நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாதை மாறிப் பயணம்..


விழிகண்ட வழியெங்கும்
வியக்கத்தகு வித்தியாசங்கள்
விதவிதமாய் சிதறிக்கிடக்க
வியப்புற்றவாறே
இவ்வுலகப்பாதையில் ஒருபயணம்,,

வண்ண வர்ண ஜாலங்கள்
வண்ணமிகு விழாக்கோலங்கள்
வசதிக்கேற்ற மாற்றங்கள்
விருப்பு வெறுப்பு சூழ்ந்த உள்ளங்கள்
கருவுற்ற வழியில்
வித்தியாசமில்லையென்றாலும்
உருப்பெற்ற வழியில்
வித்தியாசங்கள்!

வழி நெடுகிலும் சிலவகை
விகார கோரங்கள்
வலிகள் வடுக்களாய் மாறியும்
வேதனையில்
வெதும்பித் துவழும் மனங்கள்!

மெல்ல மெல்ல முன்னேறி
முன்னும் பின்னும் பார்க்கையில்
இளமையை களைந்த முதுமைகள்
முதுமையை வெறுத்த இளமைகள்
முன்னுக்குப்பின் எதிராக
முண்டியடித்த முரண்பாடுகள்!

இன்னுமென்ன இருக்கிறதோ!!
என்றெண்ணியபடியே நீண்டது பாதை

எங்கு நோக்கினும் மோகம்
எதைகண்டாலும் ஆசை
எண்ணிடயிலா அதர்மம்
எதற்கெடுத்தாலும் வன்மம்

இவ்வுலப் பயணத்தில்-பாதை
நீளப்போவதில்லையென அறிந்தும்
வழியெங்கும் வினைகளை
விதைத்தபடியே செல்லும்
வினோத மனிதர்கள்

ஆறடியில் அடங்கப்போகும்
உடல்கொண்டபோதே
அளவுக்கடந்த ஆசைகளால்
ஆன்மாக்களை கொன்று
அதன்மேல் நடத்தும் அக்கிரமங்களென

அத்தனையும்
கண்டுகொண்டே வந்தபோது
கண்ணெதிரே பாதையில்லை
அதிர்ந்து அழத்தோன்றியபோது
ஆசுவாசப்படுத்திக்கொண்டது நெஞ்சம்
அயர்ந்த வேளையில்
ஆன்மா கண்டுவந்த பயணமது!

கடந்துவந்த பயணத்தில்
கற்ற பாடங்கள் பலபல-இனி
கடக்கப் போகும் பயணத்தில்
காலச்சுவட்டை கறைப்படுத்தாது-தன்
காலத்தை கடக்கவேண்டிய
பாதையை மாற்ற எண்ணியபடியே -கண்ட
பயணத்தை நினைத்து நடுங்கியது மனது...


இக்கவிதை ”பாதைகளுக்கும் பயணங்களும்” என்ற தலைபிற்காக எழுதி தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளது. இக்கவிதை வாசித்தபோது அன்று [துபையில்]   தடுமாற்றம் கண்டது.[கையாடினா மைக் ஆடாம என்ன செய்யும் ஹா ஹா].. 


 அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

8 கருத்துகள்:

 1. அருமையான வார்த்தை பிரயோகங்கள் தோழி. உங்களின் கண்ணோட்டங்கள் மிக தெளிவாக இருக்கிறது. கவிதைகள் பலவற்றை படித்துவிட்டேன் ஒரு தெளிவான பார்வை அனைத்திலும் கொட்டிக்கிடக்கிறது.

  இன்னும் வந்து படிப்பேன் உங்களுக்கு கவிதை பிறவிவழியே வருகிறதா? இல்லை நீங்கள் மட்டும்தான் உங்கள் குடும்பத்தில் எழுதுகிறீர்கள். இப்படி அருமையாக எழுதுகிறீர்கள் ஆச்சரியமாக இருக்கு. வாழ்த்துகள் தோழி..

  பதிலளிநீக்கு
 2. //மெல்ல மெல்ல முன்னேறி
  முன்னும் பின்னும் பார்க்கையில்
  இளமையை களைந்த முதுமைகள்
  முதுமையை வெறுத்த இளமைகள்
  முன்னுக்குப்பின் எதிராக
  முண்டியடித்த முரண்பாடுகள்!
  //

  அழகான கவிதை.

  தமிழ்த்தேரினில் பவனி வந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி.

  /கைநடுங்கியதால் மைக்கும் ஆடியது/

  அவைகளையே ஆடவைத்துள்ளது உங்கள் கவிதையின் சொல்லாடல்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. உன் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒருவாரான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிக அழகிய நடையில் எழுதும் திறன் உனக்கு கிடைத்திருப்பது வரம். வரத்தை பிறருக்கு வரபிரசாதமாக்குவது அருமை.. வாழ்த்துகள் உனது இலக்கியபணி என்றும் தொட்டு தொடரட்டும் என்று மனமார்ந்து வாழ்துகிறேன்..

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமை சகோ
  இன்னும் சிறப்புற தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 5. உணர்சிகளும் ஆதங்கமும்
  ஒருங்கே அடங்கிய
  அழகிய கவிதை சகோதரி.
  அருமை அருமை.

  பதிலளிநீக்கு
 6. இனிய வார்த்தைகள்,
  அழகிய நடை
  அருமையான கவிதை

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது