நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எக்காலம் வசந்தகாலம்.


                                    வீட்டு வாசலிலமர்ந்து                                       
               வீட்டுப் பாடம் எழுதுகையில்                  
வேலியோரத்து முருங்கையை
வேடிக்கைகாட்டி வீசியதென்றல்
விரல்களில்லாமலேயே என் தலைகோதிய
அக்காலம்:

                                   ஒரு தலையணையில்                             
         இரு தலைகள் வைத்து              
               ஒருக்கழித்துப் படுத்துக்கொண்டு            
              ஒவ்வொரு கதையாக பேசிச் சிரித்த             
அக்காலம்:

                     ஓலைக் குடிசையில்                   
ஒன்றை விளக்கு வெளிச்சத்தில்
                      உலைகொதித்த அடுப்பு அணைந்திட             
                      ஊதி ஊதி எரியவைத்து சமைத்துண்ட           
அக்காலம்:

                                        இருள் சூழ்ந்த இரவிலெல்லாம்                              
திறந்த கிடக்கும் கதவிடுக்கின் வழியே
காவலிருந்த நிலவை
கண்கொட்டாமல் ரசித்தபடி                            
கவலைகளற்று கண்ணயர்ந்து உறங்கிய
அக்காலம்:

                          தெரியாத விளையாட்டையும்                  
                          தேடித்தேடிக் கண்டுபிடித்து                      
                            தேகம் வேர்க்க வேர்க்க                      
                        தெருவில் விளையாடிய                     
அக்காலம்:

                             மாலை கழுத்தில் விழுந்து                         
                  மண்டபம் முழுதும் விருந்து                     
     மறுவீடு புகுந்த அந்நேரம்
                                 மலமலவென கண்ணீர் கொட்டிய               
                   அக்காலம்:
                                                                                                                                           
                                             பட்டினியும் கிடந்து                                 
                      பத்துமாதம் சுமந்து               
                                          பட்டபாடும் மறந்து                                
                                     பச்சிளம் குழந்தையை                      
                                    பாசம்பொங்க கண்டு தொட்ட                
                    அக்காலம்:
  
                  அத்தனையும் மொத்தமாய் சேர்த்து
                                 எண்ணங்களில் எழும் எண்ணிலடங்கா                     
                                மனதின் உணர்வுகளை                         
                         எழுத்தின் வடிவில் ஏட்டில் வடித்து                  
                        மனக்கண்கள் அதனை படித்து மகிழும்             
                      அக்காலம் இக்காலம் எக்காலமும்              
எனக்கு வசந்தகாலம்தான்..

வசந்தகாலம் தலைப்பிற்கு இம்மாத தமிழ்த்தேர் இதழில் வெளியான கவிதை.நன்றி தமிழ்த்தேர்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உருகும் மெழுகு. [தந்தையர்தின வாழ்த்துகள்]

உலகிலுள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

ஒருநாள்போதுமா? இன்றொருநாள்போதுமா? உங்களையெல்லாம் நினைக்க இன்றொருநாள் போதுமா? இருந்தாலும். எல்லாமே பெண்களுக்குத்தான் இருக்கு எங்களுக்கு ஒன்றுமில்லையா? என அன்னையர் தினத்தன்று கேள்விகள் கேட்டார்கள் சிங்கங்கள்.

அது யாருக்கோ காதில்விழுந்து இன்றைய தினத்தை தந்தையர் தினமாக்கிவிட்டார்களாம் இப்ப சந்தோஷம்தானே
திருப்திதானே! இதைதானே எதிர்பார்த்தீர்கள்.அப்பாடா எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்கள்.தந்தையாகபோகிறவர்களும் சேர்ந்துக்கொள்ளலாம்..[சும்மா சும்மா] தந்தையென்ற தாரக மந்திரம் எந்நாளும் பிள்ளைகள் காதில் ஒலிக்கட்டும்..
.

இது என்றோ எழுதிய கவிதை மீண்டும் தந்தைகளின் சார்பில் பிள்ளைகளுக்கு..
இது எல்லாதந்தைக்கும் பொருந்தும் சில விதிவிலக்கானவர்களைதவிர. அதாவது இ ம வாக இருப்போருகல்ல..



எனது அன்பு மகனே!
அன்னையை மட்டும்
அணைத்து கொள்கிறாய்-இந்த
தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்.

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா!

சிலயிடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே சித்தரிக்கபடுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா!

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படக்கூடாதே என
என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான்
என்னால் பொறுக்கமுடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை
உன்னை இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான் மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக வருந்தாது மெழுகு
தன் உயிரை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நானும்

மகனே நீ உயிர்வாழ
உன் அன்னை தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்

நான் உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப் புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,அறிவாயா?



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்புத்தி பின்புத்தி.


எத்தனை பட்டாலும் புத்திவராதா?
இன்னும் எதிலெதில்தான் ஏமாறுவாய்?
ஏமாறுகிறாயா?
இல்லை மற்றவரை ஏமாற்றுகிறாயா?

சினிமாமோகத்தில்
சிட்டாய் பறந்துவரும் பெண்ணே!
யாரும்காண தேகத்தை
கைகுட்டை அணிந்து காட்டவா?
யாருக்கும் தெரியாமல் ஓடிவருகிறாய்!
பாழ்பட்டு போவதற்கா
பாசங்களை இழந்து
படிதாண்டி வருகிறாய்?

நெஞ்சடைக்கும் செய்திகள்
நாளேடுகளில் கண்டும்
நெஞ்சழுத்தக் காரியாய்
நம்பியோரைவிட்டு வெளியேறுகிறாய்!
தரங்கெட்டவளாகி
தலைப்பு செய்திகளில் வருகிறாய்!

நயவஞ்சத்தோடழையும்
குள்ளநரிகளுக்கு மத்தியில்
நீயே சென்று சிக்குவது சரியா?
கலைத்தெரியப்படுமே மானம்
அதைதான் விரும்புகிறாயா?

பெண்புத்தி பின்புத்தியென்ற
பலமொழியை உண்மையாக்கி
பட்டும் திருந்தாமல்
பரிதவிப்பது முறையா?

சீரழிவது சுலபமடி!
சீரழிந்த பின்னே-கண்ணீர்
சிந்தியும் லாபமில்லையடி!
சிலகால சொகுசிற்காக
சிறந்த பெண்மையை
சீர்கெடுப்பது பாவமடி!

சீரழிந்து கிடக்கிறதென
சமுதாயத்தின்மேல் பழியெதற்கு
சீரழிவது சமுதாயமல்ல
சீர்கெடுப்போரின்
நெறிமுறையற்ற வழிகேடுகளால்தான்
நெறிபடுத்த மகான்கள் வேண்டாமடி
நெறிதவறா நன்நடத்தை போதுமடி..

டிஸ்கி// இன்றைய செய்தியாக 6 பெண்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததாம் சினிமாவில் நடிப்பதற்காக! நடிக்கவைப்பதாககூறி அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக.முதன்மைச்செய்திகள். இப்படி தினம் தினம் செய்திகள் வெளியாகியும் ஏன்? இப்படி இளம் பெண்கள் சீரழிந்து போவதற்காக முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என புரியாத புதிராகவே உள்ளது .
இசெய்தியை படித்ததும் மனவேதனைமேலிட எழுதியது தான் மேலே உள்ள வரிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது