நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பழுக்காத இலையொன்று!



தேடியெடுத்த வாழ்க்கை
தோற்றுவிட்டதாய் எண்ணி
வழக்கில் விட்டபோது
வாழ்ந்த வாழ்க்கையின்
வகைகளை சொல்ல வழியின்றி
வார்த்தைகள் சிறைப்பட்டுக்கிடந்தன

வாய்தாக்கள் வாங்காமல்
வழக்கு முடிவடைந்ததும்
வழக்கத்திற்க்கு மாறாக
வாக்குவாதமேயில்லாமல் நான்கு
விழிகளும் விசாரித்துக்கொண்டன

பிரியாவிடைபெறும் சமயம்
பொசுக்கென வந்தபோது -இதுவரை
சிறையிருந்ததாய் சிணுங்கிய இதயம் -ஏனோ
சிணுங்கியழத் தொடங்கின
சிதறிய வாழ்வையெண்ணி

பழுக்காத இலையொன்று
பட்டென எழுந்த காற்றில்
படபடத்து கீழே விழுந்து
பரிதவித்து போய்
பட்டமரநிழலில் ஒதுங்கியதுபோல்

பிரியம் அவநம்பிக்கையானபோது
பாசம் பொய்த்தபோது
நேசம் வேசம் கலைத்தபோது
நிம்மதி நெடுந்தூரம் போனபோது
நிறைவு நெஞ்சைவிட்டு அகன்றபோது

அவமானங்களை சுமந்தபடி
அடிநெஞ்சு கனத்தபடி
அச்சத்தோடு வாழ்வது சரியல்லவென்று
அச்சடித்த காகிதத்தின் அடியில்
அச்சுப் பிசகாமல் அப்படியே

விவாகத்தின்போது
அன்பினாலிட்ட  கையெழுத்தை
விவாகரத்தின்போதும்
அன்பைவெருதிட்டது
விரல்கள் விரும்பாமலே
விரக்தியான மனதோடு...

இக்கவிதை எழுத்து.காமில் வெளியாகியுள்ளது
 எழுத்து.காமிற்க்கு எனது நன்றிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

புதையவா! பூக்கவா!

 
காதலென்னும் கீதை அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..

இக்கவிதை எழுத்து.காமில் எனது முதல் கவிதை.  அன்பான வரவேற்போடு என்னை வரேற்று.ஊக்கமென்னும் கருத்துக்களால் நெகிழச்செய்த எழுத்து.காமிற்க்கும் அங்குள்ள உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புத்தாண்டு பரிசு.



அகிலத்தை ஆளும் இறைவனே
அனைத்தும் அறிந்தவனே
அதிகம் கற்காத என்னை
அறிவோடு வளர வைத்தாய்


எழுத்தில் எழுந்த எண்ணம்
ஏறியது வானொலியில்
ஏற்றமிகு உன்னாலே
எதிரொலித்தது 
எல்லோரது காதுகளில்


வல்ல நாயனே
வாரிவழங்கும் தூயவனே
வற்றாத ஜீவநதியாய் 
எனக்குள் எண்ணங்களை
வழிந்தோடச் வகைசெய் ரஹ்மானே!

எங்கும் நிறைந்தோனே 
ஏக வல்லனோ
எண்ணாலும் எழுத்தாலும் உன்னை
ஏகமனதாய் என்றும் வணங்கிடுவேன்.

புத்தாண்டின் பூரிப்பு.

http://worldtamilnews.com/
எனது கவிதை worldtamilnews. வானொலியில் ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த புத்தாண்டில் எனது கவிதை வானொலியில் வலம்வருவது மனம் நிறைந்த பூரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
இதை ஒலிபரப்பச்செய்து, எனது கவிதை tதனது கணீரென்ற அழகுக் குரலால் வாசித்துக்கொண்டிருக்கும் தந்தை திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மனமாரச் சொல்லிக்கொள்கிறேன்

http://worldtamilnews.com/ .கவிதை கேளுங்கள் என்ற பட்டனை அழுத்துங்கள்.கவிதையை கேட்டு கருத்துகளை சொல்லுங்கள்..

இதோ யூ டியூப்பிலும் கண்டுகேட்க..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது