நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாழ்க்கையென்னும் நூலில்


துரத்தி ஓடுகிறேன்
நிலாவோடு ”நிழலும்” ஒளிந்து கொள்கிறது

கண்கண்டு ஓடுகிறேன்
காணாமல் ”கானல்”  மறைகிறது

அன்பைத் தேடுகிறேன்
அதுவும் ”அழகிய” வேடமிடுகிறது

வலிதெரியாமல் நடிக்கிறேன்
வழியவந்து ”வருத்தி” வலிக்கவைக்கிறது

நீர்குமிழியாய்
உடைந்துகொண்டே இருக்கிறேன்
உமிழ்நீராய் சோகம்
சுரந்துகொண்டே இருக்கிறது

என் அறையெங்கும் ஆன்மா 
அலறும் சத்தம் கேட்கிறது-அதனை
அமைதிப்படுத்தத் தெரியாமல்
அதனோடு சேர்ந்து 
என் அணுக்களும் அலறுகிறது!


வாழ்க்கை நூலின் பக்கங்கள்
நூலில் இணைப்பட்டதுபோல 
ஆங்காங்கே அறுந்தும்
இணைந்துமே இருக்கின்றது

இணைந்திருக்கும் வழியே
இன்பமும்
அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
துன்பமும்
விட்டு விட்டு சிரித்தழுகிறது!

டிஸ்கி///
நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிலளிப்பதில்லை அனைவரும் என்னை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருத்துரைக்களுக்கும் பதிலளிப்பேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பார்வையின் பதியல்

svr.pamini 



புருவ அடர்த்தியில் தொலைந்த இதயம்
விதைத்தது பல கனவுகளை
இருவிழிகள் களவாட்டத்தால்
ஈரம் சுரந்தோடிய உதடுகளை
உற்று நோக்கிய கருவிழிகளால்
உடலெங்கும் மின்சாரத்தை
உற்பத்தி செய்தது

உதிரமெங்கும் உள்ளூர நண்டூர
உணர்வெங்கும் ஊற்றெடுத்து தேனூர
உரக்கப்பேசும் உதடுகள்கூட
ஊமையாகிச் சிரித்தது
பார்வையின் உஷ்ணம் பட்டதும்
புஷ்பாமான உடல் பஷ்பம்மாக
பற்றி எரிந்து குளிர்ந்தது

உதிர்த்த வார்த்தைகளை கோத்தெடுத்து
உள்ளத்து ஏட்டில் பத்திரப்படுத்தி
உறங்கப்போகும் நேரத்தில் ஒவ்வொன்றாய்
உளறிப்பார்த்து ரசித்து
உடல் சிலிர்த்து மகிழ்ந்தது

பார்வைக்குத்தான் எத்தனை வலிமை
படபடக்கும் ரெக்கையோடு
பாரெங்கும் சுற்றிய பைங்கிளியை
பதை பதைக்கும் நிலைக்குத்தள்ளி
பாடாய் படுத்தியது

பறக்கும் திறனையும்
மிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
 இமையசைக்காது இருவிழிகளை
 நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

துபையில் முத்தான மூன்று விழாக்கள்.


துபையில் முத்தான மூன்று விழாக்கள் நடபெறுகிறது நடைபெறவும் இருக்கிறது. இன்றிலிருந்து தொடங்கும் இவ்விழாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் புத்தக் வெளியீட்டு [அறிமுக] விழாவில் பல படைப்பளிகளின் படைப்புகள் வெளியிடப்பட [அறிமுகப்பட]யிருக்கிறது அதில் எனது முதல் கவிதை நூலான “ உணர்வுகளின் ஓசையும் அடங்கும்.

இந்நிகழ்வில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லையே என மனம் மிகவும் வருத்தப்படுகிறது ஏனெனில் நான் தற்போது இந்தியாவில் இருக்கிறேன்.இறைவன் எதை நாடியுள்ளானோ அதுதானே நடக்கும் .இருந்தபோதிலும் எனது நட்புகளும் அன்புகளும் இதில் கலந்துகொண்டு சிறப்பிப்பா[பீ]ர்கள் என்பதால் சற்று ஆறுதல் அடைகிறேன்
 துபை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும்  எனது அன்பார்ந்த நெஞ்சங்களும்  இவ்விழாவிற்க்கு சென்றுவருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
சென்று வந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்தால் மனம் மகிழ்வேன்..நான் சென்றுவந்த திருப்தியையும் அடைவேன்..


இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும். மணிமேகலை மற்றும் அதன் நிறுவனர் திரு தமிழ்வாணன் ரவிதமிழ்வாணன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உலக மக்களுக்கு எச்சரிக்கை!


அன்பு உள்ளங்களே! உலகில் பலயிடங்களில் சுனாமி சுழற்றிக்கொண்டிருக்கிறது அதே வேளை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுனாமி மற்றும் நிலநடுக்க எச்சரிக்கை விடப்படுள்ளது.


எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடுங்கள்.இருகரமேந்தி இறைஞ்சி கேளுங்கள். எவ்வித பயங்கரங்களும். எவ்வித சேதமும். எவ்வித அகோரங்களும் நடந்துவிடாதவாறு இருக்கவும். வரும் சுனாமி எவ்விதத்திலும் மனித வர்கங்களையும் மனிதயினத்துக்கு தேவையானவற்றைகளையும் வதைசெய்துவிடாமல் சென்றிடவும் பிராத்தனை செய்யுங்கள்.

உலகில் பலயிடங்களில் பலவாறாக அக்கிரமங்களும் அட்டுழியங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. மனிதனுக்கு படைத்தவனின்மேல் உள்ள பயம் அற்றுபோய் படைப்பினங்களின் பின்னேயே போய்க்கொண்டு அதன் கவர்ச்சியில் ஆட்க்கொண்டுவிட்டதால் ஆங்காகே ஆட்டம் காணுகிறது பூமியும் பூமியை சுற்றியிருக்கும் கடலும்.  

யா அல்லாஹ் எங்களின் குற்றங்குறைகளை மன்னிதருள்வாயாக!
யா அல்லாஹ் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னித்து
வரவிருக்கும் ஆபத்துகளிருந்தும் பாதுகாத்தருள்வாயாக!

தற்போதைய செய்தி
-----------------------------------
நகுவீர் :சுமத்ரா தீவிற்கருகில் மையப்பகுதியில் உணரப்பட்ட 8.9 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் என்பது சற்று ஆபத்தான கட்டமே இன்னும் ஒரு மணி நேரம் காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் [களஞ்சியம் சுனாமி எச்சரிக்கை மற்றும் சமுதாய வானொலி ] கடலோர மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறோம்!

கார்த்திக் : ஆனால் இணையத்தில் விகடன் மூலம் அறியப்பட்ட தகவல் என்னவென்றால் கடல்சார் தகவல் மையம் சுனாமி எச்சரிக்கையை திறும்பப்பெற்றதாக தெரிவிக்கின்றதே?

நகுவீர் : அது பற்றி கருத்து இல்லை ஆனால் 8.9 ரிக்டர் என்பது ஆபத்தான கட்டமே! நாங்கள் கடற்கரையோரம் அமைந்துல்ல எங்கள் வானொலி நிலையத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தோம், ஆகையால் தயவு செய்து அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும்

கார்த்திக் : கண்டிப்பாக செய்துவிடுகிறேன்

நகுவீர் : கடந்த முறை சுமத்ராவில் ஏற்பட்ட அதிர்வைப்போலவே இம்முறை மையப்பகுதில் கீழ்ப்பகுதியில்ல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
இங்குள்ள மீனவர்கள் கூட கொஞ்சம் பொருட்படுத்தாமலே இருக்கிறார்கள் நாங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வலியுறித்தியே வருகிறோம்!

**************************************************************
மீனவர்களோ கடற்கரையோரவாசிகளோ இணையம் பாவிக்கக்கூடிய சூல்நிலையில் இருப்பார்களா எனத் தெரியது ஆனாலும் இயற்கை சீற்றத்தில் அறியாமையால் அழிந்த மக்கள் உதாசீணத்தால் அழியக்காரணமாகிடக்கூடாது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த நபர்களை உஷார் நிலைப்படுத்துங்கள்...

இன்னும் சில மணி நேரம் கழித்து என்ன ஆகும் என எண்ணிக்கொண்டிருப்பதை விட செயல் மிக முக்கியம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சிறகு கொடுப்பாரோ!


திருமணபந்தம் தொட்டுத்தொடர
இருமனங்கள் இணையும் முன்னே
இருட்டியது வாழ்க்கை இருமாதத்தில்
இளம் வயதில் இதயத்தில் இடி
இறப்பு வந்தது விபத்தால் உயிர்பலி

விளங்காதவள் இவளென்று
வசைபாடும் சுடுசொற்களால்
வாட்டம்கொண்டு நெஞ்சம் ஆட்டம் காண
விதவைக்கோலம் வீட்டுசிறையால்
விரக்தி கண்ட உள்ளம்

வீதி இறங்கினாலும்
வெடுவெடுக்கும் முகங்களால்
வெதும்பித் ததும்ப- மனதுக்குள்
வேதனைகளும் வேடிக்கைக் காட்டிட

இரு விழிகள் எறிய
இமைகள் சுமையால் சரிய
இதயத்தின் நரம்பெல்லாம்
இறுகியே ரணமாக

நிலவை மேகம் மூடும்போதெல்லாம்
நினைவுகள் மெல்ல திறக்க
நெஞ்சத்தின் அறையெங்கும்
நெருப்பு அனல்கள் பறக்க

பட்டாம்பூச்சியின் ரெக்கைதன்னை
பட்டென பிடுங்கிய மாயமென்ன
பட்டுபோன தன் மகளின் வாழ்வைபார்த்து
பெற்றமனங்கள் படும் துயரங்களென்னென்ன!

பாவை மெல்ல உருகுவதும்
பசலை நோயால் வாடுவதும்
பாவம் யாரும் அறிவாரோ
பசுங்கிளிக்கு வாழ்வுச்சிறகு கொடுப்பாரோ!

வழி தேடும் பயணங்கள்
வலி சொல்லும் சலனங்கள்
விழி மெல்லும் விரசங்கள்
வாழ வகைதேடும் எண்ணங்கள்

மனதுக்குள்ளே பல புழுக்கங்கள்
மறைத்து வாழும் சந்தர்ப்பங்கள்
எழுதுகோல் வழியே கவலைகள்
எழுதிட தீருமோ! இதுபோன்ற ஏக்கங்கள்!


டிஸ்கி// திருமணமான கொஞ்ச[நாட்கள்]காலத்திலேயே கணவரை பிரிந்துவா]டு[ழும் எத்தனையோ பாவைகள் அதில் ஒரு சிலரை நானும் கண்டதுண்டு அவர்களின் ஏக்கங்கள் கனவுகள் துயரங்கள். அவையெல்லாம் சொல்லில் வடிக்கத்தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனைகளை தோளிறக்கிவைக்க ஒரு தோள் தேவை அது நட்பைவிட அன்பாக ஆனால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என எண்ணிக்கொண்டே எழுதுகிறேன்! 
எனது சிறு வேண்டுகோள் இதுபோன்றவர்களை மணம்முடிக்க விரும்பும் உள்ளங்கள் எவரேனும் உண்டா! இருந்தால் இதில் தெரியப்படுத்துங்கள். இது ஒரு மாற்றுமத சகோதரி ஒருத்திகாண தேடல்!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

மெல்ல வெளியேறிய மெளனங்கள். 2

 
மெல்ல வெளியேறும் மெளனங்கள்.
தொடர்கிறது
 -------------------------------------
திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின் பக்கம்
திரும்பிப்பார்க்க வைத்துவிடலாமென்ற நப்பாசையில்
பெண்பார்க்கும் படலங்கள் தொடர்ந்து
பேதையொருத்தியின் வாழ்வை சிதைக்க
போட்டாப் போட்டிகள் நடைபோடுகின்றது

தண்ணீரில் வாழும் மீன்களின்
கண்ணீரை எவரும் அறிவாறில்லை!
எந்நிலையில் நானிருந்தாலும்
என்னையறிவாரும் எவருமில்லை
என்னையே புரிந்துகொள்ளாத மனிதர்கள்
எனதுணர்வையா! உணர்ந்துக் கொள்ளப்போகிறார்கள்!

அறிவார்களோ! என்னையும் என்மனதையும்
அதனுள்ளே ஆணிவேராய் நீயிருப்பதையும்
அதில் ஆலோலம் பாடி என்னை தாலாட்டுவதையும்
அசையும் பொருள்களோடு நானும் அசைகிறேன்
இசையும் லயத்தோடு நானும் இசைகிறேன்
எல்லாம் உன் நினைவுகளின் உரசல்களால்தானென்று!

உடல் மட்டும் என்னுடன் இருக்கிறது
உயிரை உன்னிடம் அனுப்பிவிட்டுஇது
உலக்குப் புரிகறதோ இல்லையோ
உனக்குப் புரியாதென்றே நினைக்கிறேன்
”ஏனெனில்”
உனக்கே அறியாமல் 
உன்னைத் தொடர்ந்தவனல்லவா!
உனதுயிருடன் ஒட்டி உறவாடுடியவனல்லவா!!

என்னிலிருந்து உன்னை பிரித்துவிட்டதாய்
எண்ணிக்கொண்டு -என்னை
ஏமாற்றியதாய் நினைத்துக்கொண்டது என் வாழ்க்கை
அதற்கெங்கே புரியப்போகிறது
அதனையே ஏமாற்றி உனக்காகவே
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேனென்று!

உரக்கபேசுகிறார்கள் எனக்கு நீயில்லையென
உண்மையறியாமல் எனதுள்ளம்பற்றி ஒன்றும் புரியாமல்!
உடல் தொட்டு உயிர் வாழும்
காதலை நான் ஒருபோதும் யாசிக்கவில்லை
உயிர்தொட்டு மெய்வாழும்
காதலைத்தான் உள்ளன்போடு நேசிக்கிறேனென்று!

முதுமையாகி நீ கிழவியானபோதும்
முன்வைத்தை அதே அன்பை
உன்மீது நான் வைத்திருப்பேன் நாளும்
இளமைக்கு இரையாகும் கள்ளத்தனங்களை
நேசிக்கவில்லை ஒருபோதும்
இளையோடும் உனதெண்ணச் நினைவுகளை-என்
இறுதிநாள்வரை சுமக்க விரும்புகிறேன் எந்நாளும்

விதி செய்த சூழ்ச்சிசியிலே உன்னை
வேறொருவர் சொந்தமாக கண்டபோதும்
வேண்டுமடி நீயெனக்கு என்ற சொல் என்னிடமேது
வேண்டவில்லை நீ வேண்டும் என ஒருபோதும்
வேண்டுமென வேண்டுகிறேன் உன் நினைவுகளை மட்டும்
எனக்குள் தேக்கிக்கொள்ள அதே மனக்கூடு!

விதியை மதியால் 
வெல்லத்தெரியவில்லை எனக்கும்
விரும்பிய உன்னை மறக்கச்சொல்ல! 
உரிமையில்லை எவருக்கும்
விரும்பியபடியே வாழ்க்கை 
அமைந்திடாது யாருக்கும்!
 
அப்படியே விரும்பியது கிடைத்தாலும்! நிலைப்பது 
அரிதாகிவிடுகிறது சிலருக்கும்
இதுநாள்வரை! கண்ணியமாய் 
உன்னை விரும்பியது எனதுள்ளம்
இறுதிமூச்சுவரை! கண்ணியத்தோடே 
காதல் கொள்ளும் எனது உயிரும்!....

முற்றும்,,, அல்ல தொடரும். கவிதையல்ல வாழ்க்கை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மெல்ல வெளியேறும் மெளனங்கள்.



மாய உலகத்தின் மர்ம குகையென்னும்
மனதிற்க்குள் மண்டிக் கிடக்கும்
உனது நினைவுகளைச் சுற்றியே
எனது எண்ணங்கள் சுழல்கிறது
அதனைச் சுற்றியே
எனது வாழ்க்கையும் கழிக்கிறது!

ஆறறிவைத் தாண்டி
ஏழாம் அறிவைத் தூண்டி
எட்டாம் அறிவை எட்டி
எனக்குள் ஏதேதோ நிகழச்செய்து
உன்னைப் பற்றிய எண்ணங்களே
என்னை ஆட்க்கொண்டு ஆட்சி செய்கிறது!

உன்னை முதல் முதலாய் கண்ட
என்கண்களுக்கு ஏனோ இதுவரை
வேறொரு பெண்ணின் உருவத்தை
உற்றுநோக்கும் சக்தி உண்டாகவில்லை
உன்னை விரும்பயதுபோல் வேறெதையும்
என் விழிகள் விருப்பமும் கொள்ளவில்லை!

உன் தின வருகையை எதிர்பார்த்து
எதிர்வீட்டு திண்ணையை தேய்த்தவன் நான்
என்னைக் கடக்கும் ஒரு நொடியைக்கூட
நீண்டதொரு  மணிக்கணக்காய் எண்ணி
நீ கடந்த பின்பும்  அவ்விடத்திலேயே
நெடுநேரம் நின்றவன்தான்
 
நீயறியாது உன்னைத் தொடர்வதும்
நீயறிகையில் அவ்விடத்திலிருந்து விலகுவதும்
நீ பயணங்கள் செய்வதை நான் அறிவதும்
நீண்ட தூரமென்றாலும் உன்பின்னே வருவதும்
தேவதை தந்த வரமாக்கிகொண்டேன்
தினம் தினம் அதையும் வேண்டி நின்றேன்!

திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின்,,,,,,,,தொடரும்.


என்னது தொடருமா!!!!!!!! ஆமாம் இது ஒரு[தலைக்] காதல் தொடர்கவிதை. 
காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தெரியாமலும். வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளி வைக்கமுடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கும் பலமனங்களின் வெளிப்பாடாய் இக்கவிதை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாதை மாறிப் பயணம்..


விழிகண்ட வழியெங்கும்
வியக்கத்தகு வித்தியாசங்கள்
விதவிதமாய் சிதறிக்கிடக்க
வியப்புற்றவாறே
இவ்வுலகப்பாதையில் ஒருபயணம்,,

வண்ண வர்ண ஜாலங்கள்
வண்ணமிகு விழாக்கோலங்கள்
வசதிக்கேற்ற மாற்றங்கள்
விருப்பு வெறுப்பு சூழ்ந்த உள்ளங்கள்
கருவுற்ற வழியில்
வித்தியாசமில்லையென்றாலும்
உருப்பெற்ற வழியில்
வித்தியாசங்கள்!

வழி நெடுகிலும் சிலவகை
விகார கோரங்கள்
வலிகள் வடுக்களாய் மாறியும்
வேதனையில்
வெதும்பித் துவழும் மனங்கள்!

மெல்ல மெல்ல முன்னேறி
முன்னும் பின்னும் பார்க்கையில்
இளமையை களைந்த முதுமைகள்
முதுமையை வெறுத்த இளமைகள்
முன்னுக்குப்பின் எதிராக
முண்டியடித்த முரண்பாடுகள்!

இன்னுமென்ன இருக்கிறதோ!!
என்றெண்ணியபடியே நீண்டது பாதை

எங்கு நோக்கினும் மோகம்
எதைகண்டாலும் ஆசை
எண்ணிடயிலா அதர்மம்
எதற்கெடுத்தாலும் வன்மம்

இவ்வுலப் பயணத்தில்-பாதை
நீளப்போவதில்லையென அறிந்தும்
வழியெங்கும் வினைகளை
விதைத்தபடியே செல்லும்
வினோத மனிதர்கள்

ஆறடியில் அடங்கப்போகும்
உடல்கொண்டபோதே
அளவுக்கடந்த ஆசைகளால்
ஆன்மாக்களை கொன்று
அதன்மேல் நடத்தும் அக்கிரமங்களென

அத்தனையும்
கண்டுகொண்டே வந்தபோது
கண்ணெதிரே பாதையில்லை
அதிர்ந்து அழத்தோன்றியபோது
ஆசுவாசப்படுத்திக்கொண்டது நெஞ்சம்
அயர்ந்த வேளையில்
ஆன்மா கண்டுவந்த பயணமது!

கடந்துவந்த பயணத்தில்
கற்ற பாடங்கள் பலபல-இனி
கடக்கப் போகும் பயணத்தில்
காலச்சுவட்டை கறைப்படுத்தாது-தன்
காலத்தை கடக்கவேண்டிய
பாதையை மாற்ற எண்ணியபடியே -கண்ட
பயணத்தை நினைத்து நடுங்கியது மனது...


இக்கவிதை ”பாதைகளுக்கும் பயணங்களும்” என்ற தலைபிற்காக எழுதி தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளது. இக்கவிதை வாசித்தபோது அன்று [துபையில்]   தடுமாற்றம் கண்டது.[கையாடினா மைக் ஆடாம என்ன செய்யும் ஹா ஹா].. 


 அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது