நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பேட்ட பேட்ட முத்தான பேட்டை..


சொந்த ஊரைப்பற்றி எழுதனுமுன்னு  ஸாதிகாக்காவின் அன்புக்கட்டளை. அவர்களின் கட்டளைகிணங்கி இங்கு எங்க ஊரைப்பற்றிய சில தகவல்கள் உங்களுடன் பகிரப்போகிறேன்.

எங்க ஊரு நல்ல ஊரு வந்து பாத்து நீங்க சொல்லுங்க!
 
சொந்த ஊரைப்பற்றி எழுதனும்முன்னா சொல்லவா வேணும்.[இருந்தாலும் கடகடன்னு ஆடுது விரல்கள். எப்படி எழுதபோறேனோ! ஏனா ரொம்ப காலமாச்சில ஊர்லயே தங்கி. இருந்தாலும் நம்ம ஊரப்பத்தி பெருமையா எழுதனுமுல்ல.. ஓக்கே ரெடி ஸ்டாட்.. 

அகிலத்தை படைத்து பாதுக்காக்கும் இறைவனே!
எங்கள் ஊரையும் அதனுள் வாழும் மக்களையும் நேரானபாதையில் வழிநடத்திச்செய்வாயாக! தீயவைகளின் நின்றும் காத்தருள்புரிவாயாக!

முத்தான பேட்டை அதாங்க முத்துப்பேட்டை அதில்தான் பிறந்தது. வளர்ந்தது. படித்தது [ஆமா எம் பி ஏ. படிச்சாக ஏன் சும்மா எடுத்ததும் அறுக்காம அடுத்தத எழுது] வாக்கப்பட்டது எல்லாமே. ஆனா என் சொந்த ஊரு அதிராம்பட்டினம். எப்படிங்கிறீங்களா? அதுதானே என் தந்தையின் ஊரு, ஆக இரு ஊருக்கு சொந்தக்காரிதான் இந்த அன்புக்காரி.
என்ன இருந்தாலும் வாக்கப்பட்ட ஊருதானே பொம்மணாட்டிகளுக்கு சொந்த ஊராயிடுது. அதசொல்லுறதுதானே பெருமையிலும் பெருமை.அந்த வகையில் என் சொந்த ஊராகிப்போன முத்துப்பேட்டைக்கு உள்ளே செல்வோமா வாருங்கள்.வாருங்கள்.
 உங்களை அன்புடன் வரவேற்கிறது முத்துப்பேட்டை ரயில் நிலையம்.

முத்துப்பேட்டை பெயரிலேயே முத்தை வைத்துள்ளோம் பாருங்க அப்படின்னா எவ்வளவு முத்தானவங்க.[யாருப்பா அது கட்டையோடு வாரது சரி சரி]முன்னூறு ஆண்டுகளுக்கு  முன்பு முன்னோர்களால், வைக்கப்பட்ட முதல்  முழுபெயர்தான் இந்த முத்துப்பேட்டை.
தமிழகத்தின்   கீழ்த்திசையில் நீண்டு,பரந்து,விரிந்து நீரினால் நிறைந்து  சூழ்ந்திருக்கும் வங்கக்கடலை  ஒட்டி வடக்கே சுமார் 3 கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கின்ற "பேட்டை" எனும் இடம்தான் முத்துபேட்டையின் துவக்க கால ஊராகும்,
கடலில் மீன் பிடிப்பது,முத்துகுளிப்பது பறவைகளை வேட்டையாடுவது,அவற்றை விற்பது,வாங்குவது போன்ற செயல்கள் நடந்து வந்ததால் அது பேட்டையாக இருந்தது.வணிக தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த இடம்,தங்கி வாழ்வதற்கும் ஏற்ற வகையில் மாறியமைக்கப்பட்டது.பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்க ஆரம்பித்தர்கள்,
இந்த மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பரவலாக வாழும் ஊர்களுள் ஒன்றாக முத்துபேட்டை மாறி இருந்தாலும்,அந்த கால கட்டத்தில் இறைவனை வணங்குவதற்காக பேட்டையில் ஒரு பள்ளிவாசல் கூரை குடிசையாக கட்டப்பட்டது,அதுவே முத்துபேட்டையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்,அப்பகுதிக்கு துறவி காடு என்று பெயர் ஏற்பட்டு இப்பொழுது "துறைகாடு" என்று மாறிவிட்டது. [தகவ்லுக்கு நன்றி முத்துப்பேட்டை மக்கள்.காம்]


                                         இது அரபு சாஹிப் பள்ளி[எங்க தெரு பள்ளி]
தற்போதைய முத்துபேட்டை; 
முத்துபேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு "தேர்வுநிலை பேரூராட்சி" ஆகும், இது சென்னையில் இருந்து 360 கி.மி தொலைவில் உள்ளது,முத்துப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாத்துக்கோங்க நாங்கலெல்லாம் எவ்வளவு அறிவாளிங்கன்னு..  

முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் சங்கத்து பள்ளிக்கூடமாகும்[நாம படிச்சது மதியலங்காரம் பள்ளிக்கூடம். பார்த்திலாப்பு மதியைக்கூட நாங்க அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்று].

இங்கு மொத்தம் 13 பள்ளி வாசல்களும், 4 மதரசாக்களும் உள்ளன. 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவுகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், வார சந்தை, அரசு பொது நூலகம், இன்டெர்னெட் மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் உள்ளன.[தகவலுக்கு நன்றி விக்கிப்பீடியா]
                                           தர்கா
சுமார் எழுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த தர்காவும் உள்ளது அனைத்து சமுதாய மக்களும் வருகை தந்தவண்ணம் உள்ளார்கள். இங்கு கந்தூரி சந்தனக்கூட மிகபிரபலம்.[அறியாமைக் காலத்தில் செய்த தவறை அறிந்தகாலத்தில் திருத்திக்கொள்ள இறைவன் அருளவேண்டும்..] 

முத்துவின் சிறப்புகள் பல அதில் சில 

              அலையாத்திக்காடுகள் நிறைந்த லகூன்

இங்கு கோரையாறும்,பாமனியாறும் ஓடுகின்றன, இவ்விரண்டு ஆறுகளும் கடலில் கலகின்ற இடத்தில் லகூன் உள்ளது.தமிழகத்தின் மிகப்பெரிய அலையாத்தி காடு முத்துபேட்டையில் தான்  உள்ளது, இங்கு அறிய வகை மீன்களும், எறால் வகைகளும் கிடைகின்றன,மேலும் அலையாத்தி காடுகளில் மான்,நரி.காடை . போன்ற உயிர் இனங்கள் வாழ்கின்றன:வெளிநாட்டு பறவைகளும் வந்துபோகும் சீசனில்.
                   அந்தமானைப்பாருங்கள் அழகு
 
முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளதால் தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது. இங்கு கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, மலட்டு சுரப்புன்னை, சோமுந்திரி, சோனரேசியா எபிடெலா உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை.  வெளியூர்களிருந்தும். வெளிமாநிலங்களிருந்தும் லகூனுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். 

படகுகளில். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்வதும். அங்குசென்று சமைத்து உண்பதும் ஒரு அலாதி இன்பம்.[இப்ப சமைக்கவெல்லாம் அனுமதியில்லை என்கிறார்கள். நாங்கள் ஊரிலிருந்தபோது லகூன் சென்று அப்பவே மீன்பிடித்து காற்று எரியவிடாத அடுப்பதை ஊதி ஊதி எரித்து சமைத்துண்டு. சேரில் கால் அமுக்கி விளையாடி. இக்கரையில் நின்றுகொண்டு அக்கரைக்கு கைகாட்டி அதோ தெரியுதுபார் கொழும்பு  உனக்கு எம்புட்டு கொழுப்பு என்றுக்கூறி  கூத்தாடி மகிழ்ந்ததெல்லாம் ஹூம் அக்காலமெல்லாம் திரும்ப எப்ப கிடைக்குமோ!]

 
இங்கு பள்ளிக்கூடங்கள் பல இருந்தாலும். பெண்களுக்கென ஹாஸ்டல் வசதியோடு தனி பள்ளிக்கூடம் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திரு முஸ்தபா தமீம். அவர்களால் நிறுவப்பட்டு அதனால் அனைத்து பெண்குழந்தைகளும் பயனடையும் விதமாக, தரமான கல்வியோடு சிறப்பாக நடைப்பெற்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  வெளியூர்களிருந்து இங்குவந்து தங்கிப்படிக்கும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. அதனால் வாடகை வீடுகளும் நிறைய கட்டப்பட்டு வருகிறது.

முத்துவின் சிறப்பம்சத்தில் ஒன்று திரையறங்கு இருந்தும் இஸ்லாமிய பெண்கள் யாரும் அங்கு போகாததுதான். ஆகாத ஒன்றுக்கு அனுமதிதராதது வரவேற்கத்தக்க ஒன்று.

முத்துவில் இன்னும் சில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்து கொண்டிருப்பது பெருமைமிகுந்த விஷயம்.
முத்துப்பேட்டையை சேர்ந்த அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்கள் வேலூர் தொகுதியில் எம் பி யாக இருப்பதோடு நல்லவிசயங்கள்பல செய்துகொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

பெரும்பாலான திருமணங்கள் இங்கு மதரசாக்களில் நடைபெருவது வழக்கம்.இங்கு நடக்கும் திருமண வைபோகங்களில் ஒருபெரிய தட்டில்[சகன்] நான்குபேர் அமர்ந்து [ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் ]சாப்பிட்டும் வழக்கம் உள்ளது. இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுகள் களையப்பட்டு நல்லுறவுக்கு வழிவகுப்பதுபோல் அமைந்திருப்பது போற்றதக்கது.

திருமணத்திற்க்கு மொய்யுண்டோ இல்லையோ [இப்பவெல்லாம் குறைஞ்சிபோச்சின்னு பேசிக்கிறாங்க] மணமுடித்த வீடுகளுக்கு செல்லும்போது ஒரு பூ பந்தாவது வாங்கிச்செல்வது இவ்வூரின் வழக்கம்.

இங்குள்ள இஸ்லாமிய பெண்கள் அனைவரும் துப்பட்டி என்னும் வெள்ளை பர்தா அணிவதுதான் வழக்கம் 9.அல்லது 10 வயதில் வயதுக்கு வந்த பெண்பிள்ளையாக இருந்தாலும் வெளியில் வரும்போது கட்டாயம் புர்காவோ! பர்தாவோ! இல்லாமல் வெளியே வராது. அக்கம் பக்கம் ஆனாலும் பள்ளிக்கூடம் செல்கையிலும் அதை அணிந்தபடியேதான் சென்றுவரும்.

இங்கு பிரதான வாணிபம்,மீன்பிடித்தலும்.தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்கு தேங்காய் மற்றும் மீன் இறால் நண்டு. ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சின்ன சின்ன துளிகள்.
பேட்டையில் இருக்கும் தாமரைகுளம் ரசிக்கதக்கவையாக இருக்கும் [தற்போது எப்படியிருக்குன்னு தெரியவில்லை] அதன் பக்கத்தில் பெரிய கோயில் மற்றும் கள்ளுக்கடை. கள்ளுக்கடையில் மீன்வாங்க போயிருக்கேன் சின்னவயசுல.. என்னது கள்ளுக்கடையில் மீனா அப்படின்னு அதர்ச்சியாயிருக்கா. அட அதுக்குபெயர் கள்ளுக்கடையின்னு சொல்லுவாங்க. அங்கே கல்லு இருக்கும், கள்ளுயிருக்கான்னு தெரியாதுங்கோ.. 

பேட்டை ரோட்டில் உள்ள மாதாகோவிலில் உள்ள கடிகாரம் மிகவும் பெரியதாம். நான் பார்த்ததில்லை. சென்றமுறை ஊருக்கு சென்றிருந்தபோது மின்சாரம் அணைந்திருந்த இரவு வேளையில் மிக அருகில் கேட்பதுபோல் கடிகார மணியோசை கேட்டது எங்கிருந்து என்றேன் மாதாகோவிலிருந்து என்றார்கள்..
 மாலைச்சூரியன் மறையும் தருணம் பேட்டை ரோடு ஜொலி ஜொலிக்கிறது.
ஆங்காங்கே குளங்களும் தென்னைமரங்களும் பார்ப்பதற்கே ரம்மியமானதாக காட்சியளிக்கப்பட்ட இடங்களெல்லாம் செங்கலும் சிமிண்ட்டும் நிரப்பிய கட்டிடங்களாக காட்சிதந்து சற்றே வாட்டத்தை தருகின்றன.தோப்புகளும் வீடாகிபோக சந்து சந்தாக நிறைய தெருக்கள். அதற்குள் ஓடும் ஆட்டோக்கள்.ஓடும் ஆட்டோக்கள் சுவற்றையோ! வேலியையோ சற்றே கிடுகிடுக்கச் செய்தால் சடசடவென கொட்டும் வசைபாடுகள் ஹா ஹா .சுவாரஸ்யம்

நிறைய வீடுகளுக்கு பட்டபெயர் உண்டு.அப்பெயர்களை சொல்லலாம்தான் வேணாங்கோ ஏங்கப்பு நாமா  வம்பில் வலிய சென்று மாட்டிப்பானே! அந்தகாலத்தில் என்னஎன்ன தொழில் செய்தாங்களோ அல்லது ஏதாவது ஒரு வகையில் இப்பெயர்கள் அவர்கள் வீடுகளுக்கு ஒட்டிக்கொண்டது..

பால்முதல் காய்கறி.மீன்.வரை சேலை பாய் முதல் வார்வல்[விளக்கமாரு] பாத்திரம்வரை அவசியமான பொருள்கள் அத்தனையும் வீட்டுவாசலுக்கே வந்துவிடும் சவுகரியங்கள். இருந்தாலும் கடைகளுக்கும் போய் வாங்கும் பழக்கம் போகுமா! 

இங்கு மருத்துவமனைகள் இருந்தாலும். பலநேரங்களில் வியாதிகளின் தன்மைபொருத்து பக்கத்திலிருக்கும் பட்டுக்கோட்டை. தஞ்சாவூர் அல்லது திருத்துரைப்பூண்டிக்குதான் மக்கள் அதிகம் செல்வார்கள்.

எங்க ஊர் சாப்பாட்டில் அதிகம் தேங்காயும். எண்ணையும். புளியும். சேர்க்கப்படும் அதிலும் விசேச சாப்பாட்டுகளுக்கு ருசி அதிகம்..எங்க ஊர் சமையக்காரங்கதான் வெளியூர்களின் விசேச சாப்பாட்டுகளுக்கு அழைக்கப்படுங்கண்ணா பாத்துக்கோங்க அதன் மகிமையை..

                                             இறால் வாடா இது நாங்க செய்ததுங்கோ

அதேபோல் வடை. இறால்வாடா. சமூசா. பஜ்ஜி. அனைத்திற்க்கும் பஞ்சமேயில்லை.  குட்டியார்பள்ளி அருகில் செம டேஸ்டாக மொரு மொருன்னு. 1 ரூபாய்க்கு குட்டி மெதுவடை கிடைக்கும். சங்கத்துப்பள்ளீகூட வாசலில் நாவல்பழம் இழந்தைபழம் உப்பு மாங்காய் பனங்கிழங்கு. ஆட்டுக்கால் சூப். சேமியாக்கஞ்சின்னு ஏகப்பட்ட அயிட்டங்கள் கிடைக்கும்.

வெளியூர் மக்களும் இங்குவந்து குடியேறி பிழைப்பு நடத்தியயவண்ணமாக உள்ளார்கள். இங்கிருப்போர்களும் குழந்தைகளின் படிப்புகாக வெளியூர்களுக்கும் சென்றுகொண்டுமிருக்கிறார்கள். 
குளங்களெல்லாம் வீடுகளாகி வயல்களெல்லாம் ரோடுகளாகி காடுகளெல்லாம் மேடுகளாகி காட்சிதருவது சங்கடமாக இருந்தாலும். ஒருவாரு எதையோ சாதித்து நிற்கிறது. 
 
 இது நம்ம எம் ஜி ஆர் தாத்தா எங்க ஊருக்கு வந்து திறந்துவைத்த தண்ணீர் தொட்டி.


ஏற்ற இறக்கங்கள் எங்கும் உண்டு அது இங்கும் உண்டு.  என்பதைப்போல் பலபிரிவினைகள்.பலவித மக்கள். அப்பப்ப வந்துபோகும் ம[ன]தக்கலவரங்கள்.அதனால் ஏற்படும் சிலபல விபத்துகள். பலநேரங்களில் காவல்துறையால் கண்காணித்து காவல்காக்கப்படும் ஊரும்.[அதான் முதலிலேயே சொன்னேனே முத்துன்னு] அதனைச்சார்ந்த  மக்களும்.என்று சுழன்றுகொண்டிருக்கிறது சிப்பியைவிட்டு வெளியேறிய முத்தாய். எதுவென்றபோதும் எதார்த்த வாழ்க்கையோடு ஒன்றி கோத்தெடுக்கபட்ட முத்தாக ஜொலித்துக் கொண்டிருக்கும் முத்தான பேட்டை எங்க முத்துப்பேட்டை..
இன்னும் ஏகப்பட்டது இருக்கு [எனக்கும் தெரியனுமுல்ல] படிப்போர்களில் நலன்கருதி  சுருக்கிவிட்டேன் [என்னது இது சுருக்கமா அடி ஆத்தீஈஇ] ஏதோ எனக்கு தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். யக்கோவ் ஸாதிக்காக்கோவ்  பாவம் இந்த பச்சப்புள்ளய நம்பி ஒரு பதிவ தந்திய, தத்துபித்துன்னு ஏதேதோ உளறி வச்சிக்கிறது இந்தபுள்ள .கொஞ்சம் வந்து பாத்து நீங்க எதிர்பார்த்ததுயிருக்கோ இல்லையோ சொல்லிட்டு போங்கக்காஆஆஆஅ..


இப்பதிவை எழுத அழைத்த அன்பு ஸாதிகா அக்கவிற்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.நம்ம ஊரைப்பத்தி நாமளே பெருமையா பேசுறதவிட, மத்தவா பேசுறது இன்னும் சிறப்பாக அமையும். அப்படி சிறப்பாக பேசப்படும் ஊராக எங்க ஊரை ஆக்க  எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்புரிவானாக..

நாமளும் அழைக்கனுமில்ல.

நம்ம A R ராஜகோபலன் அண்ணா
நம்ம சே.குமார் தம்பி
நம் சகோ புதுவரவு [Ramvi] ராம்வி.


வாங்க வாங்க வந்து உங்க ஊரைப்பத்தி விளாவரியாக சொல்ல, செல்லமாக அழைக்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது