நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விமோசனம்!.


விலக்கப்பட்ட
கனியை உண்டதால்
விஸ்வரூபமெடுத்து
விரிந்து பரந்தது
மனிதயினம்!

விலகப்பட்டதால்
உருவானதாலோ என்னவோ!
விலகியே நிற்கிறது இன்னமும்
விதண்டா வாதங்களால்
மனிதமனம்!

அன்று  உண்டகனிக்கு
விதிவிலக்கு கொடுத்து
விமோசனம் பெற்று

இன்று அக்கனியை உண்பதால்
ஆரோக்கியமாகிறது
மனித உடல்!

ஆனால்!!!

உண்டதினால் ஏற்பட்ட
உஷ்ணத்தின் உச்சம்போல்
உள்ளங்களில் உஷ்ணத்தையடக்கி
உலகுக்காக குளிர்ச்சியாய் வேஷமிடும்

மனித மனங்கள் மட்டும்
விமோசனமே யில்லாததுபோல்
வேறுபட்டே நிற்கிறது
.
விலக்கப்பட்ட கனிக்கு
கிடைத்த விமோசனம்போல்
கிடைக்குமா?
மனித மனதுக்கும்!!.

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

ஆத்மார்த்தமாய்....


மண்டபம் நிரம்பி வழிய
மணக்கோலத்தில் செல்லமகள்
மார்போடு அணைத்ததும்
படபடவென துடித்த நெஞ்சம்
பாசத்தால் பரிதவித்து
புதுவித மன
பாரத்தால் துடித்தது

மழலையான வயதினிலே-என்
மடிசுமந்த முத்துமகள்
மழலையாகி மங்கையாகி
மாலைசூடி மணக்கோலம் பூண்டு
மருகிக்கொண்டே
மறுவீடு செல்லும் நேரம்

சுமந்த மடி சுருங்கி கதற
சுணங்கி சுணக்கி இதயம் நொருங்க
சுரந்து சுரந்து விழிகள் கலங்க
குருதி மொத்தம் நரம்பில் உறைய
குரலும் நடுங்கி உதறி உடைய
சொல்லயியலாச் தாயின்துயரம்
சொல்லில் வடிக்கத் தெரியாத்
சேயின் நிலையும்

மகளாகத் தூளியாடி
சினேகிதியாய் துயர்கள் நீக்கி
உறவாடிய உயிர்கள் இரண்டு
உருகியபடியே
விட்டுப் பிரிந்த பொழுது
புழுங்கித் தவித்தது
கரு சுமந்த மடியும்
பால் சுரந்த மாரும்
பாசத்தை சுமந்த மனதும்

தோழியாக இருந்தமகள்
தோள்சாய்ந்து கிடந்தமகள்
கண்ணுக்குள்ளே காத்தமகள்
கணவனோடு கைகோர்த்தாள்
இணைந்த கைகள்போல
இதயங்கள் இணைந்து இனிக்க
காலந்தோறும் கண்கலங்காது
கஷ்டமேதும் நெருங்காது
காக்கவேண்டும் வல்ல நாயன்

அன்பும் அறணும் அவள்பேணி
அனைவரும் புகழ மகள்வாழ
அன்னை நெஞ்சம் உருகியபடி
அகிலம் காக்கும்  இறைவனை
ஆத்மார்த்தமாய் வேண்டுகிறேன்..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என்னது மீண்டுமாஆஆஆ!


அன்புள்ளங்களே!
அனைவரும் எப்படியிருக்கீங்க. நலமா?
சுகமா? செளக்கியமா?

நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த சற்று நேரத்தில் உங்களுடன் உறவாட ஓடோடி வந்துவிட்டேன்.அன்பு நெஞ்சங்கள் அனைவரும் இறைவனின் உதவியால் நலமோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

உங்கள் படைப்புகளெல்லாம் எப்படி போகுது?. வலையுலகம் ஒரு தனியுலகமாக இயங்குவது சந்தோசமே!

கடந்த இடைப்பட்டகாலத்தில்  உங்களின் பதிவுகளை நிறைய படிக்கமுடியாமல் போனதும்.நீரோடையில் கவிதை நீரின் ஓட்டம் சற்றே  தேங்கமடைந்ததும்  . சற்று மனதுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சூழல்களை அனுசரி்க்கும்,நம் முக்கிய கடமைகளிலும் கவனம் செலுததவேண்டிய பொருப்புகளும் மிக மிக முக்கியமல்லவா! அதனை சரிவர செய்துமுடித்த திருப்தியோடு மீண்டும் உங்கள் முன். 

என்னது மீண்டுமாஆஆஆ. யாருப்பா அது அதிர்ச்சி அடைவது சரி சரி எத்தனையோ சகிச்சிகிறீங்க இதையும் அப்படியே நெனச்சிகீங்களேன்.
ஹா ஹா ஹா..

நெஞ்சத்தின் சில அதிர்வுகளை
நிலைகொள்ள பலநிகழ்வுகளை
நித்தம் நடக்கும் நிகழ்வுகளை
எண்ணத்தால் கோத்து
எழுத்து வடிவில் ஏட்டில்
விரல்வழியே வடிக்க
விரைவில் வருகிறேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது