வாழ்க்கைப்பயணம்
உணவு உடை அன்பு
இவர்களுக்குள்
விடிய விடிய போராட்டம்
இறுதி வெற்றி ?
கதைகள் பேசிய
கண்களின் வழியே
வழிந்தது கண்ணீர்
அதை
கண்டும் காணாததுபோல்
கட்டிய பெட்டிகளை
சரிசெய்தபடி
தன் கண்ணங்களிலில்
வழிந்தோடும் கண்ணீரைக்
கட்டுப்படுத்தினான்
கதவோரம்
காதல்மனைவி
கனத்த மனதுடன்
கலங்கி நிற்ப்பதை
பார்க்கயிலாமல்
அங்குமிங்கும்
நடந்தான்
காரின் ஹாரன்ஒலி
வெளியில் கேட்க
கட கடவென
ஆடிய கால்களை
அழுத்தி நிறுத்தினாள்
கதவோரம் நின்ற
காதல்கிளி
தொட்டுபேசும்
தூரத்தில் இருந்தும்
சுற்றி நின்ற
சொந்தங்களின் மத்தியில்
முடியாமல்போகவே
சொந்தங்கள்
கைகளை அசைக்க
இவனும்
கைகள் அசைத்தபடி
கண்களால் பேசினான்
அனைவரிடமும்
போய்விட்டு வருகிறேன்
என்று சொல்லும்போது
போய்விட்டு
என்பது தொண்டைக்குள்
புதைய
வருகிறேன்
என்பது மட்டும்
வேகமாய் வந்தது
விறு விறுவென
நடந்து காரில் ஏறி
கண்களை மூடினான்
மனதிற்குள்
மீண்டும் போராட்டம்
வெற்றி பெற்றதாய்
உணவும் உடையும்
சொல்ல
இல்லவே இல்லை
உங்களிருவருக்கும்
விட்டுக்கொடுத்து
அன்புதான் ஜெயித்ததென
அவன் மனஞ்சொல்ல
ஏனென்றால்
ஒரு நாளில்
மூன்றுமுறையே
உனை உண்பேன்
ஒருநாளில்
ஓரிருமுறையே
உனை உடுத்துவேன்
ஆனால்
அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்
எனச்
சொல்லிதன்னையே
சமாதானப்படுத்திக்கொண்டபடி
மனம் கனக்க
வாழ்க்கைபயணத்தைத்
தொடர
வானத்தில் பறந்தான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வெற்றிமாலை

தோல்விகள்கண்டு
கிடைக்கும் வெற்றி
சந்தனமாலை போன்றது
அதுகாயக் காய
சாந்தமான வாசம்
வீசிடும்
தோல்விகளின்
வடுக்களை
தொட்டு பார்த்தால்
மீண்டும் மீண்டும்
வெற்றிமாலை
தோளில்
வாங்கத்தூண்டும்
குறுக்கு வழியில்
சட்டெனக்
கிட்டும் வெற்றி
ரோஜா மாலைப்
போன்றது
அது
வாடிப் போனால்
வாசம்போய்
வனப்பும் உதிர்ந்து
எஞ்சி மிஞ்சுவது
நார் மட்டுமே
திறமை முழுவதும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
வெளியுலகைக் காண
துணிவற்றிருந்தால்
திறமை தேடிவருமா
வெற்றிக்கு வித்திடாமல்
தொட்டாச்
சுறுங்கியைப்போலே
தோல்விகளைக்கண்டு
துவண்டு கிடந்தால்
வெல்லமுடியுமா
தன்னம்பிக்கையென்னும்
துணிவைக்கொண்டு
தோல்விகளை
எதிர்த்துப்பார்
எதிரியாய் வந்த
தோல்விகள்கூட
உன் துணிவு கண்டு
துவண்டுபோய்
தூர ஓடிவிடும்
உன்வாசல்தேடி
வெற்றிமாலை
வந்து சேர்ந்திடும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
பெண்ணே நீயும்
அடி ஞானப்பெண்ணே!
பெண்ணுக்கு
பெண்ணே எதிரி
இதைப் பார்க்கும்போது
கதறுது மனம்
பதறி
வயிற்றில்
சுமையில்லையென
வஞ்சிமனதில் வருத்தத்தை
சுமத்துவதா
வம்சம்
விருத்தியாகவில்லையென
வாழவந்தவளை
வதை செய்வதா
பெண்ணுக்கு
குழந்தையில்லையெனில்
மலடி என்றபெயர்
ஆணுக்கு
குழந்தையில்லையெனில்
??????? பெயர்
மருமகளுக்கு
குழந்தையில்லையெனில்
மகனுக்கு மறுமணம்
மகனுக்கு
குழந்தையில்லையெனில்
அது அவள்
வாங்கிவந்த வரமா
பெண்ணுக்கு
பெண்ணே சமமாகாமல்
ஆணுக்கு பெண்
ஆகுமா சரி சமம்
கூடிக்கூடி
குடும்பம் நடத்தியும்
குதூகலமாய்
தாம்பத்தியம் நடத்தியும்
இறைவன்
கொடுக்க நினைத்தால்தான்
குழந்தை
எல்லாம்
புரிந்திருந்தும் புரியாமல்
நடப்பவர்களைக்கண்டு
புண்படுகிறது
மனது
பெண்களே பெண்களுக்கு
ஆதரவாய் இருந்தால்
பெண்ணுலகமே
பொன்னாய் மின்னிடும்
அதனோடு ஆணினமும்
சேர்ந்திணைந்தால்
இப்பூலோகமே
பூத்துக்குலுங்கிடும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)