நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மாறுவது முகமல்ல!



பொய்வேசங்கள் புனைய!
பாசாங்குகள் காட்ட!
கள்ளத்தனம் புரிய!
கருணைபோல் நடிக்க!

இன்னும்
மண்ணுக்குள் செல்லும்வரை
பலவகை நாடங்கள் நடத்த
மனிதமுகங்களுக்குதேவை
தினம் ஒரு முகமூடி!

தன்னை 
தற்காத்து கொள்வதாய் எண்ணி
இயற்கை குணத்தை மறைத்து
செயற்கை மூடிகளை மாற்றுவதால்

தன் இயல்பான குணமும் மனமும்
இருளடைவதை அறிவதற்கு 
வாய்ப்பில்லாமல் போவதை
உணர்வதில் தடுமாற்றம்.
எதற்குதான் இப்படியான
தினம் ஒரு மாற்றம்

உண்மையும் பொய்மையும்
ஒருபோதும்ஒற்றுமையாது
உள்ளமறிந்தபோதும்
ஒத்துக்கொள்வதில்லையே
நிலை மாறும் மனது..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

மர்ம ரகசியம்!



என்னை!
சந்தோஷத்தால் நிறைக்க
சுற்றி சுற்றி வரும்
சுகந்த தென்றல் என்னுள் நுழைந்து
ஒளிந்துகொள்ள இடம் தேடுகிறது

உன் சுவாசத்தின் வாசம்
என் மனமுடுக்குகளை
மகிழ்ச்சியால் நிரப்பி வைத்து
என்னை
திழைக்க வைத்திருப்பதறியாமல்!


மங்கையின் மன ரகசியத்தை
மற்றவரென்ன
மயிலிறகால் வருடி
மன கிறக்கத்தை ஏற்படுத்தும்
மெல்லிய காற்றும் அறிவதில்லை..





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஒரே ஒரு நொடி




ஆங்காங்கே குவிந்துக் கிடக்கிறது
அக்குவேராய் ஆணிவேராய்
சடலங்கள்!
முழுமையற்ற நிலையில் 
முண்டங்களாகவும்!
கைகால்களற்ற நிலையில் 
அரைகுறையாகவும்! 

திரும்பும் திசையெல்லாம் 
குருதியோடும் வாசனை
குற்றுயிரும் குலையுறுமாய் 
இதுயென்ன சோதனை!

பால்சுரக்கும் மார்புகள் 
பதபதைக்கிறது
பச்சிளங்களின் குரவலைகள் 
அறுத்து கிடப்பதுகண்டு!

பெற்றவரோடு மற்றவரின் 
நெஞ்சும் பதறித்துடிக்கிறது 
பால்யங்களின் பிறப்புறுப்புகள் 
சிதைந்திருப்பதுகண்டு!

பாவிகளின் செய்கைகள் கண்டு 
கடுங்கோபம் எழுகிறது
எழும்கோபமெல்லாம்
உருக்கியநெய் 
கொதித்தடங்குவதுபோல்
உள்மனச்சட்டிக்குள்ளேயே 
உறைந்துகொள்கிறது 

துடிக்கத் துடிக்க உயிரைக்கொன்று
துச்சமென துகிலுரித்து
எம்மினம் வேரறுக்கபட்டு 
வீதியில் வீசப்படுவதை
விதியென சொல்வதா?
இல்லையிது
மனிதருக்கு மனிதருக்குச் செய்யும்
சதியென சொல்வதா?

மனிதரே!
மனிதக் குருதியருந்த கண்டீரோ!
மனித மாமிசம் உண்ணக் கண்டீரோ!

அறிவில்லா காலத்தில்கூட
அறிவோட நடந்த மானிடமினங்கே?
ஆறறிவையும் தாண்டி 
அனைத்தையும் அறிந்த நிலையில் 
அறிவைத்தின்று 
அகம்பாவத்தோடு அலைவதோ
ஆங்காங்கே?

எதற்காக? 
தம்மினமே தம்மினத்தின் 
உயிர் குடிக்க 
குருதி தாகமெடுத்து
குரூர புத்திகொண்டலைகிறது

சாகவரம் பெற்றா? பூமியின் 
சன்னதிக்கு வந்துள்ளோம்!

மதவெறி! இனவெறி!
நிலவெறி! நிறவெறியென!
கொடுங்கோல் மனங்கொண்டு
கொட்டமிட்டாடி 
சாதிக்கபோவதுதானென்ன?

மண்ணுக்கும் பொன்னுக்கும் 
ஆசைக்கொண்டு!
அன்பும் இரக்கமும் மறந்து
ஆணவ ஆயுதமணிந்து
மனிதகுருதி அருந்த 
ஆர்ப்பரித்துவரும் கூட்டமே!

ஆறடி மண்ணுக்குள்ளே
அடங்கப்போவது உறுதியென்பதை
உணரவில்லையோ உங்கள் மனது!

ஒரே ஒருநொடி சிந்தியுங்கள்
நீங்கள் சிந்திக்கும் அந்நொடியே! 
உங்களை சொர்க்கம் சேர்க்கலாம்
இப்பூமியை போர்களமில்லா 
பூலோகமாகவும் மாற்றலாம்..
------------------------------------------------

இலண்டன் வானொலியில் வாசிக்கப்பட எனது கவிதை
நன்றி சகோதரி ஷைஃபா மாலிக்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கற்றுக்கொள்ளுங்கள் நாகரீகத்தை...




கோடிகளில் புரண்டும்
மானம் மறைக்கும் ஆடைதன்னை
மேம்போக்குக்காக போட்டுக்கொண்டு
கிழித்[ந்]தலைவதை நாகரீகமென
சொல்லித்திரியும்
மானாக்களுக்கு மத்தியில்,

தெருக்கோடியில் கிடந்தபோதும்
கிடைத்த உடை
கிழிந்த உடையானபோதுமதனை
தைத்துபோட்டு மானம்காக்க நினைக்கும்
இவனல்லவோ மானஸ்தன்
இல்லையில்லை
வருங்கால நாகரீகத்தின்
மானமுள்ள திரு உருவம்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உயிருடல்காக்கும் உழைப்பு.



ஏழை உழைப்பாளார்கள்

உழைத்துகொண்டேதான்
இருக்கிறார்கள்-
ஏனோ அவர்களின் 

ஊதியம் மட்டும் மிஞ்சுவதேயில்லை!
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்

மிஞ்சும் காசுக்கு தேய்ந்த உடலை 
தே[ற்ற]த்தக் கூட முடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது-
அவர்கள்
உடலின் ஒவ்வொரு
எலும்பிலும்
ஏக்கம் தெரியும்

எத்தனை உழைத்தபோதும் -இந்த

எலும்புகள் மட்டுமே

எஞ்சி மிஞ்சுகிறதேயென!


கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்

கஷ்டம் தெரியும்போது

கடும் உழைப்பும்

கஷ்டமாக தெரியாதாம்.


உழைப்பவர்களுக்கு
அவர்களின்  வியர்வை

உலர்ந்து விடுவதற்குள்

ஊதியத்தை கொடுத்திடுங்கள்.


உழைப்பாளிகள்
உழைப்பை உதாசினம் 
செய்யாதீர்கள்
ஏழை வியாபரிகளிடம்
அநியாய பேரம் பேசாதீர்கள்.. 
 

வாழ்த்துக்கள் சொல்வதோடு

நின்றுவிடாமல் –அவர்கள்

வாழவும் வழிவகுத்துக் கொடுக்க

வாஞ்சையோடு உதவுங்கள்..


உலகிலுள்ள அனைத்து உழைப்பாளர்களுக்கும்
எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் ..



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது