நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்ன பாவம் செய்தேனம்மா!!!!


சேவலென்ற கோழி கூவவில்லை
காகங்கள் கூடிக் கரையவில்லை
கட்டிடங்களுக்கு இடையே
கதகதப்போடு கிளம்பத்துடித்த
சூரியனுக்கு முன்பே
கிளம்பிவிட்டாள்
அதிகாலையில் அவசரமாய்

குளித்த தலையில் ஈரம் சொட்ட
குளிரில் தேகம் நனைந்து வாட்ட
ஒருபுறம் தோளில் கிடந்த
குழந்தை தூங்கி வழிய
மறுபுறம் கிடந்த
கைப்பை வரிந்து சரிய

பணத்துக்காக குழந்தைகளைப்
பார்த்துக்கொள்ளும் பெண்ணிடம்
கையில் கொடுக்கும் வேளை
பதறிக் கதறியது பிஞ்சு குழந்தை
பால்வடியும் முகம்கண்டும்
பதறவில்லை பாவை

பொசு பொசுக்கண்ணங்களில்
கண்ணீர் வழிய
கைகளை காட்டி அன்னையை
அணைக்க முயல
எட்டி நீட்டிய விரல்கள்
இவள் கூந்தலை இழுக்க
இருந்தும் ஈயாடவில்லை
தாயவள் முகத்தில்
எவ்வித தவிப்புமில்லை

முதுகை மட்டும்
தட்டிக்கொடுத்து விட்டு
முகம் திருப்பி வேகமாக
 நடை நடந்து
அவசரமாக ஓடி ஏறினாள்
ஆபீஸ் கார் கதவை
திறந்துக்கொண்டு

இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......

காலத்தின் கோலமிதுவோ!
காசுபணம் செய்யும் மாயமிதுவோ!!

[டிஸ்கி டெய்லி காலங்காத்தால நம்ம பையன ஸ்கூலுக்கு அனுப்ப பஸ்ல ஏத்த போறாம, அப்போ இப்பால அப்பால இதப்போல நெறய பாக்குறோமா அதால வந்த வின இந்த கவித, இருந்தாலும் மனசு கேக்கல அதேன்ன்ன்]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது