நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!
மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!

[மீண்டும் மீண்டும்]
ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும்
அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்!
ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன்
அணுவுமெங்கும்  அசையாது அவன் துணையு மின்றியும்!

[மீண்டும் மீண்டும்]
இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே
இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே!
இன்னல் இன்பம் இரண்டுங்கொண்டு  வாழ்ந்தபோதிலும்
இடைவிடாது இறையை என்றும் வணங்க வேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
ஈகையென்னும் கொடைகொடுத்து ஏற்றம் காணவே
இரக்கமென்னும் இனியகுணம் நமக்கு வேண்டுமே!
உதவும் மனம் உள்ளிருந்து ஊற்றெடுக்கவே
ஏழை எளியோரை அன்புகொண்டு அணைக்கவேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
உயிரிருக்கும் வரைக்கும் எந்தன் உடலும் துடிக்குமே
அந்த ஒருவனையே நினைக்கச்சொல்லி உயிரும் உருகுமே!
உலகம் அழியும் நாள்வரைக்கும் உயிர்கள் தழைக்குமே
அந்த உயிர்களனைத்தும் அவனிடத்தில் திரும்பச் செல்லுமே!

[மீண்டும் மீண்டும்]
இம்மை வாழ்வில் நாமும் செய்த செயல்கள் யாவுமே
இறுதி நாளில் நேரெதிரில் நிறுத்தப் படுமே!
இனிய மார்க்கம் தந்த எங்கள் இறுதி நபியையும்-எங்கள்
இதயங்களும் கண்களும்தான் காணத் துடிக்குமே!

[மீண்டும் மீண்டும்]
அண்ணல்நபி தரிசனத்தை இம்மை மறுமையில்
அடைந்திடவே ஆவல் கொண்டு உள்ளம் ஏங்குதே!
அகிலம் படைத்து அனைத்தும் படைத்து காக்கும் இறைவனே
அந்த ஆவல்களை நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!

தரவும் வேண்டுமே!  
நிச்சயம் தரவும் வேண்டுமே!
நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது