நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எக்காலம் வசந்தகாலம்.


                                    வீட்டு வாசலிலமர்ந்து                                       
               வீட்டுப் பாடம் எழுதுகையில்                  
வேலியோரத்து முருங்கையை
வேடிக்கைகாட்டி வீசியதென்றல்
விரல்களில்லாமலேயே என் தலைகோதிய
அக்காலம்:

                                   ஒரு தலையணையில்                             
         இரு தலைகள் வைத்து              
               ஒருக்கழித்துப் படுத்துக்கொண்டு            
              ஒவ்வொரு கதையாக பேசிச் சிரித்த             
அக்காலம்:

                     ஓலைக் குடிசையில்                   
ஒன்றை விளக்கு வெளிச்சத்தில்
                      உலைகொதித்த அடுப்பு அணைந்திட             
                      ஊதி ஊதி எரியவைத்து சமைத்துண்ட           
அக்காலம்:

                                        இருள் சூழ்ந்த இரவிலெல்லாம்                              
திறந்த கிடக்கும் கதவிடுக்கின் வழியே
காவலிருந்த நிலவை
கண்கொட்டாமல் ரசித்தபடி                            
கவலைகளற்று கண்ணயர்ந்து உறங்கிய
அக்காலம்:

                          தெரியாத விளையாட்டையும்                  
                          தேடித்தேடிக் கண்டுபிடித்து                      
                            தேகம் வேர்க்க வேர்க்க                      
                        தெருவில் விளையாடிய                     
அக்காலம்:

                             மாலை கழுத்தில் விழுந்து                         
                  மண்டபம் முழுதும் விருந்து                     
     மறுவீடு புகுந்த அந்நேரம்
                                 மலமலவென கண்ணீர் கொட்டிய               
                   அக்காலம்:
                                                                                                                                           
                                             பட்டினியும் கிடந்து                                 
                      பத்துமாதம் சுமந்து               
                                          பட்டபாடும் மறந்து                                
                                     பச்சிளம் குழந்தையை                      
                                    பாசம்பொங்க கண்டு தொட்ட                
                    அக்காலம்:
  
                  அத்தனையும் மொத்தமாய் சேர்த்து
                                 எண்ணங்களில் எழும் எண்ணிலடங்கா                     
                                மனதின் உணர்வுகளை                         
                         எழுத்தின் வடிவில் ஏட்டில் வடித்து                  
                        மனக்கண்கள் அதனை படித்து மகிழும்             
                      அக்காலம் இக்காலம் எக்காலமும்              
எனக்கு வசந்தகாலம்தான்..

வசந்தகாலம் தலைப்பிற்கு இம்மாத தமிழ்த்தேர் இதழில் வெளியான கவிதை.நன்றி தமிழ்த்தேர்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 கருத்துகள்:

  1. எக்காலம் வசந்த காலம் என கேள்வி எழுப்பி
    அனுபவித்த வசந்த காலங்களை
    அனுபவித்தபடி படிப்போரும் அனுபவிக்கும்படி
    அழகாக பட்டியலிட்டு
    அக்காலம் முதல் இக்காலம் வரை
    வாழ்ந்த காலம் எல்லாம்
    வசந்த காலமே என முடித்திருக்கும் பாங்கு
    அருமையிலும் அருமை
    நிகழ்காலத்தை ரசித்து வாழத்தெரிந்த அனைவருக்கும்
    எக்காலமும் வசந்த காலம்தானே?

    பதிலளிநீக்கு
  2. இன்பம் வந்த காலமும்
    துன்பம் தொலைந்த காலமும்
    அறியாமை அறிந்த காலமும்
    அன்பை புரிந்த களமும்
    வசந்த காலமென
    சொல்லிய உங்கள் கவிதையை
    படிக்கும் காலமும்
    வசந்தகாலாமே

    பதிலளிநீக்கு
  3. "அக்காலம் இக்காலம் எக்காலமும் எனக்கு வசந்தகாலம்தான்.."

    உங்கள் எண்ணம்போல் வசந்தம் வீசட்டும் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  4. எதைஎதையோ ஞாபகப்படுத்தி என்னை அக்காலத்திற்கே அழைத்துச்சென்று விட்டீர்கள். நினைவுகள் இக்காலத்திற்கு திரும்பி அழைத்துவர ர எக்காலமும் முடியாது போலிருக்கே!

    குறிப்பாக மிகவும் ரசித்தவை:

    //வீசியதென்றல் விரல்களில்லாமலேயே என் தலைகோதிய அக்காலம்://

    // ஒரு தலையணையில் இரு தலைகள் வைத்து ஒருக்கழித்துப் படுத்துக்கொண்டு ஒவ்வொரு கதையாக பேசிச் சிரித்த அக்காலம்://

    //அத்தனையும் மொத்தமாய் சேர்த்து எண்ணங்களில் எழும் எண்ணிலடங்கா மனதின் உணர்வுகளை எழுத்தின் வடிவில் ஏட்டில் வடித்து மனக்கண்கள் அதனை படித்து மகிழும்//

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. எடுத்து விளக்ககூடிய அளவில் எல்லா வரிகளும் உள்ளது...

    அசத்தல்..

    பதிலளிநீக்கு
  6. இறைவனை நேசித்து இன்பம் பெறும் உங்களுக்கு காலமெல்லாம் வசந்தகாலம்.இறைவன் கொடுத்த கவித்திறன் மக்களின் வேண்டுதல் உங்களுக்காக கொட்டிக் கிடக்கின்றது

    பதிலளிநீக்கு
  7. நடந்து வந்த பாதையை...
    கடந்து வந்த காலத்தை....
    மனதினில் சேமித்து வைத்த
    மகிழ்ச்சியான காலங்கள் அனைத்தும் "வசந்த காலம்"தான்...!

    வார்த்தைகளில்
    வர்ணிக்கமுடியாத
    வரிகளில்... இந்த
    "எக்காலம் வசந்த காலம்"

    வாழ்த்துக்கள்...!
    சகோதரி...!

    காஞ்சி முரளி...!

    பதிலளிநீக்கு
  8. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையாக இருக்குங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    சிவா

    பதிலளிநீக்கு
  10. எனது அன்பார்ந்த நெஞ்சங்களின் பாசமழையில் நனையம்வைத்திருக்கும் கருத்துகள் கண்டு மனம்முழுவதும் மகிழ்ச்சி. தங்களின் அனைவரின் அன்பைப் பெற்றிருப்பதில் மிகுந்த நெகிழ்ச்சி. எங்கெங்கே இருக்கும் உறவுகளை எழுத்துகளின்மூலம் இணைத்துவைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

    தங்கள் அனைவரின் அன்புக்கும். கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  11. காலங்கள் பல உண்டு. இருந்தாலும் எக்காலத்தையும் வசந்த காலாமாய் பாவிக்கும் மனம் உங்களுக்கு இருப்பது இறைவன் கொடுத்த வரம். பெண் எழுத்து பற்றி தொடர் எழுத அழைத்ததற்குப் பிறகு நம் வலைப்பக்கமே காணோமே. இப்போது உறவுகள் பற்றி தொடர் எழுத நான் அழைக்கலாமா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது