
முதிர் கன்னியாய்
முப்பது வருடங்கள்
காத்திருந்தாலும்
ஏனென்று கேட்க்காத
ஊர் உலகம்
காதலித்தவனையே
கைபிடித்துகொண்டு போனால்
அவளுக்கு கொடுக்கும் பட்டம்
”ஓடுகாலி”
ஊரறிய கைபிடித்து
காலமெல்லாம் கூடவே
கடைசிவரை வருவேனென்று
கட்டியவன்
திடீரென்று கலட்டிவிட்டு
காணாமல் போய்விட்டால்
வாய்கூசாமல் இவளுக்கு
கொடுக்கும் பட்டம்
”வாழாவெட்டி”
கட்டிய நாள்முதல்
கட்டில் ஆடியும்
தொட்டில் ஆடாவிட்டால்
அட்ச்சதை தூவி
ஆசிர்வதித்த அதே வாயால்
அஞ்சாமல் கொடுக்கும் பட்டம்
”மலடி”
விதி செய்த சதியால்
கட்டியவன் காலமாகிப் போக
கலங்கி நிற்கும் அவளுக்கு
கலப்படமே இல்லாமல்
கொடுக்கும் பட்டம்
”விதவை”
அடி பெண்ணே!
படித்து பட்டங்கள் பல
பெறா விட்டாலென்ன
பெண்களுக்காகவே
பல பட்டங்களை
வாரி வழங்க காத்திருக்கிறது
வள்ளலான இவ்வுலகம்
வாழுந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்
தன்மானமுள்ளவளென்று
உன்னை
இந்த தரணியே பேசும்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்