நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மகத்துவமான மருந்து..


ருசிகளை சுவைபார்த்த
நாவிற்கு
பசிகளின் நிலையறிய!
பாவங்களை சுமந்திருக்கும்
மனதிற்க்கு
பாவச்சுமைகளை களைந்தெறிய!
உள்ளத்தையும்
உடலையும் சுத்துப்படுத்த
வருடத்தில் ஒருமாதம்
ஓடிவந்திருக்கு
நம்மை நாடி வந்திருக்கு!

நன்மையை அள்ளித்தர
நாயன் கட்டளையிட்ட
நல்லதொருகாலம்
அதுதான்
நோன்பென்னும்
மாண்பை சுமந்திருக்கும்
ரமலான் மாதம்!

கத்தை கத்தையாகவும்
கடுகளவேனும் தருமங்கள் செய்திடவும்
கருணை மனுக்களை
கண்கலங்கி கொடுத்திடவும்
கல்பென்னும் உள்ளத்தை
கலங்காமல் பாதுகாத்திடவும்
காத்தருளும்  நாயனிடம்
கையேந்திக் கேட்டிடவும்
நம்மருகில் வந்திருக்கு
நன்மைகளை
சேகரிக்க வழி கிடச்சிருக்கு!

கடுஞ்சிரமங்களும் போக்கிடவே
கண்டும் காணாமலும் செய்த
பாவகாரியங்களையும்  நீக்கிடவே
படைத்தவனிடம் மன்றாடிட
பலனும் நலனும் கொண்டுவந்திருக்கும்
மகத்துவமிக்க மருந்து -அதை
முப்பது நாட்களும் அருந்து

பாங்கான நோன்பினை
பேணிப் பேணி பிடித்திட
பிணியும் போக்க வேண்டிட
கைவிட்டுவிடாமல் கைப்பற்றிடவே
கருணை இறைவனை நாடிடு!

அறணும் நலனும் சேர்த்து சேர்த்து
அண்டை அயலாரை அன்பில் அணைத்து
அல்லும் பகலும் இறையை நினைத்து
அனைத்து பாவங்களையும் கடத்து கடத்து

கண்ணும் கருத்தும் ஒன்றிணைந்து
கழிவுகள் மொத்தம் கழுவித்துடைத்து
கவனம் கவனம் எண்ணத்தில் கொண்டு
கவளம் விழுங்கு சுபுகுக்கு முன்பெழுந்து

பகல் முழுவதும் சிரமம் தவிர்ந்து
படைத்தவனை புகழ்ந்து புகழ்ந்து
தொழுது படித்து துதித்து வணங்கு
தூயவனை நினைத்து நினைத்து

இவ்வுலக இச்சை மறந்து துறந்து
இரவுமுழுதும் அழுது தொழுகு
இறையச்சம் இதயத்தில் பூண்டு
ஜகன்னமென்னும் நரகை விலக்கு

ஐந்து கடமைகளில் ஒன்றை அடைந்து
ஜக்காத்துகளை அள்ளி வழங்கு
ஐய்யத்தோடு இறையை உணர்ந்து
ஜன்னத்தென்னும் சுவர்க்கதை நோக்கு.

======================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முதுமையின் தாக்கம்.



ஆறடி
ஆறுபோல் வளையும்போது
ஆறுதலுக்கு
ஆள்தேடுது!
அறணுமிழந்து செயலுமிழந்து
அன்பு கொள்ள
தோள்தேடுது!
ஊண்குறைந்து
கூன்விழுந்தபோது
ஊன்றி நடக்க
ஒரு கொம்பை நாடுது!

வாசம் வீசிய
வாலிப வாழ்க்கை
வலுவிழந்து
வெருச்சோடித்தெரியுது
ஊட்டி ஊட்டி
வளர்த்த பிள்ளை
வீட்டிலொரு
மூலைகொடுக்குது
முணுமுணுக்கும் சத்தம் கேட்டால்
முகத்தை சுழிக்குது!

கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சிபேச
பேரப்புள்ளையின்
துணையை நாடுது!
பேரன்பேத்திகளின்
பேச்சு குளிருது!
முதிர்ச்சி எட்டி
முதுமை தட்டி
மூச்சிறைக்குது!
முந்தையகாலம் நினைத்து
புலம்பும் நெஞ்சம்
மெளனம் காக்குது!
முதுமையின் தாக்கம் புரியுது...
------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தறிகெட்ட[து] சுதந்திரம்




விலைமதிக்கமுடியா
மாணிக்கப்பெண்கள் பலர்
விடுதிகளிலும் மட்டுமல்ல
வீதிகளிலும்

விரலிடை போதைக்கும்
சதையுடல் தேவைக்கும்
விலையா[போ]கும்
மாந்தர் கோலத்தில்!

பாரதிக்கேட்ட
புதுமைப் பெண்கள்
பலர் பரக்கோலத்தில்
பலர் அலங்கோலத்தில்

ஆடையணிந்தும்
ஆடையற்றவர்களாகி
ஆண்களை மிஞ்சும்
அழுத்தங்கள் கூடி

பேதைகளல்ல
போதை அடிமைகளாய்
கோதைகளல்ல
கேவல பெண்மைகளாய்!

மேலை மோகம்
மேம்பட்டு மேம்பட்டு
பாழபட்டுப் போகுதோ
பாவையின் நடத்தைகள்

அச்சம் மடம் நாணம் பயிர்
இவையனைத்தும்
அக்கால பெண்கள் சிறப்பு
அழிந்துபோனதோ
இக்கால நவநாகரீத்தில்!

வெட்கமும் நாணமும்
வெட்கி நாணியது
வெக்கங் கெட்டலையும்
வெக்கைகள் முன்னே!

அச்சமும் மடமும்
அஞ்சிப் போனது
அஞ்சாமல் நடக்கும்
அடங்காப்பிடாரிகளின் பின்னே!

சுதந்திரமெனச் சொல்லி
நாகரீக கொள்ளிக்கட்டையால்
சூடுவைத்துக் கொல்லும்
நாகரீக  நங்கையர்கள்

நாளை
நரக படுகுழியினை நோக்கி
இன்றே பயணத்தை தொடங்கும்
நவீன யுவதிகள்........

--------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது