நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
கவிதைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எரியும் மனசு...




எரியும் மனசு...
-------------------------

அணைந்துபோன பெருங் கங்குகளில் 
புகைந்து கொண்டிருக்கும் சிறு நெருப்பாய்
எரியும் மனசோடு சிறு விவாதம்..

பெண்மைகளின் கூடாரம்
போராட்டக் களத்தால் நிரப்பட்டவை!
போராட்டக் காரர்களால் சூழப்பட்டவை!
போராளிகளை உருவாக்குபவை!

பெண் கருவென தெரிந்ததும்
கருவில் கொலை, கள்ளிப்பால் கொலை
கழுத்து நெறித்துக் கொலை செய்வ[த]தும் கூட  
கருணைக்கொலையில் சேர்க்கப்பட்டதோ!

கருவைவிட்டு வெளியேறிய நொடிமுதல்
காணும் கேட்குமிடமெங்கிலும், காட்டுப்பூவென
கசக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும்
காவுகொள்ள[ல்ல]ப்படுவதும் கவனமற்றுக் கிடக்கிறதே?

அக்கினிப் பரிட்சைகளாம்  ஆங்காங்கே
அ யோக்கியர்களால்!
சீதையாயிவளென 
சிதை மூட்டி வதைகூட்டும் சித்ரவதையால்
தினம் எரியும் உணர்வோடும்...

பாசம் வைத்த பாவத்திற்கு பரிசாய்
பத்தினியற்றவளென்ற சாபமும்,,,
பாஞ்சாலியென நினைத்து படையெடுக்கும்
பாவக்காரர்களின் கோரமும் அன்றாடம் பார்த்து
தினம் எரியும் மனசோடும்...

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந் நிலைதொடரும் அவலங்கள் நடந்தேறுகையில்
அணையாது எரிகிறதே- எரிமலை கு[பி]ளம்பாய் 
அகம்புறமெங்கும் ப[சு]ற்றியே!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சருகாகும் மனது!



பருவகாலத்தில்
பச்சிலையான காதல்

போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!

காதலின் காத்திருப்பில்

கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!

குருத்தில் ஆரம்பித்து

சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து

ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை

மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
 
இக்கவிதை தமிழ்த்தோட்டத்தில்  “சருகுகள்” கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த கவிதை

காற்றுடன்!
கூடலோடு சேர்ந்த ஊடல்

சட சடக்கிறது சருகு!
----------------

இது ”சருகு” கான ஹைக்கூ போட்டியில் மூன்றாமிடம்..

மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

மன[ழை]க்காலம்!


மழைக்கால நேரத்தில்
மதிமயக்கும் தாகத்தில்
இதமான தருணத்தில்
இன்னிசை பாடிவரும்
இளஞ்சூடான மழைத்துளிக்குள்
குடையில்லாமல் நனைகிறேன்
குதூகளித்து மகிழ்கிறேன்
மகிழும் வேளையில்
மனதுக்குள்ளும் கேட்கிறது
மழை சத்தமும்
மன்னவன் கொடுத்த முத்தமும்!

-----------------------------------------------------------------
மழையே மழையே வானின் மழையே!
மயில் தேவையுமறியும் மேகமழையே!

உன் வருகையில்லா இடங்களுமுண்டோ!
உன் துளிகள் தொடதா தளிர்களுமுண்டோ!
உன் வரவால் வாசம் மண்மேல் வீசும்!
உன் சாரல் துளியில் தேகமும் கூசும்!
நீ அளவாய் வந்தால் இந்த உலகம் செழிக்கும்!
உன்வரவு அதிகப்படியானால் உயிர்கள் தவிக்கும்!

வயலிடுக்கில் நுழைந்து பயிர் செழிக்க வைப்பாய்!
வறட்ச்சி கண்ட நிலத்தில் வழிந்தோடி களிப்பாய்!
வானிலிறங்கிவந்து வசந்தம் தந்து போவாய்!
வரவதிகமாகி வதை செய்து வதைப்பாய்!
வரவு தரமாலிருந்தும் பஞ்சம் தந்து பார்ப்பாய்!
இயற்கைகளை உன்னால் உயிர்வாழச்செய்வாய்!
இறைகட்டளையை நீயும் மீறிடாது நடப்பாய்!
காதல் மழையாய் மனங்குளிர செய்வாய்!
செல்ல மழையாய் சிணுங்கி ரசிக்க வைப்பாய்!
குழந்தை மழையாய் கொஞ்சி சிரிக்க வைப்பாய்!

உன்னைப் பாடாத கவிஞருமுண்டோ
உன்னைப் தேடாத மனங்களுமுண்டோ!
உன்னைப் தீண்டாத தேகமுமுண்டோ!
உன் வரவால் இந்த பூமியும் பூக்கும்
உன் செலவால் இந்த பூமியில் அழியும்!
செழிப்பைத் தந்து வன[த்தை]ப்பை காப்பாய்
செல்லமாகவே தூவி மனிதத்துயரம் துடைப்பாய்..
-------------------------------------------------------------------------------------------


டிஸ்கி//  ஏண்டிமல்லி!  ரெண்டுகவிதை எழுதியும் இப்படியா பண்ணுவே இப்படியா கவனமில்லாது இருப்பே! பே பே!

//போட்டி நெறிமுறைப்படி (25ஆம் தேதிக்குள்) அல்லாமல் காலம் தாழ்ந்து அன்புடன் மலிக்கா அவர்களும் ஹிஷாலீ அவர்களும் சிறப்பான (முதல் மூன்று இடத்துக்குரிய) படைப்பைப் படைத்துள்ளார்கள். நெறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் முதல் மூன்று இடத்துக்கு அவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்த் தோட்டம்//

எல்லாம் அவன் செயல்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இந்தக் காதல் எது வரை?




காதலின் கரையைத்தேடி
காலங் காலமாய் ஓடும்
காதலர்களின் வரிசையில்
காதலை சுமந்தபடி
கடைக் கோடியில்  நான்

நினைக்க நினைக்க சுகம்
நினைவைத் தீண்ட தீண்ட சுவை
நீர்குமிழியாய் எழுந்தடங்கும்
நீர்மூழ்கியாய் உள்ளடங்கும்
நிசர்சனத்தின் விந்தை!

உரசும் உணர்வுகளில்
உயிருக்கு உரம் சேர்க்கும்
கடக்கும் சமயங்களில்
கடைகண் பார்வைகளில்
கனவுகளுக்கு விருந்தளிக்கும் மாயை!

இணைந்திருக்கும் தருணைத்தைவிட
இல்லாதிருக்கும் தருணமெல்லாம்
இனம் புரியாத இம்சைகளை
இதயத்தில் ஏற்றிவைத்து
இருதலைக்கொள்ளியாக்கும் அவஸ்தை!

காதல் காதலென்று
கனல்கொண்ட நெருப்பாக
அலைகொண்ட கடலாக
வாசம்கொண்ட மலராக
நீலம் கொண்ட வானமாக
நித்தம் வீசும் காற்றாக

நெடுங்காலம் காதல்கொள்ள
நெஞ்சம் முழுவதும் ஏங்கும்
ஏட்டில் நிலைத்த எழுத்தைபோல்
எந்நேரமும் 
நினைவுகளை சுமந்தபடியே
நித்தமும் வாழும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வேரை மறந்த விழுதுகள்.



விதையாகி, மண்ணில் புதைந்து
வளர்ந்து மரமாகி, பூத்துக் குலுங்கி
காய்த்து கனிந்து
காற்றிலும் மழையிலும், காவல் காத்து
விழுதுகளைத் தாங்கிய வேர்கள்

 தன்னையே தேய்த்து
தளர்ந்து முதிர்ந்து, தள்ளாடி தடுமாறி
தன்னையே நிலைப்படுத்த நினையாது
விழுதுகள் மறந்த வேராய்
வேதனைப்படவும் முடியாது
வெளியில் சொல்லவும் இயலாது

வெதும்பும் மனங்களாய்
உலவும் உள்ளங்கள்
உலகில் ஏராளம்-இப்படி
முடங்கிய முதுமையின் 
நிலைகளோ பரிதாபம்!

முதுமையின் நலம்பேண முடியாத
வேரை மறந்த விழுதுகளுக்கு
அனிச்ச மலராய் -வேர்
வாடுவதெங்கே தெரியப்போகிறது

இரும்பாகிபோன
இதயங்களை ஈன்றெடுத்ததால்
முதியோர் இல்லத்தில்
முடங்கிடக்கிறது வேர்கள்
விழுதுகளாலே வேரறுக்கப்பட்டு,,,

 முதியோர் நலம்

இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

 
வேண்டிய வடிகால்கள்
வீட்டிலேயே இருக்க
வேலிதாண்டிபோகும்
உத்தமிகளும்!

வகைவகையாய் பரிமாறியும்
பசியடங்காமல்
பலவீட்டில் பசியாரும்
உத்தமர்களும்.

உருப்படியான 
உடல்களைக் கொண்டும்
ஊழைக் கொழுப்பெடுத்து
உழன்று புரழுது சாக்கடையில்!

ஒவ்வாத மனங்களுக் கிடையில்
ஓடவழியின்றி
ஊறி நாறுது தெருவரையில்!

அச்சானியில்லாமல் ஓடும்-இவர்களின்
அந்தரங்க வாழ்க்கை
அசிங்கத்தையே தேடியோடி
அடையும் வேட்கை!

வடிகாலின்றி ஓட நினைக்கும்
வாழ்க்கைக் கழிவுகளை-எங்கே
வடிப்பதென தெரியாமல் விழிப்பதே
இவர்களின் இழிநிலைந்த 
அன்றாட வாழ்க்கை...


இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வீசுதடா விஷக்காற்று



வீசுதடா விஷக்காற்று
வீதியெங்கும் வேகமாக!
பரவுதடா வீதியெங்கும்
பூகம்பமாக பூலோகமெங்கும்!
சாந்தமான கடல் தாயோ
சுருட்டுதடா சுனாமியாக!
அழியுதடா விதவிதமாக
அறியாத நோய்களாலே!

வாசத்தோடு பூக்கும் மலர்கள் -நொடியில்
வாடி வீழ்ந்து போகுதடா!
வாஞ்சையாக வீசும் தென்றல்
வாசலெங்கும் வக்கிரத்தோடு ஆடுதடா!

அழகாக காட்சி தரும்
அடர்ந்தகாடும் அழியுதடா!
எழில் மிகுந்த மலைகளுமே
எரிகுளம்பாகி உருகுதடா!

அன்னம் தரும் அருள் மழையோ
அடை மழையாய் பொழியுதடா!
பயிர்களெல்லாம் மூழ்குவதால்
பசிக் கொடுமை கூடுதடா!

உக்கிரங்கள் மனதில் குடியேற
அக்கிரமங்கள் உலகில் அரங்கேறுதடா!
அதை பொறுக்க முடியாமல்
இயற்கையும் எகுறுதடா
இடைவிடாமல் ஏறுக்குமாறா! 

 இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்ணே எழு நீ இடியாக!

மனவுணர்வுகளை
மிதித்தே பலக்கப்பட்டு -பிற
மனங்கள் வலிப்பதைப் பற்றி
சிறுதளவேனும்  
சிந்திக்காதோர் மத்தியில்

மர்மங்கள் புதைப்பதைப்போல்
மன ரணங்களை மறைத்து வைத்து
னதை ஊமையாக்கிவிடாமல்
மல்லுக்கு நின்று முன்னேறு!

பெட்டைக்கூவி பொழுது விடியாதென
புலம்புவோர் மத்தியில்
புதைந்துவிடாதே பெண்ணே!
இவர்களெல்லாம் பெண்ணை
பேதையென்றே பேசிப்பேசி
போதை கண்டுவிட்டார்கள்

முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்படக் கூடாதென்பார்கள்
முடவனாக இருந்தாலும்
முயற்சித்தால் முடியாமல் போகுமோ!
ஒரு சொட்டேனும்
தேன் கிட்டாமல் போகுமோ!

அடிமை நெருப்புக் கங்குகளாய்
ஆழ்மன உணர்வைகூட கருக்கசெய்யும்
அகந்தைகளிடம் அகப்பட்டு
அடைபட்டேக் கிடக்காதே!

அந்தியில் சாயும் வெயில்
அதிகாலையில் சுள்ளென்று எழுவதுபோல்
அதிகாரவர்கங்களின் பிடியில்
அகப்பட்டுகிடக்காமல்
அமைதியாய் வீறு கொண்டெழும்பு

அடுத்தவர் மனவோட்டம் புரிந்தாலும்
அறியாமையாலல்ல
ஆற்றாமையால்
அறியமறுக்கும்  அறிவிலிகள் மத்தியில்

அகம்பாவம் அறுத்தெறிந்து
அன்பெனும் ஆயுதம் அணிந்து
இறைக்கு மட்டுமே அடிபணிந்து
இருளிலும் அச்சம் தவிர்த்து
அவசரமில்லாமல் ஆய்ந்து ஆராய்ந்து
அடியெடுத்து வைத்து நடைபோடு
அஞ்ஞானத்தோடு மெஞ்ஞானமும் சேர்த்து

முன்னேறுவதையே
முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
பின்சென்ற அனைத்தும்
முன்னுக்கு வரும்
முந்தானைப் பெண்ணுக்கும்!
முயற்சி வெற்றியையே தரும் .........

இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஈழமா இருளும்!..

 
ஈழத்தில்
ஈரக்குலைகளெல்லாம்
இரத்தமற்று இறுகிக்கிடக்க
இரக்கமற்ற அரக்கர்களெல்லாம்
இறந்தவர்களின்மேல் ஆட்டம்போட!

இப்படியான கொடுமைகள்
எப்போதுதான் தீருமென
எங்கோயிருக்கும் 
ஈரல்களில்
ஈரம் ஊற்றெடுக்க!

அரசியலாகும் ஈழம்
அரசியலாக்கும் ஈனம்
அழுகுரல்களின் ஆலோழம்
அந்தி சாய்ந்தாலும் தீராதாம்

விடியலை  எதிர்பார்த்து
விடிய விடிய
விழித்திருக்கும் விழிகளுக்கும்
விழித்திரையிடும் கண்ணீர்களுக்கும்
விடிந்திடும் ஒரு நாள் கிழக்கு
முடிந்திடும் அன்றே 
கொடுமையின் வழக்கு

ஈசப்படைகள் நாசமித்துபோகும்
ஈழக்குழந்தைகள் 
தன் தேசமெங்கும் வாழும்
எப்போர் நடத்தினாலும்
அப்போரையும் வெல்லும்
ஏவுகனைகொண்டு 
காரிருளை வீசினாலும்
 ஈழமா இருளும்?

இருளையகற்றி தீப ஒளியேற்றத் தெரியும்
இயன்றளவு ஈழம் காக்க முடியும்
ஈழத்தில் இனி எந்நேரமும்
இருளுக்கில்லை வேலை
இரவு நேரத்தில் மட்டும் வந்து
ஈழக்குழந்தைகளை உறங்கவைத்து
இனிமையாக்கிடுமே நாளை!...
---------------------------------------------------------------------------------------------------------------
இக்கவிதை ஈகரையின் கவிதைப்போட்டிக்காக எழுதியது.கவிதைப் போட்டியில் வெல்லமுடியாவிட்டாலும் கலந்துகொண்டமைக்கான மகிழ்ச்சியடைகிறேன். வித்தியாசமான 8 +8 தலைப்புகள் தந்தார்கள். அதில் 8 தலைப்புகள் நாமாக தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். அப்படி நான் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் ஒன்றுதான் இது.[மற்றவைகள் தொடரும்] 
போட்டியில் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்..
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது