எதையோ தினம் தினம் தேடுகிறோம்
அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து
நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்
நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே நம்
குடும்பம் சோலைவனம் ஆனபோதும் நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்
அமைதியை தேடித்தேடி தினம்
ஆளாய்ப்பறக்கிறோம் அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்
எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம் ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”
[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/ என்ற தலைப்பிற்காக அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்