நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலைதளங்கள் இயங்குகிறதா?





 மீண்டும் இணைந்திடுவோம் மீளா அன்புடன்

நீண்ட இடைவெளிகள் வலைதள உள்ளங்களுக்குள் ஏற்பட்டதுபோன்ற ஓர் உணர்வு, முகநூல் மற்றும் டிவிட்டரின் ஆளுமையினாலும் அதனுள் நாமும் அடைமையாகிவிட்டதினாலும்,தனிப்பட்ட நமது வலைதளங்களில் சற்றே அல்ல கொஞ்சம் கூடுதலாகவே இடைவெளிகள் வந்துவிட்டது, நம்மில்பலர் நம்மையே மறந்துவிட்ட நிலைபோல், அதனில் சற்று நின்றுகொண்டும் நம்முடையவைகளையும் நிலைப்படுத்திக்கொண்டும், மீண்டும் நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் அன்பையும், நட்பினையும்  நமது எண்ணங்களையும் கருத்துகளாக பகிர்ந்துகொள்ளவேண்டுமென்பதே ஆவல், என்ன முயற்சிப்போமா?
 ================================================

                         அன்பு


அண்டப் பெருவெளியில்
ஆளற்று நிற்க்கும்போதும்
இறையால் விதைக்கப்பட்ட
இயற்கை விதைகள்
அன்புகொண்டு ஆரத்தழுவும்
ஆனந்தக் காற்றாய்!

ஆயுதமேந்திய ஆபத்துகள்
ஆட்கொல்லி விசமாய்
ஆங்காங்கே பரவியபோதும்
அடிமனக் கருணைகள்
அன்புகொண்டு தேம்பியழுகும்
அந்நியோன்னியமாய்!

மனக் குமுரல்கள்
மண்டிக்கொண்டு
மனிதரையே நிலைகுலைக்கும்போது
மெதுவாய் தலைகோதும் விரல்கள்
மென்மைகொண்ட ஆத்மார்த்தமாய்!

அவ[ன்]ள் போனலென்ன
நானிருக்கிறேன்
என்னுமிடத்தில்
நங்கூரமிட்டிருக்கும்
அன்பாயுதம் ஆணித்தரமாய்!

பாகுபாடின் பேதமற்ற
பச்சோந்திகளின் தோற்றமற்ற
நிறயின பாகுபாடற்ற
நோக்கியதிசையில் தீர்க்கமுற்ற!

வாஞ்சையாய், வசீகரமாய்,,
அரவணைப்பாய், அதட்டுதலாய்,,
தன்மையாய், தாயுள்ளமாய்,,
தோழமையாய், தன்னம்பிக்கையாய்,,

கருணையாய், கனிவாய்,,
அரணாய், ஆதரவாய்,,
இரக்கமாய், ஈகையாய்,,
இளம் புன்னகையாய்,,

வார்தைகளால்
வர்ணிக்க இயலாத
சொற்களால் வாழாமல்
செயல்களில் வாழுகின்ற
சொர்க்கத்தின் திறவுகோல்!

நம்பிக்கை துரோகத்தையும்
நெடுங்கால விரோதத்தையும்
கொடூர உள்ளத்தையும்
நலங்கெட்ட எண்ணத்தையும்
சீர்திருத்தும் நெம்புகோல்!

அன்பென்ற ஒன்றே
இப்புவியை புண்ணியமாக்கி
இயக்கும் பூகோலம்
அன்பென்ற காற்றில்லையெனில்
சுவாசங்களில் கலக்குமே விசவாய்வுகள்!

பலவீனதின் பலமும்,
பலத்தின் பலவீனமும் அன்பே!
அன்பென்ற அணுகுமுறை
அகிலத்தில் இல்லையெனில்
படைப்பினங்கள் மொத்தமும்
பயனற்றவையே!

அன்பின் பரிமாற்றங்கள்
அகம் புறங்கள்
அலவாவிக்கொள்ளும்வரை
ஆன்மாக்களும்
ஆத்மார்த்தங்களும் நிறைவுபெற்றவையே..






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இறுதியின் விளிம்பில்






நொடிகளும் நிமிடங்களும்
நாட்களும் மாதங்களும்
வெகுசீக்கிரம் உருண்டோடி
வருடத்தின் விளிம்பில் நின்றபடி
கடந்துவந்தவைகளை மனம்
கலைத்துப்போட்டு நினைக்குதடி!

கசப்புகளும் கஷ்டங்களும்
கலக்கத்தை கொண்டதோ!
சோகங்களும் வருத்தங்களும்
சோர்வுகளை தந்ததோ!
அழுகைகளும் ஆராரணங்களும்
ஆழ்மனம் உண்டதோ!

மகிழ்வுகளும் தித்திப்புகளும்
மனமேற்றுக் திளைத்ததோ! - சில
சந்தோஷங்களும் சகிப்புகளும்
சாந்தியாகி நின்றதோ!
பூரிப்புகளும் புன்னகைகளும்
பூந்தோட்டவாசம் வீசியதோ!

எண்ணியவைகள்
எல்லாம் நல்லவையே!
ஏனோ அவற்றில்
அல்லவைகளும் அண்டிக்கொண்டு
அனுதினமும்
அவதிக்குள்ளாக்கின!

எல்லாம் அன்பல்ல என்பதை
எடுத்துரைத்தவைகளும்
எல்லாமும் நன்மையல்ல என்பதை
அடித்துரைத்தவைகளும்
எல்லாத்திலும் தீமையுமுண்டு என்பதை
படிப்பினை தந்தவைகளுமாய்!

செய்தவைகளில் ஒன்றும்
சொல்லும்படியாக இல்லையோ
சொல்லியவைகளில் எதுவும்
செய்யமுடியவில்லையோ!
சொற்ச்செயல் எவற்றிலும்
சிறப்புகள் பதியவில்லையோ!

உலக நடப்புகளில்
ஓங்கிப்பெருகும் குற்றங்களும்
ஊர்த்தெரு பழக்கங்களில்
ஒய்யாரமிடும் தீங்குகளும்
தனிமனித ஒழுக்கங்களில்
தரம்குறையும் நடத்தைகளும்!

நகர்ந்த நாட்களிலோ
நடைபயின்ற வருடத்திலோ
குறைகளேதுமில்லை!
நாட்களில் நகர்ந்த
வருடங்களில் நடைபயின்ற
மனிதர்களிடமும் மனங்களிலும்
பலகுறைகள் பெருந்திரைகள்

இனிவரும் வருடத்திலாவது
இன்னலில்லா நல்லவைகளையே
சொல்லிலும் செயலிலும் எல்லாரும்
சிறப்பாய் செய்தருள
சங்கைமிகு இறைவனிடம்
சிரம்தாழ்த்தி கேட்கிறேன்...
 =================================


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஒளிவீசும் வெப்பத்தட்டு..




இறையளித்த திருவிளக்கு
வெப்பம் சுமந்துலவும் விசைவிளக்கு
துயிலெழுப்பும் தூண்டாமணிவிளக்கு
தன்  ஒளிக்கதிரால் புவியீர்த்து
இவ்வுலகின் இருளகற்றி
வெளிச்சம் தரவந்த ஒளிவிளக்கு!

உலகில் வாழும் உயிர்களுக்கு
ஊட்டம்கொடுத்து
வாட்டாம்போக்கும் வள்ளலாரே!
உன் வரவில்லையெனில்
வாடிப்போகும் நாரிப்போகும்
உயிர் வாழும் யாவும் சூரியரே!

உன்னொளியில் கடன்வாங்கி
இருள் நீக்கும் வெண்ணிலவும்!
உன் கதிர்வீச்சில்
உடல் பிணிதீர்க்கும் மானிடமும்!
உன் வரவுக்காக
இயற்கைமொத்தம் காத்திருக்கும்!
உன் கதகதப்பில் இவ்வுலகே
குளிர்காயும்!

அதிகாலை உன்வரவு
அமைதி காக்கும் - வானின்
உச்சிமீது நீ அமர்கையில்
உஷ்ண வெப்பம் கூடும்!
அந்தி நீ சாய்கையில்
அழகொளிகூட்டி
அடிவானும் நாணம்கொள்ளும்!

உன் வரவில் மந்தமெனில்
மழைமின்னலிடிக்கு கொண்டாட்டம்!
உன் வரவேயில்லையெனில்
மண்மீதிருக்கும் உயிர்களோ திண்டாட்டம்!

என்வீட்டு முற்றத்தில்
உனது ஒளிக்கீற்று - கண்டதுமெழும்
என்மனக் கூட்டுக்குள்ளே
எண்ணிலடங்கா கவிப்பாட்டு!
உனதொளிக்குள் ஒய்யார  வண்ணமிட்டு!
உலகைச் சுற்றும் நீயொரு வெப்பத்தட்டு!

மறையோனளித்த
இவ்வுலகின் மகத்துவமே
இச்சுடர்விளக்கு!
இச்சூரியரின் கடுஞ்சூட்டில்
இளகி கருக வேண்டாம்
மறுவுலகினில் மானுடமே யென
மன்றாடித் தொழுதிடுதே தினம் என்மனமே...


சூரியன் என்ற தலைப்பிற்கு கவிதை வயல் 202காக எழுதியது...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது