நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அரசியான கதை [பெயர் காரணம்]

 
 ஓலைக் குடிசை அதனை சுற்றி காவலிருந்த தென்னைவேலி. வேலியை தாங்கியபடி முருங்கைமரங்கள். அதிலிருந்து புறப்படும்குருவிகளின் கொஞ்சும் கானம்.கானத்தை காதில் கொண்டுவந்து சேர்த்தபடி  குளுகுளு தென்றல் அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கிச்சுகிச்சுமூட்ட, இரவுநேர இருளை கிழித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி வெளிச்சத்தை தானம் தந்துகொண்டிருந்தது நிலா.

நான்கைந்து குழந்தைகள் தரையில் அமர்ந்து கைகளை நீட்டியபடியிருக்க அதனை கிள்ளி கிள்ளி.
கிள்ளிப் பிராந்து கியப்பிராந்து கொப்பந்தலையில என்னாப் பூ முருங்கப் பூ முள்ளரிப்பழம் திண்ணட்டப் பூ பாடாகை சூடாகை பத்துமா நாச்சியார் பள்ளாக்கு. ந்னு சொல்லிக்கொண்டே முடித்து கையை திருப்பியபோது.

கள்ளாட்டம் இது கள்ளாட்டம் என் கையை திருப்பனும் அவ கையை திருப்பிட்டா. போடி மல்லி நெல்லி கொத்தமல்லின்னு ஒருத்தி சொல்ல.

ஹூம் ஹூம் அழுதுகொண்டே போய் எறிய மறுத்த அடுப்பை ஊதி எறிய வைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ”யாரும்மா எனக்கு இந்தபெயர் வச்சது.எல்லாரும் மல்லிக்கா நெல்லிக்கான்னும். மல்லி கொத்தமல்லின்னும் சொல்லுறாங்க. எனக்கு இந்த பெயரே பிடிக்கலை பணக்கார வீட்டுல பிறந்திருந்தா இதெல்லாம் சொல்லுவாங்களான்னு” சொல்லி அழுதப்ப.

அம்மா சமாதானம் சொல்லி இந்தபெயர் உங்க அப்பா[தந்தையின் தந்தை] வச்சது. அவங்க பொண்ணு ஒண்ணு மலிக்கான்னு இருந்ததாம் ரொம்ப சிகப்பா.ஆறடி கூந்தலோடு. மிகவும் அழகாக.[அழகா அப்படின்னாயின்னா நாமெல்லாம் அதில்கொஞ்சங்கூட இல்லைங்கப்பு..] சிறுவயதிலேயே எல்லாரையும் அனுசரித்து நடக்கக்கூடியதாகவும். ஒழுக்கமாகவும் எல்லாருக்கும் ரொம்ப செல்லபிள்ளையாகவும் இருந்ததாம். ஆனா கொஞ்ச வருசத்துல இறந்துவிட்டதாம்.அந்த பொண்ணுக்கு எல்லாரையும் பிடிக்குமாம். அதேபோல் அந்த பொண்ணுமேல் எல்லாருக்குமே பாசம் அதிகமாம்.அந்த பாசம்தானே பெண்ணுக்கு  வேணும்.

அதற்கு பின் நம்ம குடும்பத்தில் சில பெண்குழந்தைகள் பிறந்தும் அவங்களுக்கெல்லாம் இப்பெயர் வைக்கலையாம். நீ பிறந்ததும் இந்த பெயர்தான் வைக்கனுமுன்னு அப்பா கண்டிப்பா சொல்லிட்டாங்க.
இது ரொம்ப நல்லபெயர்டி செல்லக்குட்டி.பணக்காரவங்கண்ணா என்ன வானத்துலேர்ந்த வந்தாங்க. இந்த உலகத்துல பணம் காசெல்லாம் வரும் போகும். வரவேண்டிய நேரதில் எது வருனுமோ அதுதான் நமக்கு வரும் இறைவன் தரநினைச்சா சில நிமிடம்.

மலிக்கா ன்னா அர்த்தம் என்னா தெரியுமா அரசி.என்று நீ அரசியாட்டம் வாழவேண்டும். வாழ்வாய் பாரேன்.அதே சமயம் இறைவனுக்கு உகந்தவளாக இருக்கவேண்டும்.மற்றவங்க மனமறிந்து அவங்க மனம் கோணாம நடக்கவேண்டும். எப்போதும், போதும் என்ற குணம் இருக்கவேண்டும்.என்ன நான் சொன்னது புரிந்ததா. அதனால் இந்தபெயரில் ஒன்றும் குறையில்லை அதை நீ புரிஞ்சிக்கிடனும்

பசங்கண்டா அப்படியும் இப்படியுந்தான் எல்லாத்துக்கும் கேலிசெய்வாங்க அதுக்கெல்லாமா அழுவாங்க போய் விளையாடுமா என்று சொல்ல. அழுத கண்ணை துடைத்தபடி ஹை அப்ப நான் அரசியா! என்று அம்மாவிற்கு முத்தம் தந்துவிட்டு. நீங்க சொன்னமாதரியே இருப்பேன் சரியாம்மான்னு கேள்வியும்கேட்டு தானே பதிலும் சொல்லிவிட்டு. அரசியென்ற மிடுக்கோடு மீண்டும் விளையாடத் தொடங்கிச்சாம் அந்த குழந்தை.அதாவது இந்தக் குழந்தை.

பெயர்காரணம் சொல்லச்சொல்லி கோபியண்ணா கேட்டு 1 மாதம் ஆகியிருக்குமுன்னு நெனக்கிறேன். என்ன செய்ய கவிதையின்னா கிடுகிடுன்னு வந்திடுது. சொந்தகதையின்னா ம்ஹூம் வரவேமாட்டேங்கிறது எப்படியோ எழுதிட்டேன். அம்மா சொன்ன என்பெயர் காரணம் பிடிச்சிருந்தது.
மதபடி பெருசா காரணம் ஒன்றுமில்லை.

அரசவையில் அரசியாக மணிமகுடம் சூட்டி வாழ்ந்தால்தான் அரசியென்றில்லை. பெற்றவர்களின் மனமறிந்து. கணவரின் உள்ளத்தில் அன்பால்ஆட்சி செய்தாலே அனைத்தும் கிடைத்துபோல்தானே. அன்று ஓலைக்குடிசையில் ஓராயிரம் கனவுகளோடு, மனம்நிறைந்த பாசத்தோடு என் அம்மா சொன்ன வார்த்தைகளும். அவரின் கனவுகள் இதோ இன்று நிஜமாய் அனைத்தும் கிடைத்துவிட்டதுபோன்ற திருப்தி.

இது போதுமென்ற மனமும். இறைவனை நேசிப்பதால் இன்பமும். அரசன்[மச்சான்] நெஞ்சில் அரியணையென்ற அன்பும். குழந்தைகள் நெஞ்சில் கிரீடமென்ற பாசமும் திழைக்க வாழ்வது பெருமையாக உள்ளது.

இதற்கு இறைவனுக்கே நன்றி சொல்லவேண்டும்.நிம்மதியும் மனதிருப்தியும் பணத்திலோ! செல்வத்திலோ! இல்லை. அது அவரவர் மனங்களை பொருத்தது என்பதை உணர்ந்துகொண்டு வாழ்வதால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள்கூட வெற்றிக்கான அறிகுறியாகவே தெரிகிறது. இறுதிவரை இதேபோன்ற மனநிலையையே தரும்படியே எந்நேரமும் என் வேண்டுதலும் இருக்கிறது.

மற்றவர் மனதில்நான் எப்படின்னு இருக்கேன்னு தெரியவில்லை.ஆனா அம்மா சொன்னதுபோல் பெத்தவங்கபோல மத்தவங்களுக்கும் என்மேலே பாசமாயிருக்கனும் அது இறைவன்தான் அருளனும். என்னால் பிறர் மனது சிறிதளவேனும்  சிரமப்பட்டுவிடாதபடி நடந்துகொள்ளவே விரும்புகிறேன். நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் என் பெயரையும் நினைச்சிக்கோங்க . உங்கள் பாசத்திலும் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் ..

என் செல்லக்குட்டி இன்று தன் வலையில் என்ன பதிவிட்டிருக்குன்னு பார்த்துவிட்டுபோங்களேன்..

அன்புடன் அரசி.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

எக்காலம் வசந்தகாலம்.


                                    வீட்டு வாசலிலமர்ந்து                                       
               வீட்டுப் பாடம் எழுதுகையில்                  
வேலியோரத்து முருங்கையை
வேடிக்கைகாட்டி வீசியதென்றல்
விரல்களில்லாமலேயே என் தலைகோதிய
அக்காலம்:

                                   ஒரு தலையணையில்                             
         இரு தலைகள் வைத்து              
               ஒருக்கழித்துப் படுத்துக்கொண்டு            
              ஒவ்வொரு கதையாக பேசிச் சிரித்த             
அக்காலம்:

                     ஓலைக் குடிசையில்                   
ஒன்றை விளக்கு வெளிச்சத்தில்
                      உலைகொதித்த அடுப்பு அணைந்திட             
                      ஊதி ஊதி எரியவைத்து சமைத்துண்ட           
அக்காலம்:

                                        இருள் சூழ்ந்த இரவிலெல்லாம்                              
திறந்த கிடக்கும் கதவிடுக்கின் வழியே
காவலிருந்த நிலவை
கண்கொட்டாமல் ரசித்தபடி                            
கவலைகளற்று கண்ணயர்ந்து உறங்கிய
அக்காலம்:

                          தெரியாத விளையாட்டையும்                  
                          தேடித்தேடிக் கண்டுபிடித்து                      
                            தேகம் வேர்க்க வேர்க்க                      
                        தெருவில் விளையாடிய                     
அக்காலம்:

                             மாலை கழுத்தில் விழுந்து                         
                  மண்டபம் முழுதும் விருந்து                     
     மறுவீடு புகுந்த அந்நேரம்
                                 மலமலவென கண்ணீர் கொட்டிய               
                   அக்காலம்:
                                                                                                                                           
                                             பட்டினியும் கிடந்து                                 
                      பத்துமாதம் சுமந்து               
                                          பட்டபாடும் மறந்து                                
                                     பச்சிளம் குழந்தையை                      
                                    பாசம்பொங்க கண்டு தொட்ட                
                    அக்காலம்:
  
                  அத்தனையும் மொத்தமாய் சேர்த்து
                                 எண்ணங்களில் எழும் எண்ணிலடங்கா                     
                                மனதின் உணர்வுகளை                         
                         எழுத்தின் வடிவில் ஏட்டில் வடித்து                  
                        மனக்கண்கள் அதனை படித்து மகிழும்             
                      அக்காலம் இக்காலம் எக்காலமும்              
எனக்கு வசந்தகாலம்தான்..

வசந்தகாலம் தலைப்பிற்கு இம்மாத தமிழ்த்தேர் இதழில் வெளியான கவிதை.நன்றி தமிழ்த்தேர்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உருகும் மெழுகு. [தந்தையர்தின வாழ்த்துகள்]

உலகிலுள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

ஒருநாள்போதுமா? இன்றொருநாள்போதுமா? உங்களையெல்லாம் நினைக்க இன்றொருநாள் போதுமா? இருந்தாலும். எல்லாமே பெண்களுக்குத்தான் இருக்கு எங்களுக்கு ஒன்றுமில்லையா? என அன்னையர் தினத்தன்று கேள்விகள் கேட்டார்கள் சிங்கங்கள்.

அது யாருக்கோ காதில்விழுந்து இன்றைய தினத்தை தந்தையர் தினமாக்கிவிட்டார்களாம் இப்ப சந்தோஷம்தானே
திருப்திதானே! இதைதானே எதிர்பார்த்தீர்கள்.அப்பாடா எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்கள்.தந்தையாகபோகிறவர்களும் சேர்ந்துக்கொள்ளலாம்..[சும்மா சும்மா] தந்தையென்ற தாரக மந்திரம் எந்நாளும் பிள்ளைகள் காதில் ஒலிக்கட்டும்..
.

இது என்றோ எழுதிய கவிதை மீண்டும் தந்தைகளின் சார்பில் பிள்ளைகளுக்கு..
இது எல்லாதந்தைக்கும் பொருந்தும் சில விதிவிலக்கானவர்களைதவிர. அதாவது இ ம வாக இருப்போருகல்ல..



எனது அன்பு மகனே!
அன்னையை மட்டும்
அணைத்து கொள்கிறாய்-இந்த
தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்.

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா!

சிலயிடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே சித்தரிக்கபடுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா!

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படக்கூடாதே என
என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான்
என்னால் பொறுக்கமுடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை
உன்னை இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான் மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக வருந்தாது மெழுகு
தன் உயிரை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நானும்

மகனே நீ உயிர்வாழ
உன் அன்னை தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்

நான் உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப் புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,அறிவாயா?



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்புத்தி பின்புத்தி.


எத்தனை பட்டாலும் புத்திவராதா?
இன்னும் எதிலெதில்தான் ஏமாறுவாய்?
ஏமாறுகிறாயா?
இல்லை மற்றவரை ஏமாற்றுகிறாயா?

சினிமாமோகத்தில்
சிட்டாய் பறந்துவரும் பெண்ணே!
யாரும்காண தேகத்தை
கைகுட்டை அணிந்து காட்டவா?
யாருக்கும் தெரியாமல் ஓடிவருகிறாய்!
பாழ்பட்டு போவதற்கா
பாசங்களை இழந்து
படிதாண்டி வருகிறாய்?

நெஞ்சடைக்கும் செய்திகள்
நாளேடுகளில் கண்டும்
நெஞ்சழுத்தக் காரியாய்
நம்பியோரைவிட்டு வெளியேறுகிறாய்!
தரங்கெட்டவளாகி
தலைப்பு செய்திகளில் வருகிறாய்!

நயவஞ்சத்தோடழையும்
குள்ளநரிகளுக்கு மத்தியில்
நீயே சென்று சிக்குவது சரியா?
கலைத்தெரியப்படுமே மானம்
அதைதான் விரும்புகிறாயா?

பெண்புத்தி பின்புத்தியென்ற
பலமொழியை உண்மையாக்கி
பட்டும் திருந்தாமல்
பரிதவிப்பது முறையா?

சீரழிவது சுலபமடி!
சீரழிந்த பின்னே-கண்ணீர்
சிந்தியும் லாபமில்லையடி!
சிலகால சொகுசிற்காக
சிறந்த பெண்மையை
சீர்கெடுப்பது பாவமடி!

சீரழிந்து கிடக்கிறதென
சமுதாயத்தின்மேல் பழியெதற்கு
சீரழிவது சமுதாயமல்ல
சீர்கெடுப்போரின்
நெறிமுறையற்ற வழிகேடுகளால்தான்
நெறிபடுத்த மகான்கள் வேண்டாமடி
நெறிதவறா நன்நடத்தை போதுமடி..

டிஸ்கி// இன்றைய செய்தியாக 6 பெண்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததாம் சினிமாவில் நடிப்பதற்காக! நடிக்கவைப்பதாககூறி அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக.முதன்மைச்செய்திகள். இப்படி தினம் தினம் செய்திகள் வெளியாகியும் ஏன்? இப்படி இளம் பெண்கள் சீரழிந்து போவதற்காக முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என புரியாத புதிராகவே உள்ளது .
இசெய்தியை படித்ததும் மனவேதனைமேலிட எழுதியது தான் மேலே உள்ள வரிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாலையில் பவனிவந்த தமிழ்தேர்.

அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா கடந்த 2011. மே- 27, அன்று வெள்ளி மாலை 6.மணி..துபை அல்கிசைஸ் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியின் அரங்கில் வானலை வளர்தமிழ் தமிழ்த்தேரின் 5 ஆண்டுவிழா.  நடைபெற்றது.

சிறப்பு விருந்திர்களாக
இலக்கியப் பேச்சாளர் தமிழ் ஆர்வலர். திரு பழநெடுமாறன் அவர்களும். கின்னஸ் புகழ். திருமதி ஆச்சி மனோரமா அவர்களும்[அவர்களின் குடும்பத்தார்களும்] மற்றும் பலர்கள் பங்கேற்றார்கள்.

திரு காவேரிமைந்தன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்துவழங்க, குழந்தை ஆனிஷா தமிழ்தாய் வாழ்த்துப்பாட. வானலை வளர் தமிழ் தமிழ்த்தேரின் தலைவர். சிவ் ஸ்டார் பவன் திரு கோவிந்தசாமி அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்த இனிதே தொடங்கியது விழா.
செல்வி நிவேதிதா குழுவினரின் நடனமும். மதர் டிரீம்ஸ் குழுவினரின் இசையும். மற்றும் அழகிய சிறுவனின் அழகான குரலில் கானமும்[மனநிலைகுன்றிய குழந்தையென்றே சொல்லமுடியாது அந்த அளவிற்கு மிக அற்புதமாக பாடிய கார்த்தி] மற்றும் தமிழ்தேரின் உறுபினர்களை வைத்து தொகுத்து , கீழைராசா அவர்கள் தயாரித்து வழங்கிய  மிக அருமையான குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. முகவை முகிலின் நூல்வெளியிடும் . மேஜிக் மேஜிக்  மற்றும் பலகுரல் மன்னரின் மிமிக்கிரியென  தொய்வில்லாமல் நடத்தப்பட்டது விழா.
விருந்தினர்களுக்கு பொன்னாடைபோர்த்தி பூங்கொத்துகள் வழங்கபட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
ஆச்சிமனோராவிற்க்கு பொன்னாடை போர்த்தபட்டபோது.
அய்யா திரு.பழநெடுமாறன் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கப்பட்டபோது.
வானலை வளர் தமிழ் தமிழ்த்தேரின் 5 ஆம்.ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டபோது
 கின்னஸ் ஆச்சி அவர்களுக்கு வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் ”முத்தமிழ் காவியம்” எனும் பட்டம் வழங்கியபோது
அய்யா திரு பழநெடுமாறன் அவர்களின் உணர்வுப்பூர்வமான பேச்சு. தமிழார்வத் தொண்டர்களுக்கு மகிழ்வைத் தந்தது.
 மேடையில் என்கைகளைப் பிடித்தபடியே ஆச்சி பேசியபோது .
ஆச்சி அவர்களின் பேச்சு பாட்டு மற்றும் கவிதையென அனைத்தையும் கேட்டு எல்லோரும் அதிசயித்தார்கள். முழுமூச்சில். காகிதத்தில் எழுதிவைத்திடாமலே  மிகஅருமையாக, போரில் தன்மகன் புறமுதுகு காட்டியதாக கூறியதும் அந்த தாயின் மனநிலை எவ்வாறு இருந்ததென தனது கம்பீரக்குரலில் கவிதை பாடிய தோரணை அசரவைத்தது என்றால் மிகையில்லை.
அரங்கம் ஆனந்ததில் திளைத்தபோது
விழாவில் அய்யாவிற்காகவும். ஆச்சிக்காகவும். திருமதி ஜியா நர்கீஸ் அவர்கள் கவிதை தொகுத்ததளித்து பிரமாதம். அதோடு ஆச்சி அவர்களுக்காக, சந்திரசேகர் அவர்கள் எழுதிய வரிகளை செல்வி நிவேதிதா பாடலாய் பாடியது அருமை. இடையிடையே ஜெயாபழனியும் நிவேதிதாவும் தொகுத்து வழங்கியதும் அழகு.
.
மேடையில் தனது குடும்பாத்தார்களுடன் ஆச்சி.
------------------------------------------------
விழா மிக சிறப்பாக நடந்தேறியது. கெளரவிக்கபடவேண்டியவர்கள் சிறப்பாக கெளரவிக்கபட்டார்கள் இடையில் குலுக்கல் பரிசுச்சீட்டு வழங்கபட்டு கடைசியில் பரிசும் வழங்கபட்டது. இதற்காக உழைத்து மிக சிறப்பாக நடத்திய வானலை வளர்தமிழ் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
                                 ஆச்சியுடன் இந்த அசடு.
ஆச்சியோடு பேசியதில் ஆனந்தம். எனது  கவிதை நூலை கொடுததும் நீங்க எழுதியதாடா. ரொம்ப சந்தோஷமாக இருக்குமா என்றுஅவர்கள் என் கைகளைபிடித்துக்கொண்டு உரையாடியவிதம் பிடித்திருந்தது.

அய்யா திரு பழநெடுமாறன் அவர்களிடன் எனது உணர்வுகளின் ஓசை கவிதை நூலை கொடுத்துவிட்டு சிலமணித்துளிகள் உரையாடல். சாந்தமான குரலில் அன்பாக பேசினார்கள்.அவர்களின் எளிமையான தோன்றம். உணர்வுகலந்து பேசும்விதம் பிடித்திருந்தது.

மிக அருமையான அழகான இலக்கிய கலைவிழாவாக நடந்தேறியதில் மிகுந்த மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புழுங்கும் மலர்..

                                                                                    கிளிக்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஊடகம்..



நல்லதை நாடறிச்செய்யும்
நற்போக்குவாதி!
தீயதை சுட்டிக்காட்டியெரிக்கும்
நெற்றிகண்யோகி!

நலவையும் எழவாய்க் காட்டி
எழவையும் நலவாய்க் காட்டும்
எந்திரப்பேனா!
நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி
நடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்
மாய மை!

ஊடலென்ன கூடலென்ன
ஊர்வம்பை விலைக்கு வாங்கி
உண்மையென்றும் பொய்மையென்றும்
ஊதலில்லாமலே
ஊதிப் பெரிதாக்கிடும் ஊதல்!

காதலென்றும் காமமென்றும்
கதைகள்பல திரித்து
கருவிலிருக்கும் சதை பிண்டத்திற்க்கும்
கண்வைத்து கைகால் வைத்து
களியையும் கல்லாய் செதுக்கும் சிற்பி!

விற்பனைக்காக வில்லங்கத்தையும்
வீணாப்போனவைகளையும்
விலையில்லாமலே வாங்கும் அதிபுத்திசாலி
காசுக்காக கழிசடைகளையும்
காட்சிப்பொருளாக்கும் விலையுள்ள கண்காட்சி!

உள்ளதை உள்ளபடி
உலகுக்கு எடுத்துரைத்து
உண்மைகளை மறைத்திடாத
நியாயத் தராசு!

நல்லவைகளை நாகரீகமாய்
வெளிச்சம் போட்டுக்காட்டி
நியாயமாக அலசி ஆராய்ந்து
வெளியிட்டுத் திறமையைக்காட்டும்
நேர்மையான நீதி!

இவையெல்லாம் அடங்கிய
உலகெங்குமுள்ள ஊடகங்களின்
உன்னத போக்கு
உண்மையின் உறைவிடமாக
ஏற்றத் தாழ்வுகளில்லாமல்
எல்லோருக்கும் சரிசமமாக
ஊர்வலம் வந்தால்
இவ்வுலகமே அறியும்
உண்மையின் நாக்கை!....

காயல்பட்டினத்தில் 15 வது இஸ்லாமிய இலக்கிய மாநாடு.
40  வரிகளில் ஊடகம் எனும் தலைப்பில் கவிதை எழுதச்சொல்லி காக்கா அனுப்பிய மெயிலுக்கு நான் அனுப்பிய கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தந்திடவா!...

                                                                                 கிளிக்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது