிட்ட உடலுக்குள் அறிவுசெல்களை திறந்து, மனதுக்குள் எதையோ சாதித்த உணர்வோடு நான், உள்ளம் முழுவதும் படபடப்போடும் இனம்புரியா இருதயத்துடிப்போடும்
பூக்கவா புதையவா என்ற நிலையில் எனது இருக்கையில் அமர்ந்திருக்கையில்

அழைப்பொலியின் வழியே தமிழ்குயிலொன்று எனது நூலின் தலைப்பைக்கூறி அழைத்தது செவிக்குள் ஊடுருவ என்ன நடக்கிறதென அறியாது மிதப்பதுபோல் எழுந்து நடந்த கால்கள் மேடையேறி மேன்மைமிகு நீதிபதி, வழக்கரிஞர். ஐஏஸ் அதிகாரி,அரசியல்வாதி, முனைவர், இவர்கள் மற்றும் விழா நாயகர் அமெரிக்க வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழககத்தின் நிறுவனர் திரு செல்வன் குமார்,அவர்கள் முன்னிலையில் எனக்கான விருது வழங்கப்பட, அறிஞர்கள் வருகையாளர்களின் கைத்தட்டல்களுக்கிடையில் ஏக இறைவனை மனதுக்குள் சஜதாசெய்தபடி[சாஷ்டாங்கம்] தரப்பட்ட விருதை பெற்றுக்கொண்டு வந்தேன்..

எனது இரண்டாம் நூலான பூக்கவா புதையவா விருதுக்கு தேர்வாக காரணமாயிருந்த மணிமேகலை பிரசுர நிறுவனர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொண்டேன். பல பல தொழில்துறை சார்ந்தவர்கள் சமூக நலப்பணித் தொண்டர்கள்,கவிஞர்கள், எழுத்தாளர்களென பலரை சந்திக்கும் அரியவாய்ப்பு, அனைவருக்கும் எனக்கு ஊக்கம்தரும் வகையில் என்னுடன் உரையாடியது இன்னுமின்னும் எழுத்தவேண்டுமென ஒரு மிகதெளிவான உந்துதலை தந்தது.

மேலும்

விழா நாயகரிடம் உரையாடியபோது மிகவும் சந்தமாய் பேசினார், நீங்களெல்லாம் விடாது தொடர்ந்து எழுதனும்மா, உன் எழுத்தில் ஓர் அழுத்தமும் தெளிவும் உள்ளது  உனது அடுத்த நூலுக்கு நானே முன்னுரை தருவேன், என தனது விசிட்டிங்கார்டை தந்து ஊக்கப்படுத்தியது எழுத்தின் மேல் இன்னும் ஒரு வலுவான நம்பிக்கையும் ஏக இறைவன் எனக்களித்திருக்கும் இவ்வாய்ப்பினை நல்வழியில் பயன்படுத்தி இன்னும் சிறப்பாக எழுதவேண்டுமென உறுதிகொண்டேன் மனதில்..

சிறுவருத்தம் என்னுடன் இவ்விருதுக்கு எனது மச்சான் அருகில் இல்லாததுதான்..

நீரோடை வழியே எனது எண்ணங்கள் வெளியுலகத்திற்க்கும் ஓடின நல்லுணர்வோடு, என்னெழுத்துக்களை ஊக்கமூட்டியே இந்நிலையை அடையவைத்திருக்கும் தங்கள் அனைவருக்குமே என் வாழ்நாள் நன்றிகள் உயிர்மூச்சு உள்ளவரை என் எழுத்தின் எழுச்சி எழுந்துகொண்டேயிருக்கும் இறைநாடின்..

இவ்விருதை எனக்களித்து என்னை இலக்கியபாத்தைக்குள் இன்னும் முன்னேறிச்செல்ல ஊக்குவித்த அமெர்க்க உலகதமிழ் பல்கலை கழகத்திற்க்கு எனது உளமார்ந்த நன்றிகள்..

 இவ்விருதை வாங்குகையில், இஸ்லாம்  பெண்ணை அடிமைப்படுத்துவதாக கூறப்படுவதை எண்ணி வருந்தினேன், என் மார்க்கம் எனக்கு மிகுந்த பாதுகாப்போடு எல்லாவிதமான சுதந்திரமும் அளித்திருந்தும் அதனைபற்றி தவறான கண்ணோட்டம் உருவாவதற்கு  யார் காரணம் என ஆதங்கத்தோடு..

மீண்டும் எனக்கொரு அங்கீகாரம்..

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!
கல்வி கற்றறிதலில் நான் மிக குறைவென்றபோதும்
கற்கவேண்டுமென்ற ஆவல் கடலைவிடினும் பெரிதாய் என் மனதில்..

பூக்கவா! புதையவா! 
மணிமேகலை பிரசுரத்தாரால் வெளியிட்டப்பட்ட எனது இரண்டாம் நூல்
முதல் நூல் உணர்வுகளில் ஓசை[துபையில் வெளியீடு]
முதல் நூல் தாராபாரதி அறக்கட்டளையால் மூன்றம் பரிசுக்கு தேர்வானது.குறிப்பிடத்தக்கது..

தற்போது எனது இரண்டாம் நூல் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைகழகத்தால் பரிசுவழங்க ஒப்புதல் அளித்து வரும் 20 ந்தேதி மதுரை பப்பாயா ஹோட்டலில்
நடக்கும் நிகழ்ச்சியில் சான்றிதலும் பதக்கமும் தரப்போவதாக 
சகோதரர், திரு ரவி தமிழ்வாணன்  அவர்கள் எனக்கு அலைபேசிவழி மற்றும் மெயில்வழி செய்தியை அனுப்பியபோது  மடைந்திறந்த வெள்ளமாய் மனம் கொப்பளிக்க கண்கள் வழி கரைந்தோடியது ஆனந்தமும் அழுகையும், இறைவா உனக்கே வான்புகழும் மண்புகழும் என்புகழும் ..

எழுத்தென்பது வரமென்கிறார்கள் அந்தவரத்தினை எனக்களித்து, எண்ணுவதையெல்லாம்  எழுத்தாக்கும் ஆற்றலை தந்தஇறைவனுக்கும், என் உணர்வுக்கும் மதிப்பளித்து என்னை எழுத்தவைத்து அழகுபார்க்கும் என்னவருக்கும்.என்னெழுத்தையும் ஏற்று ஊக்கம்கொடுத்து இன்னும் எழுதத்தூண்டும் என் அன்புள்ள தாங்கள் அனைவருக்கும்.
மேலும்

என்னெழுத்தை அச்சிட்டுக் கொடுப்பதோடு நின்றுவிடாது மென்மேலும் என்னை வலுப்படுத்துவதுபோல் என்னை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துசெல்லும் மணிமேகலை பிரசுரமும் அதன் நிர்வாகியுமான 
சகோதரர். திரு ரவி தமிழ்வாணன்  அவர்களுக்கும். என்னெழுத்தை அங்கீகரிக்கும்வகையில் என்நூல் தேர்வுக்கான ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழகத்திற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை ஆத்மங்களோடிணைத்து அன்போடு கூறிக்கொள்கிறேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

விவசாயம்...


பூமித்தாயின் மடியில் தவழும் "செல்லக்குழந்தை"
இயற்கையெழிலை எடுத்தியம்பும் ஆதா(கா)ரத்தின் "தந்தை"
வாழும் நிலத்தை வாரி அரவணைத்து 
அமுதூட்டும் அன்பின் "அன்னை"...

ஒரு பிடி உணவு கிடைக்காதவரின் பாடு
சொல்லில் வடிக்கமுடியாது கேளு..
நெல் முளைத்த வயலெல்லாம் கல்முளைக்கசெய்து 
வருத்தக்கிடங்கில் வீழ்த்தியது எது?

அயல்நாட்டு ஆட்களெல்லாம் கண்டு அசந்துபோன நம்நாடு
அழிகிறதே விவசாயங்களற்று வந்ததென்ன கேடு..
கானியெல்லாம் காய்ந்துபோக கருவேலம் ஓலமிட
கவலைகிடங்கில் அடைத்திங்கே யாரு?

தாய்நாட்டின் தாலாட்டுகளின் பிறப்பிடம் 
தலைமறவானதே ஏனென்று கூறு?
விவசாயத்தின் உரங்களையும் விசமாக்கியது யாரு?
வினை விதைத்தால் வினையறுபோம் என்பதையும் 
நினைவிலேற்றி எடுத்துக்கூறு...

முதுகெலும்பு விவசாயத்தை 
முறித்துவிட்டால் ஏது?
தழைத்தோங்கும் 
தலைநிமிரும் பாரத்தின் பேரு..

உடற்கூறு உறுதியுற்றால்தானே
மூளைக்கூற்றின் மூலக்கூறும்தேறி 
தொழில்வளமும் பல துறைவளமும் 
வெற்றியாகும் சொல்லு.

இயற்கையோடு விவசாயத்தை 
செழிக்கவிட்டுப்பாரு, பின்பு
இலகுவாய் எடுக்கும் இந்தியா 
வலிமைகொண்ட வல்லரசென்ற பெயரு..
===================================================

நிலாமுற்றம் கவியரங்கில் இந்தியா வல்லரசாக்குவோம்... 
கருப்பொருளான விவசாயம் பற்றிய
 என் தலைப்பிற்கான கவி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது