நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எரியும் மனசு...




எரியும் மனசு...
-------------------------

அணைந்துபோன பெருங் கங்குகளில் 
புகைந்து கொண்டிருக்கும் சிறு நெருப்பாய்
எரியும் மனசோடு சிறு விவாதம்..

பெண்மைகளின் கூடாரம்
போராட்டக் களத்தால் நிரப்பட்டவை!
போராட்டக் காரர்களால் சூழப்பட்டவை!
போராளிகளை உருவாக்குபவை!

பெண் கருவென தெரிந்ததும்
கருவில் கொலை, கள்ளிப்பால் கொலை
கழுத்து நெறித்துக் கொலை செய்வ[த]தும் கூட  
கருணைக்கொலையில் சேர்க்கப்பட்டதோ!

கருவைவிட்டு வெளியேறிய நொடிமுதல்
காணும் கேட்குமிடமெங்கிலும், காட்டுப்பூவென
கசக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும்
காவுகொள்ள[ல்ல]ப்படுவதும் கவனமற்றுக் கிடக்கிறதே?

அக்கினிப் பரிட்சைகளாம்  ஆங்காங்கே
அ யோக்கியர்களால்!
சீதையாயிவளென 
சிதை மூட்டி வதைகூட்டும் சித்ரவதையால்
தினம் எரியும் உணர்வோடும்...

பாசம் வைத்த பாவத்திற்கு பரிசாய்
பத்தினியற்றவளென்ற சாபமும்,,,
பாஞ்சாலியென நினைத்து படையெடுக்கும்
பாவக்காரர்களின் கோரமும் அன்றாடம் பார்த்து
தினம் எரியும் மனசோடும்...

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந் நிலைதொடரும் அவலங்கள் நடந்தேறுகையில்
அணையாது எரிகிறதே- எரிமலை கு[பி]ளம்பாய் 
அகம்புறமெங்கும் ப[சு]ற்றியே!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பொட்டச்சி.



பெண்சிசுகள் கருக்கலைப்பு 
பெண்குழந்தைகள் கற்பழிப்பு 
பெண்மானம் அவமதிப்பு 
பெண்மன எண்ணம் நிராகரிப்பு
பெண் ஆணுக்கொரு பொழுதுபோக்கென
         
கண்ணெதிரே அநியாயங்கள் 
கண்ணிமைக்கும் கொடுஞ்செயல்கள்
கண்டும் காணாததுபோல்
என்னுடலைமட்டும் நகர்த்துகிறேனே  
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

உண்மைகளை ஊமையாக்கி       
பொய்மைகளை புண்ணியமாக்கி
அரங்கேற்றுவதைக்கண்டும் பொம்மையாய் 
தலையாட்டித் தவிக்கிறேனே  
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

பொல்லாப்புகளும் பொல்லாங்குகளும்
போட்டிப்போட்டுக்கொண்டு
நியாயத் தராசின் முள்ளுடைப்பதைக்கண்டும்
மூக்குநுணிவரை வந்த கோபத்தை
மூக்கைச்சிந்தி போட்டு முனங்குகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!   

எழுந்தால் குற்றம் எழுதினால் குற்றம்  
பழகினால் குற்றம் பதறினால் குற்றமென 
எதற்கெடுத்தாலும் இச்சைகற்பிக்கும்
இழிந்தோர்களை 
இழிக்கமுடியாமல் புலம்புகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!    

விடிய விடிய காத்திருந்து
விடியும்தருணம் கூவிவிட்டு 
விடிந்தபின்னே அடங்கிடக்கும் 
பெட்டையாகுதே பெண்பொலப்பு
பொல்லாரின் வாயடைக்க வழியற்று
வசவேற்று நிற்குதே நாதியற்று.

திடமிருந்தும் திராணியற்று
துணிவிருந்தும் செயலற்று
மதியிருந்தும் சதிகெடுக்க
வெட்டித் தீர்ப்பதுபோல் எழும் 
வீரதீர எண்ணங்களை 
எழுத்துக்களுக்குள் மட்டும்
வெற்று வசனங்களாய் கொட்டித்தீர்த்துவிட்டு

சட்டிக்குள் கொதித்தடங்கும் நீராய்
சப்பென்று ஆகிறேனே எதற்கும் 
சக்தியற்றவளாக போகிறேனே !
என்னதான் செய்ய முடியும்
நானே ஒரு பெண்பாவ பொட்டச்சி...
                 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்ணைப் பெண்ணாக!




உலக மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி 
மகிழும்  அதேநொடி,,,
ஓயாப்போராட்டத்தில்உலன்றபோதும் 
உயரத்துடிக்கும் மகளிருக்கு
ஒற்றை தினமாவது ஒதுக்கியவர்களுக்கு 
உளமார்ந்த நன்றிகள்
உன்னத பெண்மைக்கு செல்லுமிடமெல்லாம் 
சிறப்பாயென்றால் ?

சாதிக்கும் ஒவ்வொரு 
பெண்மணிக்கு பின்னால் மட்டுமல்ல
சாதரண 
பெண்மணிகளுக்கு பின்னாலும் முன்னாலும்
இழிந்தவைக்கொண்டு 
ஈட்டிப்பேச்சால்  பெண்ணைச் சாய்க்க
ஈனமுற்ற 
ஊனமனம் கொண்டோர்களால் கொடுக்கபட்டு
ஆரா ரணத் தழும்புகளாய் 
ஆணியடிக்காது மாட்டியிருக்கும்
பத்தினியற்றவளென்ற பட்டங்களும்
நடத்தைகெட்டவளென்ற பதக்கங்களும்...

மாட்டிவிடப்பட்டவைகள் 
மாறுசெய்யப்பட்டவையென  
அச்சம்தவிர்த்து மேலேறும் பெண்மைகள்
மேதாவிகளாய் 
நற்பண்புகள் கொண்ட சாதனையாளராய்.
இழிச்சொற்கிலியில் சிக்கி 
சுமைச் சோர்வுக்குள் மக்கி
அச்சப்பிடியில் மாட்டியவர்களெல்லாம்
இருளறைக்குள் தன்னைத்திணித்து மூலையில்
முடக்கப்பட்டோர்களாய்....

பெண்ணே
உண்மை, உன்னதம் ,நேர்மை
உனக்காய் நீ உடுத்திகொள்ளும் ஆடைகள்
இறைநம்பிக்கை தன்னம்பிக்கை
உலகவாழ்வில் 
உனக்காய் கைகொடுக்கும் உரிமை[கை]கள்..
மீண்டுமெனது,,,
உலக மகளீர் தின வாழ்த்துகள்

உயர்வாய் பேணவேண்டும் பெண்மானங்கள்...
================
சாதனைப்பெண்கள் பட்டியலில்.. இஸ்லாமியப்பெண்மணியில்..
நன்றிகள் பல..
http://www.islamiyapenmani.com/2016/03/blog-post_8.html


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது