நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாசிக்கிறேன் இறைவா!


பசித்திருக்கிறேன்
தனித்திருக்கிறேன்
விழித்திருந்து நான்
விம்மிக்கரைகிறேன்
இறைவா உனக்காவே!

அழுது துடிக்கிறேன்
தொழுது நிறைக்கிறேன்
ஆன்மதிருப்தியை
அடைய நினைக்கிறேன்
இறைவா எனக்காவே!

எங்கிருக்கிறாய் எங்கிருக்கிறாய்
என்று நானும் தேடியதில்லையே
இறைவா உனை ஒருபோதுமே!
இங்கிருக்கிறாய் எங்குமிருக்கிறாய் என்று
எந்நாளும் சாந்திக்கொள்ளுமே
எந்தன் நெஞ்சமே!

பாவி நானுமே பாவி நானுமே
பதறித்துடிக்கிறேன் -
நீ என்
பாவங்களைப் போக்கிட

பாவை நாளுமே பாவை நாளுமே
கதறியழுகிறேன் -
நீ என் குற்றங்
குறைகளை நீக்கிட

இருக்கும் வரையிலே இருக்கும் வரையிலே
இவ்வுலகில் நானுமே!
இறையைமட்டுமே ஓர் இறையமட்டுமே
வணங்க வேண்டுமே!

பாழும் உலகிலே பாழும் உலகிலே எனைப்
படைத்த இறைவனே!
பயபக்தியை பயபக்தியை
எனக்குள் ஊறச்செய்திடேன்

காலை மாலையில் இரவுவேளையில்
உன்னை வணங்கவே!
காத்துகிடக்கிறேன் காத்துகிடக்கிறேன்
இறைவா
உன்மீது கொண்ட அன்பிலே!

உள்ளக்கிடங்கிலே! உள்ளக்கிடங்கிலே
உன்னைக் காணவேண்டியே
ஊறும் ஆவலோ ஊறும் ஆவலோ
ஊற்றெடுக்குதே!

உதிரமுழுவதும் உதிரமுழுவதும்
உன்னை நேசித்தே
உணர்வுமுழுவதும் உணர்வுமுழுவதும்
உன்னிடமே யாசித்து நிற்க்குதே!

மரணித்த பின்பிலே மரணித்த பின்பிலே
மண்ணறை வாழ்கையிலே
இறைவா!
சொர்க்க வாசலை சொர்க்க வாசலை
திறந்து வைத்திடேன்

மறுமை நாளிலே மறுமை நாளிலே
நிழலில்லாத அந்நாளிலே
உனது
அர்சின் நிழலிலே அர்சின் நிழலிலே
எனக்கும் ஒரிடத்தை கொடுத்திடேன்.

கேள்விக்கணகின்றியே கேள்விக்கணகின்றியே
சொர்க்கம் செல்லவே
எந்தன் இறைவனே ஏக இறைவனே
எனக்கும் ஒரு வாய்ப்பை தந்திடேன்
என் குடும்பத்திற்க்கும் சேர்த்து தந்திடேன்....
----------+---------------------+------------------------+-----------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இவைகளின் காரணகர்த்தா!




உணர்ச்சிக் கேணிக்குள்
ஊறிக்கொண்டேயிருக்கும் கழிவுகள்
உடற்கேணியின் வழியே
கொப்பளித்து ஒழுகும் சீழ்களாய்!

விரசங்களோடு
சரசங்கள் செய்ய துடிக்கும்
விசித்திர உடலுக்குள்
வித வித மாற்றங்கள்!

காரணங்கள் புரியாத
செயல்களுக்கு
காரணங்களை தேடியலைந்து கலைக்கும்
தெருநாய் செய்கைகள்!

உடலுண்ண
உள்ளம் கொல்லும்
மாயைகளாய் மாறிபோகும் மனதுக்கு
பரிந்துரைக்கும் உள்மன விகாரங்கள்!

பாவசெய்கைகள்கூட
புண்ணியமாய் கருதும்
காலத்தோடு
ஒத்துப்போக நினைக்கும் நியாயங்கள்!

கூவமாகிக் கிடக்கும்
சாக்கடைக்குள் குளித்தெழுந்து
சந்தனமாய்
உணர்த்தித்திரியும் உடற்கட்டுகள்

வேலிதாண்டநினைக்கும்                                                                             தாலிகளுக்கு
உடந்தையாகித் திரியும்
தயாள குணங்கள்!

"இவைகளின் காரண கர்த்தா"
எங்கு நோக்கினும்
மோக யாகம்!
எதை நோக்கினும்காம ருத்ரம்!

மோகத்தீயில்

வேக நினைக்குது பல தேகம்
காம ருத்ரதில்
காணாது போகும் கலாச்சாரம்..


-----------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மூன்றுக்குமிடையில்,,,






தவறு என்கிறது
மனசாட்சி
சரி என்கிறது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.

வேண்டாம் என்கிறது
மனசாட்சி
வேண்டும் என்கிறது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் ஒன்றுதான் என்கிறது
குறுக்குபுத்தி,.

நிறைவு என்கிறது
மனசாட்சி
நிறைவில்லை என்கிறது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது

குறுக்குபுத்தி,.

நிம்மதி தேடுது
மனசாட்சி
நிம்மதியை தொலைக்குது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.

உண்மையை விரும்புது
மனசாட்சி
பொய்மையை விரும்புது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழித்தால்
இரண்டும் ஒன்றுதான் என்கிறது
குறுக்குபுத்தி,.


நிலைக்கத் துடிக்குது
மனசாட்சி
நிலைகுலையத் துடிக்குது
ஆசைப்பட்சி

கூட்டிக்கழிக்கத்தெரியாமல்
கவுந்து கிடக்குது
குறுக்குபுத்தி

எதுவும் புரியாமல் தவிப்பதே
எனது நிலையாச்சி,..
---------------------------------



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது