நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மெல்ல வெளியேறும் மெளனங்கள்.



மாய உலகத்தின் மர்ம குகையென்னும்
மனதிற்க்குள் மண்டிக் கிடக்கும்
உனது நினைவுகளைச் சுற்றியே
எனது எண்ணங்கள் சுழல்கிறது
அதனைச் சுற்றியே
எனது வாழ்க்கையும் கழிக்கிறது!

ஆறறிவைத் தாண்டி
ஏழாம் அறிவைத் தூண்டி
எட்டாம் அறிவை எட்டி
எனக்குள் ஏதேதோ நிகழச்செய்து
உன்னைப் பற்றிய எண்ணங்களே
என்னை ஆட்க்கொண்டு ஆட்சி செய்கிறது!

உன்னை முதல் முதலாய் கண்ட
என்கண்களுக்கு ஏனோ இதுவரை
வேறொரு பெண்ணின் உருவத்தை
உற்றுநோக்கும் சக்தி உண்டாகவில்லை
உன்னை விரும்பயதுபோல் வேறெதையும்
என் விழிகள் விருப்பமும் கொள்ளவில்லை!

உன் தின வருகையை எதிர்பார்த்து
எதிர்வீட்டு திண்ணையை தேய்த்தவன் நான்
என்னைக் கடக்கும் ஒரு நொடியைக்கூட
நீண்டதொரு  மணிக்கணக்காய் எண்ணி
நீ கடந்த பின்பும்  அவ்விடத்திலேயே
நெடுநேரம் நின்றவன்தான்
 
நீயறியாது உன்னைத் தொடர்வதும்
நீயறிகையில் அவ்விடத்திலிருந்து விலகுவதும்
நீ பயணங்கள் செய்வதை நான் அறிவதும்
நீண்ட தூரமென்றாலும் உன்பின்னே வருவதும்
தேவதை தந்த வரமாக்கிகொண்டேன்
தினம் தினம் அதையும் வேண்டி நின்றேன்!

திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின்,,,,,,,,தொடரும்.


என்னது தொடருமா!!!!!!!! ஆமாம் இது ஒரு[தலைக்] காதல் தொடர்கவிதை. 
காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தெரியாமலும். வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளி வைக்கமுடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கும் பலமனங்களின் வெளிப்பாடாய் இக்கவிதை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாதை மாறிப் பயணம்..


விழிகண்ட வழியெங்கும்
வியக்கத்தகு வித்தியாசங்கள்
விதவிதமாய் சிதறிக்கிடக்க
வியப்புற்றவாறே
இவ்வுலகப்பாதையில் ஒருபயணம்,,

வண்ண வர்ண ஜாலங்கள்
வண்ணமிகு விழாக்கோலங்கள்
வசதிக்கேற்ற மாற்றங்கள்
விருப்பு வெறுப்பு சூழ்ந்த உள்ளங்கள்
கருவுற்ற வழியில்
வித்தியாசமில்லையென்றாலும்
உருப்பெற்ற வழியில்
வித்தியாசங்கள்!

வழி நெடுகிலும் சிலவகை
விகார கோரங்கள்
வலிகள் வடுக்களாய் மாறியும்
வேதனையில்
வெதும்பித் துவழும் மனங்கள்!

மெல்ல மெல்ல முன்னேறி
முன்னும் பின்னும் பார்க்கையில்
இளமையை களைந்த முதுமைகள்
முதுமையை வெறுத்த இளமைகள்
முன்னுக்குப்பின் எதிராக
முண்டியடித்த முரண்பாடுகள்!

இன்னுமென்ன இருக்கிறதோ!!
என்றெண்ணியபடியே நீண்டது பாதை

எங்கு நோக்கினும் மோகம்
எதைகண்டாலும் ஆசை
எண்ணிடயிலா அதர்மம்
எதற்கெடுத்தாலும் வன்மம்

இவ்வுலப் பயணத்தில்-பாதை
நீளப்போவதில்லையென அறிந்தும்
வழியெங்கும் வினைகளை
விதைத்தபடியே செல்லும்
வினோத மனிதர்கள்

ஆறடியில் அடங்கப்போகும்
உடல்கொண்டபோதே
அளவுக்கடந்த ஆசைகளால்
ஆன்மாக்களை கொன்று
அதன்மேல் நடத்தும் அக்கிரமங்களென

அத்தனையும்
கண்டுகொண்டே வந்தபோது
கண்ணெதிரே பாதையில்லை
அதிர்ந்து அழத்தோன்றியபோது
ஆசுவாசப்படுத்திக்கொண்டது நெஞ்சம்
அயர்ந்த வேளையில்
ஆன்மா கண்டுவந்த பயணமது!

கடந்துவந்த பயணத்தில்
கற்ற பாடங்கள் பலபல-இனி
கடக்கப் போகும் பயணத்தில்
காலச்சுவட்டை கறைப்படுத்தாது-தன்
காலத்தை கடக்கவேண்டிய
பாதையை மாற்ற எண்ணியபடியே -கண்ட
பயணத்தை நினைத்து நடுங்கியது மனது...


இக்கவிதை ”பாதைகளுக்கும் பயணங்களும்” என்ற தலைபிற்காக எழுதி தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளது. இக்கவிதை வாசித்தபோது அன்று [துபையில்]   தடுமாற்றம் கண்டது.[கையாடினா மைக் ஆடாம என்ன செய்யும் ஹா ஹா].. 


 அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

கல்லறையைத்தேடி!

உடலை விட்டு
உயிர் பிரிந்த நொடியில்
உலகில் நடந்தவைகளை
 நினைத்துப் பார்க்கும் ஒரு பின்னோட்டம்!

மூடிக்கிடக்கும் உடலினுள்ளே
 விழித்துக் கிடக்கும் உயிருக்குள்
ஓடியாடும் உலக நினைவுகள் ஓராயிரம்

விழி திறந்தால் வினோதமாவும்
விழி மூடியிருந்தால் வித்தியாசமாகவும்
வேடிக்கைக் காட்டிய உலக வாழ்க்கை

காதலென்ற கனி எவ்வித சுவையென
அறியத் தெரியாமலே! அதனை உண்டுகளித்தும்,
வெறுத்து ஒதுக்கியும் வாழும் மனங்கள் கண்டு
நெஞ்சம் சஞ்சலத்தோடு சங்கடப்பட்டது!

அன்னையின் அன்புக்கு
அகிலத்தில் ஈடேதென்ற
அகராதியை மாற்றியமைக்கும்
அன்னையர்களை கண்டு உணர்வு ஆத்திரப்பட்டது!

ஒழுக்கம் சார்ந்தவர்களென போற்றிப்
புகழப்பட்டவர்கள் கூட
ஒழுக்கக் கேடானவைகளின் பின்னே
ஓடியது கண்டு மனம் அதிர்வைக் கண்டது!

முகத்துக்கு முன்னே அழகாய் பேசி உறவாடும்
அன்பின் உறவுகள்கூட முதுகுக்கு பின்னே
முகம் சுழிக்கும் பாவனைகள் கண்டு மிரளவைத்தது!

தான் படைத்த காகித பணத்திற்கு
மதிப்பு கொடுத்து கைகட்டி நிற்கும் மனிதன்
தன்னைப் படைத்தவனுக்கு
மதிப்பு கொடுக்காது கண்டு ரத்தம் கொதிதெழுந்தது!

”இப்படி”

இரணத்திற்க்கும் மரணத்திற்க்கும்
இடைவெளியான பயணத்தில்தான்
எத்தனையெத்தனை இன்ப துன்பங்கள்
எத்தனையோ விதமான ஏற்ற இறக்கங்கள்

இவையெல்லாம் திறக்கவே முடியாத
இறுதிக் கண்மூடலின் பின்னே
கானல் நீராகும் காட்சி பிம்பங்களாய்
காட்சியளித்தது கண்டு 

பின்னோட்டம் பார்த்த மனதும்
திறந்து பார்க்கமுடியா விழியும்
உடலை விட்டுப் பிரிந்த உயிரும்

இமைகளை திறந்து பார்க்கவும்
இவ்வுலகை திரும்பிப் பார்க்கவும்
மனமேயில்லாது ஓடியது
கல்லறைத் தேடி..


டிஸ்கி// எதை எதையோ பின்னோக்கிப் பார்க்கிறோம் இதையும் பார்ப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது